Published:Updated:

அடிமைகளாக நடத்துகின்றன ஐ.டி. கம்பெனிகள் !

தொடரும் தற்கொலைகள்

‘மன விரக்தியால் மென்பொருள் நிறுவன ஊழியர் தற்கொலை’ என்ற செய்தியை இப்போது எல்லாம் சர்வசாதாரணமாக ஊடகங்களில் பார்க்க முடிகிறது. ஆனால், முன்புபோல் இந்த செய்தியைக் கடந்து போய்விட முடியாது. காரணம், இன்றைக்கு நம் குடும்பங்களிலேயே பல பொறியாளர்களை உருவாக்கி வைத்திருக்கிறோம். கை நிறைய சம்பளம், வெளிநாடுகளில் ஆன்சைட், ஜாலி வாழ்க்கை என்று நம் கண் முன்னே மாயையை ஏற்படுத்தியிருக்கும் ஐ.டி நிறுவன ஊழியர்களின் மற்றொரு பக்கம், கேட்பதற்கே பகீர் ரகம். இரவு பகல் பாராமல் வேலை, எப்போது வேலை போகுமோ என்று தெரியாத நிலை என இந்த துறையில் திறமையானவர்களே இப்போது எல்லாம் திக்.. திக்... என்று இருக்கிறார்கள்.

கடந்த வாரம் ஜாக்குலின் - ராதாகிருஷ்ணன் தம்பதி இப்படித்தான் தங்கள் மனவேதனையில் உயிரை பறிகொடுத்திருக்கிறார்கள். மே 20 அன்று காலை ராதாகிருஷ்ணன் பழவந்தாங்கல் அருகே ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அதே சமயம் அவரது காதல் மனைவி  ஜாக்குலின் வீட்டில் தூக்குப் போட்டு இறந்திருக்கிறார். காரணம், ஐ.டி துறையில் பல ஆண்டுகளாக வேலை பார்த்துவந்த இவர்களை அந்த நிறுவனம் ஆட்குறைப்பு காரணமாக வேலையைவிட்டு தூக்கியிருக்கிறது. அந்த மனஉளைச்சலே இவர்களின் தற்கொலைக்கு காரணம். இப்போது இவர்களின் ஆறு மாத கைக்குழந்தை நிர்க்கதியாகி இருக்கிறது.

அடிமைகளாக நடத்துகின்றன ஐ.டி. கம்பெனிகள் !

மார்ச் மாதம் இதே போன்று இரண்டு ஐ.டி இளைஞர்கள் அப்ரைசல் மன அழுத்தம் தாங்க முடியாமல் எட்டாவது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டனர். இப்படி நடக்கும் பல விடைதெரியாத மரணங்கள் எல்லாம் வெளியே வராமல் மறைக்கப்படுகின்றன. அவர்களின் சக ஊழியர்கள்கூட இதுகுறித்து கேள்வி கேட்பதே இல்லை என்பது அந்த நிறுவனங்களுக்கும் சாதகமாகிவிடுகின்றன.

இதற்கெல்லாம் என்ன தீர்வு என்பது குறித்து ஐ.டி. நிறுவன ஊழியர்களுக்காக சங்கம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் அமைப்பாளர் கற்பகவிநாயகத்திடம் பேசினோம். ‘‘நானும் 17 ஆண்டுகளாக இந்தத் துறையில் பணிபுரிந்து ஆட்குறைப்பு காரணமாக வெளியேற்றப்பட்டவன்தான். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதேபோல ஆட்குறைப்பில் சில தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டன. அந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றதும் அமைதியாக இருப்பதைப்போல நடித்தன. தற்போது மீண்டும் காலி செய்யும் வேலையை துவக்கியுள்ளனர். அப்போது தொடுத்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவை அமல்படுத்தாமல் தமிழக அரசு தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருகிறது. எனவேதான், பணிப்பாதுகாப்பு இல்லாத ஊழியர்கள் தற்கொலை முடிவை தேர்ந்தெடுக்கிறார்கள். இன்று நீங்கள் எந்த ஐ.டி ஊழியரிடம் போய் பேசினாலும் இந்த பயத்தை அவர்களிடம் காண முடியும்.

அடிமைகளாக நடத்துகின்றன ஐ.டி. கம்பெனிகள் !

அவர்களுக்கும் ஊழியர் பாதுகாப்புச் சட்டம் பற்றி போதுமான விழிப்பு உணர்வு இல்லை. நீங்கள் எப்படி கடினமான வேலை செய்யும் நபராக இருந்தாலும் அவர்கள் நினைத்தால், உங்களது அப்ரைசலில் ‘திறமையற்றவர்’ என முத்திரையிட்டு வெளியே அனுப்பிவிடுவார்கள். அப்ரைசல் என்பதே வெளிப்படையற்ற ஒரு தகுதி மதிப்பீடு. கார்ப்பரேட் நிறுவனங்கள் தொழிலாளர் சட்டங்கள் எதையும் பின்பற்றுவதில்லை. ஒரு மாநில அரசு தரும் நிலம், மின்சாரம், வரிச்சலுகை உட்பட அனைத்து சலுகைகளையும் அனுபவித்துக்கொண்டு அங்கு பணிபுரிவோரை மிகவும் மோசமான நிலையில் வைத்திருக்கிறார்கள்.

அடிமைகளாக நடத்துகின்றன ஐ.டி. கம்பெனிகள் !

ஏழு ஊழியர்களுக்கு மேல் இருந்தால் சங்கம் அமைக்கலாம் என்பது தொழிலாளர் சட்டத்தின் அடிப்படை விதி. ஆனால், பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் இருந்தும் தங்களின் அடிப்படை உரிமைக்குக்கூட போராடாமல் தங்கள் நிறுவன அதிகாரிகளையே சார்ந்திருக்க வைத்திருப்பது இந்த நிறுவனங்களின் ராஜதந்திரம்தான். எதிர்த்துக் கேட்டால் வேலை போய்விடும் என்பது எழுதப்படாத அடிமை சாசன விதியாக இருக்கிறது. இது தொடர்பாக நாங்கள் மாநில அரசின் உயர் அதிகாரிகளை பலமுறை சந்தித்தும் பலன் இல்லை.

இப்படியே இருந்தால் இன்னும் மோசமான நிலைக்குத் தொழிலாளர்கள் தள்ளப்படுவார்கள். எனவே, மாநில அரசு உடனடியாக மென்பொருள் நிறுவனங்கள் தொழிலாளர் சட்டத்தை பின்பற்ற திருத்தம் இயற்ற வேண்டும். முறையற்ற ஆட்குறைப்பைத் தடுக்க ஆவன செய்யவேண்டும். பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அப்போதுதான் மன உளைச்சலில் இருக்கும் பல்லாயிரம் ஊழியர்கள் வாழ்வார்கள்’’ என்றார்.

லாபத்தை மட்டுமே பார்க்கும் மென்பொருள் நிறுவனங்்களுக்கு, தொழிலாளர்களின் உரிமைகளை நிலைநாட்ட கடிவாளம் விதிக்கப்படுமா?

- மா.அ.மோகன் பிரபாகரன்

அடுத்த கட்டுரைக்கு