Published:Updated:

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 10 - விளக்கேந்திய மங்கைகள்!

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 10 - விளக்கேந்திய மங்கைகள்!
பிரீமியம் ஸ்டோரி
மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 10 - விளக்கேந்திய மங்கைகள்!

டாக்டர் வெ.ஜீவானந்தம்

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 10 - விளக்கேந்திய மங்கைகள்!

டாக்டர் வெ.ஜீவானந்தம்

Published:Updated:
மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 10 - விளக்கேந்திய மங்கைகள்!
பிரீமியம் ஸ்டோரி
மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 10 - விளக்கேந்திய மங்கைகள்!
மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 10 - விளக்கேந்திய மங்கைகள்!

லக செவிலியர் தினம், மே 12-ம் தேதி கொண்டாடப்படுகிறது. நாம் நோயினால், வலியிலும் வேதனையிலும் துடித்த காலத்தில், மருத்துவமனைகளில் நம்மை அன்புடனும், பரிவுடனும் கவனித்துச் சேவை செய்த செவிலியர்களுக்கு மானசீகமாக நன்றி சொல்லும் நாள் இது. மருத்துவமனைகளை ‘டாக்டரிங் ஹோம்’ என்று அழைப்பதில்லை. ‘நர்ஸிங் ஹோம்’ என்றே அழைக்கிறோம். டாக்டர்கள் பரிசோதனை செய்து, என்ன சிகிச்சை என்று முடிவு செய்கிறார்கள் என்றாலும், அவர்களின் வழிகாட்டலை இரவும் பகலும் சிறப்பாகச் செய்து நோயாளிகளைக் கவனிப்பது நர்ஸ்களே.

‘நர்ஸ்’ எனும்போது, ஏதோ ஆங்கில மருத்துவத்துடன், அல்லது மேற்கத்திய பாணி மருத்துவமனைகளுடன் மட்டுமே கற்பனை செய்கிறோம். ஆனால், நம் மரபிலேயே இதற்கு முன்னோடிகள் உண்டு. வேத காலத்தில் நம் சுஸ்ருதர் தரையில் அமர்ந்து அறுவை சிகிச்சை செய்யும் ஓவியத்தில், ஒரு பாத்திரத்தில் நீருடன் பெண் ஒருவர் நிற்பதையும் காணலாம். ஆயுர்வேத மருத்துவத்தின் தந்தையான சரகர், ‘ஒரு திறமையான மருத்துவ சிகிச்சைக்கு நோயாளி, டாக்டர், செவிலியர் மற்றும் மருந்து ஆகிய நான்கு விஷயங்கள் அவசியம். செவிலியர் சுத்தமாகவும், நல்ல மருத்துவ அறிவோடும், எல்லோரிடமும் கருணை காட்டுபவராகவும் இருக்க வேண்டும்’ என்கிறார். எங்கெல்லாம் அன்பு நிறைந்த சேவை தேவையோ, அங்கெல்லாம் பெண்களே முதலிடம் பெறுகின்றனர்.

புத்தரின் காலத்தில் பிக்குணிகள், சிறந்த மருத்துவச் சேவையாற்றி உள்ளதாக அறிகிறோம். கிறிஸ்துவம், மருத்துவத்தில் உன்னதப் பங்காற்றுகிறது. இதில் கன்னியாஸ்திரிகளுக்குப் பெரும் பங்கு உண்டு. ‘விளக்கேந்திய மங்கை’ என்று உலகம் முழுவதும் போற்றப்படும் ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல், செவிலியர் சேவையின் முன்னோடி. ஐரோப்பாவில் நடைபெற்ற க்ரீமியன் போரில் இரவு வேளைகளிலும் கையில் விளக்கை ஏந்தித் தேடித்தேடிச் சென்று சேவை புரிந்த அவரைப் போற்றும் வண்ணமே இந்நாள் கொண்டாடப்படுகிறது. இன்றும் நர்ஸிங் பட்டம் பெறும் செவிலியர்கள், கைவிளக்கில் ஒளியேற்றி, தன்னலமற்ற மனிதகுலச் சேவையைச் செய்ய உறுதி ஏற்கின்றனர்.

