Published:Updated:

மயக்கம் என்ன?

மயக்கம் என்ன?

மயக்கம் என்ன?
##~##

'கட்டளைக்கு கீழ்ப்படி’ என்பது தான் உலகெங்கும் உள்ள ராணுவ வீரர்களின் தாரக மந்திரம். பெருமூளை டு சிறுமூளையின் சிஸ்டமும் அப்படியே. போதை ஏறாத வரை சிறுமூளை என்பது கண்ணியமான, கடமை தவறாத ராணுவவீரன். ஆனால், மூளையின் நரம்புகளுக்குள் மது போதை ஊடுருவிய பிறகு பெரு மூளையில் இருந்து சிறுமூளைக்குச் செல்லும் சாலையில் ஆல்கஹால் வாகனங்கள் அணிவகுத்து டிராஃபிக் ஜாம் ஆகிவிடும். பெரியவன் காட்டுக் கத்தலாகக் கட்டளை இட்டாலும் சின்னவன் சட்டையே செய்ய மாட்டான். பிரச்னை ஆரம்பிப்பது இங்கேதான்! 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பத்திரிகைகளில் பெண்களின் புகைப்படங்களோடும் தொலைபேசி எண்களோடும் விளம்பரங்கள் வருமே... பார்த்து இருக்கிறீர்களா? என்றைக்காவது அந்த எண்களைத் தொடர்புகொண்டு பேசி இருக்கிறீர்களா? நிமிஷங்களில் நூறுகளைக் கரைக்கும் எண்கள் அவை. ஆனாலும், கல்லா நிரப்பிக்கொண்டுதான் இருக்கின்றன. எப்படி?

போதை ஏறினால், யாரிடமாவது 'பேசி’ ஆக வேண்டிய கட்டாய நிலைக்கு மனிதனைத் தள்ளுவதும் மதுவின் இயல்புகளில் ஒன்று. முன்பெல்லாம் 'பேச’ வேண்டும் என்றால், ஆட்கள் நேரில் கிடைத்தால்தான் போச்சு. ஆனால், இப்போது அப்படியா? இருக்கவே இருக்கிறது டெலிபோனும் செல்போனும்.

மயக்கம் என்ன?

சரக்கு உள்ளே இறங்கினால், சிலருக்கு அரட்டை வேண்டும். சிலருக்கு அழ வேண்டும். இரவில் படுக்கை அறையிலோ அல்லது வேறு எங்கேயோ தனிமையில் இருள் சூழ்ந்த நிலையில் இப்படிப் பேசும்போது எதிர் முனையில் இருப்பவர் உண்மையிலேயே தனது அருகில் இருப்பதுபோன்ற உணர்வு இருக்குமாம். பெண்களுடன் பேச எண்களைத் தேடுவது இந்தச் சூழலில்தான். இதற்குத்தான் 'டெலி போன் ஸ்காட்டலாஜியா’ என்று பெயர்.

பச்சைத் தண்ணீரில் பாலை எடுக்க முடியுமா என்று யோசித்துக் கொண்டிருக்கும் பன்னாட்டு நிறுவனங் களின் சி.இ.ஓ-க்கள் 'டெலிபோன் ஸ்காட்டலாஜியா’வை விட்டு வைப்பார்களா? கவர்ச்சிகரமான விளம்பரங்களை அறிவித்து, 24 மணி நேரமும் ஆபாசமாகப் பேச பெண்களை நியமித்து ஸ்காட்டலாஜியாவைக் காசாக்கிக் கொண்டு இருக்கிறார்கள்!

பெங்களூருவில் இருக்கும் ஒரு போதை மீட்பு சிகிச்சை மையத் துக்கு கடந்த வாரம் சென்றிருந்தேன். அங்கு ஒரு மருத்துவரிடம் பேசிக்கொண்டு இருந்தபோது, சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒருவரை அவரது மனைவி அழைத்துக்கொண்டு வந்தார். மருத்துவர் அந்த மனிதரிடம், ''மாத்திரை எல்லாம் சரியா சாப்பிடுறீங்களா? நல்லா தூக்கம் வருதா?'' என்று கேட்டார். ''சரக்கை நிறுத்தி மூணு மாசம் ஆச்சு. ஆனா, அவன் சீண்டிக்கிட்டே இருக்கான் டாக்டர். கேலி பண்றான். வண்டியை ஓட்டுறப்ப 'அந்த மரத்து மேல வண்டியை விடு... வேன் மேல மோது... அந்தப் பச்சை சட்டைக்காரன் மேல ஏத்து...’னு கத்துறான். நான் அவன் பேச்சைக் கேட்காம என்னை ரொம்பக் கட்டுப்படுத்தி கன்ட்ரோலா போறேன். அசிங்க அசிங்கமாத் திட்டுறான். முந்தா நாளு அவன் டார்ச்சர் தாங்க முடியாம வண்டியை ஓரம் கட்டி நிறுத்திட்டேன். இப்ப நான் உங்ககிட்ட வரக் கிளம்பறப்பகூட 'வேண்டாம்டா, அவன் என்னைக் கொன்னுடுவான்’னு அழுறான்...'' என்று இவர் அழுதார்.

நீண்ட காலம், அளவுக்கு அதிகமாக தொடந்து மது அருந்தியதால் ஏற்படும் இந்த நிலைக்குப் பெயர்... 'ஆடிட்டொரி ஹாலுசினேஷன்’ (கிuபீவீtஷீக்ஷீஹ் லீணீறீறீuநீவீஸீணீtவீஷீஸீ). காதுக்குள் யாரோ ஒருவர் அல்லது பலர் கண்டபடி திட்டுவார்கள்; கட்டளையிடுவார்கள். அதுதான் இவரது நோய். அது சரி, 'மரத்து மேல வண்டியை விடு’ என்று கட்டளை வந்ததாகச் சொன்ன அவர் என்ன பணியில் இருக்கிறார் தெரியுமா? நீங்கள் அதிர் வதைத் தவிர வேறு வழியே இல்லை. அவர் அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து ஓட்டுநர். அதுவும் அடிக்கடி இரவுப் பணியில் இருப்பவராம்!

பெரும்பாலான ஓட்டுநர்களுக்கு குடிப்பழக்கம் இருக்கிறது. அதில் எத்தனை பேருக்குக் காதுக்குள் கட்டளை வருகிறது என்று தெரியவில்லை!

மருத்துவர் என்னிடம் சொன்னார்: ''வண்டி ஓட்டுகிறவர்கள் ரொம்ப சீக்கிரம் மதுவுக்கு அடிமையாகி விடுகிறார்கள். அறியாமையே இதற்கு முக்கியக் காரணமாக அமைந்துவிடுகிறது'' என்றவர் ''சரி, படித்து எல்லாம் தெரிந்தவர்கள் மட்டும் எப்படி இருக்கிறார்கள்... அட, டாக்டர்களே எவ்வளவு பேர் குடிக்கிறார்கள்!'' என்றார்.

''படிக்காதவர்களுக்குப் புரியவைப்பது கடினம். ஆனால், படித்தவர்களிடம் குடியினால் ஏற்படும் பிரச்னைகள், நோய்கள்பற்றி எளிதாகப் புரிய வைக்கலாம் இல்லையா?'' என்று கேட்டேன்.

''அடப் போங்க சார்... படிக்காத ஒரு கிராமத்தானை ரொம்ப ஈஸியாத் திருத்திடலாம். ஆனா, நல்லாப் படிச்சவங்களைத் திருத்துறதுதான் கஷ்டம். படிக்காதவங்க நாங்க சொல்றதை நம்பி, சொல்பேச்சு கேட்பாங்க. ஆனா, படிச்சவங்க மோசம். 'நாலு ஐஸ்கீரிமைச் சாப்பிட்டு ஏழு பெக் போட்டா ஒண்ணும் செய்யாது’ன்னு அவனா ஒரு சயின்ஸ் பேசுவான். அதுவும் பணக்காரன்னா கேட்கவே வேண்டாம். 'அதான் லிவர் டிரான்ஸ்பிளான்டேஷன்’ வந்துடுச்சேன்னு வியாக்கியானம் பண்ணுவான்...'' என்றவர் அடுத்து சொன்ன விஷயத்தைக் கேட்டு வியர்த்துப்போனேன்.

மருத்துவர் என்னைப் பார்த்துக் கேட்டார்:

''கண்ணதாசன் எவ்வளவு பெரிய கவிஞர்? வின்ஸ்டன் சர்ச்சில் எவ்வளவு பெரிய தலைவர்? அவர்களுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது எல்லோருக்கும் தெரியும். ஆனால், அந்த மதுவே ஒரு தீவிர நோயை அவர்களுக்குத் தந்திருந்தது உங்களுக்குத் தெரியுமா?''

 - தெளிவோம் 

பார் பாலிடிக்ஸ்! 

ஒரு பாரை ஏலம் எடுப்பவர் பாரை எப்படி நடத்த வேண்டும் தெரியுமா? உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தின்படி, முதலில் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளிடம், உணவு வழங்க உரிமம் பெற வேண்டும். பார்கள் அமைந்திருக்கும் இடம் ஈரத்தன்மை இல்லாமல் காய்ந்த நிலையில், காற்றோட்டமாக விசாலாமானதாக இருக்க வேண்டும். சுகாதாரமான கழிவறை இருக்க வேண்டும். சுத்தமான உடை அணிந்த பணியாளர்கள் இருக்க வேண்டும். அங்கு வரும் வாடிக்கையாளருக்கு சுகாதாரமான உணவைத் தருவதுடன், இலவசமாக சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என்கிறது அந்தச் சட்டம். ஆனால், பாரில் நடப்பது என்ன?

ஒரு விஷயம்... பாரில் ஐந்து ரூபாய்க்கு கிடைக்கும் தண்ணீர் பாக்கெட்டின் உண்மையான விலை உங்களுக்குத் தெரியுமா? 30 பைசா.

100 தண்ணீர் பாக்கெட்டுகள் விற்றால் 460 ரூபாய் லாபம். நகரப் பகுதியில் ஒரு பாரில் சராசரியாக 4000 பேரும் கிராமப் பகுதிகளில் ஒரு பாரில் சராசரியாக 1000 பேரும் குடிக்கிறார்கள். ஒருவர் தலா இரண்டு தண்ணீர் பாக்கெட் வாங்கினாலும் ஒரு நாளைக்கு 8000 தண்ணீர் பாக்கெட்டுகள் வரை விற்பனை. அப்படி என்றால் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆறாயிரத்து சொச்சம் கடைகளுக்கும்  இந்தத் தரமற்ற தண்ணீரால் மட்டும் எவ்வளவு லாபம் என்று கணக்குப் பார்த்துக்கொள்ளுங்கள்!  

பிளாஸ்டிக் டம்ளரிலும் இதே கொள்ளைதான். சட்டப்படி 40 மைக்ரான் அளவுக்கு மேல் இருக்கும் (மறுஉற்பத்தி செய்யக் கூடிய அளவு) பிளாஸ்டிக் டம்ளர்களைதான் விற்பனை செய்ய வேண்டும். ஆனால், எவ்வித மைக்ரான் கணக்குக்கும் உட்படாத மட்டமான பிளாஸ்டிக் நாற்றம் வீசும் டம்ளர்கள்தான் பார்களில் கிடைக்கும். ஐந்து ரூபாய்க்கு விற்கப்படும் இந்த டம்ளரின் உண்மையான விலை எவ்வளவு தெரியுமா? 15 பைசா. அதாவது 15 ரூபாய் முதலீட்டில் 485 ரூபாய் லாபம். இப்போது இதற்கு ஒரு கணக்கைப் போடுங்கள்.

அடுத்து ஸ்நாக்ஸ்... பேருதான் பெத்த பேரு...  வறுத்த நிலக்கடலை, பொட்டுக்கடலை, வத்தல்... இவைதான் நம்மூரில் ஸ்நாக்ஸ். பாரில் விற்கப்படும் நிலக்கடலை பாக்கெட்டை  வாங்கினால், எப்படி கூட்டிக் கழித்து எண்ணிப் பார்த்தாலும் 15 கடலைக்கு மேல் இருக்காது. அதன் விலை ஆறு ரூபாய்!

கடலையே இந்த விலை என்றால், அசைவ சைட் டிஷ்ஷின் தரமும் விலையும் எப்படி இருக்கும்? இதில் எவ்வளவு கொள்ளை நடக்கும்?

அங்கீகரிக்கப்பட்ட இறைச்சிக் கடைகளில் உள்ளாட்சி நிர்வாகத்தால் ஆய்வு செய்யப்பட்டு, முத்திரையிடப் பட்ட இறைச்சியை மட்டுமே சமைத்து விற்பனைக்குக் கொண்டுவர வேண்டும். இதை 15 நாட்களுக்கு ஒரு முறை அந்தந்தப் பகுதி உள்ளாட்சி நிர்வாகத்தைச் சேர்ந்த சுகாதார ஆய்வாளர் ஆய்வு மேற்கொண்டு உறுதிசெய்ய வேண்டும். ஆனால், இன்றைக்கு அப்படி எல்லாம் விதிமுறை பார்த்து, ஆய்வு நடத்தினால் எத்தனை பார்கள் மிஞ்சும்?

 அட்டைப் பெட்டிகளும் காலி பாட்டில்களும்!

 பாரில் ஒருவர் காலி பாட்டிலுக்கும் சேர்ந்து விலை கொடுத்துத்தான் மதுவை வாங்குகிறார். அப்படி வாங்கிக் குடித்துவிட்டுப் போட்டுவிட்டுப்போகும் காலி பாட்டில்கள், மது பாட்டில்கள் அடைக்கப்பட்டு வரும் அட்டைப் பெட்டிகள் இவற்றை வைத்து உள்ளூர் அரசியல்வாதிகள் எவ்வளவு லாபம் அடைகிறார்கள் தெரியுமா?

ஒரு டாஸ்மாக் கடையில் விற்பனையாகும் மது பாட்டில்களில் 60 முதல் 70 சதவிகிதம் பாட்டில்கள் பாரில் சேகரமாகும். முன்பு எல்லாம் இந்தக் காலி பாட்டில்களை வாங்க பல நிறுவனங்கள் இருந்தன. பாரை ஏலம் எடுத்தவர் அந்த நிறுவனங்களிடம் காலி பாட்டில்களை விற்று விடுவார். அவர்கள் பாட்டிலைச் சுத்தம் செய்தோ, செய்யாமலோ மீண்டும் மது தயாரிப்பு நிறுவனங்களிடம் பாட்டில்களை விற்று விடுவார்கள்.

ஒரு குவார்ட்டர் பாட்டில் அறுபது காசு, ஆஃப் பாட்டில் ஒரு ரூபாய், ஃபுல் பாட்டில் இரண்டு ரூபாய் என்று முன்பு எடுத்துக்கொண்டு இருந்தார்களாம். ஆனால், இதிலும் காசு பார்த்தால் என்ன என்று யாரோ ஒரு நல்ல மனிதருக்குத் தோன்ற இப்போது இங்கும் சிண்டிகேட் வந்துவிட்டது. அதாவது, ஒவ்வொரு பகுதிக்கும் அந்தந்தப் பகுதி அரசியல் தலைகளின் ஆசி பெற்ற ஒருவர் இப்படிக் காலி பாட்டில்களைச் சேகரிக்க இருப்பார். அவரிடம்தான் அந்தப் பகுதியில் உள்ள எல்லா பார்களும் காலி பாட்டில்களை அளிக்க வேண்டும். அவர் வைத்ததுதான் விலை. முன்பு கொடுத்ததில் பாதியை மட்டுமே கொடுத்து இதிலும் வசூல் பார்க்கிறது ஒரு குரூப்!

ஒரு கடைக்கு மது பாட்டில்களைச் சுமந்து வரும் அட்டைப் பெட்டியை வைத்து சில கோடிகள் புரள்கின்றன என்றால் நம்புவீர்களா? ஓர் அட்டைப் பெட்டியின் விலை ரூ. 3.50. ஒரு கடைக்கு மாதம் எத்தனை அட்டைப் பெட்டிகள் மது போகிறதோ அத்தனை அட்டைப் பெட்டிகளுக்கும் கணக்கு செய்து, அதற்கான வரைவோலை எடுத்து டாஸ்மாக் நிறுவனத்துக்கு பணியாளர்கள் அனுப்பி விட வேண்டும். இந்த அட்டைப் பெட்டிகளை வெளியே தனியாருக்கு டாஸ்மாக் பணியாளர்கள் விற்றுக்கொள்ளலாம். முன்பு எல்லாம் இப்படி அட்டைப் பெட்டிகளை வெளியே விற்கும்போது,  பெட்டிக்கு ஒரு ரூபாய் கிடைக்குமாம். கடைக்கு வரும்போதே உடைந்து வரும் பாட்டில்களால் ஏற்படும் இழப்பைச் சரிகட்ட இது பயன்படுமாம். ஆனால், இதிலும் இப்போது கை வைத்துவிட்டார்களாம் அரசியல் புள்ளிகள். ஒவ்வொரு பகுதிக்கும் அந்தந்தப் பகுதி அரசியல் தலைகளின் ஆசி பெற்ற ஒருவர் இப்படி அட்டைப் பெட்டிகளைச் சேகரிக்க இருப்பார். அவரிடம்தான் அந்தப் பகுதியில் உள்ள எல்லா மதுக்கடைகளும் அட்டைப் பெட்டிகளை அளிக்க வேண்டும். அவர் வைத்ததுதான் விலை. முன்பு கொடுத்ததில் பாதியை மட்டுமே கொடுத்து இதிலும் வசூல் பார்க்கிறது இன்னொரு குரூப்!