பிரீமியம் ஸ்டோரி
மயக்கம் என்ன?
##~##

''ம்ம்ம்... போன வாரத்துக்கும் இந்த வாரத்துக்கும் எப்படி இருக்கு?''

''எனக்கு வார லீவு எல்லாம் இல்லைங்க டாக்டர்...''

''சரி, சரி... மாத்திரை எல்லாம் சரியா சாப்பிட்டியா?''

''கறிக்குழம்பா? அவ வெச்சித்தர மாட்டேங்​கிறாளே''

''இதப்பாரு... நான் பேசுறதை, என் வாய் அசையறதை நல்லாக் கவனி. அப்பதான் புரியும்!''

''ம்ம்ம்... வாய் எங்க இருக்கு?''

''ஸ்ஸ்ஸ்... முடியலை. போய் உட்காரு. எல்லா பேஷன்ட்டையும் பார்த்து முடிச்சிட்டுதான் உன்கிட்ட மல்லுக்கட்ட முடியும்!''

''நானே எல்லா பேஷன்டையும் முடிச்சி​டுவேன் டாக்டர்...''

''அதுக்கு முன்னாடி நீ என்னை முடிச்சிடுவ போ​லிருக்கே...''

- கடந்த வாரம், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் போதை மீட்புச் சிகிச்சைப் பிரிவில், பார்த்த காட்சி இது!

மயக்கம் என்ன?

தொடர்ந்து, டாக்டர் தனது உதவியாளரைப் பார்த்து கண்ணைக் காட்ட, அவர் 'சரி, சரி வாங்க... கறிக்குழம்பு வெச்சித் தர்றேன்...’ என்று சமாதானப்படுத்தி, அந்தக் குடிநோயாளியைக் கிட்டத்தட்ட இழுத்துச் சென்றார். குடிப்பழக்கத்தை விடவேண்டும் என்று நினைப்பவர்கள்... மேற்கண்ட வார்டுக்கு ஒரு நடை போய்விட்டு வாருங்கள். கட்டில்களில் கை, கால்கள் கட்டப்பட்டு, தலை தொங்கி, வாயில் எச்சில் ஒழுக ஒழுக உளறிக்கொண்டு திரியும் நோயாளிகள்... அவர்களின் அருகில் வாயைப் பொத்தியபடி அழும் மனைவி, குழந்தைகள், பெற்றோர் ஆகியோரைப் பாருங்கள். இவை எல்லாவற்றையும் பார்த்த பின்பும் மது அருந்த வேண்டும் என்று தோன்றினால்... நிச்சயம் நீங்கள் ஒரு குடி நோயாளியேதான்... கையோடு அந்த வார்டில் ஒரு படுக்கையை முன்பதிவு செய்துவிட்டு வாருங்கள். போட்டி அதிகமாக இருக்கிறது!

ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் மட்டும் அல்ல... ஆல்கஹால் புகுந்த வீடும் உருப்படவே உருப்படாது. ஏற்கெனவே இந்தத் தொடரில் மது, மூளைக்குள் செய்யும் அட்டகாசங்களை எழுதி இருக்கிறேன். ஆனால், அவற்றைத் தூக்கிச் சாப்பிட்டுவிடும் நோய் ஒன்று உள்ளது... 'வெர்னிக்கி கார்சாகாஃப் சின்ரோம்’ (Wernicke korsakoff syndrome).

ஏற்கெனவே சொன்னதுபோல நரம்புகளுக்கு மிகத்தேவையானது தைமைன் எனப்படும் பி-1 வைட்டமின். இது நமது நரம்புகளின் மின்தூண்டுதலுக்கு அவசியமான ஒன்று. மிகத் தீவிரமான குடிநோயாளிகளுக்கு இந்த வைட்டமின், உடலில் அபாயகரமான அளவுக்கு குறைந்து விடும். சிலருக்கு, சாப்பிடாததால் இந்தப் பிரச்னை வரும். சிலருக்கு நன்றாக சாப்பிட்டும் இந்தப் பிரச்னை வரும். 'நான் நல்லாத்தான் சாப்பிடுறேன்... ஆனா, உடம்பு இளைச்சுக்கிட்டே போகுது’ என்பார்கள். உண்மைதான், இவர்கள் மது அருந்திவிட்டு நன்றாகச் சாப்பிடுவார்கள். அது மதுவால் ஏற்படுவது தற்காலிகப் பசி. இவர்கள் தொடர்ந்து மது அருந்தியதால் உடலின் ஜீரண மண்டலம் பாதிக்கப்பட்டு, உடலின் உறுப்புகள் சாப்பிட்ட உணவின் சத்துக்களை - வைட்டமின்களை உறிஞ்சும் சக்தியை இழந்து விடும். அதனால், சாப்பிட்ட உணவின் சத்துக்கள் வீணாகி, கழிவாக வெளியேறி விடும். இதுபோன்ற காரணங்களால் ஏற்படும் மூளை நரம்பு மண்டலக் கோளாறின் முதல் கட்டம்தான் 'வெர்னிக்கிஸ் என்ஸிபாலோபாதி’(Wernicke’s encephalopathy). இது உடல்ரீதியான பிரச்னை.

'திமிரு’ படத்தின் ஒரு காட்சியில் நடந்து செல்லும் வடிவேலுவிடம், போதையில் தடுமாறிக்கொண்டே மயில்சாமி லிஃப்ட் கேட்பாரே... அதுபோலவே இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஒரு குடிநோயாளி, போதை இல்லாமலேயே வலதும் இடதுமாகத் தள்ளாடித் தள்ளாடித்தான் நடப்பார். கை, கால் நரம்புகள் பாதிக்கப்பட்ட நிலையில் மூளையின் நரம்புகளும் தனது உறுப்புகளுக்கு சரியான கட்டளைகளைப் பிறப்பிக்க முடி யாமல் போவதால் ஏற்படும் பாதிப்பு இது. இதை, அட்டாக்ஸியா(Ataxia) என்கிறார்கள் மருத்துவர்கள்.

இவர்களுக்குக் கண்களிலும் ஏகப்பட்ட கோளாறுகள் ஏற்படும். பார்வை ஓர் இடத்தில் நிலைக்காது. காட்சிகள் மங்கலாகத் தோன்றும். கருவிழி பாப்பாக்கள் ஓர் இடத்தில் நிற்காமல் மேலும் கீழும் இடதும் வலதுமாக அலைபாய்ந்து கொண்டே இருக்கும். இப்படியான நபரை ஒரு பெண்ணின் முன்னால் கொண்டுபோய் நிறுத்தினால் என்ன ஆகும்? பாவம், கன்னத்தில் அறை வாங்கிக்கொண்டு வருவார். இவர்களால் தலையைத் திருப்பாமல் நேராக வைத்துக்​கொண்டு பக்கவாட்டில் பார்க்க முடியாது. கண்ணின் மெல்லிய தசைகளை இயக்கும் நரம்புகள் செயல் இழந்துபோவதுதான் இதற்குக் காரணம். இவை எல்லாம் உடல்ரீதியான பாதிப்புகள்.

இந்த நிலையில் சிகிச்சை எடுத்துக்கொண்டால் குணம் அடைய வாய்ப்புகள் உண்டு. ஆனால், அலட்சியப்படுத்தினாலோ, அதிர்ச்சிகரமான அடுத்த கட்டத்துக்குச் சென்றுவிடும். கொடுமை என்னவென்றால், இந்தச் சூழலுக்குப் பின் மது அருந்துவதை நிறுத்தியே விட்டாலும்கூட சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிடில், அடுத்த கட்டம்தான்.  இந்த இரண்டாம் கட்ட நோயின் பெயர் 'கார்சாகாஃப் சைக்கோசிஸ்’ (Korsakoff’s psychosis).

இது மனரீதியான நோய். இந்த நோயில் ஞாபக மறதி பிரதானமாக இருக்கும். நீங்கள் ஒன்று கேட்டால், அவர்கள் ஒன்று சொல்வார்கள். ஆனால் தாங்கள் தவறான - பொருத்தம் இல்லாத பதில் சொல்கிறோம் என்பதை இவர்களால் உணர முடியாது. 'சரியாகத்தானே பதில் சொல்கிறோம். இவர் ஏன் குழம்புகிறார் அல்லது தன்னை ஏன் குழப்புகிறார்?’ என்று நினைப்பார்கள். இப்படிக் குழப்பமாகப் பதில் சொல்வதை கான்ஃபேபுலேஷன் (Confabulation) என்கிறது மருத்துவம். ஏனெனில், இந்த நிலையில் உள்ள நோயாளிக்கு ஒருவரின் பேச்சைக் கேட்பது, பார்ப்பது போன்றவை அரைகுறையாகத்தான் மூளையில் பதிவாகும். அதனால், தெளிவான பதில் வராது. இப்படிப் பதில் சொன்ன, ஒரு பரிதாபப்பட்ட குடிநோயாளியின் உரையாடலைத்தான் இந்தக்  கட்டுரையின் ஆரம்பத்தில் நீங்கள் படித்தீர்கள்!

அடுத்தபடியாக மூளையில் புதிய நினைவுகள் பதிவது முற்றிலுமாக நின்றுபோகும். பழைய நினைவுகள் மட்டும் அப்படியே இருக்கும். இதன் பெயர் 'ஆன்டிரோகிரேடு அம்னீஷியா’ (Anterograde amnesia).இந்த நிலையிலும் சிகிச்சை பெறாவிட்டால், அந்த நபர் நிரந்தர மூளை ஊனத்துக்குத் தள்ளப்படுவார். இதை 'ரெட்ரோகிரேடு அம்னீஷியா’ (Retrograde amnesia) என்கிறார்கள் மருத்துவர்கள். இது கடைசி கட்டம். அதாவது, காலம் முழுக்க மனநோயாளியாகக் கழிக்க வேண்டியதுதான். இந்தக் கட்டத்தில், தான் யார்; தனது பெயர் என்ன; ஊர் எது; பெற்றோர், மனைவி, பிள்ளைகள், உறவுகள் யார் என்பது எல்லாமே மறந்து போகும். சில சமயம் இத்தனை ஆண்டுகளாக பேசிவந்த தாய்மொழியைக்கூட மறந்து விடுவார்கள். இவர்களாக ஓர் ஒலி வடிவத்தை உருவாக்கிக்கொண்டு பேசுவார்கள், புலம்புவார்கள், சிரிப்பார்கள், அழுவார்கள். இவர்களின் உலகமே வேறு என்றாகி விடும். இவர்களை மனரீதியாகக் குணப்படுத்த வாய்ப்பே இல்லை என்கிறார்கள் மன நல மருத்துவர்கள்.

- தெளிவோம்

பறக்குது ரெய்டு!

சென்னை, கோவை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் டாஸ்மாக் அதிகாரிகள் சுற்றிச்சுழன்று மதுக்கடைகளில் ரெய்டு நடத்துகிறார்கள். முதுநிலை மண்டல மேலாளர் மற்றும் மாவட்ட மேலாளர் ஆகியோர் தலைமையில் இரண்டு பறக்கும் படைகள் மட்டுமே முன்பு இருந்தன. இப்போது, மண்டல அளவில் ஒரு குழு, பார் மேற்பார்வையாளர்கள் கொண்ட குழு ஒன்று, வெளி மாவட்ட அதிகாரிகள் குழு ஒன்று, கலால் அதிகாரி தலைமையில் குழு ஒன்று என மொத்தம் ஆறு பறக்கும் படைகள் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நடந்த ரெய்டில் கோவையில் 135 பேர், மத்திய சென்னையில் 76 பேர், வடசென்னையில் 68 பேர், தென்சென்னையில் 80 பேர், திருவள்ளூரில் 18 பேர், காஞ்சிபுரத்தில் 8 பேர் என 385 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அதிகாரிகள் இப்படி நடவடிக்கை எடுப்பது எல்லாம் சரிதான். ஆனால், ஆளும் கட்சியின் அண்ணா தொழிற்சங்க உறுப்பினர்கள் இருக்கும் கடைகளில் மட்டும் ஏன் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுப்பது இல்லை என்று கேள்வி எழுப்புகிறார்கள் டாஸ்மாக் ஊழியர்கள். நியாயமான கேள்விதானே?

 தினம் தினம் உயிர் குடிக்குது மது!

மதுவால் அன்றாடம் நடக்கும் கொலைகளும் தற்கொலைகளும் கொஞ்சமா நஞ்சமா?

கோவை மதுக்கரை, ஆத்துமேடு பகுதியில் கடந்த 13-ம் தேதி, கணவன் மது வாங்கித் தரவில்லை என்று மனைவி எலி விஷத்தை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். மதுக்கரை போலீஸாரிடம் பேசினால், ''புருஷன் பேரு மாரிமுத்து. அவர் மனைவி சீதாலட்சுமி. புருஷன் தினமும் வீட்டுக்கு வாங்கிட்டு வந்து குடிக்கிறதைப் பார்த்து மனைவியும் குடிக்கப் பழகிட்டாங்க. நாலு வருஷத்துல மனைவியும் குடிக்கு அடிமை ஆகி, போதை மீட்புச் சிகிச்சை மையத்துக்குப் போகும் அளவுக்கு முத்திப்போச்சு. குடிக்கக் கூடாதுனு டாக்டர் கண்டிப்பாகச் சொல்லிட்டார். மறுநாள், புருஷன் வேலைக்கு கிளம்புறப்ப குவார்ட்டர் வாங்கிக் கொடுன்னு சீதாலட்சுமி கேட்ருக்காங்க. ஆனா, புருஷன் திட்டிட்டுப் போயிட்டார். குடிக்க முடியாம டெம்ப்டேஷன் ஆகி விரக்தியில சீதாலட்சுமி எலி விஷத்தைக் குடிச்சிட்டாங்க. அக்கம்பக்கத்துல இருந்தவங்க ஆஸ்பத்திரியில சேர்த்தும் அவங்க இறந்துட்டாங்க...'' என்றார்கள்.

இதுபோலவே மதுப் பழக்கத்தை நிறுத்த முடியாத மன உளைச்சலில் சென்னை சேத்துப்பட்டில் ஆர்.டி.ஓ. அலுவலக புரோக்கர் ஒருவர் மாநகராட்சி பூங்காவில் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதே காரணத்துக்காக கடந்த ஞாயிறு அன்று அதிகாலை எழும்பூரைச் சேர்ந்த தாஸ் என்பவர் நள்ளிரவு எழுந்து ஓடிச்சென்று கூவத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இவ்வளவுக்கும், அரசு மருத்துவமனை போதை மீட்புப் பிரிவில் தாஸ் சிகிச்சை பெற்று வந்தவராம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு