Published:Updated:

மயக்கம் என்ன?

மயக்கம் என்ன?

மயக்கம் என்ன?

மயக்கம் என்ன?

Published:Updated:
மயக்கம் என்ன?
##~##

டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமை அலு வலகத்தை நீங்கள் நேரில் பார்த்து இருக்கிறீர்களா? சென்னை எழும்பூரில் உள்ள தாளமுத்து நடராசன் மாளிகை வளாகத்தில் இயங்குகிறது இந்த தலைமை அலுவலகம். அந்த அலுவலகத்தை, நாளை காலை முதல் செக்கானூரணி பஸ் ஸ்டாண்​டுக்குப் பக்கத்தில் இயங்கும் டாஸ்மாக் பாருக்கு மாற்றிவிட்டால் என்ன ஆகும்? 

தலைமை அலுவலகத்தின் வரவேற்பறையில் தொடங்கி அதன் தலைவர், நிர்வாக இயக்குநர், அதிகாரி​கள், அலுவலர்களின் அறைகள் எல்லாம் நட்சத்திர விடுதிபோல் இருக்கிறது. எனக்கு ஒரு விஷயம்தான் புரியவில்லை. தங்களுடைய அலுவலகத்தை இவ்வளவு ஆடம்பரமாக வைத்துக்கொள்ளும் இவர்கள், டாஸ்மாக் கடைகளையும் பார்​களையும் மட்டும் எப்படி பொதுக் கழிப்பிடங்களைவிட அசுத்தமான, துர்நாற்ற​மான, சுகாதாரக் கேடான சூழலில் நடத்த அனுமதிக்​கிறார்கள்?

அதுசரி, 'குடி குடியைக் கெடுக்கும்’ என்று போர்டு போட்டு, எவன் குடி கெட்டால் நமக்கென்ன என்று கல்லாக் கட்டும் தொழில்தானே நடத்துகிறோம் என்ற அலட்சியமா?

மயக்கம் என்ன?

சில வாரங்களுக்கு முன், கலிஃபோர்னியா  நண்பர் ஒருவர் சென்னை வந்திருந்தார். அவர் ஒரு மருத்துவர். நம் நகரத்தில் தெருக்கள்தோறும் இருக்கும் மதுக்கடைகளைப் பார்த்த அவர், ஒரு கடைக்குள் சென்று பார்க்க விரும்பினார். உள்ளே போனார். சில நிமிடங்கள் மௌனமாக அந்தச் சூழலைக் கூர்ந்து கவனித்த அவர் சொன்னார்... ''உலகம் எல்லாம் மதுவைக் குடித்தால் என்னென்ன கேடுகள் வருமோ, அவை அத்தனையும் உங்கள் ஊரில் மட்டும் இரண்டு மடங்காகி விடும். இப்படி ஒரு சுகாதாரமற்ற சூழலை நான் எங்குமே பார்த்தது கிடையாது. உங்கள் அரசாங்கம் இதை எல்லாம் எப்படி அனுமதிக்​கிறது?'' என்றார். ''எங்கள் அரசாங்கம்தான் இந்தக் கடைகளையே நடத்துகிறது'' என்றேன். விறுவிறுவென்று சென்று காரில் ஏறிய அந்த நண்பர் அதற்குப்பின் கடைசி வரை அந்த விஷயம்பற்றி பேசவே இல்லை!

எழுத்தாளர் அறந்தை நாராயணன், 'குடியால் குடைசாய்ந்த கோபுரங்கள்’ என்று ஒரு புத்தகம் எழுதினார். தமிழ் சினிமாவில் புகழின் உச்சியில் இருந்த நடிகர்கள் சிலர், தங்களது குடிப்பழக்கத்தால் எப்படி சொந்த வாழ்க்கையை அழித்துக்கொண்டார்கள் என்பதை விவரிக்கும் அந்தக் காட்சிகளைப் படிக்கும்போது ரத்தம் கொதிக்கும். கோபுரங்களில் இருந்தவர்களை எல்லாம் குடிசையை நோக்கித் தள்ளி... பட்டுப் பீதாம்பரங்களில் தவழ்ந்தவர்களைக் கட்டாந்தரையில் தவழவைத்துச் சிதைத்து...

மயக்கம் என்ன?

மது போதைக்கு எதிராகக் கல்லூரிகளில் அடிக்கடி விழிப்பு உணர்வு வகுப்புகளை நடத்துபவர் டாக்டர் மோகன். மாணவர்கள் எப்படிப் போதைக்கு அடிமையாகிறார்கள் என்பதுபற்றி தொடர் ஆய்வில் ஈடுபட்டு இருக்கும் அவர் சொல்லும் தகவல்கள் அதிர வைக்கின்றன. ''பள்ளி அல்லது கல்லூரிக் காலத்தில் ஜாலிக்காக என்று பீர் குடிக்கத் தொடங்கும் மாணவர்களில், பத்தில் மூன்று பேர் காலப்போக்கில் முழுநேரக் குடிகாரர்களாக மாறுகிறார்கள். அதனாலேயே நோயாளி ஆகி, 40 வயதுக்குள் மரணத்தைத் தழுவுகிறார்கள்'' என்று பெரிய ஆய்வறிக்கையையே தருகிறார் மோகன்.

மாணவர்களின் முதல் அனுபவம் பெரும்பாலும் நண்பர்களின் வற்புறுத்தல்களால்தான் தொடங்குகிறது.'சும்மா அடி மச்சி. ஒரு த்ரில் தான ’ என்று ஏ(ஊ)ற்றி விடுவார்கள். இதை 'பீர் பிரஷர்’(peer pressure) என்கிறார்கள் மனநல மருத்துவர்கள். இந்த இடத்தில்தான் மாணவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஆரம்பத்தில் 'சும்மா’ மது குடிப்பது என்பது செத்த எலியின் வாலைப் பிடிப்பதுபோல எளிதாகத்தான் இருக்கும். ஆனால், அது உண்மையில் புலி வால் என்பது போகப்போகத்தான் தெரியும்!

சிலர் சொல்வார்கள், ''எப்போவாச்​சும் குடிப்பேன்... கம்பெனி மீட்டிங்... ஃப்ரெண்ட்ஸ் கெட் டு கெதெர்... மன்த்லி ஒன்ஸ்... வெளியூர் போனால்தான்... ஆனா, நான் குடிகாரன் இல்லை'' என்று. குடிக்கும் பழக்கம் இருக்கும் எவருக்கும் நான் குடிகாரன் இல்லை என்று சொல்லும்  தகுதி கிடையாது. ஏனெனில் மனநல மருத்துவர்கள் மது குடிப்பதை 'குடிப்பழக்கம்’ என்று சொல்வது இல்லை. 'குடிநோய்’ என்றுதான் குறிப்பிடுகிறார்கள். ஒரு  முறை குடித்தாலும் கிருமி, கிருமிதானே? அதேபோல, 'எப்போதாவது குடிக்​கிறேன் ஆசாமி’கள் பார்க்க ஆரோக்கிய​மாகத் தெரியலாம். ஆனால், குடிப் பழக்கம் உள்ள எவருக்கும்  கல்லீரல், கணையம் போன்றவை குறைந்தது 10 சதவிகிதமாவது பாதிக்கப்பட்டு இருக்கும். ஆக,  'எப்போதாவது குடிக்கிறேன் ஆசாமி’கள் முதல்நிலைக் குடிநோயாளிகள்!

மயக்கம் என்ன?

எப்போடா பொழுது சாயும் என்று காத்​திருந்து மதுக்கடைக்கு ஓடுவது இரண்டாம் நிலை நோய்க்கான அறிகுறி. இந்தக் கட்டத்தில் இருப்பவர்கள் குடிக்கப்போகும் நேரத்துக்கு நான்கு மணி நேரத்துக்கு முன்பாகவே 50 சதவிகிதம் தன்னிலையை இழந்துவிடுவார்கள். நாம் ஒன்று கேட்டால், அவர்கள் ஒன்று பதில் சொல்வார்கள் அல்லது திருதிருவென முழிப்பார்கள். அதாவது, வயிற்றுக்குள் சாராயம் போகவில்லை என்றாலும் 'போகப்​போகிறது’ என்ற மனநிலையிலேயே தடுமாறத் தொடங்கி ​விடுவார்கள். வேலைநேரம் முடிந்து, ஏழு மணிக்கு குடிக்கப் போக வேண்டும் என்றால், குடிப்பதற்கானத் திட்டமிடல் மதியம் மூன்று மணிக்கே மனதுக்குள் தொடங்கிவிடும்.  குடிக்கும்போது அதிகமாகப் போதை ஏற வேண்டும் என்று மதிய உணவைக் குறைத்து சாப்பிடுவார்கள் சிலர். உணவே வேண்டாம்; வெறும் வயிற்றில் குடித்தால்தான் போதை அதிகம் ஏறும் என்பது வேறு சிலரின் தத்துப்பித்துவம். இரவு முழுவதும் மது அருந்திவிட்டு, மறுநாள் காலை தன்னைத்தானே திட்டிக்கொண்டும் 'நாளை முதல் குடிக்க மாட்டேன்’ என்று சபதம் எடுத்துக்கொண்டும் அன்றாட அலுவலில் ஆஜர் ஆவது இவர்களுடைய குணாதிசயம். ஏமாற்றிச் சென்ற காதலியில் தொடங்கி பெட்ரோல் விலை உயர்வு வரை எல்லாமே இவர்கள் குடிப்பதற்கான காரணங்கள் ஆகலாம். குடிக்க வேண்டும் என்பதற்காகக் இப்படிக் காரணங்களை உருவாக்குவதை மன நல மருத்துவத்தில் 'ரேஷனலைசேஷன்’ (rationalization) என்பார்கள். இவர்கள் இரண்டாம் நிலைக் குடி நோயாளிகள். இரவு மட்டும் குடிக்கும் இந்த இரண்டாம் நிலை குடி நோயாளிகளுக்கு ஒரு கட்டத்தில் ஆல்கஹால் அவர்களின் மூளை நரம்புகளிலும் ரத்தத் தட்டுகளிலும் சேகரமாகிவிடும். இதனால், ஏற்கெனவே குடித்த மதுவின் அளவு போதாமல் ஒரு வருட இடைவெளிக்குள் மதுவின் அளவு இரண்டு மடங்காக அதிகரித்துவிடும். குவாட்டர் அடித்தவர் ஆஃப் பாட்டில் அடிக்க வேண்டிய சூழல். இதனால், இயல்பாகவே உடலில் உள்ள மொத்த உறுப்புகளும் பாதிக்கப்பட்டு, கை நடுக்கம், பதற்றம் இவை எல்லாம் ஏற்படும். மறுநாள் காலை இயல்பாக இருக்க முடியாது. குறைந்தது 90 மில்லி மதுவாவது குடித்தால்தான் இயல்பு நிலைக்குத் திரும்பும் நிலை ஏற்படும். இங்குதான் காலையிலேயே மதுவை தேடிச் செல்லும் உச்சபட்ச மூன்றாம் நிலைக் குடி நோயாளி உருவாகிறான்.

ஒருவர் மூன்றாம் நிலைக் குடி நோயாளியாக மாறிவிட்டார் என்பதைக் கீழ்க்காணும் ஆறு விஷயங்களில் இருந்து மனநல மருத்துவர்கள் அனுமானிக்கிறார்கள்.

1. மதுவின் அளவை அதிகரித்துக்கொண்டே செல்வது.

2. மனைவி, குழந்தை, காதல், காமம், சினிமா, புத்தகம், விளையாட்டு... இப்படி எல்லா இன்பங்களையும்விட மதுவே சந்தோஷம் என நினைப்பது.

3. மது அருந்திய போதை தெளிந்த பின், மீண்டும் மது கிடைக்கும் வரை, குடிக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே இருப்பது.

4. குடிக்க ஆரம்பித்துவிட்டால் எந்த அளவும் இல்லாமல் சுயநினைவு இழக்கும்வரை  குடித்துக்கொண்டே இருப்பது.

5. மது அருந்துவது தவறு. உடல் நலம், குடும்ப நலம் பாதிக்கிறது என்று உணர்ந்து மதுவைவிட முயற்சிக்கும்போது, கை உதறல், மனப்பதற்றம், அபரிமிதமான வியர்வை, உறக்கம் இன்மை போன்ற சூழலுக்குத் தள்ளப்படுவது.

