பிரீமியம் ஸ்டோரி
மயக்கம் என்ன?
##~##

லகளாவிய மதுத்தரம் என்று ஒன்று உண்டு. அதை நாம் பக்கத்தில்கூட நெருங்க முடியாது. தமிழகக் 'குடிமகன்கள்’ அதை நினைத்து ஏக்கப் பெருமூச்சு மட்டும் விட்டுக்கொள்ளலாம். அதுகிடக்கட்டும், இந்திய மதுத்தரம் (Indian standard alcohol specifications) என்று ஒன்று உண்டு தெரியுமா? மதுவை இப்படித்தான் தயாரிக்க வேண்டும்; இந்தந்த வஸ்துகள், இந்தந்த விகிதாச்சாரத்தில் சேர்க்கப்பட வேண்டும்; குறிப்பிட்ட நாட்களுக்கு கொள்​கலன்களில் அடைத்து வைத்து இருக்க வேண்டும் என்று எல்லாம் விதிமுறைகள் உண்டு. 

இப்படி மதுவுக்கு மட்டும் அல்ல... மது அடைக்கப்​படும் பாட்டில்களின் தடிமன், பாட்டில் மூடியின் தடிமன், மூடியின் உட்புறம் இருக்கும் இருக்கும் கார்க்கின் தடிமன் இவை எல்லாவற்றையுமே ஐ.எஸ்.ஓ. அமைப்பு (ஐ.எஸ் - 4450/2005) கர்ம சிரத்தையாக நிர்ணயித்துள்ளது. மது அடைக்கப்படும் பாட்டில்கள் எடை தாங்கும் பரிசோதனை, வெப்பக் கதிர்வீச்சு பரிசோதனை செய்​யப்பட வேண்டும் என்று எல்லாம் சொல்கின்றன அந்த விதி​முறைகள்.

நிர்ணயிக்கப்பட்டுள்ள தரத்​தின்படி இந்தியாவில் மதுவை எப்படித் தயாரிக்க வேண்டும் என்று தெரியுமா?

மயக்கம் என்ன?

பொதுவாக...

தண்ணீர் ஸ்பிரிட் வடிகட்டப்பட்ட மொலாஸிஸ் எசன்ஸ் = மது.

இதில் 'பிரீமியம்’, 'மீடியம்’, 'லோ’ என்று மூன்று தரங்கள் உண்டு. பிரீமியம் மற்றும் மீடியம் தர மது பானங்களில் நியூட்ரல் ஸ்பிரிட் (Neutral spirit) கலப்பார்கள். அதாவது, நன்றாக வடிகட்டிய, குறைந்த காட்டம் கொண்ட ஸ்பிரிட். பிரீமியம் ரகத்தில் மரத்திலான கொள்கலன்களில் அடைத்து, நொதிக்க வைக்கப்பட்ட பழரசத்தைக் கூடுதலாகச் சேர்ப்பார்கள். 'லோ’ ரக மதுவில் ரெக்டிஃபெய்டு ஸ்பிரிட் (Rectified spirit) கலப்பார்கள். அவ்வளவாக வடிகட்டாத ஸ்பிரிட் இது.

இவற்றை எல்லாம் கலந்து கட்டி ஒவ்வொரு வகை மதுவுக்கு ஏற்ப, குறிப்பிட்ட நாட்கள் கொள்கலன்களில் இருப்பு வைக்க வேண்டும். பின்பு, அதில் ஒரு பாட்டில் (குவாட்டர், ஆஃப், ஃபுல் என எந்த அளவு என்றாலும் சரி) சாம்பிள் எடுத்துப் பரிசோதனை செய்தால், அதில் 42.86 - 43.86 சதவிகிதத்துக்குள் ஆல்கஹால் இருக்க வேண்டும். இந்த அளவுக்குக் கூடவும் கூடாது; குறையவும் கூடாது. இதுதான் விற்பனைக்கு உகந்த மது. அரசாங்கத்தின் பார்வையில் குடிக்க உகந்த மது!

ஆனால், இங்கு நடப்பது என்ன? ஒரளவு நல்ல ஹோட்டலிலேயே இட்லி, தோசையை மிருது​​வாக்க வயிற்றுக்கு ஒவ்வாத சோடா உப்பு கலக்கிறார்கள். அப்படி என்றால், புறநகர்ப் பகுதிகளில் கோட்டைபோல் மதில் சுவர்களை எழுப்பிக்கொண்டு, ஏகப்பட்ட செக்யூரிட்டிகளின் பாதுகாப்புடன், வெளி ஆட்கள் யாரையும் உள்ளே அனுமதிக்காமல், 'நானே ராஜா நானே மந்திரி’ ரேஞ்சுக்கு மதுபானங்களைத் தயாரிக்கும் மதுபான நிறுவனங்கள் எப்படி எல்லாம் தில்லுமுல்லு செய்ய முடியும்?

இதைப் படித்து, மதுவை ரட்சிக்கும் எந்த ஒரு ரட்சகரும் கடுப்பாக வேண்டாம். 'அரசுத் தடயவியல் ஆய்வுக்கூடத்தில் சான்றிதழ் பெற்ற பின்புதானே விற்பனைக்கு அனுப்புகிறோம்’ என்று கொதிப்படைய வேண்டாம். அவர்களது மனசாட்சிக்குத் தெரியும்... என்ன எல்லாம் செய்கிறார்கள் என்று!

சர்க்கரை ஆலைகளில் இருந்து வாங்கும் ஒவ்​வொரு லிட்டர் ஸ்பிரிட்டையும் மது ஆலைகள் டாஸ்மாக் நிறுவனத்தின் மதுத்தயாரிப்புக்கு மட்டும்தான் பயன்படுத்துகின்றனவா? வேறு வணிக நோக்கத்தில் வெளியே கைமாற்றப்படவே இல்லையா? அனுமதிக்​கப்பட்ட, உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிக்காத எசன்ஸை மட்டும்தான் உபயோகப்​படுத்துகின்றனவா? ஐ.எஸ்.ஓ. நிறுவனம் வகுத்துள்ள அத்தனை விதிமுறைகளையும் ஒன்று விடாமல் பின்பற்றுகின்றனவா?

ஆம், என்று சொல்பவர்கள் தங்கள் ஆலையில் நடக்கும் மதுத்தயாரிப்பை எப்போதுமே வீடியோ காட்சிக்கு உட்படுத்துவார்களா? பரிசோதனைக்கு சாம்பிள் அனுப்பும்போது அந்த வீடியோ காட்சிகளையும் தடயவியல் சோதனைக்கூடத்துக்கு அனுப்புவார்களா? விதிமுறைகளின்படி புதிய

மயக்கம் என்ன?

பாட்டில்களில்தான் மது அடைக்கப்பட வேண்டும். அதனால், டாஸ்மாக் நிறுவனத்துக்கு மது பாட்டில்களை விற்கும்போது புதிய பாட்டில்களுக்கான விலையைச் சேர்த்து​தானே குறிப்பிடுகிறார்கள்? அப்படி இருக்கும்போது பாட்டில் ரீ-சைக்கிளிங் என்பது எப்படி வந்தது?

ஆள்வோருக்கும் தெரியும்; அதிகாரிகளுக்கும் தெரியும்... மது நிறுவனங்களுக்கும் தெரியும்... இதை எல்லாம் எந்தக் குடிமகனும் கேட்க மாட்​டான். அதுதான் குடிப்பவனை மது முட்டாள் ஆக்கி விடுகிறதே?  பாட்டிலில் எவ்வளவு மட்டமான மதுவை அடைத்துக் கொடுத்தாலும் மூக்கைப் பிடித்துக்கொண்டு குடித்து விடுவான் என்று இந்த நிறுவனங்கள் நம்புகின்றன. இப்படி விதிமுறைகளை மீறுவது சமூக விரோதச் செயல் இல்லையா?

சமூக விரோதச் செயல் என்றவுடன்தான் டாக்டர் சொன்னது நினைவுக்கு வந்தது. மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஒருவிதக் குணாதிசயம் உண்டு. அதாவது, பஞ்சாபகேசன்... பயந்த ஆளு. முனுசாமி... கோபக்காரன். சரவணன்... சாது. உமா... ரொம்ப உணர்ச்சிவசப்படுவாள். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம். இந்தக் குணாதிசயம், தனக்கோ அல்லது சமூகத்துக்கோ ஆபத்தை விளைவிக்கும் வகையில் இருந்தால், அதுதான் ஆளுமைக் கோளாறு. சிலருக்கு இயல்பாகவே மனதின் அடி ஆழத்தில் விதிமீறல் மீது ஒருவித ஈர்ப்பு இருக்கும். பொதுவாகவே, மது உள்ளே சென்றால் கட்டுப்பாடற்ற, சுதந்திரமான நிலைக்கு மனிதனை அது கொண்டுசெல்லும். இந்த 'விதிமீறல் ஆட்கள்’ தொடர்ந்து மது அருந்தும்போது, அவர்களுக்கு ஏற்படும் மனநோய்தான் சமூக விரோத ஆளுமைக் கோளாறு (Anti - social personality disorder).

மிக, மிக ஆபத்தானவர்கள் இவர்கள். யாருடைய உணர்வுகளையும் கொஞ்சம்கூட மதிக்க மாட்டார்கள். சட்டங்கள், விதிமுறைகள் எல்லாம் இவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல.  யாரையும் பொருட்படுத்தாமல் கன்னாபின்னாவென்று தவறுகளைச் செய்வார்கள். எந்தக் குற்றத்தையும் செய்துவிட்டு, கூலாக ஃபீல் செய்வார்கள். நம் ஊரில் இருக்கும் பல அடாவடி தாதா அரசியல்வாதிகளுக்கு இது பொருந்தும். கொலைக் குற்றத்துக்காக இவர்களைக் கைதுசெய்து வண்டியில் ஏற்றும்போதும் சிரித்துக்கொண்டே, கைகளை ஆட்டி  போஸ் கொடுப்பார்கள். இவர்களை எல்லாம் நீங்கள் நாளிதழ்களில் நிறையப் பார்க்க முடியும்.

சிறைகளில் மூன்று 'டூக்கள்’ பிரபலம் sad, mad, bad. சிறையில் இருப்பவர்களை இப்படி மூன்று பிரிவுகளாகப் பிரித்துச் சொல்வார்கள் சிறை அதிகாரிகள். இதில் மூன்றாம் வகையினர்தான் மேற்கண்ட ஆட்கள்.

மனிதர்கள் எல்லோருக்கு ஒருவித உந்துதன்மை (Impulsivity) இருக்கும். அதாவது, ரோட்டில் அழகாக ஒரு பெண்ணைப் பார்க்கிறீர்கள். 'பொண்ணு செம க்யூட்பா...’ என்று நினைத்துக்கொண்டே அவளைக் கடந்து சென்றால், அது நார்மல். அதுவே, அழகான பெண்ணைப் பார்த்த உடனே, கையைப் பிடித்து இழுத்தால் அது, சமூக விரோத ஆளுமைக் கோளாறு. இன்று சிறையிலும் வெளியிலும் நீக்கமற நிறைந்து இருக்கும் கொடிய சமூக விரோதிகள், காசுக்காகக் கொலை செய்யும் கூலிப்படையினர், அடாவடி அரசியல்வாதிகள், ஆன்மிக ஆராய்ச்சிப் போர்வையில் உலா வரும் போலி சாமியார்கள்... இவர்கள் எல்லாம் சமூக விரோத ஆளுமைக் கோளாறு நோயாளிகளே; இவர்களின் 90 பேருக்குக் குடிப்பழக்கம் இருக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

