Published:Updated:

மயக்கம் என்ன?

மயக்கம் என்ன?

மயக்கம் என்ன?
##~##

நீண்ட காலம் மது அருந்துவதால் ஏற்படும் நரம்பு மண்டலப் பாதிப்புகளை ஆல்கஹாலிக் பாலி நியூரோபதி (Alcoholic polyneuropathy) என்கிறார்கள். மூளையின் கட்டளைப்படி உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் தகவல் பரிமாற்றம் செய்யும் கேபிள்தான் நரம்புகள். இந்த நரம்புகளில் ஏற்படும் மின்அதிர்வுத் தூண்டுதல்களால் தசைகள் இயங்குகின்றன. கை, கால் உள்ளிட்ட உறுப்புகளை இயக்க முடிகிறது. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வெப்பம், குளிர்ச்சி, தொடுதல், கிள்ளுதல், கிச்சுக்கிச்சு மூட்டுதல் எல்லாவற்றுக்குமே அடிப்படை இந்த நரம்புகள்தான். நரம்புகள் செயல் இழந்து விட்டால், காதலி உதட்டோடு உதடு வைத்து முத்தமிட்டால்கூட எந்த உணர்ச்சியும் இருக்காது. தேமே என்று தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு நிற்க வேண்டியதுதான். இந்த நரம்புகள் அழற்சி அடைவதைத்தான் 'நியூரோபதி’ என்கிறார்கள். நரம்புகள் பாதிப்பு அடைவதற்கு சர்க்கரை உள்ளிட்ட சில நோய்கள் காரணமாக இருந்​தாலும், 90 சதவிகிதம் பாதிப்பு மது உள்ளிட்ட போதைப் பழக்கங்களால் ஏற்படுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

மயக்கம் என்ன?

சில ஆண்டுகள் அளவுக்கு அதிகமாகக் குடித்துவிட்டு - அதே சமயம் சரியான உணவு எடுத்துக்கொள்ளாமல் இருப்பவர்​களுக்கு, நிச்சயம் நரம்பு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. பொதுவாக, ஓரிரண்டு லார்ஜ் அளவாகக் குடிப்பவர்கள் நன்றாகச்  சாப்பிடுவார்கள். நிறையக் குடிப்பவர்கள் சரியாக சாப்பிட மாட்டார்கள். சாப்​பிடவும் முடியாது. குழந்தை சாப்பிடுவதுபோல ஒரு இட்லி, ஒன்றரை இட்லிதான் உள்ளே போகும். மதியம் இரண்டு, மூன்று வாய் சாப்பாடு மட்டுமே இறங்கும். இரவு வழக்கம்போல சரக்கு அடித்துவிட்டு, சாப்பிடாமல் மட்டை ஆகிவிடுவார்கள். இவர்கள் குடிக்கும் மதுவின் அளவு அதிகரிக்க அதிகரிக்க, இவர்களுக்கு உணவே தேவைப்​படாது. பசி என்ற உணர்வே நீங்கிவிடும். இப்படி சாப்பிடாததால் நரம்புகளுக்கு அதிமுக்கியமாகத் தேவைப்படும் 'தைமைன்’(Thiamine)  என்கிற 'பி-1’ வைட்டமின் கிடைக்காது. அப்போது தங்களுக்கான உணவு கேட்டு நரம்புகள் கதறித் துடிப்பதுதான் நெருப்பு பிடித்துக்கொள்வதுபோன்ற நரம்பு நோய்.

இந்த நோய் முதலில் பாதத்தில் தொடங்கும்... முழங்கால் வரை படிப்படியாக உணர்ச்சி குறையத் தொடங்கும். அடிக்கடி ஜிவ் என லேசான மின்சாரம் பாய்ச்சியதுபோன்ற உணர்வு ஏற்படும். சில சமயம் கால்களில் ஊசியால் ஆங்காங்கே நறுக் நறுக் என்று குத்துவது போன்ற உணர்ச்சி ஏற்படும். இப்படிக் குத்துவதை மருத்துவர்கள் 'பின்ஸ் அண்ட் நீடில்ஸ்’ (Pins and Needles) என்கிறார்கள். பாதங்களைத் தரையில் ஊன்றும்போது, பட்டு மெத்தை மீது பாதங்களை வைத்ததுபோல இருக்கும் அல்லது முட்களின் மீது பாதங்களை வைத்ததுபோல இருக்கும். அதற்காக பட்டு மெத்தை நோய் ரகக்காரர்கள்,  'பரவாயில்லை, நாம் தப்பித்தோம்’ என்று நினைக்க வேண்டாம். மேற்கண்ட இரண்டு வகையாறக்களும் மாறிமாறி வரும். அது ஆல்கஹாலின் கட்டாயம். இது முதல் கட்டம்.

உடனடியாக மருத்து​வரிடம் சிகிச்சை பெ​றாமல் தொடர்ந்து குடித்தார்கள் என்​றால், நான்​​கைந்து நாட்களில் உடலின் எடை பாதி​யாகக் குறையும். உடல் மெலிந்து, கண் மற்றும் கன்னங்​களில் டொக்கு விழுந்து​விடும். அதேசமயம், இவர்களின் பாதங்​களில் இருந்து முழங்கால் வரையும் கை மணிக்​கட்டில் இருந்து விரல் நுனி வரையிலும் பெட்ரோலை ஊற்றி நெருப்பைப் பற்றவைத்ததுபோல மிகக் கடுமையாக எரியும். இந்த எரிச்சல் பத்து நிமிடங்கள் தொடங்கி மணிக்கணக்கில் நீடிக்கும். இவர்கள்தான் எகிறி, எகிறி குதித்துக்கொண்டும் தண்ணீர்த் தொட்டியில் கால், கைகளை நனைத்துக்​கொண்டும் இருப்பார்கள். இது இரண்டாம் கட்டம்.

நரம்புகளைப் பாதித்த நோய், அடுத்து தசைகளுக்கும் தாவுவது மூன்றாம் கட்டம். பெரும்பாலும் கை, கால், தொடை ஆகிய இடங்களில் இருக்கும் தசைகளில் குடைச்சல், நமைச்சல், வலி ஏற்படும். தோலுக்கு அடியில் இருக்கும் தசையில் ஒரு கயிற்றைக் கட்டி இழுப்பதுபோலவும் தசைகள் தோலை பிய்த்துக்கொண்டு வெளியே வந்து விழத் துடிப்பதுபோலவும் வலிக்கும். இந்த வலியின்போது தாங்க முடியாத தலைவலியும் ஏற்பட்டு, நோயாளிகள் பயங்கரமாகக் கத்துவார்கள்... நாக்கைப் பற்களால் கடித்துக்கொள்வார்கள். இது நீடித்தால் வலியால் மனநோய் ஏற்படவும் வாய்ப்பு உண்டு.

ஆனால், இந்த நோயின் முதல்நிலை தொடங்கி கடைசி நிலை வரையிலும்கூட நல்ல சிகிச்சை முறைகள் உண்டு. என்ன... நடுவில் ஒருமுறை மது அருந்தினாலும்கூட மருந்துகள் தீவிர எதிர்வினையில் ஈடுபடக் கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

மேற்கண்ட பாதிப்புகள் நரம்புகள் தொகுப்பாக பாதிக்கப்படும்போது ஏற்படுவது. இன்னொரு வகை நரம்பு பாதிப்பும் உண்டு. குடியால் மட்டை ஆகிறவர்களுக்கு பெரும்பாலும் வலது தோள்பட்டையில் இருக்கும் ஓர் ஒற்றை நரம்பு பாதிக்கப்படும். இந்த நோயைதான் 'சாட்டர் டே நைட் பேல்ஸி’ (Saturday night palsy)அல்லது 'ஹனிமூனர்ஸ் பேல்ஸி’(Hnoneymooner’s palsy) என்கிறார்கள் மருத்துவர்கள். என்ன, நோய்களுக்கு இப்படி எல்லாம் கூடவா பெயர் வைப்பார்கள் என்று தோன்றுகிறதா? என்ன செய்ய... வறட்சியான மற்றும் கடுமையான சில மருத்துவப் பாடங்களைக் கற்பிக்க மருத்துவத் துறையிலும் கற்பனை, இலக்கியச் சுவை தேவைப்படுகிறதே!

பொதுவாக, அதிகமாக மது அருந்திவிட்டு மட்டை ஆகிறவர்கள் அதே இடத்தில் அல்லது கிடைக்கிற இடத்தில் அப்படியே தரையில் படுத்துவிடுவார்கள். இவர்கள் பெரும்பாலும் வலதுபுறக் கையின் தோள்பட்டை மீது தலையை அழுந்தவைத்து மணிக்கணக்கில் தூங்குவார்கள். அடிக்கடி இப்படி மட்டை ஆகி... அடிக்கடி இந்த பொசிஷனில் படுப்பவர்களுக்கு ஏற்படும் நோய்தான் 'சாட்டர் டே நைட் பேல்ஸி’. கைகளை - குறிப்பாக - மணிக்கட்டை இயக்கும் முக்கிய நரம்பான ரேடியல் நரம்பு (Radial nerve) மணிக்கட்டு வழியாகத்தான் செல்கிறது. அதை 10 அல்லது 20 நிமிடங்கள் தொடர்ந்து அழுத்தினால் பாதிப்பு எதுவும் ஏற்படாது. ஆனால், ஏழெட்டு மணி நேரம் தொடர்ந்து மற்றும் அடிக்கடி இதுபோன்ற அழுத்தம் கொடுக்கப்படும்போது அந்த நரம்பு செயல் இழந்துவிடும். மட்டையான பின்பு திடீரென ஒருநாள் காலையில் எழுந்துப் பார்த்தால், வலது கையின் மணிக்கட்டு எந்த உணர்ச்சியும் இல்லாமல் தனியாக தொங்கிக்கொண்டு இருக்கும். டூ - வீலர் ஆக்ஸிலேட்டரை முறுக்குவதுபோன்ற மணிக்கட்டினால் செய்யும் பணிகள் எதையுமே செய்ய முடியாது. அதெல்லாம் சரி... இதற்குப்போய் ஏன் 'ஹனிமூனர்ஸ் பேல்ஸி’ என்று பெயர் வைத்தார்கள் மருத்துவர்கள்?

ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு தேவைப்படும் இல்லையா? அதுபோலத்தான் இதுவும். தேனிலவு செல்லும் தம்பதியரைக் கற்பனை செய்து பாருங்​கள். 'எல்லாம்’ முடிந்த பிறகு... களைப்பாலும் கணவன் மீது உள்ள ஆசையாலும் மனைவி தலை​யணையை ஒதுக்கிவிட்டு, கணவனின் வலதுபுறம் தோள்பட்டையில்தான் தலை வைத்துப் படுப்பாள். அசந்து தூங்கும் மனைவியை எழுப்ப மனம் வராமல் கணவன், இரவு முழுவதும் அப்படியே விட்டு​விடுவான். அதனால்தான், மருத்துவர்கள் ரூம் போட்டு யோசித்து இப்படி ஒரு பெயரை அந்த நோய்க்கு வைத்து விட்டார்கள் போலும்! எல்லாம் சரி... அதென்ன வலதுபுறம்? இடதுபுறம் படுக்க மாட்டார்களா என்று கேள்வி எழலாம். பொதுவாக வலதுபுறம் படுப்பது மனிதனின் இயல்பு - வலது கையில் எழுதுவதுபோல. இடதுகை பழக்கம் சிலருக்கு மட்டுமே!

மது குடிப்பதால் ஒரு பக்கம் கை, கால்களில் நெருப்பு பற்றியதுபோன்ற நோய் வரும் என்றால்... இன்னொரு பக்கம் நிஜமாகவே தன்னைத்தானே எரித்து, மரித்துக்கொள்ளும் நோயும் வரக்கூடும். நீலாங்கரையில் கடந்த வாரம் நடந்த சம்பவத்தைப் படியுங்கள்.

''என்னன்னு சொல்றது... தினமும் குடிச்சிட்டு வந்து ஒரே அடி, உதைதான். கை, கால்ல பீடி சூடு எல்​லாம் வாங்கி இருக்கேன். இந்தா பாரு, என் தலையில் எம்மாம் பெரிய புடைப்பு. பத்து நாளைக்கு முன்னாடி குடிக்க காசு கொடுக்கலைன்னு என் தலைமுடியைப் பிடிச்சு இழுத்து செவத்துல முட்டிருச்சு. சில சமயம் வீட்டுக்கு வெளியே நின்னு டிரஸை அவுத்துப் போட்டுட்டு அசிங்க, அசிங்கமாத் திட்டும். அக்கம்பக்கத்துல எல்லாம் பல முறை அதை உட்காரவெச்சு அறிவுரை சொல்லி இருக்காங்க. அப்பவும் திருந்தலை. இதாச்சும் பரவாயில்லை... இந்த பச்ச மண்ணப் பாருங்க. ரெண்டு வயசுகூட ஆகல. பேரு ரோஸ் மேரி. குடிக்கக் காசு கொடுக்கலைன்னா, இந்தக் குழந்தையைத் தூக்கிப்போட்டு கேட்ச் பிடிக்கும். சில சமயம் குழந்தையைத் தூக்கிக்கிட்டு கடலுக்குள்ள ஓடும். குடிக்கக் காசு குடுத்தாதான் திரும்பி வரும்.  

தினமும் காலையில் எழுந்ததுல இருந்து நைட்டு வரைக்கும் நாலைஞ்சு பாட்டில் குடிச்சிடும். இப்படித்​தான் போன வாரம் நைட்டு பத்தரை  மணிக்கு ஃபுல் போதையில தடுமாறிக்கிட்டே வீட்டுக்கு வந்துச்சு. குழந்தையும் நானும் அசந்து தூங்கிட்டு இருந்​தோம். இடுப்புல சொருகி இருந்த காசை பிடுங்கப் பார்த்துச்சு. நான், காலையில் எழுந்ததும் குழந்தைக்குப் பால் வாங்கத்தான் வெச்சு இருக்கேன்னு சொல்லி கொடுக்கவே முடியாதுன்னுட்டேன். 'எனக்கே காசு தர மாட்டியா?’னு வெறிபிடிச்ச மாதிரி வெளியே போனதுதான்... கொஞ்ச நேரத்துல மண்ணெண்ணையை  ஊத்திக்கிட்டு நெருப்பு பத்தவைச்சிக்கிட்டு கத்திக்கதறி விழுந்து செத்துப் போச்சு. இப்ப இந்த பச்சக் குழந்தையை வெச்சுக்கிட்டு தனிஆளா அல்லாடுறேன்...''

- இப்படி தினமும் மிதமிஞ்சி மது அருந்தி, இவ்வளவு கொடுமைகளை செய்துவிட்டு கடைசியில் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டது ஓர் ஆண் அல்ல... பெண். நீலாங்கரை சின்ன குப்பம் பகுதியை சேர்ந்த மதியின் மனைவி நாகவள்ளி அவர்!

-தெளிவோம்

•  ஜூனியர் விகடன் ஆக்ஷன் செல்லுக்கு கண்ணீருடன் இப்படிப் பேசி இருந்தார் திருப்பூரைச் சேர்ந்த இல்லத்தரசி ஒருவர்... ''எங்க வீட்டுல அவர் டெய்லி டிரிங்க் பண்ணுவார். காலையில 10 மணியில இருந்து ராத்திரி 10 மணிக்கு வரைக்குந்தான் டாஸ்மாக் கடை இருக்கும்னு சொல்றாங்க. இவர் ராத்திரி 10 மணிக்கு மேலதான் குடிச்சுட்டு வருவார். காலையில் அஞ்சு மணிக்கு எழுந்து பார்த்தா, ஆள்  இருக்க மாட்டார். திரும்பவும் குடிச்சிட்டு தடுமாறிக்கிட்டே வருவார். எனக்குத் தெரிஞ்சு திருப்பூர்ல சில பேக்கரிகள்ல மது விக்கிறாங்க போல. நாங்க ரொம்ப நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவங்க. என்னால அவரைத் திருத்தவே முடியலை. எங்களோட நிம்மதி, சந்தோஷம் எல்லாத்தையும் பறிகொடுத்துட்டு நிக்கிறோம். எங்களோட வயித்தெரிச்சலை இப்படி எல்லாம் கொட்டிக்கிட்டு... இந்த மாதிரி வரிப்பணம் அரசாங்கத்துக்குத் தேவையா? இந்த மாதிரி வரிப்பணம் இல்லாம அரசாங்கத்தை நடத்தவே முடியாதா? முதல்வரும் என்னை மாதிரி ஒரு பொண்ணுதானே? ஒரு குடும்பம், குழந்தைகள் படுற கஷ்டம் அவங்களுக்குப் புரியாதா? - கண்ணீர்க் கதறலுடன் இப்படித் தொடர்கிறது தமிழக அரசுக்கு கேட்கவே கேட்காத அந்தப் பெண்ணின் குரல்!     

•  மதுபான தொழிற்சாலைகளின் 'கவனிப்பை’ பொறுத்து மதுவின் கொள்முதல் இருக்கும் என்பதை ஏற்கெனவே சொல்லி இருந்தேன். அதை இப்போது நிரூபித்துள்ளனர் அதிகாரிகள். முளைத்து மூணு மாதங்களே ஆன இரு நிறுவனங்களும் எந்த ஆட்சியிலும் ஓஹோ என்று இருக்கும் ஒரு நிறுவனமும் அதிகாரிகள் தொடங்கி அதி கார மையம் வரைக்கும் வகையாக கவனித்து விட்டன. விளைவு, விமானம் விட்ட நிறுவனத்திடம் ஜூன் மாதம் வரை மாதத்துக்கு ஒன்பது லட்சம் பெட்டிகள் கொள்முதல் செய்த டாஸ்மாக் நிறுவனம், ஜூலை முதல் கொள்முதலை ஏழரை லட்சம் பெட்டிகளாக குறைத்துக் கொண்டது. இன் னொரு சிவமயமான நிறுவனத்திடம் மாதம் ஐந்து லட்சம் பெட்டிகள் வாங்குவது மூன்றரை லட்சமாக குறைந்து விட்டது. இதேபோல் இன்னும் இரண்டு நிறுவனங்களிடம் தலா ஒன்றரை லட்சம் பெட்டிகள் கொள்முதல் ஆர்டரை டாஸ்மாக் குறைத்துக் கொண்டது. இந்த ஆர்டர்கள் மேலே சொன்ன மூன்று நிறுவனங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டு விட்டது! இதனால், விமான நிறுவன உரிமையாளர் உர் என்று இருக்கிறாராம்!