6. உடல் நலம் பாதிக்கப்பட்டுவிட்டது... மனரீதியாகவும் பாதிக்கப்பட்டுவிட்டோம் என்று தெரிந்தும் குற்ற உணர்விலேயே குடித்துக்கொண்டே இருப்பது.

ஒருவர் மூன்றாம் நிலைக் குடி நோயாளியாகி​விட்டால், அவரை மீட்பது அவ்வளவு எளிது இல்லை. இதற்கான சிகிச்சையை 'ஆன்டி ரெட்ரோ வைரல்’  (anti retroviral)  என்று சொல்வார்கள். ஜீவ மரணப் போராட்டம் இது.

உதாரணத்துக்கு, உருண்டையாக இருக்கும் மூளையின் மேல் ஆல்கஹால் என்கிற தொப்பியை ஒருவர் பல ஆண்டுகளாக அணிந்து இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். திடீரென்று ஒரு நாள் இந்த தொப்பியைக் கழற்றினால், மூளை உச்சபட்சக் கொதிநிலையை அடையும். அப்போது உடலுக்குக் கட்டளையிடும் மூளையின் நரம்புகள் ஆத்திரத்தில் கன்னாபின்னா என்று கட்டளையிட்டு... கை கால்கள் உதறி, நாக்கை துருத்திக் கடித்து, தற்கொலை செய்துகொள்ளத் துடிப்பார்கள் அல்லது எதிரே இருப்பவரைத் தாக்கவும் துணிவார்கள்.

இந்தச் சிகிச்சையின்போது முதல் 72 மணி நேரத்தில் குடி நோயாளியின் உடலில் இருந்து ஆல்கஹாலின் விஷத்தன்மையை அகற்றும் பணி நடக்கும். இந்தச் சமயத்தில் வலிப்பு வருவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம். இதை 'ரம் ஃபிட்ஸ்’  (rum fits) என்பார்கள். மரண வேதனையைவிடக் கொடிய வேதனை இது. சொல்லப்போனால், வெளியேறத் துடிக்கும் உயிரைத் தடுத்து நிறுத்தி, சிகிச்சை அளிப்பது என்பது இதுதான்.

    அதெல்லாம் சரி, நீங்கள் குடி நோயாளியா?

உலகச் சுகாதார நிறுவனம் அங்கீகரித்து சர்வதேச அளவில் மனநல மருத்துவர்கள் பயன்படுத்தும் அடிப்படைக் கேள்வித்தாள் இது. இந்தக் கேள்விகளை 'ஆடிட் கொஸ்டீன்ஸ்’  (The alcohol use disorders identification test) என்பார்கள். இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் உங்களுக்கே உங்களுக்கானவை. அது அடுத்த இதழில்...

 - தெளிவோம்

 மது உருவான கதைகளுள் ஒன்று!

 மதியை மயக்கும் மது எப்படி உருவானது என்பதற்கான நாடோடிக் கதைகளுள் இதுவும் ஒன்று. ஷாம்ஜெட் என்கிற பாரசீக மன்னன் திராட்சைப் பிரியன். அரசவையில் இருந்தாலும், அந்தப்புரத்தில் இருந்தாலும் அவனுக்கு முன்பாக பெரிய ஜாடி ஒன்றில் திராட்சை நிரப்பப்பட்டு இருக்க வேண்டும். ஒரு நாள் மன்னன் வெளியூர் சென்று திரும்பியபோது, அவனது படுக்கை அறையில் வைக்கப்பட்டு இருந்த ஜாடியில் திராட்சை அழுகி, நொதித்துப்போய் கிடந்தது. மன்னன் அதை விரலால் எடுத்து நக்கிப் பார்த்தான். துர்நாற்றத்துடன் கசந்தது. உடனே, இது சைத்தானின் வேலை என்று கருதியவன், ஜாடியில் 'விஷம்’ என்று எழுதி அரண்மனைக்கு வெளியேவைக்க உத்தரவிட்டான்.

அந்த நேரம் அந்தப்புரத்தின் அரசிகளில் ஒருத்தி, மன்னனிடம் கோபித்துக்கொண்டு வெளியே ஓடினாள். ஜாடியில் விஷம் என்று எழுதப்பட்டு இருப்பதைப் பார்த்தவள், உயிரை மாய்த்துக்கொள்ள விரும்பி, அதை எடுத்துக் குடித்தாள். அதுவரை, அழுதுகொண்டே 'கண்ணில் நிறைந்த கணவரை எண்ணி கண்ணீர்க் கடலில் குதிக்கவா...’ என்று பாடிக்கொண்டு இருந்தவள், சில நிமிடங்களில் பரவச நிலையை அடைய, ஆன் தி ஸ்பாட்டில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான். தகவல் அறிந்து வெளியே வந்த மன்னன், தானும் அதை எடுத்து சுவைக்கவும் அரண்மனை வாயிலில், 'ஓஹோ எந்தன் பேபி... நீ வாராய் எந்தன் பேபி...’ என்று இருவரும் டூயட் பாடத் தொடங்கிவிட்டார்கள். என்னவோ ஏதோ என்று வெளியே வந்த அரசவை அறிஞர்களும் அதை சுவைக்க... அப்புறம் என்ன, 'வேர் இஸ் த பார்ட்டி... அரண்மனை வாசலில் பார்ட்டி!’தான்.

 ஊறல்... ஊழல்...

மதுரை கோச்சடையில் டாஸ்மாக் கடை ஒன்றின் மேற்பார்வை​யாளராக இருக்கும் ஷாஜகான், டாஸ்மாக் பார்களில் நடக்கும் மோசடிகளை எதிர்த்துக் குரல் கொடுப்பவர். அவர் சொல்லும் விஷயங்கள் ஒவ்வொன்றும் அதிர்ச்சி ரகம். டாஸ்மாக் நிறுவனத்தில் ஊழல் எப்படி எல்லாம் நடக்கிறது என்பதற்கு அவர் சொன்ன ஓர் உதாரணம்...

''ஒரு கடையின் தினசரி வியாபாரத்தில் 2.5 சதவிகிதம் அடிப்படைத் தொகையாக நிர்ணயித்து, மாதத்துக்கு இவ்வளவு தொகை கட்ட வேண்டும் என்று பார் உரிமத்துக்கு டெண்டர் விடுவார்கள். ஒரு நாளைக்கு கடையில் ஒரு லட்சம் ரூபாய்க்கு வியாபாரம் என்றால், தினசரி 2,500 வீதம் மாதத்துக்கு 75 ஆயிரம் என நிர்ணயித்து டெண்டர் விடுவார்கள். இந்தத் தொகைக்கு மேல் யார் அதிகமாகக் கேட்கிறார்களோ... அவர்களுக்கு லைசென்ஸ் கிடைக்கும்.

இப்படி உரிமம் பெறுபவர், மூன்று மாத முன்வைப்பு தொகை செலுத்த வேண்டும். மூன்று மாதங்கள் தொடர்ந்து தொகை செலுத்தவில்லை என்றால், உரிமத்தை ரத்து செய்துவிடுவார்கள். இங்குதான் மோசடியே ஆரம்பம். உரிமம் ரத்து ஆன பின்பு அதிகாரிகளுடன் பேசிவைத்துக்கொண்டு, அந்தக் கடைக்கான ஏலத்தைத் தள்ளிப்போட்டுக்கொண்டே இருப்பார்கள். ஆனால், அதிகாரப்பூர்வமற்ற முறையில் பார் தொடர்ந்து நடக்கும்.

தமிழகத்தில் மொத்தம் 7,434 டாஸ்மாக் கடைகள். இதில் சுமார் 2,000 கடைகளில் அனுமதி இல்லாமல் இப்படி பார் நடக்கிறது. இந்த 2,000 கடைகளில் ஒரு நாளைக்குச் சராசரியாக ஒரு லட்சம் வியாபாரம் என்று வைத்துக்​கொண்டாலும், 2.5சதவீத கணக்குப்படி மாதத்துக்கு 15 கோடி அரசுக்கு நஷ்டம். இது ஒரு லட்சம் வியாபாரம் என்ற அடிப்படையில் போடப்பட்ட கணக்கு மட்டுமே. இரண்டு அல்லது நான்கு லட்சம் வரை வியாபாரம் ஆகும் கடைகளுக்கு நஷ்டக் கணக்குப் போட்டால் இன்னும் தலை சுற்றும்!''