Published:Updated:

இது வெயிட்டான வெறித்தன டான்ஸ்!

கர்ப்பிணி பெண்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
கர்ப்பிணி பெண்கள்

கர்ப்பம்ங்கிறது ரொம்பவே சந்தோஷமான விஷயம்.

ன்ஸ்டாவில் அந்த வீடியோவைப் பார்த்த அத்தனை கண்களும் ஆச்சர்யத்தில் விரிந்து போனது உண்மை. ‘வெறித்தனம்’ பாடல் உச்சஸ்தாயியில் ஒலிக்க, வேற லெவலில் நடனமாடுகிறார்கள் பெண்கள்... அத்தனை பேரும் கர்ப்பிணிகள்... பலர் நிறைமாதம் வேறு. என்ன இது, வித்தியாசமாக இருக்கிறதே என்று விசாரித்தால், அதன் பின்னணியிலும் ஒரு பெண் இருக்கிறார்: அனுபமா.

இது வெயிட்டான வெறித்தன டான்ஸ்!

“கர்ப்பம்ங்கிறது ரொம்பவே சந்தோஷமான விஷயம். ஒரு புது உயிரை இந்த உலகுக்குக் கொடுக்கப்போறோம்... ஆனா, நாம அதை ஒரு நோய் மாதிரி நினைக்கிறோம். மகிழ்ச்சியா, மன நிறைவா அந்த நாள்களைக் கடக்கிறதுக்குப் பதிலா, பதற்றத்தோடவும் பயத்தோடவும் கடக்கிறோம். அந்த எண்ணத்தை மாத்தி, மனசுக்குப் பிடித்த விஷயங்களைச் செய்யவச்சு, சந்தோஷமா இருக்கத்தான் இந்த டான்ஸ்...’’ கலகலப்பாகப் பேசுகிற அனுபமாவும் கர்ப்பிணிதான். ஐ.டி இன்டஸ்ட்ரியில் வேலைசெய்து திருமணத்துக்குப் பிறகு இல்லத்தரசியாகிவிட்ட அனுபமா, இதற்கென `விருக்‌ஷம்’ என்ற நிறுவனத்தையே தொடங்கியிருக்கிறார்.

அனுபமா
அனுபமா

“ஈரோட்டுப் பக்கத்துல வடபுதுப்பாளையம்தான் என் சொந்த ஊர். இன்ஜினீயரிங் முடிச்சுட்டு ஜெர்மனில ஐ.டில வேலை பார்த்தேன். அதுக்குப்பிறகு கொஞ்சநாள் சென்னையில வேலை. வேலைல இருக்கறப்பவே கல்யாணம் ஆயிடுச்சு. ஏழுமாத கர்ப்பிணியா இருக்கறப்ப வேலையை விட்டுட்டேன். என் கணவர் பில்டிங் டிசைனர். தொடக்கத்துல சென்னையில இருந்தோம். குழந்தைக்குத் தாத்தா, பாட்டி நெருக்கம் வேணுங்கிறதால கணவர் ஊரான திருப்பூருக்கே வந்துட்டோம்.

அந்தக் காலகட்டத்துல `ஆடக்கூடாது’, `அசையக்கூடாது’ன்னு நிறைய சொன்னாங்க. கொஞ்சதூரம் நடந்தாக்கூட `பாத்து’, `பாத்து’ன்னு பதறுவாங்க. அந்தப் பதற்றம் நமக்கும் வந்திடும். முதல் பிரசவம் சிசேரியன்... அந்தத் தருணத்துலதான் இதுபத்தின சிந்தனை உருவாச்சு. பிரசவம்ங்கிறது இனிமையான அனுபவம். அந்தக் காலகட்டத்துல மனசுக்குப் பிடிச்சமாதிரி, சந்தோஷமா இருக்கணும். நிறைய மிஸ் பண்ணிட்டோமேன்னு தோணுச்சு. பிரசவம் பத்தி நிறைய தெரிஞ்சுகிட்டேன். புதுச்சேரி, மும்பை, சிங்கப்பூர், அமெரிக்கான்னு பல இடங்களில் அதுபத்தி நடந்த பயிலரங்குகளில் கலந்துகிட்டேன். அதுக்கப்புறம்தான், பிரசவம் பத்தி நாம நம்புற பல விஷயங்கள் மூடநம்பிக்கைகள்னு புரிஞ்சுச்சு. இந்த விஷயங்களை எல்லாருக்கும் கத்துக்கொடுக்கணும், பிரசவ காலத்தை மறக்கமுடியாத காலமா மாத்தணும்னுதான் விருக்‌ஷம் அமைப்பைத் தொடங்கினோம்.

இது வெயிட்டான வெறித்தன டான்ஸ்!

ஆரம்பத்துல மூணு பேர்தான் இருந்தோம். இப்ப கோவை, திருப்பூர்னு ரெண்டு இடங்களில் பயிற்சி கொடுக்கறோம். வெளிநாட்டுல இருக்குறவங்ககூட பயிற்சி எடுத்துக்கிறாங்க. கர்ப்பிணிகளுக்கு மட்டுமல்லாம, அவங்க கணவருக்கு, வீட்டுல இருக்கற பெரியவங்களுக்கும் பயிற்சி தருகிறோம். இதுக்குன்னு சின்னதா ஒரு பயிற்சித் திட்டமே வடிவமைச்சிருக்கோம். இதுவரை 20,000 பேருக்குப் பயிற்சி கொடுத்திருக்கோம். கொரோனா டைம்ல பயிற்சி ஆன்லைன்ல நடந்துகிட்டிருக்கு...’’ என்கிறார் அனுபமா.

மகிழ்ச்சியையும் தன்னம்பிக்கை யையும் ஏற்படுத்துவதுதான் இந்தப் பயிற்சியின் நோக்கம். நடனம் அதில் ஓர் அங்கம்.

நடனமாடினால் கருவிலிருக்கும் குழந்தைக்கு ஏதும் நிகழ்ந்துவிடாதா?

“ஒண்ணும் ஆகாது. குழந்தை கர்ப்பப் பையில ரொம்பவே பாதுகாப்பா இருக்கும். நடனம் ஆடறதால மனதுக்கு சந்தோஷம் கிடைக்கும். முக்கியமா, நம் உடல்மேல பெரிய நம்பிக்கை வரும். அது பிரசவத்துக்கு உதவும். நடக்கவே பயப்படறவங்க, எப்படி தைரியமா பிரசவத்த எதிர்கொள்வாங்க...? நடனம் தவிர, கோலம் போடறது, பூக்கோக்குறது, மருதாணி வைக்கறதுன்னு சின்னச்சின்னதா ஹோம் வொர்க் கொடுப்போம். வயிற்றுல இருக்கற குழந்தைங்களால எல்லா உணர்வுகளையும் உணரமுடியும். அதனால முடிஞ்சவரை சந்தோஷமா இருக்கணும்.

ஸ்ட்ரெஸ்ஸை எப்படி எதிர்கொள்றதுன்னும் சொல்லித் தருகிறோம். கடல் அலையோட சத்தம், பறவைகளோட சத்தம், மழைச்சத்தம், கோலாட்டம்னு பாசிட்டிவான ஓசைகளை அடிக்கடி கேட்க வைப்போம். பிரசவம்னாலே வலிங்கிற மாதிரியான ஒரு பிம்பத்தை உருவாக்கி வெச்சிருக்காங்க. ஆனா, அது உண்மையில்லை. நல்ல உடற்பயிற்சிகள், யோகா, மூச்சுப்பயிற்சின்னு சில விஷயங்களைக் கடைப்பிடிச்சா வலியை நினைச்சு பயப்பட வேண்டாம்.

இது வெயிட்டான வெறித்தன டான்ஸ்!

முதல் பிரசவ நேரத்துல எனக்கு 23 கிலோ அதிகமாயிடுச்சு. சின்னதா நடக்ககூட யாரும் விடலே. இப்போ எட்டு கிலோதான் அதிகரிச்சிருக்கேன். நல்லா டான்ஸ் ஆடுறேன். யோகா பண்ணுறேன். நடக்குறேன். ஆகஸ்ட்ல டேட் கொடுத்திருக்காங்க. முதல் பிரசவத்தவிட, இப்ப ஆரோக்கியமா தன்னம்பிக்கையா இருக்கேன்...’’ என்று சிரிக்கிறார் அனுபமா.

குடும்பத்துடன் அனுபமா
குடும்பத்துடன் அனுபமா

அனுபமா சொல்வது சரி, மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்..? ``கர்ப்பிணிகள் நடனமாடுவதால் ஏதேனும் பிரச்னை வருமா?’’

மகளிர் நோயியல் மற்றும் மகப்பேறு மருத்துவர் சசித்ரா தாமோதரனிடம் கேட்டோம். “கர்ப்ப காலத்தில் பெண்கள் மகிழ்ச்சியாக இருப்பதால் உடலில் நல்ல ஹார்மோன்கள் அதிகமாகச் சுரக்கும். அது குழந்தை ஆரோக்கியமாக வளர உதவும். அந்தக் காலத்தில் நாம் எந்திரங்களை நம்பியில்லை. எல்லா வேலைகளிலும் நம் உழைப்பு இருந்தது. அதுவே நல்ல உடற்பயிற்சி போல அமைந்துவிடும். இப்போது நம் வாழ்வியல் மாறிவிட்டதால், பிரசவத்தை பயத்துடன் பார்க்கும் நிலை வந்துவிட்டது. நம் உடல்மீது நம்பிக்கை இல்லாமல்போவதுதான் பயத்துக்கு முக்கிய காரணம். உடல் வலிமை பெற்று நம்பிக்கை வர உடற்பயிற்சி, யோகா, டான்ஸ் செய்வது நல்லதுதான். உடல் சோர்வாக உணரும்வரை உடற்பயிற்சி செய்யலாம். சோர்வடைந்து விட்டால், அன்றைய தினம் விட்டுவிட்டு அடுத்த நாள் தொடரலாம். எங்களது மருத்துவமனையிலும் பிரசவத்தின்போது, சிட்அப், டான்ஸ் போன்ற பயிற்சிகளைக் கொடுக்கிறோம். அது பிரசவ வலியைக் குறைப்பதோடு எளிதாக்கவும் செய்யும்’’ என்கிறார்.