Published:Updated:

ஈரோடு மஞ்சளுக்குப் புவிசார் குறியீடு!

ஈரோடு மஞ்சளுக்குப் புவிசார் குறியீடு!
ஈரோடு மஞ்சளுக்குப் புவிசார் குறியீடு!

புவிசார் குறியீடு பெறும் பொருள்களுக்கு, உலகளாவிய அளவில் ஒரு மவுசு உண்டு. தமிழகத்தில் பல்வேறு விளைபொருள்கள், உணவுப்பொருள்கள் மற்றும் சில ஊர்களின் சிறப்பு உற்பத்திப் பொருள்கள் போன்றவற்றுக்குப் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. ஆனால், குறிப்பிட்ட பகுதியில் விளையும் விளைபொருள்களுக்கு இந்த அங்கீகாரம் கிடைப்பது, மிகவும் அரிதாகும். தமிழகத்தில் சிறுமலை வாழைப்பழம், விருப்பாச்சி வாழைப்பழம், நீலகிரி தேயிலை போன்றவற்றுக்குப் புவிசார் குறியீடு இருப்பதால், சர்வதேச அளவில் அதற்கு தனிச்சிறப்பு இருக்கிறது. இந்த வரிசையில், இப்போது ஈரோடு மஞ்சளும் சேர்ந்துள்ளது. ஈரோடு மஞ்சள் என்று பெயர் இருந்தாலும், ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலப்பகுதிகளில் இந்த மஞ்சள் பரவலாக விளைவிக்கப்படுகிறது.

தனித்துவமான நிறம், சுவை, மணம் ஆகியவை கொண்ட ஈரோடு மஞ்சள், பல்வேறு மருத்துவச் சிறப்புகளையும் உள்ளடக்கியதாகும். இதிலிருந்து பெறப்படும் மஞ்சள் மருந்து, இயற்கை மருத்துவத்தில் பலவிதமான நோய்களுக்கும் சிறந்த மருந்தாகப் பரிந்துரைக்கப்படுகிறது. இந்த மஞ்சளில் CURCUMIN என்ற வேதிப்பொருள் அதிகளவில் இருப்பது, இதன் சிறப்பாகக் கருதப்படுகிறது. பல்வேறு மகிமைகளைக் கொண்ட இந்த மஞ்சளுக்கு, புவிசார் குறியீடு வழங்க வேண்டுமென்று, ஏழாண்டுகளுக்கு முன்பு இந்திய புவிசார் குறியீடுப் பதிவகத்தில் முறைப்படி விண்ணப்பிக்கப்பட்டது.களஆய்வு, கலந்துரையாடல், பவர் பாயின்ட் பிரசன்டேஷன், மருத்துவ ஆய்வறிக்கைகள் எனப் பலகட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இறுதியாக, இதற்கு ஆட்சேபம் தெரிவிப்பதுதொடர்பாக, நான்கு மாதங்களுக்கு முன்பு, புவிசார் பதிவகத்தின் ஆன்லைன் இதழில் அறிவிக்கை வெளியிடப்பட்டது. அதற்கு ஆட்சேபம் எதுவும் வராத காரணத்தால், ஈரோடு மஞ்சள் புவிசார் குறியீடு பெறுவதற்குத் தகுதியுடையதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக இந்திய புவிசார் குறியீடு பதிவகத்தின் இணைப்பதிவாளர் சின்னராஜா தெரிவித்தார். நீண்ட இடைவெளிக்குப்பின், தமிழகத்திலுள்ள ஒரு விளைபொருளுக்கு இத்தகைய அங்கீகாரம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில், மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள வைகான் மஞ்சள், ஒடிஷாவிலுள்ள கந்தமால் மலை மஞ்சள் போன்றவற்றுக்கு ஏற்கெனவே புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. தமிழகத்தில் விளையும் மஞ்சளுக்குப் புவிசார் குறியீடு கிடைப்பது, இதுவே முதன்முறை. இது கொங்கு மண்டல மஞ்சள் விவசாயிகளுக்குப் பெரும் மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாகவுள்ளது. இதனால், சர்வதேச அளவில், ஈரோடு மஞ்சளுக்கான விற்பனை வாய்ப்பும், விலையும் அதிகரிக்குமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.