
தேவை அதிக கவனம்
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒவ்வொரு வீடும் தனித்தீவாக மாறிவருகிறது.
பொது இடங்கள் முதல் ஆன்மிகத்தலங்கள் வரை மக்கள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த எல்லைக்குள் வராத சில இடங்கள் இருக்கின்றன. அந்த வகையில் மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள், மருந்துக் கடைகள் போன்றவற்றுக்கு மட்டும் விதிவிலக்கு. அன்றாட வாழ்க்கையை நகர்த்துவதற்கு இந்த இடங்களுக்கு மக்கள் சென்றுதான் ஆக வேண்டியிருக்கிறது.

அந்த இடங்களிலிருந்து மட்டும் கிருமிகள் பரவாதா என்று கேட்டால், `பரவும்' என்பதுதான் பதில். அன்றாடம் செல்லக்கூடிய இந்தக் கடைகளிலிருந்து கிருமித் தொற்று ஏற்படாமலிருக்க ஐந்து வழிமுறைகளைப் பரிந்துரைக்கிறார் பொது மருத்துவர் ஹெச்.விஷால்.
கூடைகள், டிராலிகளில் கிருமிகள்
கடைகளுக்குச் சென்றவுடன் முதலில் நாம் தொடுவது அங்கிருக்கும் கூடைகள், டிராலிகளைத்தான். அவற்றின் கைப்பிடிகளில் எண்ணற்ற கிருமிகள் காணப்படும். சிலர் டிராலிகளில் சிறிய குழந்தைகளை உட்கார வைத்திருப்பார்கள். கிருமிகள் குழந்தைகளை எளிதில் தாக்கும் என்பதால், அவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படலாம். அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் கழிவறைகளில் காணப்படும் இ.கோலி (E.coli) என்ற பாக்டீரியா 72 சதவிகிதம் ஷாப்பிங் கூடைகளில் காணப்படுவதாகக் கண்டறியப்பட்டிருக்கிறது. அதனால், கூடைகளைக் கையாள்வதில் கவனம் வேண்டும். ஒரு சில பொருள்கள் மட்டும்தான் வாங்க வேண்டும் என்றால் கைகளிலேயே வைத்துக்கொண்டு பில்லிங் கவுன்ட்டருக்குச் செல்லுங்கள். அதிக பொருள்களை வாங்க வேண்டிவந்தால் கூடையை எடுத்தபிறகு உங்கள் கைகளை முகம், வாய், கண்களில் வைக்காதீர்கள்.
சுய சுகாதாரம்
அழுக்கான, கிருமித் தொற்றுள்ள கூடைகளை, டிராலிகளைப் பயன்படுத்தியே ஆக வேண்டிய நிலை பெரும்பாலும் ஏற்படும். அப்படியென்றால் கடைகளி லிருந்து வெளியே வந்தவுடனேயே ஹேண்ட் சானிட்டைசர் வைத்து கைகளைச் சுத்தப்படுத்த வேண்டும். வீட்டுக்குச் சென்றவுடன் தண்ணீர் பயன்படுத்தி சோப் போட்டு கைகளை நன்றாகத் தேய்த்துக் கழுவ வேண்டும். கடைகளில் கூடையைக் கையில் எடுத்த பிறகு, செல்போன்களை எடுத்துப் பயன்படுத்த வேண்டாம். கூடைகள் அல்லது கடையில் வேறு பகுதியிலிருக்கும் கிருமிகள் செல்போனுக்கு இடம் மாறலாம். அங்கிருந்து உடலுக்குள்ளும் சென்று பிரச்னைகளை ஏற்படுத்தலாம்.

குழந்தைகளைத் தவிர்த்திடுங்கள்!
நோய் பரவல் இருக்கும் இதுபோன்ற நேரங்களில் குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டுச் செல்லுங்கள். குழந்தைகளுக்கு எளிதில் நோய்த்தொற்று ஏற்படும் என்பது ஒரு காரணம். கொரோனாவைப் பொறுத்தவரை, குழந்தைகளை அதிகம் பாதிப்பதில்லை. ஆனால், குழந்தைகளால் கிருமிகளைப் பிறருக்குக் கடத்த முடியும். ஆகவே, அவர்களைத் தவிர்ப்பதே நல்லது. இதுபோன்ற நேரங்களில் குடும்பமாக ஷாப்பிங் செல்வதையும் தவிர்த்துவிடுங்கள். வீட்டில் ஒருவர் மட்டும் வழக்கமாகச் சென்று பொருள்களை வாங்கி வருவதைப் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
பணமில்லா பரிவர்த்தனை
கடைகளில் பணம் செலுத்துவதற்குப் பதில் பணமில்லா பரிவர்த்தனைகளைத் தேர்ந்தெடுக்கலாம். கிருமிகள் தேங்கியிருக்கும் பொருள்களில் ரூபாய் நோட்டுகளுக்கும் இடமுண்டு. குறிப்பாக, பணத்தைக் கையாள்பவர் சுய சுகாதாரத்தைப் பேணாமல், அவருக்கு சளி, இருமல் போன்ற பிரச்னைகள் இருந்தால் கிருமிகள் பரவலுக்குக் கூடுதல் வாய்ப்பாக அமைந்துவிடும். எனவே, பணப்பரிமாற்றத்தைக் கூடுமானவரைத் தடுக்கலாம். சூப்பர் மார்க்கெட், மளிகைக் கடைகளில் அதிகக் கூட்டமில்லாத நேரத்தைத் தேர்ந்தெடுத்து ஷாப்பிங் செல்லுங்கள்.
துரித உணவுகள்
சில சூப்பர் மார்க்கெட்டுகளில் துரித உணவுகளை அங்கேயே தயாரித்து விற்பனை செய்வார்கள். அந்த உணவுகளையும் இந்தக் காலகட்டத்தில் தவிர்த்துவிடுதல் நல்லது. அந்த உணவு தயார் செய்யும் இடம், பயன்படுத்தப் படும் உப்பு, சாஸ் போன்ற பாட்டில்கள் என அனைத்தும் சுகாதாரமாக இருக்கின்றனவா என்பதை உறுதிசெய்ய முடியாது. மேலும், உணவைத் தயார் செய்பவரின் உடல்நிலை, சுய சுகாதாரம் அனைத்தும் கேள்விக்குறியே. இதனால் யோசனையின்றி அவற்றைத் தவிர்த்துவிடுதல் நல்லது.
பக்கத்தில்தான் கடை என்றாலும் பாதுகாப்பாகவே சென்று வாருங்கள்!