
சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் நடந்த இந்துத்துவா மாநாட்டில் பேசிய காளிச்சரண் மகராஜ் என்ற சாமியார், மகாத்மா காந்தி குறித்துத் தவறாகப் பேசியது சர்ச்சையானது.
ட்விட்டரில் கடந்த வாரத்தில் டிரெண்டான முக்கியமான ஹேஷ்டேக்குகள் என்னென்ன... ஏன்?
#SavitribaiPhule
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியரான சாவித்திரிபாய் புலே, சாதி ஒழிப்பு, விதவைத் திருமணம், பெண் கல்வி உள்ளிட்ட சமூகச் சீர்திருத்தங்களுக்காகப் போராடியவர். அவரது 191-வது பிறந்தநாளையொட்டி, ஜனவரி 3-ம் தேதியன்று இந்த ஹேஷ்டேக் இந்திய டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது!
#HijabisOurRight
கர்நாடக மாநிலம், உடுப்பியிலுள்ள அரசுக் கல்லூரியில், முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு, அந்தக் கல்லூரியின் முதல்வர் அனுமதியளிக்கவில்லை என்று சொல்லி, மூன்று நாள்களாகக் கல்லூரி வாசலில் ஆறு மாணவிகள் போராட்டம் நடத்தினர். அந்தக் கல்லூரியைக் கண்டித்து இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்ட் செய்யப்பட்டது!
#ArrestSushantKillersNow
2020-ல் மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கில், குற்றவாளிகளைக் கைதுசெய்ய வேண்டுமென்ற கோரிக்கையோடு, அவரின் ரசிகர்கள் இந்த ஹேஷ்டேக்கை இந்திய அளவில் டிரெண்ட் செய்தனர். அதோடு, `New Year With Sushant’, `Our Promise To Sushant’ ஆகிய வாக்கியங்களும் இந்திய அளவில் டிரெண்ட் செய்யப்பட்டன!
#ReleaseKalicharanMaharaj
சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் நடந்த இந்துத்துவா மாநாட்டில் பேசிய காளிச்சரண் மகராஜ் என்ற சாமியார், மகாத்மா காந்தி குறித்துத் தவறாகப் பேசியது சர்ச்சையானது. இது தொடர்பான வழக்கில், அவரைக் கைதுசெய்தது சத்தீஸ்கர் காவல்துறை. இதையடுத்து, இந்துத்துவா ஆதரவாளர்கள் பலரும் அவரை விடுதலை செய்யுமாறு இந்த ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி வேண்டுகோள் விடுத்தனர்!
#RRRMovie
ராஜமெளலி இயக்கத்தில் உருவாகியிருக்கும் பிரமாண்ட படமான `ஆர்.ஆர்.ஆர்.’, வரும் ஜனவரி 7-ம் தேதி வெளியாகவிருந்தது. ஒமைக்ரான் பரவல் காரணமாக, அந்தப் பட ரிலீஸ் தேதி தள்ளிப்போவதாகப் படக்குழுவே அறிவித்ததையடுத்து, இந்தியாவில் இந்த ஹேஷ்டேக் முதலிடத்தில் டிரெண்டானது!
#ReleaseChandrashekharAzad
மத்தியப்பிரதேசத்தில் பஞ்சாயத்து அமைப்புகளுக்கான தேர்தலில், இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு (OBC) உரிய இட ஒதுக்கீடு அளிக்க வேண்டுமென அந்த மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் செளகான் வீட்டின் முன்பு போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்துக்கு ஆதரவளிக்க, உத்தரப்பிரதேசத்திலிருந்து வந்த பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத், போபால் விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டார். அவரை விடுவிக்கக் கோரி டிரெண்டான இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் முதலிடம் பிடித்தது!
#ArrestHaridwarCulprits
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில், டிசம்பர் 17-19-ல் நடந்த மாநாட்டில், `இஸ்லாமியர்களைப் படுகொலை செய்வோம்’ என்று வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்துத்துவா தலைவர்கள் பேசிய வீடியோ சமீபத்தில் வைரலானது. வீடியோ வெளியான பின்பும் அவர்கள் கைதுசெய்யப்படாமல் இருப்பதைக் கண்டித்து, இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டானது!