Published:Updated:

அடுத்தடுத்து பரவும் பாதிப்பு... விடாமல் போராடும் கருணாநிதி! - கலக்கத்தில் உறவுகள்

தற்காலிக பின்னடைவில் இருந்த அவரது உடல்நிலை, இடையில் சற்று மேம்பட்டது. 'வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிடலாம்' என்ற அளவுக்கு நம்பிக்கையோடு இருந்தோம். நேற்றில் இருந்து மீண்டும் பின்னடைவை நோக்கிச் செல்கிறது.

அடுத்தடுத்து பரவும் பாதிப்பு... விடாமல் போராடும் கருணாநிதி! - கலக்கத்தில் உறவுகள்
அடுத்தடுத்து பரவும் பாதிப்பு... விடாமல் போராடும் கருணாநிதி! - கலக்கத்தில் உறவுகள்

தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் ஏற்பட்டுள்ள தொடர் பின்னடைவை அதிர்ச்சியோடு கவனித்து வருகின்றனர் குடும்பத்தினர். ' சிறுநீரகத்தில் ஏற்பட்ட நோய்த் தொற்று, கல்லீரலையும் பாதிப்புக்குள்ளாக்கிவிட்டது' என்கின்றனர் மருத்துவமனை வட்டாரத்தில். 

சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் பத்து நாள்களாக தீவிர சிகிச்சை எடுத்து வருகிறார் கருணாநிதி. கடந்த 29-ம் தேதி அவரது உடலில் ஏற்பட்ட பின்னடைவால், குடும்பத்தினரும் கட்சி நிர்வாகிகளும் கவலையடைந்தனர். ஆனால், அடுத்து சில மணி நேரங்களில் இயல்பு நிலைக்குத் திரும்பினார் கருணாநிதி. இதன்பின்னர், அவரது உடலில் பெரிதாக எந்தவித முன்னேற்றங்களும் தென்படவில்லை. இதுதொடர்பாகப் பேசும் குடும்ப உறவுகள், ' உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் தென்படவில்லை. இயற்கையோடு அவர் போராடிக் கொண்டிருக்கிறார்' என்ற பதிலையே கூறி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு, கருணாநிதியின் உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டது. 

கருணாநிதியின் உடல்நிலை குறித்து நம்மிடம் பேசிய குடும்ப உறுப்பினர் ஒருவர், ``சிறுநீரகப் பாதையின் இரண்டு இடங்களில் அவருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டது. இதற்காக வழங்கப்பட்டு வந்த ஆன்டி பயாடிக் மருந்துகளை ஓரளவுக்குத்தான் அவரது உடல் ஏற்றுக் கொண்டது. பெரிதாக எந்தவித முன்னேற்றத்தையும் அளிக்கவில்லை. ரத்த அழுத்தத்திலும் அவ்வப்போது குறைபாடு நிலவுகிறது. தற்போது மஞ்சள் காமாலை பாதிப்பும் சேர்ந்துவிட்டது. இதற்குக் காரணம், சிறுநீரகத் தொற்று முழுமையாக மருத்துவக் கட்டுப்பாட்டுக்குள் வராததுதான். சிறுநீரகத் தொற்றின் காரணமாக ரத்தத்தில் கிருமி கலந்துவிட்டது. இதே ரத்தம் கல்லீரலுக்கும் சென்று சேர்ந்து டெபாசிட் ஆகிவிட்டது. இதை ரத்தக் குழாய்களில் ரத்த அடைப்பு (Disseminated intra vascular coagulation) ஏற்படுவது என்பார்கள். கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டதால்தான், சிறப்பு மருத்துவர் முகமது ரேலா வரவழைக்கப்பட்டார். மருத்துவ உதவி மட்டும்தான், அவரது உடல்நிலையை மேம்படுத்தும் காரணிகளாக இருக்கின்றன. மருந்தின் உதவியில்லாமல் சீரான நிலையில் அவரை வைக்க முடியவில்லை. அதேநேரம், மருந்து கொடுத்தும்கூட கடந்த சனிக்கிழமை இரவு கடும் பின்னடைவு ஏற்பட்டது. இன்னும் சில நாள்களுக்கு சிக்கல் நீடிக்கவே வாய்ப்பு அதிகம்" என்றார் விரிவாக. 

`` வயது முதிர்வின் காரணமாக வரக் கூடிய பாதிப்புகள்தான் இவை அனைத்தும். சில நேரங்களில் அரிதாகக் கண் விழித்துப் பார்க்கிறார். கடந்த வாரம் மிகுந்த பின்னடைவில் இருந்த அவரது உடல்நிலை, இடையில் சற்று மேம்பட்டது. 'வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிடலாம்' என்ற அளவுக்கு நம்பிக்கையோடு இருந்தோம். நேற்றில் இருந்து மீண்டும் அவரது உடல்நிலை பின்னடைவை நோக்கிச் செல்கிறது. இதுதொடர்பாக, அழகிரியிடம் அவரது ஆதரவாளர்கள் கேட்டபோதும், ' அப்படியேதான் இருக்கிறார். இன்னும் எந்த முன்னேற்றமும் இல்லை' எனப் பேசியிருக்கிறார். கருணாநிதியின் கழுத்துப் பகுதியில் டிரக்கியாஸ்டமி பொருத்தப்பட்டுள்ளதால், சுவாசத்தில் சிக்கல் ஏற்படும்போது மட்டும் செயற்கை சுவாசம் தரப்படுகிறது. மற்ற நேரங்களில் இயல்பாகவே சுவாசித்து வருகிறார். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை உணர்ந்துகொள்ளும் நிலையிலும் அவர் இல்லை. இந்தப் பின்னடைவை சரி செய்யும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் மருத்துவக் குழுவினர்" என்கின்றனர் அறிவாலய நிர்வாகிகள்.