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 10 - விளக்கேந்திய மங்கைகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தியாவில் பணிபுரிந்த பிரிட்டிஷ் வீரர்களுக்காக முதல் மிலிட்டரி மருத்துவமனை, சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில்  1664-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் பணிபுரிய நர்ஸ்கள் லண்டனில் இருந்து வந்தனர். சென்னையில், ஏழை மக்களுக்கான முதல் பிரசவ மருத்துவமனை உருவெடுத்த சில ஆண்டுகளில், அரசு ஒரு பயிற்சிப்பள்ளியைத் தொடங்கியது. ஆனால், அது முழுமையான நர்ஸ்களை உருவாக்கவில்லை. பிரசவ காலத்தில் உதவி செய்யும் தாதிகளே இதில் பயிற்சி பெற்றனர்.

பிற்காலத்தில் இந்தியாவில் நர்ஸ்களின் தேவையை உணர்ந்துகொண்ட நைட்டிங்கேல், தன்னிடம் பயிற்சி பெற்ற சிலரை இந்தியாவுக்கு அனுப்பி நர்ஸிங் பள்ளியைத் தொடங்கச் சொன்னார். 1867-ம் ஆண்டு டெல்லியின் புனித ஸ்டீபன் மருத்துவமனையில், முதன்முதலில் செவிலியர்களுக்கான பயிற்சி தொடங்கப்பட்டது. இந்தியாவின் முதல் நர்ஸிங் பள்ளி, 1871-ம் ஆண்டு சென்னை அரசு மருத்துவமனையில்தான் வந்தது.

பெண்கள் மட்டும் பங்கேற்ற செவிலியர் பணியில், பிற்காலத்தில் ஆண்களும் பயிற்றுவிக்கப்பட்டனர். மருத்துவத்தின் பல்வேறு துறைகளிலும் சிறப்புப் பயிற்சி வழங்கப்பட்டது. அறுவை சிகிச்சை, மயக்கமருந்து தருதல், இதயநோய்ப் பிரிவு, அவசரச் சிகிச்சை, மருத்துவ உதவியாளர் என ஒவ்வொரு பிரிவிலும் பட்டப்படிப்புக்குப் பின் உயர்கல்வி பெறவும், ஆய்வு மேற்கொண்டு முனைவர், டாக்டர் பட்டம் பெறவும் தக்க வகையில் செவிலியர் கல்வி வளர்ந்துள்ளது.  மருந்துகளை முடிவு செய்யும் பொறுப்பு மட்டும் செவிலியர்களுக்குத் தரப்படவில்லை. இயற்கை இடர்பாடுகள், விபத்துகள், போர்முனைகள் போன்றவற்றில் மருத்துவ உதவி வழங்கிவரும் செஞ்சிலுவைச் சங்கம், செயின்ட் ஜான்ஸ் ஆம்புலன்ஸ் போன்றவற்றில் செவிலியரின் பங்கு பெருமளவு உண்டு. புற்றுநோய் போன்றவற்றில் மரணத்தின் வாயிலில் வாடும் இறுதிநிலை நோயாளிகளுக்கு Palliative care எனும் ஆறுதல் சிகிச்சை வழங்குவதில் செவிலியரின் பங்கு ஒப்பற்றது.

வெறுமனே பத்திரிகைகளில் வெளியாகும் ஜோக்குகள் வழியாக மட்டுமே நர்ஸ்களின் வாழ்க்கையைக் கடந்து போய்விட முடியாது. எத்தனையோ பேரின் வலிகளைத் தங்கள் பராமரிப்பாலும் வார்த்தைகளாலும் ஆற்றும் நர்ஸ்களில் பலரின் வாழ்க்கை வலி நிறைந்தது. தினமும் 9 மணி நேரம் முதல் 14 மணி நேரம் வரை பணிபுரிய வேண்டும். அரசு வேலை என்றால் பரவாயில்லை, சம்பளம் கணிசமாக வரும். ஆனால், பெரும்பாலான நர்ஸ்கள் வேலை பார்ப்பது தனியார் மருத்துவமனைகளில்தான். மிகக்குறைந்த சம்பளத்துக்கு ஒப்புக்கொண்டு, கான்ட்ராக்டில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்து விட்டு பல ஆண்டுகள் பணிபுரிபவர்கள் உண்டு. மத்திய அரசே தனது தேசிய ஊரக சுகாதாரத் திட்டத்துக்கு கான்ட்ராக்டில் நர்ஸ்களை வேலைக்கு எடுக்கும்போது, தனியார் மருத்துவமனைகளைக் குறை சொல்லி என்ன ஆகப்போகிறது?

