Published:Updated:

பொது விநியோகத் திட்டத்தில் கைகுத்தல் அரிசி!

கைகுத்தல் அரிசி
பிரீமியம் ஸ்டோரி
News
கைகுத்தல் அரிசி

குமரி அனந்தன

பொது விநியோகத் திட்டத்தில் கைகுத்தல் அரிசி!

குமரி அனந்தன

Published:Updated:
கைகுத்தல் அரிசி
பிரீமியம் ஸ்டோரி
News
கைகுத்தல் அரிசி

உணவு

லகின் முக்கிய தானியங்களில் தலைசிறந்தது நெல். 10,000 ஆண்டுகள் நெடிய வரலாறு கொண்ட நெல்லானது, தமிழகத்தில் 1,500 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயிர் செய்யப்பட்டு வருகிறது.

‘அறுதாள் அறுத்து வர, மறுதாள் பயிராகும்,

மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று,

யானைகட்டி போரடித்த அழகான தென்மதுரை’ என்று ஔவை பிராட்டியார் பாடியுள்ளார். அந்த அளவுக்குத் தமிழ் நிலம் நெல்லுக்குப் பெயர் பெற்றது. தென்னிந்தியாவிலிருந்துதான் கிழக்கிந்தியா, வடகிழக்கு இந்தியப் பகுதிகளுக்கு நெல் பயணித்தது என்றும் சொல்லப்படுகிறது. இன்று உலகின் மூன்று பங்கில் இரண்டு பங்கு மக்கள் அரிசியை உணவாகக் கொண்டுள்ளனர். குறிப்பாகத் தென்னிந்திய மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மக்களின் விருப்ப உணவாக அரிசி இருக்கிறது. மியான்மர்(பர்மா), தாய்லாந்து, இலங்கை, பிலிப்பைன்ஸ், தெற்கு சீனா ஆகிய நாடுகளில் அரிசி அதிகம் உற்பத்தியாகிறது. உடலுக்கு உடனடியாக ஆற்றலைக் கொடுப்பதில் அரிசிக்கு முக்கிய பங்குண்டு. காரணம் இதிலிருக்கும் கார்போஹைட்ரேட் (ஸ்டார்ச்). அரிசி ஒரு மாவுப்பொருளாக இருந்தாலும், இதனோடு புரதச்சத்துகள், வைட்டமின் ஏ, பி, பி12, கே, இ, மாவுச்சத்துகள், இரும்புச் சத்துகள், தாதுக்கள் நிரம்பியுள்ளன. இதுசம்பந்தமாகத் துறை சார்ந்த வல்லுநர்களிடம் தொகுத்த தகவல்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

பொது விநியோகத் திட்டத்தில் கைகுத்தல் அரிசி!

தவிடு நீக்கப்பட்ட அரிசியில் முக்கிய சத்துகள் அழிக்கப்பட்டு, மாவுச்சத்து மட்டுமே நிரம்பியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் தவிடு நீக்கப்பட்ட அரிசியையே அனைவரும் உட்கொள்ளும் சூழ்நிலையில் உள்ளோம். நெல்லிலிருந்து அரிசியைப் பிரிக்கும்போது உமியும் (Husk), தவிடும் (Brown) கிடைக்கின்றன. உமி எரிபொருளாகிறது. தவிடு மிகச்சிறந்த உணவாகிறது. ஆனால், இந்தத் தவிட்டின் பயன் இன்னும் நமக்கு முழுமையாகத் தெரியவில்லை.

