Published:Updated:

மீண்டும் கொரோனா: `பழைய பாக்கியே இன்னும் வரலையே!' கொந்தளிக்கும் ஊழியர்கள்; மறுக்கும் அமைச்சர்

மெகா தடுப்பூசி முகாம்
News
மெகா தடுப்பூசி முகாம்

எண்ணிக்கையை அதிகரித்துக் காட்டுவதற்காக அப்படிச் செய்தார்கள். முக்கியமான ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கே அப்படி மெசேஜ் சென்று பிரச்னையானது.

மீண்டும் கொரோனா: `பழைய பாக்கியே இன்னும் வரலையே!' கொந்தளிக்கும் ஊழியர்கள்; மறுக்கும் அமைச்சர்

எண்ணிக்கையை அதிகரித்துக் காட்டுவதற்காக அப்படிச் செய்தார்கள். முக்கியமான ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கே அப்படி மெசேஜ் சென்று பிரச்னையானது.

Published:Updated:
மெகா தடுப்பூசி முகாம்
News
மெகா தடுப்பூசி முகாம்

``கொரோனா தடுப்பூசியில் தமிழகம் சாதனை...'' என்று ஒரு பக்கம் தமிழக அரசும் உயர் அதிகாரிகளும் உற்சாகமாக சொல்லிக்கொண்டிருக்கும் சூழலில்... ``ஆனால், அதற்காக உழைத்த எங்களுக்குத்தான் வேதனை'' என்று மருகுகிறார்கள் தடுப்பூசி போடும் பணியில் தொடர் உழைப்பைச் செலுத்திய செவிலியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள். ``கொரோனா தடுப்பூசி முகாம்களுக்கான செலவினங்களை அரசு முறையாக வழங்கவில்லை'' என்பதுதான் அவர்களுடைய வேதனை. இத்துடன், ``கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கையில் நிறைய குளறுபடிகள் நடந்திருக்கின்றன'' என்று இன்னொரு பக்கம் பகீர் குற்றச்சாட்டும் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுகுறித்து பெயர் வெளியிடாமல் நம்மிடம் பேசிய மூத்த மருத்துவர் ஒருவர், ``கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் என்பது மிகப்பெரிய சக்சஸ். தடுப்பூசி போடும் பணி இவ்வளவு வேகமாக நடப்பதற்கு, சிறப்பு முகாம்கள் அமைத்து பணியைத் துரிதப்படுத்தியதுதான் காரணம் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. வாரம் ஒருமுறை சிறப்பு முகாம் என்றிருந்ததைச் சமீபத்தில்தான் மாதம் ஒருமுறை என்று மாற்றினர். மேலும், `வீடு தேடி தடுப்பூசி' என்ற திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. வழக்கமான தடுப்பூசி மையங்களில் தினசரி தடுப்பூசி போடப்படுகிறது. பல்வேறு சிரமங்களையும் கடந்து சுகாதாரத்துறையைச் சேர்ந்தவர்கள் தன்முனைப்புடன் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.

மெகா தடுப்பூசி முகாம்
மெகா தடுப்பூசி முகாம்

ஆனால், முகாமில் பணியாற்றுபவர்களுக்கு உணவு மற்றும் போக்குவரத்து செலவுகளுக்கான தொகையை வழங்காமல் அரசு இழுத்தடிக்கிறது" என்று வேதனை பொங்கச் சொன்னவர் அதுகுறித்து விவரித்தார், ``ஒரு முகாமில் தடுப்பூசி போடுவற்கு ஒருவர், என்ட்ரி போடுவதற்கு ஒருவர் மற்றும் அந்தப் பகுதியில் உள்ள மக்களை அழைத்து வருவதற்கு ஒன்றிரண்டு பேர் என மொத்தம் நான்கைந்து பேர் வேலை செய்கின்றனர். 2021 ஜனவரியில் தடுப்பூசி போடும் பணியை ஆரம்பித்தபோது ஒரு முகாமுக்கு 500 ரூபாய் செலவினங்களுக்குக் கொடுக்கப்பட்டது. உணவு மற்றும் ஸ்நாக்ஸ், பணியாளர்களை அழைத்து வரும் வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் செலவு எல்லாவற்றையும் இந்தத் தொகையில்தான் பார்த்துக்கொள்ள வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்தத் தொகை போதாது என்றாலும் ஓரளவுக்கு சமாளித்தார்கள். ஆனால், முதல் ஆறு மாதங்களுக்குத்தான் அந்தத் தொகையும் சரியாக வந்தது. கடந்த ஒரு வருடமாக அந்தத் தொகை நிலுவையில் இருக்கிறது. இதற்கிடையில், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு முகாமுக்கு 500 ரூபாய் என்றிருந்ததை 250 ரூபாய் என்று பாதியாகக் குறைத்துவிட்டனர். ஆரம்பத்தில் 9 மணிக்கு ஆரம்பித்து இரவு 7 மணி வரை தடுப்பூசி முகாம் நடந்தது. சில மாதங்களுக்குப் பிறகு, காலை 7 மணிக்கெல்லாம் முகாம் தொடங்கியது. அப்படியான சூழலில் காலை உணவே சாப்பிடாமல்தான் பெரும்பாலானோர் பணிக்கு வந்தார்கள்.

