Published:Updated:

`நெல்லையில் நள்ளிரவில் கொட்டப்படும் கேரள மருத்துவக் கழிவுகள்!’ -செக்போஸ்ட்டில் கண்டுகொள்ளாத போலீஸ்?

எரிக்கப்படும் மருத்துவக் கழிவுகள்
News
எரிக்கப்படும் மருத்துவக் கழிவுகள்

கேரளாவிலிருந்து தினந்தோறும் இறைச்சி மற்றும் மருத்துவக் கழிவுகள் நெல்லை மாவட்டத்துக்குள் கொண்டுவரப்பட்டுக் கொட்டப்படுகின்றன. அதனால் நெல்லை மாவட்டத்தின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன் பொதுமக்களுக்கு நோய் பரவும் ஆபத்து உருவாகியுள்ளது.

Published:Updated:

`நெல்லையில் நள்ளிரவில் கொட்டப்படும் கேரள மருத்துவக் கழிவுகள்!’ -செக்போஸ்ட்டில் கண்டுகொள்ளாத போலீஸ்?

கேரளாவிலிருந்து தினந்தோறும் இறைச்சி மற்றும் மருத்துவக் கழிவுகள் நெல்லை மாவட்டத்துக்குள் கொண்டுவரப்பட்டுக் கொட்டப்படுகின்றன. அதனால் நெல்லை மாவட்டத்தின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன் பொதுமக்களுக்கு நோய் பரவும் ஆபத்து உருவாகியுள்ளது.

எரிக்கப்படும் மருத்துவக் கழிவுகள்
News
எரிக்கப்படும் மருத்துவக் கழிவுகள்

சுற்றுச்சூழல் பராமரிப்பில் கேரள அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அதனால், இறைச்சி, மீன் கழிவுகள் மற்றும் மருத்துவக் கழிவுகளை அந்த மாநிலத்தில் பொது இடங்களில் கொட்ட முடியாது. அத்துடன், அவற்றை அழிப்பதற்கு பல்வேறு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம்.

சாலையோரங்களில் கொட்டப்படும் கழிவுகள்
சாலையோரங்களில் கொட்டப்படும் கழிவுகள்

அதனால் கேரளாவிலிருந்து லாரிகள் மூலமாகக் கழிவுப் பொருள்கள் தமிழகத்துக்குள் கொண்டுவரப்படுகின்றன. புளியரை வழியாக நெல்லை மாவட்டத்துக்குள் நுழையும் கழிவுகளை ஏற்றிவரும் லாரிகளை செக் போஸ்ட் பகுதியில் இருக்கும் காவல்துறையினர் கண்டுகொள்வதில்லை என்பதால் தாராளமாகக் கழிவுகள் கொண்டுவரப்படுகின்றன.

இறைச்சிக் கழிவுகள், மீன் கழிவுகள், மருந்துக் கழிவுகள் ஆகியவை துர்நாற்றத்துடன் லாரிகளில் கொண்டுவரப்படுகின்றன. சில இடங்களில் பொதுமக்கள் அவற்றைத் தடுத்து நிறுத்தி காவல்துறையினரிடம் ஒப்படைக்கின்றனர். அதனால் நள்ளிரவு நேரங்களில் சாலையோரங்களிலும் கிராமத்துச் சாலையோரங்களிலும், குளம், வாய்க்கால் போன்ற நீர்நிலைப்பகுதிகளிலும் கொட்டப்படுகின்றன.

பாதுகாப்புடன் கையாளப்பட வேண்டிய மருத்துவக் கழிவுகள் சாலையோரங்களில் வீசப்படுவதால் நோய் பரவும் ஆபத்து உள்ளது.
பொதுமக்கள்

மருந்துக் கழிவுகள் மிகுந்த பாதுகாப்புடன் அழிக்க வேண்டிய நிலையில், அவற்றையும் சாதாரணமாகக் கொட்டுகின்றனர். இது தொடர்பாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலமுறை மாவட்ட நிர்வாகத்திடமும் காவல்துறை அதிகாரிகளிடமும் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டுகிறார்கள்.

நெல்லை மாவட்டம் ராதாபுரம், காவல்கிணறு மற்றும் களக்காடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் கோழிக்கழிவுகள் அதிக அளவில் கொட்டப்படுகின்றன. ஏற்கெனவே மர்மக் காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளான இப்பகுதிகளில் அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதனிடையே, பேட்டை-பழையபேட்டை-கரிசல்குளம் இணைப்புச் சாலையில் இன்று அதிகாலையில் மருந்துக் கழிவுகளைக் கொட்டி தீவைத்து எரித்துவிட்டுச் சென்றுள்ளனர். அதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்குக் கண் எரிச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவதிப்பட்டு வருகிறார்கள். செக் போஸ்ட் வழியாக ஊடுருவும் கழிவுகளை ஏற்றிவரும் லாரிகளை அங்கேயே கண்டுபிடித்துத் திருப்பி அனுப்ப வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.

வெளி மாநில மருத்துவக் கழிவுகள்
வெளி மாநில மருத்துவக் கழிவுகள்

இது குறித்து காவல்துறையினரிடம் கேட்டதற்கு, "கேரளாவில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் அனைத்தும் செங்கோட்டை அருகேயுள்ள புளியரை செக்போஸ்ட்டில் நிறுத்தி பலத்த சோதனைக்குப் பின்னரே அனுப்பப்படுகின்றன. இங்கிருந்து கேரளாவுக்கு காய்கறிகள் ஏற்றிச் செல்லும் லாரிகள், அங்கிருந்து வரும்போது அதிக வாடகைக்கு ஆசைப்பட்டு கழிவுப் பொருள்களை ஏற்றி வருகின்றன. அவற்றை கண்காணித்து தமிழகத்துக்குள் நுழைய விடாமல் திருப்பி அனுப்புகிறோம். சில சமயங்களில் அதிகமாக அபராதமும் விதித்து எச்சரிக்கிறோம்.

ஆனாலும், எங்களுடைய சோதனையையும் மீறி சில நேரங்களில் கழிவுப் பொருள்களை எடுத்துச் சென்று விடுகின்றனர். கண்டெய்னர் லாரிகளில் சில சமயங்களில் கழிவுகளைக் கொண்டுசென்று விடுகிறார்கள். கடந்த 6 மாதங்களில் மட்டும், லாரிகள், கண்டெய்னர்கள், டிராக்டர்கள், வேன்கள் என 30-க்கும் அதிகமான வாகனங்களைப் பிடித்து அபராதம் விதித்ததுடன் கழிவுப் பொருள்களை திருப்பி அனுப்பியிருக்கிறோம். அபராதமாக மட்டும் 6 மாதங்களில் 20 லட்சம் ரூபாய் விதிக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து கண்காணிப்பைப் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்கிறார்கள்.