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 10 - விளக்கேந்திய மங்கைகள்!

டாக்டர்களுக்குப் பணிக்கு வந்தபின் மேற்படிப்பு படிக்க வாய்ப்பும் சுதந்திரமும் கிடைக்கிறது. ஆனால், நர்ஸ்களுக்கு அப்படி இல்லை. எத்தனை ஆண்டுகள் பணிபுரிந்தாலும், சின்னச்சின்ன பதவி உயர்வுகளோடு திருப்தி அடைந்து ஓய்வுபெறுகிறார்கள். மருத்துவமனை வார்டுகளில் நான்கு நோயாளிகளுக்கு ஒரு நர்ஸ் என்கிற விகிதத்தில் பணிபுரிய வேண்டும். ஆனால், நிஜத்தில் அரசு மருத்துவமனைகளே இந்த விதியைப் பின்பற்றுவதில்லை.

மோசமான நோய்களுடன் உள்ள நோயாளிகளை நெருங்கிச் சேவை செய்யும் செவிலியர்கள், பல்வேறு வகையான தொழில்ரீதியிலான பாதிப்புகளுக்கு ஆளாகும் அபாயமும் உள்ளது. இரவு பகல் பாராது கடுமையான உழைப்பை மேற்கொள்ளும் செவிலியர், மன அழுத்தம் மற்றும் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகிறது. மேலும், மருத்துவர்கள் மீதான வன்முறைகள் பெருகிவரும் இக்காலகட்டத்தில், செவிலியர்களும் தாக்குதல் களுக்கு ஆளாகின்றனர்.

இந்தியாவில் 16 லட்சம் நர்ஸ்கள் இருப்பதாகக் கடந்த 2008-ம் ஆண்டு எடுத்த ஒரு கணக்கெடுப்பு சொல்கிறது. இப்போது இந்த எண்ணிக்கை இரண்டு மடங்காக ஆகியிருக்கலாம். புற்றீசல் போல தனியார் நர்ஸிங் பயிற்சிப் பள்ளிகள் பெருகி விட்டன. இவற்றை முறைப் படுத்த அரசு, எந்த முயற்சியும் எடுப்பதில்லை என்பது வேதனை. ஒரு டாக்டர் போலவே, செவிலியரும் உயிர்காக்கும் பணியைத்தான் செய்கிறார். அதற்கு அவர் எந்த அளவு பயிற்சியோடு தயாராகி வந்திருக்க வேண்டும்!

இப்போது ‘ஹோம் நர்ஸ்’ என்ற முறை இந்தியாவில் வேகமாக வளர்ந்து வருகிறது. மேற்கத்திய நாடுகளில் இது ஏற்கெனவே பரவலாக இருந்தாலும், இந்தியாவுக்கு இது புதுசு! ஆனால், நிறைய பேர் மருத்துவமனையில் பார்த்துவரும் வேலையைத் துறந்துவிட்டு ஹோம் நர்ஸ் வேலை பார்க்க வரும் அளவுக்கு இதில் பணி நிறைவு, சம்பளம் என்று எல்லாமே கிடைக்கிறது. இப்போது நர்சிங் பயிற்சி பெற்று வருபவர்களில் சுமார் 60 சதவிகிதம் பேர், ஹோம் நர்ஸ் வேலை பார்க்கவே விரும்புவதாகச் சொல்கிறார்கள்.

நர்சிங் கல்வி முடித்து, மாநில மருத்துவ கவுன்சிலில் பதிவுசெய்துகொண்ட எவரும், ஹோம் நர்ஸ் பணியைச் செய்ய முடியும். ஆனால், ஏதாவது ஒரு மருத்துவமனையில் குறைந்த பட்சம் இரண்டு ஆண்டுகளாவது பணிபுரிந்து, அனுபவம் சேகரித்துக்கொள்வது நல்லது. பிள்ளைகள் வெளிநாட்டில் இருக்க, முதுமையில் நோயோடு தவிக்கும் பெற்றோர்கள் இங்கே இருப்பார்கள். பார்த்துக் கொள்ள உறவுகள் யாருமற்ற அவர்களின் எல்லா தேவைகளையும் ஒரு ஹோம் நர்ஸ் மட்டுமே பூர்த்தி செய்யமுடியும். மருந்து முதல் டயட் வரை எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்துச் செய்வது இவர்களின் பணி. ஒரு அசாதாரண சூழலில், டாக்டர் போலவே செயல் பட்டு உயிர்காக்கும் பணிவிடைகள் செய்ய வேண்டும். ‘‘மருத்துவ மனைகளில் பணிபுரிவதை விட இது பெரும் மனநிறைவு தருகிறது. மருத்துவமனையில் ஒரே நேரத்தில் பல நோயாளிகளைப் பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கும். அதனால் யார்மீதும் 100 சதவிகித அக்கறையைக் காட்ட முடியாது. சுழன்று சுழன்று வேலை பார்க்கும் போது எழும் எரிச்சலை யாரிடமோ காட்டிவிடுகிறோம். ஆனால், வீடுகளில் நம் முழு நேரத்தையும் ஒரு நோயாளிக்குத் தருவதால், இந்தப் பிரச்னை இல்லை. நல்ல புரிதலோடு வேலை பார்க்க முடிகிறது’’ என்கிறார்கள் ஹோம் நர்ஸ்கள்.

இந்தியாவில் சிகிச்சை பெற்றுக் கொள்ள பல உலக நாடுகளிலிருந்து நோயாளிகள் வருகிறார்கள். இவர்களில் பலர், சிகிச்சை முடிந்து சில நாட்கள் வீடுகளில் தங்கி மருத்துவம் பார்த்துக் கொள்கிறார்கள். அப்போது ஹோம் நர்ஸ் இவர்களுக்குத் தேவைப் படுகிறார்கள். இந்தியாவைச் சேர்ந்த ஹோம் நர்ஸ்களுக்கு வளைகுடா நாடுகளிலும், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளிலும் பெரும் வரவேற்பு இருக்கிறது. 

அன்பும், பரிவும் மிக்க நோயுற்றோர் சேவையில், இந்தியச் செவிலியரின் சேவை மிகவும் மதிக்கப்படுகிறது. குறிப்பாக, உலகம் முழுவதும் செவிலியர் சேவையில் கேரளப் பெண்கள், தங்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவையில் முன்னிலை வகிக்கின்றனர். சிரித்த முகத்துடன் சேவை செய்யும் செவிலியரைப் போற்றுவோம்.

(நலம் அறிவோம்)

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 10 - விளக்கேந்திய மங்கைகள்!

ரகசியம் காப்பேன்!

டாக்டர்கள் போலவே நர்ஸ்களுக்கும் உறுதிமொழி உண்டு. பயிற்சி முடித்ததும் இந்த உறுதிமொழியை ஏற்க வேண்டும். ‘செவிலியர் சேவையின் அறக்கோட்பாடுகளுக்கும் எனது பணியின் புனிதத்துக்கும் தீங்கு நேராமல், சேவையை மேற்கொள்வேன் என இறைவன் முன் உறுதியேற்கிறேன். என் மூத்த செவிலியர்களுக்கும், சக செவிலியர்களுக்கும் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவேன். எனது திறமைக்கு ஏற்ப உண்மையுடன் மருத்துவர்களின் கட்டளைகளையும், என் மூத்தோரின் வழிகாட்டலையும் ஏற்றுச் செயல்படுத்துவேன். கேடு தரும் எந்த மருந்தையும் தெரிந்தோ, தெரியாமலோ யாருக்கும் தரமாட்டேன். எனது பணியில் நான் அறியும் ரகசியங்களை, எக்காரணம் கொண்டும் எவருக்கும் தெரிவிக்க மாட்டேன். நோயாளிகளின் நலனுக்கென வாழவும், என் தொழிலின் உயர் லட்சியங்களுக்கு என்னை அர்ப்பணிக்கவும் உறுதியேற்கிறேன்’ என்பதே அந்த உறுதிமொழி!