தவிடு மற்றும் தவிட்டு எண்ணெயில் நம் உடலுக்குத் தேவையான பைட்டோ கெமிக்கல்ஸ் அதிகளவு உள்ளது. இந்த வேதிப் பொருள்கள், உடலில் உள்ள நல்ல கொழுப்பை அதிகரிக்கின்றன. நார்ச்சத்து மிகுந்த தவிட்டை உணவில் சேர்த்தால் இதய நோய்கள், சர்க்கரை, குடல் புற்றுநோய் மற்றும் குடல் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன. இதன் நார்ச்சத்துகளில் அதிகளவிலான நீர் உறிஞ்சும் தன்மை இருப்பதால் மற்ற உணவுகளுடன் கலக்கும்போது மலச்சிக்கலைத் தவிர்க்கிறது. கொழுப்பைக் குறைக்கவல்ல ஆற்றலும் பெறுகிறது. ஆனால், நாம் அனைவருமே கண்ணைப் பறிக்கும் வெண்மையான மல்லிகைப் பூ மாதிரியான அரிசியையே விரும்புகிறோம். இதில் நாவிற்குச் சுவை மட்டுமே உண்டு. இதனால், உடலுக்கு மாவுச்சத்தைத் தவிர வேறெந்த சத்துகளும் கிடைப்பதில்லை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இரண்டு, மூன்று முறை பாலீஷ் செய்யப்பட்ட இவ்வகையான அரிசியில் உள்ள எல்லா வைட்டமின்களும், புரதச்சத்துகளும் வெளியேற்றப்பட்டு விடுகின்றன. இந்த அரிசியைச் சமைத்து உண்பதால் மாவுச்சத்து அதிகம் உடலில் சேர்கிறது. ஆரம்பத்தில், அந்த மாவுச்சத்தைக் கட்டுப்படுத்த உடலில் இன்சுலின் சுரப்பு அதிகமாக இருக்கும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இன்சுலின் சுரப்பு குறைவதால் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. இதனால், சர்க்கரை நோய் உண்டாகிவிடுகிறது.

குமரி அனந்தன்
குமரி அனந்தன்

விஞ்ஞான முன்னேற்றம் காணாத அந்தக் காலத்தில் மக்கள் கைகுத்தல் அரிசியைப் பயன்படுத்தினர். உரலில் நெல்லைப் போட்டு உலக்கையால் அந்த நெல்லினை இடித்து அதன் உமியைப் பிரித்து சுத்தம் செய்து, அந்த அரிசியைச் சமைத்துச் சாப்பிட்டனர். இந்த வகையில் எடுக்கப்படும் அரிசியில் தவிடு நீக்கப்படாமல் இருந்தது. அந்நாளில் அவர்களுக்குச் சர்க்கரை வியாதி வருவதற்கான வாய்ப்புகளும் குறைவாக இருந்தன.

முன்பெல்லாம் நெல்லின் அளவு சற்று பெரியதாகவும், பயிர்காலம் நீண்டதாகவும் (6 மாதங்கள்) இருந்தது. தற்போது குறுகிய காலத்தில் அதாவது 3 மாதத்திற்குள்ளேயே விளையும் வகையில் நெல் ரகங்கள் வந்துவிட்டன. இவ்வகை பயிர்கள் அதிக விளைச்சலைக் கொடுக்கிறது. உணவுப் பற்றாக்குறையைப் போக்க இவ்வகை பயிர்கள் மிகவும் உதவியாக உள்ளது. ஆனால், அரிசி மூன்று முறை பாலீஷ் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது என்பதுதான் நாம் கவனிக்க வேண்டிய விஷயம். இப்படி பாலீஷ் செய்யப்படும் அரிசியானது சிறியதாகவும், சாப்பிட மிருதுவாகவும், வெண்மையாகவும் இருப்பதால், இதுபோன்ற அரிசியையே மக்கள் அதிகம் விரும்பி உண்கின்றனர்.

தற்போது கருங்குறுவை, அறுபதாம் குறுவை, கிச்சிலிச்சம்பா, மாப்பிள்ளைச்சம்பா, சீரகச் சம்பா, பூங்கார், தூயமல்லி, குள்ளக்கார், சிவப்புக்கார் என்று அறுபதுக்கும் மேற்பட்ட பாரம்பர்ய நெல் ரகங்கள் பயிர் செய்யப்பட்டு வருகின்றன. இவற்றை உமி நீக்கி, பச்சரிசி தயாரிக்கலாம். நெல் மணியில் தண்ணீர்விட்டு அவித்துக் காயவைத்து, உரலில் வைத்துக் குத்தி உமியை நீக்கி புழுங்கல் அரிசி தயாரிக்கலாம். இந்த உமியை முன்பெல்லாம் கைகுத்தல் முறையில் நீக்கினார்கள். இப்போது அதற்கேற்ற பிரத்யேக அரவை இயந்திரங்கள் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தி சத்தான (கைகுத்தல் அரிசிபோல) அரிசியைத் தயாரித்துக் கொள்ளலாம்.

பொது விநியோகத் திட்டத்தில் கைகுத்தல் அரிசி!

அதேபோல அரிசி அரவை ஆலைகளில் ஹல்லர், செல்லர் என்று இரண்டு முறைகளில் அரிசி உற்பத்தி அரைக்கப்படுகிறது. இதில் நெல்லின் உமியை மட்டும் நீக்கி செல்லரைக் கொண்டு அரிசி உற்பத்தி செய்தால், அனைவருக்கும் தவிடு நீக்கப்படாத அரிசி கிடைக்கும். நெல்லின் இருமுனைகளிலும் இருக்கும் பகுதிதான் இன்னொரு நெல்லை உருவாக்கும் சக்தி படைத்தது. அது அரிசியோடு சேர்ந்து உடலுக்குக் கிடைக்கும்போது கூடுதல் சக்தி கிடைக்கிறது. அதேபோன்று பாரம்பர்ய நெல் ரகங்களில் சில, சிவப்பு அரிசியாகவே உள்ளன. அவற்றை நாம் பயன்படுத்துவது வெகுவாக குறைந்துவிட்டது.

நார்ச்சத்தும் செலினியமும் இவற்றில் அதிகமாக இருக்கின்றன. இவை புற்றுநோயை ஏற்படுத்தும் காரணிகளைத் தடுத்து நிறுத்துகின்றன. இது ஆன்டி ஆக்ஸிடன்ட்களோடு இணைந்து செயல்படுகிறது. இந்த ஆற்றல் மிகுந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்களின் செயல்பாடு, இதய நோய்கள் வராமல் காக்கும். ஆஸ்துமாவின் தீவிரத்தைக் குறைக்கும். மூட்டுவலி வீக்கத்தைக் குறைக்கும். சிவப்பரிசி அல்லது கைகுத்தல் அரிசி சாப்பிட்டு நோயற்ற வாழ்வு வாழ அனைவரும் முன்வர வேண்டும்.

பொது விநியோகத் திட்டத்திலும் மதிய உணவுத் திட்டத்திலும் கைகுத்தல் அரிசி வழங்க உணவுத்துறை அமைச்சரைச் சந்தித்து வலியுறுத்த உள்ளேன். ஊட்டச்சத்து விஞ்ஞானிகள், மருத்துவர்கள் பாலீஷ் செய்யப்படாத அரிசியைத்தான் உணவில் வலியுறுத்துகிறார்கள்.

ஆனால், மக்களிடையே விழிப்பு உணர்வு இல்லாததால், அரிசி ஆலை வியாபாரிகளால் சத்தில்லாத அரிசி உற்பத்தி செய்யப்பட்டு, கடைகளுக்கு வருகிறது. வேறு வழியில்லாமல் மக்களும் அதையே வாங்கிப் பயன்படுத்துகிறார்கள்.

இந்தியாவில் ஊட்டச்சத்து குறைவால் இறந்து போகும் குழந்தைகள், கர்ப்பிணிகளின் எண்ணிக்கை அதிகம். உலக சுகாதார நிறுவனமும் ஊட்டச்சத்தான உணவுகளை வலியுறுத்துகிறது. இப்படியிருக்கும் நிலையில் அன்றாடம் நாம் உண்ணும் அரிசி உணவை ஏன் சத்துமிக்கதாக மாற்றி உண்ணக்கூடாது?

தொடர்புக்குள்: குமரி அனந்தன், செல்போன்: 93821 55772