பொதுவாக விதி என்று ஒன்று இருந்தால், விதிவிலக்கும் உண்டுதானே... உலகிலேயே ஏராள​மானவர்களைக் கொலை செய்து மிகக்கொடியவராக பெயர் எடுத்த ஹிட்லர், தனது 30 வயதுக்குப் பின்பு சாகும் வரை மதுவையே தொடாதவர். அதற்கும் முன்பும் கூட ஓரிரு முறை மட்டுமே அவர் மது அருந்தி இருக்கிறாராம். இன்னொரு தகவல், ஒருமுறை கசாப்புக் கடைக்குச் சென்ற ஹிட்லர், அங்கு மாட்டை அறுப்பதைப் பார்த்து மனம் கலங்கி, அதன் பின்பு அசைவத்தையே ஒதுக்கி விட்டார். ஆனால், அவரும் சமூக விரோத ஆளுமைக் கோளாறு நோய்கொண்டவர் என்பது எவ்வளவு முரண்பாடான உண்மை பாருங்கள்! 

''விற்பனை குறைந்தால் அதிகாரிகள் திட்டுகிறார்கள்!''

 கடந்த இதழில் டாஸ்மாக் ஊழியர்கள் கூடுதல் விலை வைத்து விற்பதை எழுதி இருந்ததைப் படித்து விட்டு, தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கப் (ஏ.ஐ.டி.யூ.சி) பொதுச்செயலாளர் தனசேகரன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். ''நீங்கள் சொன்னதில் நிறைய உண்மைகள் இருந்தாலும்... சில முரணான தகவல்களும் இருக்கின்றன. கூடுதல் விலை வைத்து விற்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு உண்மைதான். ஆனால், கடையைத் திறக்கும் முன்பும், கடை மூடிய பின்பும் விடிய, விடிய விற்பது டாஸ்மாக் பணியாளர்கள் அல்ல... பாரில் வேலை பார்ப்பவர்கள், பாரை ஏலம் எடுத்து நடத்துபவர்கள், அரசியல் தரகர்கள்.... இவர்களே, மதுபாட்டில்களை மொத்தமாக கொள்முதல் செய்து அப்படி விற்கிறார்கள்'' என்றார்.

அவரிடம், ''அவர்கள் கள்ளச் சந்தையில் விற்பனை செய்யத்தான் தினமும் மொத்தமாக மது பாட்டில்களை வாங்குகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? அப்படி என்றால் அந்த முறைகேட்டுக்கு ஊழியர்களும் உடந்தைதானே?'' என்று கேட்டோம். ''ஒவ்வோர் ஆண்டுக்கும் 20 சதவிகிதம் மது விற்பனையை உயர்த்தி இலக்கு நிர்ணயித்து, விற்பனை குறைந்தால் கெட்ட வார்த்தைகளில் அதிகாரிகள் அர்ச்சனை செய்யும் சூழலில், எப்படியோ விற்றால் போதும் என்ற நிலைக்குத்தான் யாராக இருந்தாலும் தள்ளப்படுவார்கள். தவிர, டாஸ்மாக் நிர்வாகம் ஒவ்வொரு கடைக்கும் இத்தனை யூனிட் மட்டுமே மின்சாரக் கட்டணம் தர முடியும் என்று சீலிங் வைத்துள்ளது. இந்த சீலிங் முறைப்படி பார்த்தால் மின் கட்டணத்தில் பாதியை நாங்கள் கையில் இருந்து செலுத்த வேண்டி இருக்கிறது. தவிர, ஒவ்வொரு கடையிலும் அளவுக்கு அதிகமாக இருப்பு வைக்க அதிகாரிகள்  கட்டாயப்படுத்துகின்றனர். இதனால், பல கடைகளில் மது பாட்டில்களை வைக்க இடம் இல்லாமல் பக்கத்தில் ஒரு அறையைப் பிடித்து அங்கு இருப்பு வைக்கிறார்கள். அதற்கு கைக்காசைப் போட்டு வாடகை செலுத்துவதும் ஊழியர்களே. அந்தக் கட்டடத்தில் இருப்பு வைக்கும் மதுபானத்துக்கு ஆபத்து ஏற்பட்டால், மொத்தத்தையும் ஊழியர்களே ஏற்க வேண்டும். இப்படி ஊழியர்கள் அனுபவிக்கும் கஷ்டங்களைப் பட்டியல் போடலாம்'' என்றார்.

 தெளிவோம்  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு