Published:Updated:

மகாராஷ்டிரா: `கறுப்பு பூஞ்சை நோய்த் தொற்றுக்கு 100 பேர் உயிரிழப்பு!’ - மாநில சுகாதாரத்துறை அமைச்சர்

மகாராஷ்டிராவில் கறுப்பு பூஞ்சை நோய்த் தொற்றுக்கு 100 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே தெரிவிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு 86,000 பேர் வரை உயிரிழந்துவிட்டனர். கொரோனாவோடு இப்போது `கறுப்பு பூஞ்சை’ என்ற புதிய நோய்த்தொற்றும் வேகமாகப் பரவிவருகிறது. நாடு முழுவதும் மொத்தம் 22 மாநிலங்களில் இந்த நோயின் பரவல் இருக்கிறது. மகாராஷ்டிராவில் மட்டும் இந்த நோய்க்கு இதுவரை 100 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 1,500-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராஜேஷ் தோபே அளித்துள்ள பேட்டியில், ``நோய்ப் பரவல் சட்டத்தின் கீழ் கறுப்பு பூஞ்சை நோயை அறிவிக்கக்கூடிய நோயாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜேஷ் தோபே
ராஜேஷ் தோபே

இதன் மூலம் இந்த நோய் யாருக்கு வந்தாலும் உடனே இது குறித்து சுகாதாரத்துறைக்குத் தெரிவிக்க வேண்டும். மே 21-ம் தேதி வரை இந்த நோய்க்கு 100 பேர் உயிரிழந்துள்ளனர். 1,500 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். இந்த நோய் வந்தவர்களுக்கு மாநில அரசு இலவசமாக சிகிச்சையளிக்கும். ஆனால் இந்த நோய் சிகிச்சைக்குப் பயன்படும் மருந்துக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த மருந்துக்கு அதிக தேவை இருக்கிறது.

மகாராஷ்டிரா மட்டுமல்லாமல் குஜராத், ராஜஸ்தான், தமிழ்நாடு, கர்நாடகா உட்பட 22 மாநிலங்களில் இந்த நோய் பரவியிருக்கிறது” என்றார்.

மகாராஷ்டிராவில் தற்போது 3.67 லட்சம் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மகாராஷ்டிராவில் கொரோனா தொற்றின் மொத்த எண்ணிக்கை 55.27 லட்சமாக இருக்கிறது. பிரான்ஸ் நாட்டில் 55.81 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று இருக்கிறது. ஒன்னும் ஓரிரு நாள்களில் கொரோனா பாதிப்பில் பிரான்ஸை மகாராஷ்டிரா மிஞ்சிவிடும்.

மகாராஷ்டிராவில் தினசரி கொரோனா தொற்று 30,000-க்கும் கீழே சென்றுள்ளது. ஆனால் கொரோனா பலி எண்ணிக்கை மட்டும் தொடர்ந்து அதிகமாக இருந்துவருகிறது. மேலும் கொரோனா தடுப்பூசிக்கும் மகாராஷ்டிராவில் தொடர்ந்து தட்டுப்பாடு இருந்துவருகிறது. இதனால் முதல் ஊசி போட்டுக்கொண்டவர்கள் இரண்டாவது ஊசிக்கு மேலும் அதிக நாள்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மேலும் இரண்டு மாதம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு