Published:Updated:

டயேரியா, அல்சர், லோ பிரஷர்... ஐசியூவில் திருமுருகன் காந்தி!

எண்டோஸ்கோபி செய்து அதன் முடிவுகள் தெரிந்தபின்புதான் சிகிச்சை குறித்து முடிவு செய்ய முடியும்

டயேரியா, அல்சர், லோ பிரஷர்... ஐசியூவில் திருமுருகன் காந்தி!
டயேரியா, அல்சர், லோ பிரஷர்... ஐசியூவில் திருமுருகன் காந்தி!

ன்ன, ஏன் இப்படி சித்ரவதை பண்றீங்க. நான் என்ன தீவிரவாதியா? வண்டிய நிறுத்துங்கன்னு நிறைய வாட்டி சொன்னேன். சிறுநீர் கழிக்கணும்னு மூணு மணி நேரமா சொல்றேன். வண்டிய நிறுத்தலே.  சிறுநீர்போகக் கூட அனுமதிக்க மாட்டேங்கிறீங்க. என்னைப் பரிசோதித்த மருத்துவர் எனக்கு சிகிச்சை அளிக்கனும்னு சொன்னாங்க. அதுக்குக்கூட அனுமதிக்கல. என்னை ஏன் தனிமைச் சிறையில அடைச்சு வெச்சிருக்கீங்க. காவல் துறையின் நியாமற்ற போக்கு இது’ 

-கடந்த மாதம் இருபத்து நான்காம் தேதி சென்னை ஆலந்தூர் நீதிமன்றத்தில், ஒரு வழக்கில் ஆஜராவதற்காக, சிறையிலிருந்து அழைத்து வரப்பட்ட, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பேசிய வார்த்தைகள் இவை. இன்றளவும் அவரின் மீதான நெருக்கடியும் குறையவில்லை. அவரின் உடல்நிலை மேலும் மோசமடைந்திருக்கிறது. 

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து ஐ.நா. சபையில் பேசியதற்காக, நாடு திரும்பியதும் பெங்களூர் விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டார்  திருமுருகன் காந்தி.  இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக கைது செய்யப்பட்ட அவர், கடந்த 48  நாள்களாக வேலூர் மத்திய சிறையில் இருக்கிறார். அவருக்குக் கடந்த மாதம் 24- ம் தேதி கடுமையான உடல்நலக் குறைபாடு ஏற்பட்டது. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. வயிற்று வலி, வாயு பிரச்னை, மூச்சுத் திணறல், அல்சர் போன்ற பல்வேறு உடல்நலக் கோளாறுகள் இருப்பதாகக் கூறப்பட்டது.  3 மணிநேரம் முழு மருத்துவப் பரிசோதனை நடந்தது. பின்னர், வழக்கு விசாரணைக்காகச் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அவருக்கு போதிய சிகிச்சைகள் அளிக்கப்படவில்லை என்பதை அவரே செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அவரின் உடல்நிலை மேலும் மோசமடைந்தது. . வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுக் கடந்த இரண்டு நாள்களாக சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், எண்டோஸ்கோபி செய்தாக வேண்டும் எனக் கூறியிருக்கிறார்கள்.  ஆனால், 'சிகிச்சையளித்தது போதும், அவரைச் சிறைக்கு அழைத்துச் செல்லவேண்டும் என மருத்துவர்களுக்கு, காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாக'த் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அவரின் உடல்நிலை குறித்து, மே 17 இயக்க நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டோம்,

 ``  கடந்த மே மாதம் 22- ம் ஐக்கிய நாடுகள் சபைக்குச் சென்று கடந்த மாதம் 9 - ம் தேதிதான் அவர் இந்தியாவுக்கு வந்தார். அங்கிருந்த நாள்களில் அவருக்குப் பழக்கமான உணவுகள் கிடைக்காததால், இந்தியா வரும்போதே தளர்வுடன்தான் வந்தார். வந்தவுடனே கைது செய்து சிறைக்கு அழைத்துச் சென்றுவிட்டார்கள். சிறையிலேயும் அவருக்குக் சரியான, சுகாதாரமான உணவுகள் வழங்கப்படாததால் டயேரியா பாதிப்பு ஏற்பட்டது. அதுகுறித்து அவர் நீதிபதிகளிடம் தெரிவித்துள்ளார். சிகிச்சை பெறுவதற்கு நீதிபதிகள் ஒப்புதல் அளித்தும்கூட சிறை அதிகாரிகள் அவருக்கு உரிய சிகிச்சை வசதிகளை ஏற்படுத்தவில்லை. அதனால் அவரின் உடல் டீ-ஹைட்ரேட் ஆகிவிட்டது.

அவரை அடைத்து வைத்திருக்கும் அறை என்பது, கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாகப் பராமரிக்கப்படாத, ஜன்னல்கள் இல்லாத காற்றோட்டமே இல்லாத ஒரு அறை. அறைக்கு வெளியில் ஒரு மர நிழலில் அவ்வப்போது ஓய்வு எடுத்து வந்திருக்கிறார். அதையும் சிறை அதிகாரிகள் தடுத்து அறைக்குள் மட்டுமே இருக்கவேண்டும் எனச் சொல்லியிருக்கிறார்கள்.  அந்த இருட்டு அறைக்குள்ளேயே தொடர்ச்சியாக அவர் இருப்பதால் மூச்சுத்திணறல் பாதிப்பும்  ஏற்பட்டிருக்கிறது. அது குறித்தும் சிறை அதிகாரிகளிடம் தெரிவித்திருக்கிறார். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

கடந்த 48 நாள்களாக அவரை பல்வேறு வழக்குகளுக்காக, பல்வேறு இடங்களுக்கு, சுமார் 9200 கிலோமீட்டர் தூரத்துக்கு  அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அப்படி அழைத்துச் செல்லும்போது அவருக்குக் சரியான சாப்பாடு, தண்ணீர்  என எந்த வசதியுமே ஏற்படுத்தித்  தரவில்லை. சிறையில் ஆறு மணியோடு இரவு சாப்பாடு முடிந்துவிடும். வேண்டுமென்றே ஏழு மணிக்குத்தான் சிறைக்கு அழைத்துச் செல்கிறார்கள். அதனால் சிறையிலும் அவருக்குக் சாப்பாடு கிடைப்பதில்லை. 

சிறையில் அவருக்கு வழங்கப்படும் உணவிலும் சந்தேகம் இருக்கிறது. சிறையிலும் மற்ற கைதிகளைப் போல் அவர் சென்று உணவை வாங்கிவர முடியாது. யாராவது வாங்கிவந்துதான் கொடுப்பார்கள். ஒருமுறை இவருக்கு வழங்கப்பட்ட உணவை பக்கத்துச் சிறையில் இருக்கும் ஒருவருக்கு கொடுத்துப் பார்த்திருக்கிறார் அவருக்கும் டயேரியா பிரச்னை ஏற்பட்டிருக்கிறது.  அதனால் அங்கு சாப்பிடுவதையே நிறுத்திவிட்டார். 

இதனால் குறைந்த ரத்த அழுத்தப் பிரச்னை ஏற்பட்டு கடந்தவாரம் சிறையிலேயே மயக்கமடைந்து விட்டார். உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். அங்கே உள் நோயாளியாக அவரை அனுமதிக்கவேண்டும்  என மருத்துவர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள். ஆனால், காவல்துறை அதிகாரிகள் மறுத்து வெறும் மாத்திரை, மருந்துகளை மட்டுமே அளித்து சென்னைக்கு அழைத்து வந்துவிட்டார்கள்.  இதுகுறித்து அவரின் தந்தைக்கோ, எங்களுக்கோ எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை. கடந்தவாரம் சென்னைக்கு ஒரு வழக்குக்காக அவர் அழைத்துவந்தபோதுதான் இந்தத் தகவல் வெளியானது. 

கடந்த சனிக்கிழமை அவருக்கு மீண்டும் உடல்நலப் பாதிப்பு ஏற்பட அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், 'இந்த முறை கண்டிப்பாக உள் நோயாளியாக அனுமதிக்கவேண்டும். இல்லையென்றால் சிகிச்சையளிக்க முடியாது' எனத் தெரிவித்திருக்கிறார்கள். அதற்குப் பிறகுதான் கடந்த சனிக்கிழமை அவரை ஐ.சி.யூவில் அனுமதித்து சிகிச்சையளித்து வருகிறார்கள். செரிமானக் கோளாறு, வயிற்றுப்புண், வயிற்றுப்போக்கு, குறைந்த ரத்த அழுத்தம் போன்ற பல்வேறு உடல்நல பாதிப்புகளால் அவதிப்பட்டு வருகிறார் ..." என்கிறார்கள் அவர்கள். 

மருத்துவமனை வட்டாரத்தில் விசாரித்தோம். 

"திருமுருகன் காந்திக்கு எண்டோஸ்கோபி செய்து பார்க்க வேண்டும். அதனால் இன்று அவர் மதிய உணவு எடுத்துக்கொள்ளவில்லை.  எண்டோஸ்கோபி செய்து அதன் முடிவுகள் தெரிந்த பின்புதான் சிகிச்சை குறித்து முடிவு செய்ய முடியும் " என்கிறார்கள்.