Published:Updated:

மயக்கம் என்ன?

மயக்கம் என்ன?

மயக்கம் என்ன?

மயக்கம் என்ன?

Published:Updated:
மயக்கம் என்ன?
##~##

சேலத்தில் என் நண்பன் ஒருவன். மிகக் கௌரவ​மான பணியில் இருந்தான். செய்தொழில் நேர்த்திக்காகவே போற்றப்படுபவன். ஆனால், மிக அதிகமாகக் குடிப்பான். ஒருநாள் நெத்திமேடு பஸ் ஸ்டாப்பில் நான் நின்றுகொண்டு இருந்தபோது கைலி, பனியனுடன் ரோட்டில் வேகமாக ஓடிக்கொண்டிருந்தான். என்னவோ ஏதோவென நானும் அவனைப் பின்தொடர்ந்து ஓட... அவன் பக்கத்தில் இருந்த ரம்பா ஒயின்ஸ் ஷாப்புக்குள் தாவினான். (தனியாரிடம் மதுக்கடை இருந்தபோது நடிகை ரம்பாவின் கவர்ச்சிப் படம் போட்ட போர்டுடன் வைக்கப்பட்ட பெயர், இன்று வரை நிலைத்துவிட்டது.) உள்ளே நுழைந்தவன் பரபரவெனப் பார்த்தபடி ஒரு டேபிளில் இருந்த ஆஃப் பாட்டிலை வெடுக்கென எடுத்துக்கொண்டு ஓடத் துவங்கினான். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

செயின் பறிப்பு திருடன் ரேஞ்சுக்கு பாட்டிலை  இறுக்கமாகப் பிடித்தபடி அவன் ஓட...  'ஏய், பிடி... பிடி’ என்றபடி துரத்த ஆரம்பித்தார்கள். பார் பணியாளர் ஒருவர் இடையே புகுந்து மறிக்க... அங்குமிங்கும் அலைபாய்ந்தவன், வாட்டர் பாக்கெட் மூட்டையில் கால் இடறி... பொத்தென விழுந்தான். நான்கு பேர் அவனை அமுக்கிப் பிடித்து பாட்டிலைப் பிடுங்க... அப்போதும்விடாமல் அவன் பாட்டிலை வாய்க்குள் சரித்து அப்படியே குடித்தான். அவனிடம் இருந்து பாட்டிலைப் பாடாதபாடுபட்டு பிடுங்கினார்கள். அதை ஒருவன் அவனது முகத்தில் ஊற்றி, அவன் பிறப்பைக் குறித்து கேள்வி எழுப்பினான். கும்பலில் இருந்த இன்னொருவன் காலி பீர் பாட்டிலை எடுத்து நண்பனின் தலையில் ஓங்கி அடித்தான். ரத்தம் வழிந்த நிலையிலும் இவன், 'பாஸு, கொஞ்சம் குடுங்க பாஸு... ஒரு கட்டிங் குடுங்க...’ என்று கெஞ்ச ஆரம்பித்தான்.

ஓடிச் சென்று நண்பனை சூழ்ந்திருந்த கும்பலை சமாதானப்படுத்தி, அவனை அழைத்து வந்தேன். இந்தக் களேபரத்தில் அவனது கைலியைக் காணோம். தூரத்தில் கிடந்த கைலியை ஒரு சிறுவன் எடுத்துத் தர, அதைக் கட்டிவிட்டேன். குவாட்டர் வாங்கித் தந்தே ஆக வேண்டும் என்றான் நண்பன். நான் மறுக்க... திடீரென்று என் காலைப் பிடித்துக்கொண்டு கதறினான். வேறு வழி இல்லாமல் குவாட்டர் வாங்கித் தந்தேன். தண்ணீர்கூட கலக்கவில்லை. மூடியைத் திறப்பதற்கு அவசரம். மூடியை பல்லால் பெயர்த்து எடுத்து, அப்படியே குடித்து, ஆசுவாசமானான்.

''அடி வாங்கி இப்பிடிக் கேவலப்பட்டு இதைக் குடிச்சாகணுமா?'' என்றேன். ''அடியைவிடு... குடிதான் முக்கியம் மச்சி...'' - பஞ்ச் அடித்து சிரித்தது பானம். எனக்கு வயிறு பற்றி எரிந்தது. அப்புறம் அவன் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. கைத்தாங்கலாக அவனை டாக்டரிடம் அழைத்துச் சென்றேன். டாக்டர்

மயக்கம் என்ன?

தலையில் கட்டுப் போட்டுவிட்டார். 'ஊசி வேண்டாம்; போட்டாலும் வேலை செய்யாது. நாளைக்கு காலையில இந்த மாத்திரையை சாப்பிடச் சொல்லுங்க...’ என்றார். அவனுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றேன்.

வீடு உள்பக்கமாகத் தாழிடப்பட்டு இருந்தது. சரியாக வீட்டு வாசலில் இவன் வாந்தி எடுத்து சரிய... வாந்தியில் ரத்தம் கலந்து இருந்தது. குடல், இரைப்பை அரித்து ஓட்டையானால்தான் இப்படி வாந்தியுடன் ரத்தம் கலந்து வரும். இல்லை என்றால் தொண்டையில் புண் இருந்திருக்க வேண்டும். நான் கதவைத் தட்டினேன். கதவைத் திறந்தது ஒரு அழகான குட்டிப் பையன். கீழேகிடந்த நண்பனை பார்த்துவிட்டு, 'அங்கிள் ரொம்ப தேங்ஸ்...’ என்றான். அப்பாவைப் பார்த்து அவன் அதிர்ச்சி அடையவில்லை. ஏற்கெனவே ரொம்பப் பட்டு இருப்பான் போலிருக்கிறது. நானும் அவனும் நண்பனின் தோளைப் பிடித்து வீட்டுக்குள் இழுத்துச் சென்று படுக்க வைத்தோம். அந்த குட்டிப் பையன் பெரிய மனுஷ தோரணையில் வாளியில் தண்ணீரும் விளக்குமாறும் கொண்டு வந்து வாசலைக் கழுவி விட்டான்.

''இவர் வாங்குற சம்பளத்துக்கு இப்படிக் குடிச்சா குடும்பம் நடத்த முடியுமா அங்கிள். லைன் வீட்டுக்காரங்க எல்லாம் தினமும் கண்டபடி திட்டுறாங்க. ஹவுஸ் ஓனர் வீட்டைக் காலி பண்ணச் சொல்றார். நான் ஸ்கூலுக்கு போறதா? இவரைப் பார்த்துகிறதா?'' என்றான். நான்காம் வகுப்பு படிக்கும் அந்த சிறுவனிடம் கொஞ்சமும் மழலை இல்லை. அப்பனின் குடியும் அடியும் அவனை அப்படிப் பக்குவப்படுத்தி இருக்கும்போல. ''அம்மா எங்கடா?'' என்றேன்.

''அம்மா கோவிச்சுக்கிட்டு ஊருக்குப் போய் ஒரு வாரம் ஆச்சு. என்னைக் கூப்பிட்டாங்க. நான் வர மாட்டேன்னுட்டேன். ஆயா வேலைக்கு போயிருக்கு. இவர் தூங்குறப்ப வெளியே கதவைத் தாழ்ப்பாள் போட்டுட்டு, ஸ்கூலுக்குப் போனேன். எப்படியோ திறந்துக்கிட்டு ஓடி இருக்கார்...'' என்றான். நொந்து திரும்பும்போது ஏனோ வாஸ்கோடகாமா நினைவுக்கு வந்தார்!

வாஸ்கோடகாமா, 1498 மே மாதம் கள்ளிக்கோட்டை மன்னர் சமோரினை சந்தித்தபோது, போர்ச்சுக்கீசிய மதுச்சந்தையை இந்தியாவுக்குக் கொண்டுவர வாய்ப்பு இல்லையே என்று கவலைப்பட்டார். காரணம், அப்போது இந்தியாவில் குடிப்பழக்கம் மிக, மிக அரிதாகவே இருந்தது. குறிப்பாக, மொகலாய மன்னர்கள் உண்மையான முசல்மான்களாக இருந்து, மதுவை 'ஹராம்’ செய்து இருந்தார்கள். சுமார் 200 ஆண்டுகளுக்குப் பின்னர் மன்னர் ஜஹாங்கீர் ஆட்சியில்தான் போர்ச்சுக்கீசிய, பிரெஞ்சு நாட்டு மதுபானச் சந்தைக்கு இந்தியாவின் கதவுகள் அகலத் திறந்தன. மன்னர் ஜஹாங்கீர் விதவிதமான மது பானங்களைச் சுவைப்பதிலும் மது சுவைப்பவர்களை ஊக்குவிப்பதிலும் ஆர்வமாக இருந்தார். ஆட்சியை வழிநடத்தும் ஒரு மன்னரால் அப்போது தொடங்கி சந்தைப்படுத்தப்பட்ட மது கலாசாரம், இன்று தமிழகத்தில் அரசே மதுபானங்களை கூவிக்கூவி விற்கும் நிலைக்குக் கொண்டுவந்து, ஏழை மற்றும் நடுத்தர மக்களை நடுத்தெருவில் நிறுத்தி உள்ளது. 'குடி உயர கோன் உயரும்’ என்ற அவ்வை வாக்கை தப்பாய் புரிந்துகொண்டால் இப்படித்தான்!

இன்று உலகிலேயே மிக அதிகமாக மது குடிப்பவர்கள் இந்தியர்கள். மதுவால் ஏற்படும் சமூகப் பிரச்னையால் இந்தியா மிகப்பெரிய அழிவை நோக்கிச் செல்கிறது. அணு, மொத்தமாக அழிக்கும் என்றால், மது கொஞ்சம் கொஞ்சமாக. வீட்டுக்கு ஒரு குடிகாரர் என்பதுதான் அரசாங்கத்தின் குறைந்தபட்ச இலக்கு. வரும் ஆண்டுகளில் இது அதிகரிக்கும் என்றுஆர்வமுடன் எதிர்பார்க்கின்றனர். அதிகாரிகள் கோடிகளில் டார்கெட் நிர்ணயித்துக் காத்து இருக்கிறார்கள்.

கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் மதுக் கடைகள், மதுக் கேளிக்கை விடுதிகளின் எண்ணிக்கை  சராசரியாக ஆறு முதல் எட்டு சதவிகிதம் வரை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து

மயக்கம் என்ன?

வருகிறது. 1952-ம் ஆண்டில், மது அருந்தத் தொடங்கும் இந்தியரின் சராசரி வயது 19. இன்று அது 13. பன்னாட்டு மது நிறுவனங்களின் மிகப்பெரிய 'ஹப்’பாக மாறிவிட்டது இந்தியா. மாறாக, மேற்கத்திய நாடுகளில் குடிப்பழக்கம் குறைந்து வருகிறது - பிரபல இன்டர்நேஷனல் மருத்துவ பத்திரிகையான லேண்ட்செட் சமீபத்தில் வெளியிட்ட தகவல் இது!

தமிழகத்திலோ, நிலைமை மிக மிக மிக மோசம்.  ஏழு கோடி மக்களில் சுமார் ஒரு கோடிப் பேர் குடிக்​கிறார்கள். சுமார் 49 லட்சம் பேர் தினமும் குடிக்கும் மது அடிமைகள். இதில் 13 வயது சிறுவர்களும் அடக்கம்.

அதுசரி, அப்புறம் அந்த நண்பன் என்ன ஆனான் என்று சொல்லவே இல்லையே... 'தினைக் கள் உண்ட தெளிதோல் மறவர்’ வழி வந்த அந்த நண்பன், பின்னாளில் டாஸ்மாக் சரக்கின் போதை போதாமல் எங்கோ ஸ்பிரிட் வாங்கி வந்து குடித்து செத்துப்போனான்!  

அரசு மருத்துவமனையில் அவனுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் மோகனை ஒருமுறை யதேச்சையாக பார்த்தபோது அவனைப் பற்றிக் கேட்டேன். ''அவங்கம்மாதான் அவனை இங்க கூட்டிட்டு வந்தாங்க. குடிச்சிட்டு சுயநினைவு இல்லாம இருந்தான். இங்க வர்றப்பயும் குடிக்கணுமானு அவங்கம்மாகிட்ட சத்தம் போட்டேன். 'இங்க கூட்டிட்டு வர எனக்கு வேற வழி தெரியலைப்பா... அதான் நானே அரை பாட்டில் வாங்கிக் கொடுத்தேன்...’னு அழுதாங்க.

நாலு மணி நேரம் கழிச்சு எழுந்தவன், சுற்றிலும் பார்த்துட்டு எழுந்து ஓட ஆரம்பிச்சான். தடுத்த நர்ஸைத் தள்ளிவிட்டதில் அவங்களுக்கும் காயம். ஒருவழியா அவனைப் பிடிச்சு, பெட்டுல கட்டிப்போட்டோம். ஆனாலும், அவன் பிழைக்க அஞ்சு சதவிகிதம்தான் வாய்ப்பு இருந்துச்சு. கணையத்தை ஆல்கஹால் அடைச்சு, ஜீரண நீர் வெளியேற வழி இல்லாம அது பந்து மாதிரி வீங்கி, எந்நேரமும் வெடிக்கத் தயாரா இருந்துச்சு. இரைப்பையோட உள்சுவரான 'மியூக்கஸ்’-ல கிழிஞ்சுபோன பனியன் மாதிரி ஏகப்பட்ட ஓட்டைங்க. உள்ளே எந்த உணவும் தங்காது. கல்லீரல் 80 சதவிகிதம் அழுகிப்போயிருந்தாக்கூட அதை வெட்டி எடுத்துட்டா, அது தானாகவே வளரும் தன்மைகொண்டது. ஆனால், கல்லீரல் முழுக்க ஹெபாடிடிஸ், சிரோசிஸ் பரவி இருந்தது. பத்து நாள் இங்க பொழுதுக்கும் கத்திட்டே கெடந்தவன், ஒருநாள் தப்பிச்சு ஓடிட்டான். அப்புறம் ஏதோ ஸ்பிரிட் குடிச்சு செத்துட்டான்னாங்க...'' என்றார்.

இப்படி என் நண்பன் மட்டும் அல்ல... இன்று தமிழகத்தில் குடிநோயால் மட்டுமே தினமும் அநேகம் பேர் இறக்கிறார்கள். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையிலும் ராஜீவ்காந்தி மருத்துவ​மனையிலும் கணையம், கல்லீரல் வீங்கி, பார்வை சொருகி, பாதி மனிதனாய் வருபவர்களின் எண்ணிக்​கையும் அதிகரித்து இருக்கிறது. அதுசரி, டாஸ்மாக் ஆரம்பித்தபோது 2,828 கோடியாக இருந்த ஆண்டு வருமானம் கடந்த ஆண்டில் 18,000 கோடியாக அதிகரித்து இருக்கிறது. இதனைச் சாதனையாகச் சொல்லும் அரசு... மருத்துவமனைகளில் செத்து விழும் மனிதர்கள் எண்ணிக்கை உயரும்போதும் அதையும் சாதனையாகச் சொல்லுமா? ஆபத்தை உணராமல் அரசாங்கம் பரப்பும் வியாதியின் கோரம் என்ன தெரியுமா?  

    தெளிவோம்      

           மது மூலம்!

மயக்கம் என்ன?

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வகையில் மது தயாரிக்கப்படுகிறது. ரஷ்யாவின் ஓட்கா உருளைக் கிழங்கிலும், சீனாவின் மவுத்தாய் - ஜப்பானின் சாக்கே ஆகியவை அரிசியிலும், ஸ்காட்லாந்தின் ஸ்காட்ச் கோதுமை மற்றும் மக்காச்சோளத்திலும், ஃபிரான்ஸின் ஷாம்பெயின் திராட்சையிலும், கோவாவின் பென்னி முந்திரியில் இருந்தும் தயாராகிறது. இதுதவிர அரபு நாடுகளில் பேரீச்சம் பழத்திலும், இலங்கை, ஃபிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா போன்ற நாடுகளில் தென்னை, பனையின் பொருட்களில் இருந்தும் மது தயாரிக்கப்படுகிறது. கரும்பு ஆலையில் இருந்து வெளியேறும் கழிவான மொலாசஸில் இருந்து மதுவைத் தயாரிப்பது தமிழ்நாடு மட்டுமே!

மது - ஆசிட் வேறுபாடு என்ன?

மயக்கம் என்ன?

மதுவுக்கும் ஆசிட்டுக்கும் வித்தியாசம் பெரிதாக ஒன்றும் இல்லை என்கிறார் இந்திய பொது சுகாதார சங்கத்தின் மாநிலத் தலைவர் டாக்டர் இளங்கோ. ''மீத்தைல் ஆல்கஹால் என்பது டாய்லெட் கழுவும் ஆசிட், பெயின்ட், வார்னிஷ் போன்ற பொருட்களில் பயன்படுத்தப்படும் ரசாயனம்.

ஈத்தைல் ஆல்ஹகால் என்பது மதுபானங்களில் போதைக்​காக கலக்கும் ரசாயனம். இவை இரண்டும் அண்ணன் - தம்பி போலத்தான். இரண்டுக்கும் ஒரே வாசனை, ஒரே சுவை. மீத்தைல் ஆல்கஹாலை குடித்தால், ஐந்து நிமிடங்​களில் பார்வை பறிபோகும். 15 நிமிடங்களில் மூளை செயல் இழக்கும். 30 நிமிடங்களில் உயிர் போகும். இதே வேலை​யைதான் ஈத்தைல் ஆல்கஹாலும் கொஞ்சம், கொஞ்சமாக செய்கிறது. மீத்தைலுக்கு நிமிடங்கள் என்றால் ஈத்தைலுக்கு ஆண்டுகள். அவ்வளவுதான்!'' என்கிறார் அவர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism