Published:Updated:

மயக்கம் என்ன?

மயக்கம் என்ன?

மயக்கம் என்ன?
##~##

மிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (tamilnadu state marketing corporation limited). இதுதான் 'டாஸ்மாக்’கின் விரிவாக்கம். தமிழக அரசாங்கம் எந்தத் தொழிலைவாணிபமாக மதிக்கிறது பார்த்தீர்களா? அது சரி, ஊத்திக்கொடுப்பதுதான் தொழில்என்றாகிவிட்டது; அதிலாவது ஒரு நியாயம் இருக்​கிறதா? 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இங்கு ஏன் இப்படி ஒரு கேள்வி அவசியம் ஆகிறது என்றால், மது, மது வகைகள், மதுப் பழக்கம், மது விற்பனை, மதுவிலக்கு இவற்றைப் பற்றி நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கலாம். ஆனால், ஒரு தொழிலில் நீங்கள் ஈடுபடுகிறீர்கள் என்றால், அந்தத் தொழிலுக்கு என்று உள்ள அறநெறிகளைப் பின்பற்றுவதுதானே நியாயம்?

தமிழ்நாட்டில், தான் விற்கும் சரக்கை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானம் என்று குறிப்பிடுகிறது தமிழக அரசு. ஆனால், உண்மையில் வெளிநாட்டு வகை மதுபானத்துக்கும் இங்கு அரசு விற்கும் மதுபானத்துக்கும் சம்பந்தமே கிடையாது என்பதுதான் உண்மை.

மயக்கம் என்ன?

அசல் சீமைச் சரக்குகள் ஏதாவது ஒரு தானியத்தில் இருந்தோ, பழரசத்தில் இருந்தோ, கிழங்கில் இருந்தோ நேரடியாகத் தயாரிக்கப்படுபவை. விஸ்கி என்றால் முளைதானியங்களில் இருந்தும் (மால்ட்), ரம் என்றால் கரும்புச் சாறு அல்லது கரும்புச் சக்கைக் கூழில் இருந்தும், ஒயின், பிராந்தி, கிரப்பா என்றால் திராட்சையில் இருந்தும், வோட்கா என்றால் கிழங்கு மற்றும் தானியங்களில் இருந்தும் தயாரிப்பதே வெளிநாட்டுப் பாணி.  எதில் இருந்து தயாரிக்கிறார்கள், எதை எல்லாம் சேர்த்து இருக்கிறார்கள் என்ற விவரங்கள் எல்லாமும்கூட மது பாட்டிலின் மீதே தெளி​வாகக் குறிப்பிடப்படும். புதுவை, கோவா ஆகிய மாநிலங்களில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மது வகைகள் அதிகம். அதனாலேயே, அங்கு விற்கப்படும் உள்ளூர் மது வகைகளும்கூட தரமாகவே இருக்கும். முக்கியமாக, அங்கு விற்கப்படும் மது வகைகளில் நிர்ணயிக்கப்பட்ட ஆல்கஹால் சேர்க்கப்படுகிறது. அதனால், அது ஏற்படுத்தும் போதையும் குறைவு. ஆனால், இங்கு அரசே நடத்தும் கடைகளில் விற்கப்படும் மது வகைகளின் தரம் என்ன? அவற்றில் உள்ள மூலப் பொருள்கள் என்ன? ஏன் இவ்வளவு ஆல்கஹால் அதிகம்கொண்ட மது வகைகள் விற்கப்படுகின்றன? யாருக்காவது தெரியுமா?

சாதாரண டீக்கடைக்குச் சென்றாலே, நாம் ஓரளவு காற்​றோட்​டமும் சுகாதாரச் சூழலும் நிரம்​பிய கடையாகப் பார்த்து தேடுவோம். நல்ல நாற்காலிகளைத் தேடுவோம். சர்வர்களின் உபசரிப்பை எதிர்பார்ப்போம். டீக்கடைக்காரருக்கு நாம் கொடுப்பது என்னவோ ஆறேழு ரூபாய்கள்தான். அதற்கே ஒரு டீக்கடை முதலாளி எவ்வளவு வசதிகளைத் தர வேண்டி இருக்கிறது? ஆனால், ஆண்டுக்கு 18 ஆயிரம் கோடி ரூபாயை வாரிக் கொடுக்கும் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு எப்படிப்பட்ட வசதிகளை நம்முடைய அரசும் டாஸ்மாக் நிறுவனமும் ஏற்படுத்தித் தந்து இருக்கின்றன?  

என்னடா, திடீரென்று குடிகாரர்களுக்கு வக்காலத்து வாங்குகிறேன் என்று பார்க்காதீர்கள். இவை எல்லாமே இன்றைக்குத் தமிழகத்தில் நிலவும் மோசமான குடிக் கலாசாரத்துடன் தொடர்பு​டையவை.

மயக்கம் என்ன?

ஒருவர் வாந்தி எடுத்துக்கிடக்க, இன்னொ​ருவர் பக்கத்திலேயே சிறுநீர் கழித்துக்கொண்டு இருக்க இருவருக்கும் நடுவில் சாவதானமாக குடித்துக்​கொண்டு இருக்கும் ஆட்களை இங்குதான் நாம் பார்க்க முடியும். எப்படி மது இந்த நிலைக்கு எல்லோரையும் தள்ளுகிறது?    

மது அருந்துவது ஒருவரின் மூளை​யின் நரம்புகளில் முதலில் பாதிப்பு ஏற்படுத்தும். ரத்தத்தில் ஆல்கஹால் அளவை பி.ஏ.சி. (Blood Alcohol Count) என்பார்கள். இது 0.10 அளவு வரை இருந்தால் பிரச்னை இல்லை. இந்த அளவைத் தாண்டினால் வரும் சிக்கல் ஆரம்பத்தில் வெகு சாதாரணமாகத் தெரியும். சொல்லப்போனால், இந்தப் பாதிப்பு ஆரம்ப நிலை​யில் செம ஜாலியாகக்கூட இருக்கும்.

மது அருந்தியவுடன் ஆல்கஹால் நேராக சிறு மூளையைப் பாதிக்கிறது. அப்போது மூளை என்னும் முதலாளியின் கட்டுப்பாட்டில் இருந்து சுமார் 50 சதவி​கிதம் வரை உடல் உறுப்புகள் விடுபட்டுவிடும். அதனால் நேராக நடக்க முடியாது. நினைப்பதை சீராகப் பேச முடியாது. முதலாளி, 'நேராக நட’ என்று கட்டளை போட்டாலும் கால்கள் கேட்காமல் பின்னிக்கொண்டுதான் செல்லும்.

இந்த மூளை நரம்பு மண்டலப் பாதிப்பை கோர்சிகா காஃப்ஸ் சிண்ட்​ரோம் (Corsica Cofs Syndrome) என்பார்கள். ஆரம்பப் பிரச்னை ஜாலி​யாக இருக்கும் என்பதன் அர்த்தம் சேட்டைகள் இப்போதுதான் தொடங்​கும் என்பதுதான்!      

என் நண்பன் ஒருவனுக்கு  மூன்று லார்ஜ் உள்ளே போனால்... அவன் சுபாவமே மாறிவிடும். அவன் மூடைப் பொறுத்து 'அன்பே சிவம்’ கமல்ஹா​சனாக மாறுவான் அல்லது 'அமைதிப் படை’ சத்யராஜாக மாறுவான். ஒரு நாள் காலை 11 மணிக்கு டீ சாப்பிடச் சென்றோம். டீ குடித்த பின்பு, 'நான்தான் காசு கொடுப்பேன்’ என்று பேன்ட் பாக்கெட்டில் கையைவிட்டு எதையோ வெளியே எடுத்தான். அது டூ வீலர் பெட்ரோல் டேங்கின் மூடி. எனக்கு ஒன்றும் புரியவில்லை. அது ஆச்சர்யம் இல்லை. ஆனால், அவனுக்கும் ஒன்றும் புரியவில்லை என்பதுதான் ஆச்சர்யம். அதைப் பார்த்தபடி திருதிருவென முழித்தான்.

அப்புறம் திடீரென்று யோசனை வந்தவனாக, 'நேத்து ராத்திரி டாஸ்மாக்ல என் வண்டியை மறிச்சு ஒருத்தன் வண்டியைப் போட்டு இருந்தான். கொஞ்சம்கூட பொறுப்பே இல்லாம அப்படியா நிறுத்துறது? என் வண்டியை எடுக்குறதுக்குள்ள நாக்கு தள்ளிப்போச்சு. அதான் அவன் பெட்ரோல் டேங்க் மூடியைக் கழட்டிட்டு வந்துட்டேன்...’ என்றான் சாதாரணமாக. இது ஆரம்ப கட்டத்தில்தான் ஜாலி. இந்த கோர்சிகா காஃப்ஸ் சிண்ட்ரோம் சேட்டைகள் எல்லாம் இருக்கட்டும். இதன் உச்சபட்ச பாதிப்பு எப்படி இருக்கும் தெரியுமா? கற்பனை செய்யக்கூட முடியாது. ஆம், மிகக் கொடூரமான மனநோய் அது.

இந்த மனநோய் மனிதர்களை உற்பத்தி செய்​வதற்குள் அரசியலும் வர்த்தகமும் பணமும் மட்டுமே முக்கியமான காரணம்!

ஆட்சி மாறும்போது காட்சி மாறும். கல்லாக்களும் இடம் பெயரும். ஆனால், டாஸ்மாக் அப்படி அல்ல!

மயக்கம் என்ன?

டாஸ்மாக் நிறுவனத்துக்கு பீர், பிராந்தி, விஸ்கி உள்ளிட்ட மது வகைகளை சப்ளை செய்யும் தொழிற்​சாலைகளில் முக்கியமானவை தி.மு.க. அல்லது அ.தி.மு.க. பின்புலம் கொண்டவை. சம்பந்தப்​பட்ட கட்சி ஆட்சிக்கு வரும்போது, வேண்டப்பட்ட நிறுவனத்​திடம் இருந்து அதிக அளவில் கொள்முதல் செய்வது வழக்கம்​தான். அதனால் ஜெயலலிதாவின் ஆட்சியில், சசிகலாவுக்கு வேண்டப்​பட்டவர்களால் நடத்தப்படுவதாகச் சொல்லப்படும் மிடாஸ் நிறுவனம், டாஸ்மாக்குக்கு எவ்வளவு சரக்கு சப்ளை செய்திருக்கிறது என்பதை அறிய நினைத்தோம். தகவல் அறியும் உரிமைச் சட்டப் போராளி வழக்கறிஞர் லோகநாதனும் நமக்குக் கை கொடுத்தார். இதில் கிடைத்த பல தகவல்கள் அரசியலைத் தாண்டிய அதிர்ச்சி ரகம்.  

டாஸ்மாக் நிறுவனத்தை 1983-ம் ஆண்டு அன்றைய முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். துவக்கினார். அப்போது ஐந்து நிறுவனங்களிடம் இருந்து மதுபான வகையறாக்களை மொத்தமாகக் கொள்முதல் செய்து, தனியார் மதுபானக் கடைகளுக்கு விற்று வந்தது அரசு. பிறகு ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் (2003-ம் ஆண்டு) அரசு நிறுவனமான டாஸ்மாக், மது பானங்களை சில்லறையாக விற்பனை செய்யத் தொடங்கியது. கூடவே, சசிகலாவுக்கு வேண்டப்பட்டவர்களுக்குச் சொந்தமானதாகக் கருதப்படும் 'மிடாஸ் கோல்டன் டிஸ்டிலரீஸ் பிரைவேட் லிமிடெட்’ என்கிற நிறுவனம் புதிதாக லைசென்ஸ் பெற்று, கனஜோராக சப்ளையைத் தொடங்கியது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி தனக்குத் தரப்பட்ட தகவல்களை விரிவாகச் சொன்னார் லோகநாதன். ''2003 மற்றும் 2004-ம் ஆண்டுகளில் 130 கோடி ரூபாய்க்கு மிடாஸிடம் இருந்து டாஸ்மாக் கொள்முதல் செய்துள்ளது. 2005 மற்றும் 2006-ம் ஆண்டுகளில் 872 கோடியாக எகிறி இருக்கிறது. பிறகு வந்த ஐந்து ஆண்டு தி.மு.க. ஆட்சியில் நானூற்று சில்லரைக் கோடிகள், ஐநூற்று சில்லரைக் கோடிகளாக இருந்திருக்கிறது. தற்போது அ.தி.மு.க. ஆட்சி அமைந்த கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 1,404 கோடி ரூபாய்க்கு சரக்கு கொடுத்துள்ளது. இத்தனைக்கும் இந்த நிறுவனம் மூன்று கோடி ரூபாய் முதலீட்டில்தான் தொடங்கப்பட்டது.

இது ஒரு புறம் இருக்கட்டும். தி.மு.க-வைச் சேர்ந்த மத்திய அமைச்சரான ஜெகத்ரட்சகனின் மனைவி மற்றும் மகன் பெயரில் இருக்கிறது 'எலைட் டிஸ்டிலரீஸ்’ நிறுவனம். தி.மு.க. ஆட்சியில் இருந்த (2006 - 2011) ஐந்து ஆண்டுகளில் இந்த நிறுவனம் 1,275 கோடி ரூபாய்க்கு டாஸ்மாக்குக்கு சரக்கு சப்ளை செய்திருக்கிறது. ஜெயலலிதா ஆட்சியில் இந்தத் தொழிற்சாலை என்ன ஆனது என்று பார்த்தால் மெகா ஆச்சர்யம். ஆம், 2011-2012 நிதி ஆண்டில் மட்டும் 1,008 கோடி ரூபாய்க்கு சப்ளை செய்திருக்கிறது.

கருணாநிதி கதை, வசனம் எழுதிய 'பெண் சிங்கம்’ மற்றும் 'உளியின் ஓசை’ திரைப்படங்களைத் தயாரித்த என்.ஜெயமுருகனின் எஸ்.என்.ஜெ. டிஸ்டிலரீஸ் நிறுவனத்தின் நிலை இதைவிட ஆச்சர்யத்தைத் தருகிறது. ஆம், 2010-2011 நிதி ஆண்டில் 1,235 கோடி ரூபாய்க்கு டாஸ்மாக்குக்கு சரக்கு சப்ளை செய்த இவர்கள், ஜெ. ஆட்சி அமைந்த பிறகு 1,494 கோடி ரூபாய்க்கு சப்ளை செய்திருக்கிறார்கள். இது எப்படிச் சாத்தியமாகிறது என்பதை அவர்கள்தான் விளக்க வேண்டும்.

அதாவது, மிடாஸ் நிறுவனத்தின் முக்கியமான பங்குதாரராக, மதர் மீரா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் இருக்கிறது. இதன் இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர், டாஸ்மாக்குக்கு மதுபானங்கள் சப்ளை செய்யும் முக்கிய நிறுவனங்களில் ஒன்றான மோகன் பிரீவரீஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராகவும் இருக்கிறார். இவரும் கருணாநிதி வசனம் எழுதிய படங்களைத் தயாரித்த ஜெயமுருகனும் ஆந்திர மாநிலம் சித்தூரில் இருக்கிற சாகர் சர்க்கரை ஆலையின் முக்கிய நிர்வாகப் பொறுப்புகளில் இருக்கிறார்கள். சசிகலாவுக்கு நெருங்கிய 'மிடாஸ்’ நிறுவனத்தின் பங்குதாரரோடு கருணாநிதிக்கு மிக நெருங்கிய நபர் தொழில் தொடர்பில் இருக்கிறார் என்றால், அதற்கு என்ன அர்த்தம்? அதனால்தான் ஜெயமுருகனின் நிறுவனம் மதுபான சப்ளையில் இப்போதும் உச்சத்தில் இருக்க முடிகிறது. அரசியல் யுத்தம் நடத்தும் இரண்டு பெரும் கட்சிகளின் மேல்மட்டத் தொடர்புகள், தொழில் பிணைப்புகள் எதுவும் அப்பாவித் தொண்டர்களுக்குத் தெரிவது இல்லை என்பதுதான் கொடுமை.  

மிடாஸின் முக்கியப் பங்குதாரரான மதர் மீரா நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான விஷ்ணு பிரசாத் யார் தெரியுமா? சமீபத்தில் வருமான வரித் துறையால் ரெய்டு நடத்தி கிட்டத்தட்ட 40 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட செய்தியால் லைம் லைட்டுக்கு வந்தவர் விஷ்ணு பிரசாத். யூகிக்க முடியவில்லையா? சிரஞ்சீவியின் மருமகன்தான் விஷ்ணு பிரசாத். இப்படி எல்லாக் கட்சிகளும் ஒன்றுக்குள் ஒன்றாகத்தான் இருக்கின்றன. இது தெரியாமல்தான் அப்பாவித் தொண்டர்கள் அடித்துக்கொள்கிறார்கள்'' என்று வருந்தினார்.

இதைப் படித்தாலே  தலையைச் சுத்துதா..?

- தெளிவோம்