Published:Updated:

`மத்திய பட்ஜெட்... சுகாதாரத் துறைக்கு சாதகமா, பாதகமா...’ - என்ன சொல்கிறார்கள் நிபுணர்கள்?

ஆயுஷ்மான் திட்டத்துக்காகச் செலவிடப்பட்ட 3,000 கோடி யாருக்குச் சென்றடைந்தது? - பட்ஜெட் ஒரு பார்வை!

`மத்திய பட்ஜெட்... சுகாதாரத் துறைக்கு சாதகமா, பாதகமா...’ - என்ன சொல்கிறார்கள் நிபுணர்கள்?
`மத்திய பட்ஜெட்... சுகாதாரத் துறைக்கு சாதகமா, பாதகமா...’ - என்ன சொல்கிறார்கள் நிபுணர்கள்?

த்திய அரசின் இடைக்கால பட்ஜெட், பாராளுமன்றத்தில் இன்று காலை தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்குப் பதிலாக, இடைக்கால நிதி அமைச்சரான பியூஷ் கோயல் பட்ஜெட்டை தாக்கல்செய்தார். ஓர் ஆண்டுக்கான தனிநபர் வருமான உச்ச வரம்பு ரூ.5 லட்சமாக அதிகரிப்பு, வீட்டுக்கடனுக்கான வட்டிச் சலுகை 2 வீடுகளுக்கு வழங்கப்படும் என்பன போன்ற பொருளாதாரம் சார்ந்த பட்ஜெட் அறிவிப்புகளைப் பிரதானமாக வெளியிட்டார். மற்றொருபுறம் `2030-ல் இந்தியா’ என்ற தொலைநோக்குத் திட்டமும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்றும் அறிவித்தார்.

சுகாதாரத்துறையின் முக்கிய அம்சமான இந்தத் திட்டத்தின்படி, `2030-ம் ஆண்டுக்குள் ஆரோக்கியமான, மனஅழுத்தம் ஏதுமில்லாத, விரிவான சுகாதார அமைப்புக்கான சூழலை உருவாக்க வேண்டும்’ என்றார். ஆரோக்கியம் குறித்து பியூஷ் கோயல் கூறும்போது, ``பிரதமர் நரேந்திரமோடி அறிமுகப்படுத்திய ஆயுஷ்மான் பாரத் திட்டம், இதுவரை 10 லட்சம் மக்களைச் சென்றடைந்துள்ளது. ஆயுஷ்மான் திட்டத்துக்காக, மத்திய அரசு சுமார் ரூ.3,000 கோடி செலவு செய்துள்ளது’’ என்று குறிப்பிட்டார். மேலும், பழங்குடியினருக்கான ஆரோக்கியமின்மை மற்றும் ஊட்டச்சத்து பிரச்னைகள், இன்ன பிற பிரச்னைகள் அனைத்தையும் சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க இருப்பதாகவும், அதற்கான ஆலோசனைகள் நடந்து வருவதாகவும் தெரிவித்திருந்தார். 

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட் சுகாதாரத்துறைக்கு சாதகமாக அமைந்துள்ளதா என்று, மருத்துவச் செயற்பாட்டாளரும் சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்திடம் கேட்டபோது, ``ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 10 லட்சம் பேர் பயனடைந்திருக்கிறார்கள் என்ற அறிவிப்பு, தனியார் மருத்துமனைகள் அதிக பயனடைந்திருக்கின்றன என்பதையே காட்டுகிறது. இந்த அறிவிப்பால் மகிழ்ச்சிடைவதற்கு ஏதும் இல்லை.

அரசு மருத்துவமனைகள் அனைத்தையும் தனியார்மயமாக்குவதற்கான ஒரு முயற்சிதான் இந்தத் திட்டம். ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் ஒருவர் பயன்களைப் பெற சில வரைமுறைகள் உள்ளன. இருசக்கர வாகனம் வைத்திருக்கக் கூடாது, சிமென்ட்டால் கட்டப்பட்ட சொந்த வீடு இருக்கக் கூடாது என்றெல்லாம்கூட அதில் விதிமுறைகள் இருக்கின்றன. இன்றைய சூழலில், இரு சக்கர வாகனம் இல்லாதவர்களே இல்லை. எனில், யார்தான் இந்தத் திட்டத்தால் பயனடைய முடியும்? 

மேலும், ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் பயனடைய சம்பந்தப்பட்ட நபர் ஒவ்வோர் ஆண்டும் குறிப்பிட்ட தொகையைச் செலுத்த வேண்டும். நம்மிடம் வாங்கும் பணத்தைக்கொண்டுதான் நமக்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது... பிறகு எதற்கு இலவசம், பயனடைதல் போன்ற வார்த்தைகள் எல்லாம் சொல்லப்பட வேண்டும்? இப்படியான போக்குகள் யாவும், காப்பீட்டு நிறுவனங்களையும், தனியார் மருத்துவமனைகளையும் தான் வளர்த்தெடுக்கும். பழங்குடியினர் தொடர்பாகச் சொல்லப்பட்ட வாக்குறுதிகளும் நம்பிக்கை தரவில்லை. ஆரோக்கியமான இந்தியாவை எதிர்பார்க்கும் மத்திய அரசு, முதலில் எய்ம்ஸ், ஜிப்மர் மருத்துவமனைகளில் கட்டணமில்லா சிகிச்சையை அமல்படுத்த வேண்டும். சுகாதாரமான சூழலை, தனி மனிதனின் அடிப்படை உரிமையாக மத்திய அரசு முதலில் அறிவிக்க வேண்டும். பட்ஜெட்டில், பொருளாதார ரீதியான நிறைய நல்ல அறிவுப்புகள் இருக்கின்றன. ஒருவேளை இந்த அரசாங்கம் இதை உண்மையிலேயே செய்ய நினைத்திருந்தால், ஆட்சிக்கு வந்தவுடனேயே செய்திருக்கலாம். ஆட்சிக்காலத்தில் எதுவும் செய்யாமல் இருந்துவிட்டு, இப்போது அறிவித்திருப்பதன் மூலம் இது தேர்தலை நோக்கமாகக் கொண்டு வெளியிடப்பட்ட பட்ஜெட் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்’’ என்றார்.

மத்திய பட்ஜெட்டில் சுகாதாரத்துறைக்கான திட்டங்கள் குறித்து இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பின் (ஃபிக்கி) இணைத் தலைவர் கேசவனிடம் பேசினோம், ``இந்தப் பட்ஜெட்டில், சுகாதாரத்துறை தொடர்பான நிதி ஒதுக்கீடு மற்றும் திட்டங்கள் பெரியளவில்

அறிவிக்கப்படவில்லை. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், 10 லட்சம் மக்கள் பயனடைந்துள்ளனர் என்ற தகவல் மகிழ்ச்சிகரமானதுதான். நிதி ஒதுக்கீட்டில் பெண்களின் வாழ்வாதாரத்தையும் ஆரோக்கியத்தையும் உயர்த்துவதற்கான பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றில் முக்கியமானதாக இருப்பது, வேலைக்குச் செல்லும் கர்ப்பிணிகளுக்கு 26 வார விடுப்பு.

அதேபோல, பழங்குடியினரைக் கண்டறிந்து, அவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தப்போகிறோம் என்பதும், ஊரக சுகாதாரம் 98 சதவிகிதம் உறுதிசெய்யப்பட்டு, 5.45 லட்சம் கிராமங்கள் திறந்தவெளிக் கழிப்பிடம் இல்லாதவையாக மாறியுள்ளன என்பதும் மிகமுக்கியமான தகவல்கள். ஆனால், பழங்குடியினர் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது தொடர்பான வாக்குறுதியில் மருத்துவக்குழுக்கள் பழங்குடியினரை எப்படிச் சென்றடைவர் என்பதற்கான தெளிவான விளக்கங்கள் எதுவும் சொல்லப்படவில்லை. 2030-ம் ஆண்டுக்குள் எட்ட வேண்டிய இலக்குகளுக்கும் தெளிவான விளக்கங்கள் இல்லை. அரசின் அடுத்தடுத்த நடவடிக்கைகளில் இதற்கான பதில் கிடைத்தால் மகிழ்ச்சி" என்றார்.