தடுப்பூசி
தடுப்பூசி

அவர்களுக்கான உணவு, போக்குவரத்து செலவுகளைச் சமாளிக்க பெரும் சிரமம் ஏற்பட்டது. சில மருத்துவ அலுவலர்கள் ஸ்பான்சர்ஸ் பிடித்துச் சமாளித்தார்கள். பலரால் அது முடியவில்லை. பெரும்பாலான மருத்துவ அலுவலர்கள் தங்களுடைய சொந்த பணத்தைப் போட்டுத்தான் சமாளித்தார்கள். ஒவ்வொரு பொறுப்பு மருத்துவ அலுவலரும் வட்டார மருத்துவ அலுவலரும் ஒரு லட்சம் ரூபாயிலிருந்து ஒன்றரை லட்சம் ரூபாய் வரை கையிலிருந்து செலவு செய்துவிட்டு க்ளெய்முக்காகக் காத்திருக்கின்றனர். தொடர் கோரிக்கையின் விளைவாகக் குறிப்பிட்ட ஒரு பகுதி தொகை வந்திருக்கிறது.

இன்னும் வர வேண்டியது அதிம் இருக்கிறது. தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இப்படியான சூழலில் தடுப்பூசி போடும் பணியை இன்னும் வேகமாக முடிக்க அரசு இலக்கு நிர்ணயித்திருக்கிறது. இந்தச் சூழலிலாவது அந்த நிலுவைத் தொகையை அரசு முழுமையாக வழங்க வேண்டும். 500 ரூபாயே குறைந்தபட்ச தொகைதான் எனவே, அதை 250 ரூபாயாகக் குறைக்கக் கூடாது'' என்றவரிடம் தடுப்பூசிகள் காலாவதி நிலையில் இருப்பதாகச் சமீபத்தில் செய்தி உலவியதே அது உண்மையா? என்று கேட்டோம்...

``சில மாதங்களுக்கு முன்பு அப்படி ஒரு சூழல் உருவானது உண்மைதான். தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுக்க அப்படி ஒரு சூழல் உருவானது. உற்பத்தி அதிகமாகவும் பயன்பாடு குறைவாகவும் இருந்ததுதான் காரணம். லோக்கல் சப்ளையை நிறுத்திவிட்டு ஏற்றுமதி செய்ததன் மூலம் அந்தச் சூழலைச் சமாளித்துவிட்டார்கள். இப்போது அப்படியான நிலை இல்லை" என்றார். தடுப்பூசி போடாத பலருக்குத் தடுப்பூசி போட்டதாக மெசேஜ் வந்ததாக புகார் எழுந்ததே என்ன காரணம்? என்று கேட்டதற்கு, ``அதுவும் உண்மைதான். தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் காட்டுவதற்காக அப்படிச் செய்தார்கள். முக்கியமான ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கே அப்படி மெசேஜ் சென்று பிரச்னை ஆனது.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

சுகாதாரத்துறையில் நிலையை எடுத்துச் சொல்லி அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியை அமைதிப்படுத்தினார்கள். ஏன் எண்ணிக்கையை அதிகரித்துக் காட்ட வேண்டும் என்று உங்களுக்கு கேள்வி எழலாம்... தடுப்பூசி செலுத்தியதில் தமிழகத்தைவிட ஆறேழு மாநிலங்கள் முன்னிலையில் இருக்கின்றன. அவற்றில் பின்தங்கிய மாநிலங்களும் அடக்கம். இவ்வளவு பெரிய சுகாதார கட்டமைப்பை வைத்திருக்கும் தமிழகம், தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கையை வேகமாக அதிகரிக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள்ளானது. அதனால் எண்ணிக்கையை அதிகரித்துக் காட்ட ஆரம்பித்தார்கள்.

தடுப்பூசி விஷயத்தில் வெறுமனே எண்ணிக்கையை அதிகரித்துக் காட்ட முடியாது. ஏனெனில், தடுப்பூசி போட்டவர்களின் மொபைல் எண்களைப் பதிவு செய்ய வேண்டும். அதற்காக ரேண்டமாகப் பதிவு செய்யும்போதுதான் இப்படி மெசேஜ்கள் சென்றன. தவிர்க்க முடியாத சூழலில் இப்படிச் செய்தார்கள் என்றாலும் இதனால் நிறைய தடுப்பூசிகள் வீணாயின என்பதுதான் வேதனையான விஷயம். கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 10 முதல் 15 சதவிகித தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டிருக்கலாம் என்பது என் கணிப்பு.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

இதில் ஒரு விஷயத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இவ்வளவு பெரிய சுகாதார கட்டமைப்பை வைத்திருக்கும் ஓரளவு விழிப்புணர்வுமிக்க தமிழகத்தைவிட உ.பி போன்ற பின் தங்கிய மாநிலங்கள் தடுப்பூசி செலுத்தியதில் முன்னணியில் இருப்பது சாத்தியமில்லாத ஒன்று. அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. அங்கெல்லாம் என்னென்ன கோல்மால்கள் செய்தார்கள் என்று தெரியவில்லை. பல மாநிலங்கள் எண்ணிக்கையை அதிகரித்துக் காட்டியதால்தான் தமிழகத்திலும் அப்படிச் செய்ய வேண்டிய சூழல் வந்திருக்கும் என்பது என் கருத்து" என்றார் விளக்கமாக.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கேட்டோம், ``இப்போது எந்த நிலுவைத் தொகையும் இல்லை. எல்லாவற்றையும் கொடுத்துவிட்டோம். 250 ரூபாயாகக் குறைத்தது எதற்காக என்றால் எண்ணிக்கை குறைந்துவிட்டது, தடுப்பூசி போடும் நேரமும் குறைந்தது. அதனால்தான் 250 ரூபாயாகக் குறைத்துள்ளோம்.

அரசின் நிதி நிலவரத்தையும் பார்க்க வேண்டுமல்லவா? மற்றபடி நிலுவைத்தொகை பிரச்னை இப்போது கிடையாது. முன்பு சில இடங்களில் அப்படி இருந்திருக்கலாம். தற்போது அந்தப் பிரச்னையை சரிசெய்துவிட்டோம்" என்றவரிடம், தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் காட்டியதாகக் கூறப்படுவது குறித்துக் கேட்டோம். ``அதெற்கல்லாம் வாய்ப்பே இல்லை. ரெஜிஸ்டர் செய்வதில் பிரச்னை வந்து காஞ்சிபுரத்தில் இருவரை இடைநீக்கம் செய்தோம். ஆகவே, அதுபோல செய்யவே முடியாது.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. ஒன்றிரண்டு இருந்தாலும் டெக்னிக்கல் பிரச்னையாக இருக்கும். அதைச் சரி செய்துவிட்டோம். இந்த வேலையைக் கடினமாக நினைக்கும் சில சங்கங்கள் இருக்கின்றன. அவர்கள் கிளப்பிவிட்ட குற்றச்சாட்டு இது. 90 சதவிகிதத்துக்கு அதிகமானோர் ஆத்மார்த்தமாக வேலை செய்கின்றனர். சனிக்கிழமை வேலை செய்யச் சொல்கிறார்கள், ஞாயிற்றுக்கிழமை வேலை செய்யச் சொல்கிறார்கள், வாரவாரம் காலை 7 மணி முதல் சாயங்காலம் 7 மணி வரை உட்கார வைக்கிறார்கள் என்று நினைக்கும் சிலர் கிளப்பிவிட்ட செய்தி இது... உண்மையில் அப்படியெல்லாம் எதுவும் இல்லை" என்று உறுதியாகச் சொன்னார் அமைச்சர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism