
வாழ்வியல்
தேசிய சுகாதாரக் கணக்கெடுப்பு 2019, சமீபத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. அந்தக் கணக்கெடுப்பில் இந்தியப் பெண்களின் ஆயுள் முன்பைவிட 44 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்கிற இனிப்பான செய்தி வெளியாகியுள்ளது.
ஆண் பெண் என ஒட்டுமொத்த மக்களின் ஆயுட்காலமும் சராசரியாக 19 ஆண்டுகள் அதிகரித்துள்ளன. அதாவது 1970-1975-ல் பிறந்த ஒரு குழந்தையின் ஆயுட்காலம் 49 ஆண்டுகள் எட்டு மாதங்கள் பன்னிரண்டு நாள்கள் என்றிருந்தது. இதுவே, 2012-2016-ல் பிறந்த குழந்தையின் சராசரி ஆயுட்காலம் 69 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது.

இதில் பெண்களின் ஆயுட்காலம் குறித்த கடந்த காலத் தரவுகள், இப்போது திரும்பிப்பார்க்க வேண்டியவை. 1970-1975 மற்றும் 2012-2016... இந்த இரண்டு ஆய்வுகளுக்கும் இடைப்பட்ட காலத்தில் பெண்களின் ஆயுட்காலம் 44 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ஆண்களின் ஆயுட்காலம் 32 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 1970-ல் பிறந்த ஒரு பெண் குழந்தை அதே காலத்தில் பிறந்த ஆண் குழந்தையைவிட ஆறு மாதங்கள் குறைவான வாழ்நாள்களைக் கொண்டிருந்தது. 2015-ம் ஆண்டில் பிறந்த ஒரு பெண் குழந்தை ஆண் குழந்தையைவிட சராசரியாக இரண்டு ஆண்டுகள் ஏழு மாதங்கள் ஆறு நாள்கள் அதிகமாக வாழும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
1980-களுக்கு முன்பு இந்தியாவில் ஆண்களைவிடக் குறைவான ஆயுட்காலத்தைக் கொண்டிருந்தனர் பெண்கள். இப்போது, அது ஆண்களைத் தாண்டிய எண்ணிக்கையில் வந்து நிற்கிறது. இதில் மத்திய, மாநில அரசுகளின் சுகாதாரத் திட்டங்கள், மருத்துவத் துறையின் முன்னேற்றம் எனப் பல்வேறு முயற்சிகளும் காரணங்களும் அடங்கியுள்ளன. எனினும், தனிப்பட்ட வகையில் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆரோக்கியம் சார்ந்து என்னென்ன முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்பதையும் கவனிக்க வேண்டும்.
வாழ்வியல் மேலாண்மை நிபுணர் டாக்டர் கௌசல்யா, “பெண்கள் தங்களைத் தாங்களே கவனித்துக்கொள்ளும் விழிப்புணர்வு இப்போது அதிகரித்துள்ளது. முன்பெல்லாம் குடும்பம், கணவர், பிள்ளைகளின் நலன்தான் முக்கியம், நம்முடைய நலன் இரண்டாம் பட்சம்தான் என்ற எண்ணத்தில் தங்களைக் கவனிக்காமலேயே விட்டுவிடுவார்கள்.
இன்று குடும்பத்தை நிர்வகிக்கும் அதே நேரத்தில், தன் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்திருக் கிறார்கள். நம்மைப் பார்த்துக்கொண்டால்தான் குடும்பத்தைப் பார்த்துக்கொள்ள முடியும் என்றும் நினைக்கிறார்கள். நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வராமல் தடுக்க முன்னெச்சரிக்கையான வாழ்வைக் கடைப்பிடிக்கிறார்கள்.
வீட்டையும் அலுவலகத்தையும் ஒருசேரச் சுமந்து ஓடும் அந்தப் பெண்களின் வொர்க் - லைஃப் பேலன்ஸ் பிரச்னைகள், அவர்களுக்கு மனஅழுத்தம் தருபவையாக இருக்கின்றன.
முன்பெல்லாம் தங்களின் உணவு, ஊட்டச்சத்து விஷயத்தில் பெண்கள் அதிக கவனம் செலுத்தியதில்லை. வீட்டில் சமைக்கும் ஊட்டச்சத்து மிக்க உணவுகளையெல்லாம் குடும்பத்தினருக்குக் கொடுத்துவிட்டு, மீதம் இருந்தால் சாப்பிடுவோம் என்கிற மனநிலையில் இருந்தனர். இப்போது ஊட்டச்சத்து விஷயத்தில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர்” என்கிறார்.

ஒரு பக்கம் பெண்களுக்குத் தங்களின் ஆரோக்கியம் பற்றிய சுயவிழிப்புணர்வு அதிகரிக்க, இன்னொரு பக்கம் மருத்துவத் துறையின் வளர்ச்சியும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. குறிப்பாக, பெண்களின் பிரத்யேகப் பிரச்னைகளுக்காக சிகிச்சையளிக்கும் தனித்தனி சிறப்பு மருத்துவத் துறைகள் உருவாகியுள்ளன.
“முன்பெல்லாம் பெண்களுக்கு என்ன நோய் பாதித்திருக்கிறது என்பதே வெளியே தெரியாது. ஒரு பெண் உடல்நலக் குறைவால் இறந்துவிட்டால், ‘என்ன வியாதின்னு தெரியலை... கேன்சரா இருந்திருக்கும்போல’ என்றுதான் பேசிக்கொள்வார்கள். நோயைக் கண்டறிவதற்கான வசதியோ, நவீன சிகிச்சை முறைகளோ இல்லாத காலம் அது. இன்று அதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. மருத்துவமனையே இல்லாத இடங்களில்கூட மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, நோயாளிகளை அடையாளம் கண்டு சிகிச்சைக்குப் பரிந்துரைக்கின்றனர்” என்று கூறும் டாக்டர் கௌசல்யா, மற்றொரு முக்கியமான விஷயத்தையும் விளக்கினார்.
“பெண்கள் சமைக்கும் முறை மாபெரும் மாற்றம் கண்டிருப்பது அவர்களின் ஆரோக் கியத்துக்குப் பெருமளவில் கைகொடுத் திருக்கிறது. விறகடுப்பில் சமைத்துக் கொண்டிருந்த பெண்களுக்கு அந்தப் புகையால் காசநோய், சுவாசப் பிரச்னைகள், சருமப் பிரச்னை எனச் சிறிய நோய் முதல் உயிரைப் பறிக்கும் கொடிய நோய்கள் வரை பாதித்தன. விறகடுப்பிலிருந்து கேஸ் அடுப்புக்கு மாறிய அந்த மாற்றம் பெண்களின் ஆரோக்கியத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. இன்று கேஸ் அடுப்பு, மின்சார அடுப்பு என்று புகையில்லா சமையலுக்கு மாறியிருப்பது பெண்களின் ஆயுள் அதிகரிக்க முக்கியமான காரணம்” என்றார்.
இதில் நகர்ப்புறங்களைவிட கிராமப்புறங்கள் சற்று பின்தங்கியிருந்தாலும் ஒட்டுமொத்தமாக முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது நல்ல குறியீடு. கிராமப்புறப் பெண்களையும் நகர்ப்புற பெண்களுக்கு இணையான ஆரோக்கியத்தில் மேம்படுத்துவதற்கு, பெண்களுக்கு அதிகாரமளித்தல், விழிப்புணர்வு அதிகரித்தல் போன்ற விஷயங்களில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.
‘’பெண்களின் ஆயுட்காலம் சராசரியாக அதிகரித்தாலும் நாம் அடைய வேண்டிய தூரம் இன்னும் அதிகமிருக்கிறது’’ என்கிறார் டாக்டர் கௌசல்யா. “இன்று வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது வரவேற்கப்பட வேண்டிய விஷயம். ஆனால், வீட்டையும் அலுவலகத்தையும் ஒருசேரச் சுமந்து ஓடும் அந்தப் பெண்களின் வொர்க் - லைஃப் பேலன்ஸ் பிரச்னைகள், அவர்களுக்கு மன அழுத்தம் தருபவையாக மாறுகின்றன. மனநலத்தில் ஏற்படும் பிரச்னைகள் உடல்நலத்தையும் பாதிக்கும் என்பதால் அதற்கான தீர்வுகளை சமுதாயமாக நாம் முன்னெடுக்க வேண்டும்’’ என்கிறார் அடிக்கோடிட்டு.
``ஆண் குழந்தையோ, பெண் குழந்தையோ... பிறந்த முதல் ஓராண்டு அவர்களுக்குக் கொடுக்கப்படும் கவனிப்பும் ஊட்டச்சத்தும்தான் அவர்களின் ஆயுளைத் தீர்மானிக்கும் முக்கியக் காரணியாக அமையும். அந்தக் காலகட்டத்தில் குழந்தைகளுக்குத் தடுப்பூசிகளைத் தவறாமல் போட வேண்டும். குறைந்தது ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அதுதான் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி மண்டலத்தை வலுவாகக் கட்டமைக்கும். குழந்தை வளர்ப்பில் இன்று பெற்றோர் அனைவரும் வீக்-எண்டு பெற்றோராகத்தான் இருக்கிறார்கள். வார நாள்களில் உணவு முதல் உணர்வுகள்வரை குழந்தைகளைக் கவனிக்க இவர்களுக்கு நேரம் இருப்பதில்லை. இந்த நிலை மாற வேண்டும். ஒவ்வொரு நாளும் குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்கிறது என்பதைப் பெற்றோர் உறுதிசெய்ய வேண்டும். அப்போதுதான் குழந்தையின் ஆரோக்கியம் மேம்பட்டு வாழ்நாள் அதிகரிக்கும்” என்கிறார் டாக்டர் கௌசல்யா.
ஒருபக்கம், 50 சதவிகிதப் பெண்கள் ரத்தச்சோகை, மார்பகப்புற்று, கர்ப்பப்பை வாய்ப்புற்று போன்ற நோய்களால் பாதிக்கப்படும் எண்ணிக்கை அதிகரிப்பு எனப் புள்ளிவிவரங்கள் பயமுறுத்திக் கொண்டிருக்கின்றன. இன்னொரு பக்கம், பெண்களின் ஆயுள் அதிகரித்துள்ளது என்று பேசுகிறோம். இரண்டுக்கும் உள்ள முரணையும் விளக்குகிறார் கௌசல்யா.
“முன்பும் பெண்களுக்கு இதுபோன்ற நோய்கள் ஏற்பட்டாலும், அவை இருப்பதைக் கூட அறியாமல் நோய்களின் பிடிக்கு தங்கள் ஆயுளை பலி கொடுத்துவந்தார்கள். குறிப்பாக, மார்பகம், கர்ப்பப்பை சார்ந்த பிரச்னைகள் பற்றி வெளியே சொல்வதிலிருந்த தயக்கமே, பல பெண்களின் உயிர்களை எடுத்துக்கொள்ளும் காரணியாக இருந்துவந்தது. இன்று தங்கள் பிரச்னைகளை வெளியே சொல்லவும், பரிசோதனை, சிகிச்சைக்குச் செல்லவும் அவர்கள் விழிப்புணர்வு பெற்று வருவதால், இந்த நோய்களைப் பற்றிய புள்ளிவிவரங்களைச் சேகரிக்க முடிகிறது. அந்த ஆய்வு முடிவுகளே, பிரச்னைக்கான தீர்வை நோக்கி நம்மை முன்நகர்த்துகின்றன. எனவே, இதுவும் நேர்மறையான வெளிப்பாடுதான்’’ என்கிறார் டாக்டர் கௌசல்யா.
பெண்களின் ஆயுள் அதிகரித்திருக்கிறது என்கிற புள்ளிவிவரம், இதில் நாம் இன்னும் பயணிக்க வேண்டிய தூரத்தைச் சுட்டிக்காட்டும் வழிகாட்டிப் பலகையே தவிர, வெற்றிக்கான எல்லைக்கோடு அல்ல!