Published:Updated:

மயக்கம் என்ன?

மயக்கம் என்ன?

மயக்கம் என்ன?

மயக்கம் என்ன?

Published:Updated:
மயக்கம் என்ன?
##~##

குப்புறப்படுத்து இருந்த குணசேகரனின் இடுப்பு மீது ஏதோ ஓர் இலகு ரக வாகனம் ஏறி இறங்கியபோதும்கூட அவருக்குப் போதை தெளியவில்லை. ஐயப்பன்தாங்கலில் டாஸ்மாக் பார் ஒன்றில் அன்று காலை ஏழு மணிக்கே மது குடிக்க ஆரம்பித்தவர், மாலை வரை சலிக்காமல் குடித்துக்கொண்டே இருந்தார். இருட்டத் தொடங்கும்போது, மட்டையாகி பாரில் கவிழ்ந்தவரை, ரோட்டோரம் இழுத்துப் போட்டனர் பார் ஊழியர்கள். பிளாட்பாரத்தில் கடை வைத்து இருந்தவர், தனக்கு இடையூறாகப் படுத்து இருப்பதாகக் கருதி குணசேகரனை உருட்டி விட்டார். இப்படியாக, ரோட்டில் படுத்துக்கிடந்தவர் இடுப்பின் மீது அன்று இரவு அனேக​மாக ஏதோ ஒரு கார் ஏறிச்சென்று இருக்க வேண்டும். வெளிக்​காயம் இல்லை. இடுப்பு எலும்பு நொறுங்கி ​விட்டது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மறுநாள், சூரியன் அவர் முகத்தில் சுள் என்று அடித்து போதை தெளிந்தபோதுதான் குணசேகரனுக்கு அந்த மரணவலி உறைத்தது.  அவர், அலறித் துடித்தபோதும், போதையில்தான் கத்து​வதாக நினைத்தனர் மக்கள். நாள் முழுவதும் கத்திக்கொண்டிருந்தவரிடம் ஒருசிலர் விசாரிக்க... ஒருவழியாக மாலை ஆறு மணிவாக்கில் அவரது உறவினர் ஒருவர் அடித்துப் பிடித்து வந்து, அரசு மருத்துவமனைக்கு குணசேகரனைக் கொண்டு​சென்றார். இடுப்புக்குக் கீழே இனி செயல்பட வாய்ப்பு மிகவும் குறைவு என்று சொல்லிவிட்டனர் மருத்துவர்கள். இப்படியரு சூழலில்தான் கடந்த அத்தியாயத்தின் இறுதியில் கடவுளுக்கு நன்றி சொல்லிக்கொண்டு இருந்தார் குணசேகரனின் மனைவி செல்வி!

மயக்கம் என்ன?

''எங்களுக்கு கல்யாணமாகி 11 வருஷம் ஆகுது. பத்து வயசுல ஒரு பொட்டைப் புள்ளை இருங்குங்க. கல்யாணமாகி குழந்தை பெத்ததோட சரி. அப்புறம் நான் இவரோட வாழ்ந்தே எட்டு வருஷம் ஆச்சு. ஹோட்டல் சமையல் வேலைக்கு வெளியூர் போவார். புருஷன் எப்ப வருவார்ன்னு ஆசையா காத்திருப்​பேன். இருபது நாளைக்கு ஒரு தடவை... மாசத்துக்கு ஒரு தடவைனு வருவார். வரும்போதே தள்ளாட்டம்தான்.  புள்ளைக்கு ஏதாச்சும் வாங்கிட்டு வந்திருப்பார்னு கையில இருக்கிற பையை வாங்கிப் பார்த்தா நாலைஞ்சு பாட்டில் இருக்கும். கறி சமைக்கச் சொல்லிட்டு நாள் முழுசும் நடுவீட்டுல உட்கார்ந்து குடிச்சிக்கிட்டே இருப்பார்.

போதை ஏறுனதும் சாப்பிட மாட்டார். தட்டைத் தூக்கி எறிஞ்சு தகராறு பண்ணுவார். என்னைப் போட்டு அடிப்பார். அதாச்சும் பரவாயில்லை.... இந்தப் பிஞ்சு குழந்தையை எட்டி உதைப்பார்...'' - மேலே பேச முடியவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, கண்ணீரைத் துடைத்துக்கொண்டு சொல்ல ஆரம்பித்தார்.

''ஒரு கட்டத்துல என்னால முடியலை. குழந் தையைத் தூக்கிட்டு செவரக்கோட்டையில இருக்கிற என் ஆத்தா வீட்டுக்கு வந்துட்டேன். அங்கேயும் வந்து தகராறு பண்ணுவார். அப்புறம் திடீர்னு ரெண்டு மாசம் திருந்துன மாதிரி தெரியும். குடிக்க மாட்டார். ரொம்ப சுத்தபத்தமா இருப்பார். திடீர்னு ஒருநாள் திரும்ப வேலையை ஆரம்பிச்சுடுவார். குடி... குடி... குடி... கடைசியா இப்படி அடிபட்டு வந்து படுத்துக் கிடக்காரு. இடுப்புக்குக் கீழே எந்த உணர்ச்சியும் இருக்காதுன்னு சொல்லிட்டாங்க டாக்டருங்க. இப்ப 'ஒண்ணுக்கு ரெண்டுக்கு' போறதுகூட அவருக்குத் தெரியறது இல்லை. நான்தான் அள்ளிப் போட்டு கழுவிட்டு இருக்கேன். எப்படியோ, இனிமேலாவது என்கூடவே முழுநினைப்போட இருப்பார்ல... அதான் சாமிக்கு நன்றி சொல்லிட்டு இருக்கேன்.

இப்ப என்னைப் பார்த்து கை எடுத்து கும்பிடுறார். வாழ்நாள்ல இனி எப்பவும் குடிக்கவே மாட்டேன்னு கண்ணுல தண்ணி ஒழுக சத்தியம் பண்றார். ஏங்க... கை, கால் ஓய்ஞ்சப் பொறவுதான் இந்தக் குடிகாரங்களுக்கு எல்லாம் புத்தி வருமா?

நான் தீப்பெட்டி கம்பெனிக்கு வேலைக்குப் போய்கிட்டு இருக்கேன். இனிமே, என் பொண்ணு படிப்பை நிறுத்திட்டு அவளையும் வேலைக்குக் கூட்டிட்டுப் போலாம்னு இருக்கேன். இப்படியே ஒழுக்கமா இருந்துட்டா போதும்... நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து உசுரு உள்ள வரைக்கும் காப்பாத்திடுவோம். ஆனா, இன்னும் எத்தனை குடும்பத்தை இந்த கவர்மென்ட்டு இந்த நெலமைக்கு ஆளாக்கப் போவுதுன்னு தெரியலை...'' - வெடித்து அழும் செல்விக்கு யார் பதில் சொல்வது?

தினமும் குடிப்பவர்களையும் பார்க்கிறோம். இடை இடையில் நிறுத்திவிட்டு மறுபடி தொடருபவர்களையும் காண்கிறோம்.  'எட்டு எட்டா மனித வாழ்க்கையை பிரிச்சுக்கோ’ என்று வைரமுத்து எழுதியதுபோலவே குடி உலகிலும் எட்டு வகை குடிநோயாளிகள் இருப்பதாகச் சொல்கிறார்கள் டாக்டர்கள்.

டைப் ஏ ((Type - A) ): இவர்கள் பெரும்பாலும் 30 வயதுக்கு பிறகுதான் குடிக்கப் பழகுவார்கள். குடித்தே ஆக வேண்டும் என்று எல்லாம் இவர்களுக்குக் கிடையாது. எப்போதாவது தோன்றினால் ஜாலிக்கு, கம்பெனிக்குக் குடிப்பார்கள். அவ்வளவுதான். குடியின் மீது ஈர்ப்பு எல்லாம் இவர்களுக்கு இருக்காது. இவர்களின் குழந்தைப் பருவம் எந்தப் பிரச்னையும் இல்லாமல் சுமூகமாக இருந்து இருக்கும். பெற்றோர் முறையாக வளர்த்து இருப்பார்கள். பெரும்பாலும் இவர்களின் பெற்றோர் அல்லது பெற்றோரின் ரத்த வழி உறவுகளில் குடிப்பழக்கம் யாருக்கும் இருக்காது.

டைப் பி (Type - B): மிக எளிதில் மது போன்ற போதைக்கு அடிமையாகி விடுவார்கள் இவர்கள். குடிக்க ஆரம்பித்த சில வருடங்களிலேயே குடியால் ஏற்படும் உடல், உள்ளம், சமூகம், பொருளாதாரம் சார்ந்த அத்தனை பிரச்னைகளையும் சந்தித்து விடுவார்கள். ''இன்னைக்கு ரொம்ப வெயிலா இருந்துச்சு... பீர் குடிச்சேன். மழை பெய்யுற மாதிரி இருந்துச்சு... ரம் அடிச்சேன்...'' என்று க்ளைமேட்டைக்கூட கன்னா பின்னாவென்று காரணமாகத் 'தொட்டு'க் கொள்வார்கள். குடியைத் தவிர, இவர்களிடம் புகை பிடிப்பது, பான்,

கஞ்சா போன்ற ஏதேனும் பிற பழக்கங்களும் இருக்கும். உடலில் பிற நோய்களின் பாதிப்பும் அதிகம் இருக்கும். இவர்கள் குடிநோய் மையங்களுக்குச் சென்று அடிக்கடி சிகிச்சை எடுத்துக்கொள்வார்கள். அதுவும் எதற்கு? திரும்பவும் நன்றாகக் குடிக்க வேண்டும் என்பதற்காக!

காமா ஆல்கஹால் டிபென்டென்ஸ் (Gamma alcohol dependence): குடிக்க ஆரம்பித்துவிட்டால் கிளாஸை கீழே வைக்க முடியாமல் போவதுதான் இவர்கள் பிரச்னையே. ஃபுல் எல்லாம் இவர்களுக்குச் சர்வ சாதாரணம். நாள் கணக்கில்... வாரக்கணக்கில்கூட குடித்துக்கொண்டே இருப்பார்கள். ஒருகட்டத்தில் உடல், மனம் எல்லாம் நொந்து நூலாகி... பர்ஸ் காலியாகி... கடனும் வாங்க முடியாமல்... திருடவும் முடியாமல்  குடியை அப்போதைக்கு நிறுத்தி வைப்பார்கள். குழந்தை மீது சத்தியம் செய்வது, விரதம் இருந்து கோயிலுக்குப் போவது, தினமும் மூன்று வேளையும் கோயிலுக்குப் போவது என இவர்கள் போடும் சீனுக்கு சிவனடியார்களே தோற்றுப்போவார்கள். மறுபடி ஒருநாள் லேசாக சபலம் தட்டும். 'களைப்பா இருக்கு... ஒரு கட்டிங்கை மட்டும் போடுவோம்’ என்று கறாராக பாருக்குப் போவார்கள். அப்புறம் என்ன... மராத் தான் மல்லாட்டம்தான்!

டெல்டா ஆல்கஹால் டிபென்டென்ஸ் (Delta alcohol dependence): குளிப்பது, சாப்பிடுவது, தூங்குவது, வேலைக்குப் போவதுபோல குடிப்ப தையும் ஒரு வாழ்க்கைக் கடமையாகவே கருதும் கர்ம வீரர்கள் இவர்கள். காலையில் அலுவலகத்துக்குத் தாமதமானால்கூட பதறாத வர்கள், மாலையில் குடிப்பதற்குக் கொஞ்சம் தாமதம் ஏற்பட்டாலும் பதைபதைத்துப் போவார் கள். ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட அளவு மதுவை அருந்தியே தீரும் இவர்கள், 'ஏன் பாஸ்... அதுல என்ன தப்பு? என் காசு, நான் குடிக்கிறேன். என் உடம்பு நல்லாத்தானே இருக்கு? சும்மா அட்வைஸ் பண்ணாதீங்க’ என்பார்கள். இவர்களுக்கு குடியைப் பற்றிய குற்ற உணர்வு சற்றும் இருக்காது. ஆனால், என்றோ ஒரு நாள் வயிற்று வலியோ, தீவிரக் காய்ச்சலோ, மஞ்சள் காமாலையோ வந்து பாதிக்கப்பட்டு, உடல் நிலை மோசமாகி நான்கைந்து நாட்கள் மருத்துவமனையில் சேர்க்கப்படும்போதுதான் இவர்கள் எந்த அளவுக்கு குடியால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பது தெரியவரும்.

குடியை நிறுத்திய இரண்டாம் நாளிலேயே ஆல்கஹால் வித்டிராயல் சிம்டம்ஸ்(Alcohol withdrawal symptoms) வேலையைக் காட்டத் தொடங்கும். கை நடுக்கம் எடுக்கும். பதற்றம் தெறிக்கும். கடுமையாகக் கோபப்படுவார்கள். மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருந்தால், சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுப் பார்கள். டென்ஷன் ஆகி டிரிப்ஸைப் பிய்த்து எறிவார்கள். இந்த நோயாளிகளில் சுமார் 40 சதவிகிதத்தினருக்குக் காதில் குரல் ஒலிக்கத் தொடங்கும். கண்ணில் மாயக்காட்சிகள் தோன்றும். அப்போதுதான், குடியால் எவ்வளவு பாதிக்கப்பட்டு இருக்கிறோம் என்பது அவருக்கும் உறைக்கும்.

குடி நோயாளிகள் யாராவது, 'நான் குடிக்கிறேன். ஆனா, நல்லாத்தானே இருக்கேன்...’ என்று மார் தட்டினால்... இன்னும் கொஞ்சம் சீரியஸாகவே இந்தத் தொடரைப் படிப்பது நல்லது!

-தெளிவோம்