பிரீமியம் ஸ்டோரி
மயக்கம் என்ன?
##~##

ட்டு வகை குடி நோயாளிகளில் நான்கு வகையினரைக் கடந்த அத்தியாயத்தில் படித்தோம். மீதி நான்கு வகையினர் இங்கே... 

நெகட்டிவ் அஃபெக்ட் ஆல்கஹாலிஸம்(Negative affect alcoholism):

ஆண்களைவிட பெண் குடிநோயாளிகளே இந்த வகையில் அதிகம். குற்ற உணர்வுடன் இருக்கும் தங்கள் மனநிலையைச் சரிசெய்ய, தங்கள் செயலுக்கு நியாயம் கற்பிக்க இவர்கள் மதுவை அருந்துவார்கள். இந்த வகை பெண் குடி நோயாளிகள் 90 சதவிகிதத்தினர் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள்.

இந்தியக் கலாசாரம் சார்ந்து இந்தியப் பெண்களின் உடல் அமைப்பும் மனநிலையும் 'ஒருவனுக்கு ஒருத்தி’ (Mono gamy) என்ற அடிப்படையில் பழகி உள்ளது. மேற்கத்திய கலாசாரத்தில் ஒரு பெண் பல ஆண்களுடன் செக்ஸ் வைத்துக்கொள்வது (poly gamy) சகஜம். ஒரே நேரத்தில் பல ஆண்களுடன் குரூப் செக்ஸ் வைத்துக்கொள்ளும் பெண்களும் அங்கு உண்டு. இதை உளவியல்பூர்வமாக மிருக குணம் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால், இந்தியாவில் ஒரு பெண் பலருடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்வதே இல்லையா? குரூப் செக்ஸ் நடப்பது இல்லையா என்று கேட்கலாம். நடக்கிறது... ''ஆனால், இந்தியப் பெண்கள் மனதார விரும்பியோ, சுகானுபவமாக பலருடன் குரூப் செக்ஸ் வைத்துக்கொள்வது இல்லை; இத்தகைய உறவுகளில் அவர்கள் விரும்பி ஈடுபட்டாலும் சரி, விரும்பாமல் ஈடுபட்டாலும் சரி...  அவர்கள் மனம் குற்ற உணர்வுடனேயே இருக்கும்'' என்கிறார்கள் மருத்துவர்கள். இப்படிப்பட்ட சூழலில் மனதைச் சமநிலைப்படுத்த முதலில் ஒரு பெண் நாடுவது மதுவைத்தான்! தொடர்ந்து அடுத்தடுத்து பிற ஆண்களுடன் செக்ஸ் வைத்துக்கொள்ளும்போது குற்ற உணர்வை மறைக்க அல்லது ஜெயிக்க பெண்ணுக்கு மது தேவைப்படுகிறது. ஒருகட்டத்தில் இவர்களுக்குக் கற்பு, கலாசாரம் எல்லாம் ஒரு விஷயமே இல்லை. இந்த வகை குடிநோயாளிகள் 40 வயதிலேயே உடல் கவர்ச்சியை இழந்து, மதுவால் மனநிலை பாதிக்கப்பட்டு சீக்கிரமே இறந்து போகிறார்கள். ஒரு கலாசாரத்தையும் ஒரு தலைமுறையையும் சின்னாபின்னமாக்க மதுவால் மட்டுமே முடியும்!

மயக்கம் என்ன?

ஆன்ட்டி சோஸியல் ஆல்கஹாலிஸம் (Anti social alcoholism): இதைச் சமூக விரோத குடிப்பழக்கம் என்கிறார்கள் மருத்துவர்கள். இவர்கள் பெரும்பாலும் சமூக விரோதிகள். ஆண்களே இந்த வகையில் மிகஅதிகம். இவர்கள் பெரும்பாலும் 14 வயதில் இருந்து 18 வயதுக்குள் மது குடிக்கப் பழகுகிறார்கள். இவர்களின் குடும்பப் பின்னணி மோசமாக இருக்கும். மது குடிப்பது தவறான விஷயம் அல்ல... அது ஒரு இயல்பான விஷயம் அல்லது சாகஸத்துக்குரிய விஷயம் என்று சிறு வயதிலேயே பசுமரத்து ஆணிப்போல பதிந்து இருக்கும்.

இவர்கள் 25 வயதுக்குள்ளாகவே அபாயமான மது நோயாளியாக... 'ஆன்ட்டி சோஸியல் பர்சனாலிட்டி டிஸார்டர்’ (Anti social personality disorder)  என்கிற சமூக ஆளுமைக் கோளாறு கொண்ட மன நோயாளியாக உருவெடுக்கிறார்கள். மது மீட்பு மையங்களில் இவர்களுக்குச் சிகிச்சை அளிக்கக்கூட மருத்துவர்கள் தயங்குகிறார்கள். காரணம், சிகிச்சை அளிக்கும் டாக்டரின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை. இவர்களை மதுப்பழக்கத்தில் இருந்து மீட்டு, குணப்படுத்துவதற்கு ஒரு சதவிகிதம் சாத்தியம் மட்டுமே இருக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள்!

மயக்கம் என்ன?
மயக்கம் என்ன?

டெவலப்மென்டிலி குமுலேட்டிவ் ஆல்கஹாலிஸம் (Developmentally cumulative alcoholism): மது குடிக்கும் மனஉந்துதலை ஏற்படுத்தும் சூழ்நிலையில் இருக்க நேரிடுவதால் மது குடிப்பவர், குடியே கலாசாரமாகி விட்ட சமூகத்தில் இருப்பதால் மது குடிப்பவர் ஆகியோர் இந்த வகையில் அடங்குகிறார்கள். உதாரணம்... டாஸ்மாக், நட்சத்திர விடுதி, கிளப் பணியாளர்கள், செப்டிக் டேங்க் சுத்தம் செய்பவர்கள், பிரேத பரிசோதனைக்கூடப் பணியாளர்கள். இவர்கள் ஆரம்பத்தில் சிறு அளவில் ஆரம்பித்து... பின்பு தினமும் மாலை மங்கினால் குடிக்க வேண்டும் என்ற கட்டாயத்துக்கு ஆளாகி... காலப்போக்கில் குடி நோயாளி ஆகிவிடுகிறார்கள்.

டெவலப்மென்டலி லிமிடெட் ஆல்கஹாலிஸம் (Developmentally limited alcoholism): பெரும்பாலும் இவர்கள் 17 வயதில் இருந்து 25 வயதுக்குள் இருப்பார்கள். ஜாலிக்காகக் குடிக்கிறேன் என்பதுதான் இவர்களில் 99 சதவிகிதம் பேர் வைக்கும் வாதம். தினமும் குடிக்க மாட்டார்கள். வாரம் ஒரு முறையோ, மாதம் ஒரு முறையோ குடிக்கும் ரகம். ஆனால், மொடாக்குடி குடிப்பார்கள். சாப்பாடும் பெரும் கட்டு கட்டுவார்கள். எல்லாம் கொஞ்சம் காலம்தான். களவும் கற்று மற என்பதுபோல குடியையும் குடித்து மகிழ்ந்து, குறிப்பிட்ட வயதில் பொறுப்புகள் கூடியதும் குறைத்து விடுவார்கள். பெரும்பாலான இளைஞர்கள் திருமணத்துக்குப் பிறகு குடியை அரிதாக்கிக்கொள்வது இந்த வகையில்தான் அடங்கும்!

எல்லாம் சரி... சாராயம் என்பதே சாக்கடைதான்; அதைக் குடிப்பவர்கள் அனைவரும் குடி நோயாளிகள்தான். எதற்காக எட்டு வகையாக இவர்களை மருத்துவ உலகம் பிரித்து வைத்துள்ளது என்ற கேள்வி எழலாம். ஒரு குடிநோயாளி குடிநோயில் இருந்து மீள்வதற்காக சிகிச்சை மையத்துக்கு சென்றால், அவரிடம் டாக்டர்கள் சுமார் 50 கேள்விகளைக் கேட்பார்கள். அதன் அடிப்படையில் மேற்கண்ட எந்த வகையில் அந்த நோயாளி வருகிறார் என்று பிரிப்பார்கள். ஒவ்வொரு வகைக்கும் ஒவ்வொரு பாணியிலான சிகிச்சை. அதற்காகத்தான் பிரிவினைகள்!

-தெளிவோம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு