பிரீமியம் ஸ்டோரி
மயக்கம் என்ன?
##~##

துக்கடை பார்களில் 'கிரேட் எஸ்கேப்’ என்று ஒரு பவுடரை விற்கிறார்கள். பாக்கெட்டில் விற்கப்​படும் இந்தப் பவுடரை வாங்கி வாயில் போட்டு, கொஞ்சம் தண்ணீரை ஊற்றிக் கொப்பளித்தால் மதுவின் வாடை வெளியே வராது என்று விளம்பரம் செய்கிறார்கள். கொப்பளித்தவர்களிடம் கேட்டால், ''அது ஏதோ சோடாஉப்பு சாப்பிட்டதுபோல வாய் எரிந்தது... கடும் ரசாயன நெடி அடித்தது. வாடை போனதா என்று தெரியவில்லை'' என்றார்கள். மது குடித்து வயிறு வெந்தது போதாது என்று வாயையும் புண்ணாக்கிக்கொள்ளும் மடத்தனம் இது! 

சிலர் சரக்கு அடிக்கும்போது தயிர்வடை சாப்பிடுவார்கள். போதை நின்று நிதானமாக ஏறுமாம். சிலருக்கோ தண்ணீர் கலக்காத மதுவுடன் சின்ன வெங்காயம் வேண்டும். ''மாப்ளே.. ச்சும்மா, தேள் கடிச்சது மாதிரி 'சுருக்’னு போதை ஏறும் தெரியும்ல'' என்பார்கள். இதற்கு தேளே கடித்து இருக்கலாம். பெரிய வெங்காயம் கடித்துக்கொண்டால், போதை ஏறவே ஏறாதாம். இது எல்லாமே தப்பு. மதுவை எப்படிக் குடித்தாலும் போதை ஒருவரின் உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்து கூடவோ, குறையவோ ஏறித்தான் தீரும்.

மயக்கம் என்ன?

ஒரு குவார்ட்டர் குடித்து விட்டு, சரவண பவனில் சூடாக ஒரு காபி குடித்தால் போதை இறங்கிவிடும் என்று பலர் நினைக்கிறார்கள். இன்னும் சிலரோ, குடித்த பிறகு தெருத்தெருவாகக் கொய்யா மரத்தைத் தேடி அலைந்து, கொழுந்து இலைகளாகப் பறித்து ஆடு, மாடுபோல அசை போடும் காமெடியும் நடக்கும். வாடை வராதாம்!

மது குடிப்பது தொடர்பாக 'குடிமகன்’களிடம் இப்படி எத்தனை எத்தனை தவறான நம்பிக்கைகள். மதுவைக் குடித்து விட்டால் குறிப்பிட்ட நேரத்துக்குப் போதையைப் போக்கவோ, வாடையை மறைக்கவோ முடியாது என்பதுதான் மருத்துவ உண்மை. ஆல்கஹால் நெடி, குடித்தவரின் மூச்சுக்காற்று வழியாக வெளியேறுகிறது. அதனால்தான், போலீஸார் வாயை ஊதச்சொல்லி ஸ்பீடா மீட்டர் போன்ற கருவியை நீட்டுகிறார்கள். மதுவின் நெடி பட்டால், அந்தக் கருவியில் இருக்கும் முள்​ளுக்கே போதை ஏறியதைப்போல மயங்கிக் கீழே சறுக்கும். ஒரு லார்ஜ் மதுவின் போதையையோ அல்லது வாடையையோ போக்க ஒருவரின் உடல் உறுப்புகளுக்கு ஒரு மணி நேரம் தேவை. இதை மாற்றவோ, மறைக்கவோ முடியவே முடியாது.

ஹாட் வகையறாக்களைக் குடித்தால்தான் உடலுக்குக் கெடுதல். பீர், ஒயின் சமாச்சாரங்கள் உடலுக்கு நல்லது அல்லது கெடுதல் இல்லை - இப்படியும் பலர் நினைக்கிறார்கள். இதுவும் தவறு. ஆல்கஹால் ஓர் அழிவு சக்தி என்பதில் மாற்றுக் கருத்தே கிடையாது. அது ரத்தத்தில்  ஊடுருவும் அளவான 'பி.ஏ.சி’-யை பொறுத்து, உடலுக்கு அது கெடுதல் செய்தே தீரும். ஒரு பீர் பாட்டிலில் இருக்கும் திரவத்தின் அளவுக்கு அதில் இருக்கும் சுமார் எட்டே முக்கால் சதவிகிதம் ஆல்கஹாலின் அளவு சரியானதே. ஹாட்டில் தண்ணீரோ, சோடாவோ கலந்து குடிக்கிறார்கள். பீரை அப்படியே குடிக்கிறார்கள். அவ்வளவுதான் வித்தியாசம். மற்றபடி மதுவில் எது நல்லது என்று ஆராய்ச்சி செய்வது எல்லாம் சாக்கடையில் சங்கீதத்தைத் தேடுவது போலத்தான். டாக்டர்கள் சொல்வார்கள், 'எ டிரிங்க் இஸ் எ டிரிங்க் இஸ் எ டிரிங்க்’ என்று. குடி என்பது குடியேதான்!

  மது குடித்தால் நன்றாகத் தூக்கம் வரும் - எவ்வளவு பெரிய மோசடி வார்த்தை தெரியுமா இது! எப்போதாவது... மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மது அருந்தும் நபர்களிடம் கேட்டுப் பாருங்கள். மது அருந்திய அன்று தனக்கு சரியான தூக்கம் இல்லை என்பார்கள். மது அருந்தினால் தூக்கம் வராது. மயக்கம்தான் வரும். அதுவும், 'நல்ல’ தூக்கத்துக்கு எல்லாம் வாய்ப்பே இல்லை. எப்படி?

மயக்கம் என்ன?
மயக்கம் என்ன?

பொதுவாக, அனைவருக்குமே தூங்கி எழும்போது உடலில் நீர் வற்றிப்போய் இருக்கும். இதை டிஹைடிரேஷன் (Dehydration) என்பார்கள். அதனால்தான் தூக்கத்தில் எழுந்து தண்ணீர் குடிக்கிறோம். அப்படிக் குடித்தும் போதாமல் காலையில் எழுந்ததும் மடக் மடக்கு என்று ஒரு சொம்பு தண்ணீரைக் குடிக்கிறோம். மது குடிக்காத நபருக்கே இப்படி என்றால், ஒருவர் மது குடித்துவிட்டுப் படுத்தால்? உடலில் இருக்கும் அத்தனை நீரையும் சுண்டி இழுத்து, வற்றச் செய்யும் தன்மை ஆல்கஹாலுக்கு உண்டு. உடல் வறண்டு, குடல் வறண்டு... நாடி, நரம்பு, நாக்கு எல்லாம் வறண்டு தாகத்தில் தவிப்பார்கள்.

போதை மயக்கத்தில் ஆழ்ந்து இருக்கும்போது எழுந்து தண்ணீர் குடிக்கவும் தோன்றாது. மது குடித்த அந்த ஆத்மாவை விடுங்கள். அது மயங்கிக்கிடக்கிறது. ஆனால், அந்த ஆத்மாவின் உடல் சுமார் எட்டு மணி நேரம் படும்பாடு, பெரும் அவஸ்தை. அதுவும் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் பெரும்பாலும் மூக்கு வழியாக மூச்சுவிட மாட்டார்கள். அஷ்டக்கோணாலாக வாயைத் திறந்து கொர்... புர்... என்று திணறித்திணறித்தான் மூச்சு விடுவார்கள். இதனால், வழக்கத்தைவிட அதிகமாக டிஹைடிரேஷன் ஏற்படும். சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து மதுப் பழக்கம் இருப்பவர்களுக்கு மயக்கத்தில் நிறையக் கெட்ட கனவுகள் வரும். குறிப்பாக, கனவுகளில் கொடூரச் சம்பவங்கள் நடக்கும். இப்போது சொல்லுங்கள். குடித்துவிட்டுப் படுத்தால் நல்ல... ஆழ்ந்த... நிம்மதியான தூக்கம் வருமா என்று!

நான்கு நண்பர்கள் ஒன்றாகச் சேர்ந்து குடிக்கிறார்கள். அதில் வழக்கம்போல் ஒருவன் மட்டை ஆகிவிட்டான். மற்ற மூவரும் என்ன செய்வார்கள்? அவன் அப்படியே படுக்கட்டும்... விடு. தூங்கி எழுந்தால் சரியாகிவிடும் என்று படுக்கவைத்து விட்டு கிளம்பி விடுவார்கள். இதில் என்ன தவறு என்று கேட்கலாம்... இதுதான் மிகப் பெரிய தவறு. ஒருவர் மட்டை ஆகிவிட்டால், அவர் போதையில் இருந்து மீண்டு எழும் வரை அவரது உயிருக்கு உத்தரவாதம் இல்லை. மிகைப்படுத்தவில்லை... பயமுறுத்தவில்லை... தொடர்ந்து படியுங்கள்!

- தெளிவோம்

 'குடிகாரப் பயலுகளுக்கு இது போதாதா?’

ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியாகப்​போகிறது 'மதுபானக்கடை’ திரைப்படம். அதன் பிரிவியூ வுக்கு அழைத்து இருந்தார் படத்தின் இயக்குநர் கமலக்கண்ணன். விடியற்காலை தொடங்கி நள்ளிரவுக்குப் பின்னும் பாரில் கூடுதல் விலைக்கு மது விற்பது... போலி மது பாட்டில்கள் சப்ளை... 'இங்கே சிருநீர் களிக்கவும்’ வாசகத்துக்கு கீழே அமர்ந்து குடிப்பது... 'முதலாளி, காய்கறி ரொம்ப அழுகிப்போயிருச்சு’ என்று சொல்லும் சமையல்காரரிடம், 'போதும், இந்தக் குடிகாரப் பயலுகளுக்கு இது போதாதா?’ என்று எகத்தாளமாகக் கேட்கும் பார் உரிமையாளர் என்று பாரில் நடக்கும் அத்தனை அவலங்களையும் பதிவு செய்துள்​ளனர்.

பள்ளிச் சிறுவர்கள் மது குடிப்பது... துப்புரவுப் பணியாளர்கள் அதிகாலையிலேயே  மது குடிப்பது... தம்பதி சகிதம் வந்து மது குடிப்பது... மது குடித்தால் ரகளை செய்தே தீரும் கேரக்டர்... அரை பீருக்கே அலம்பும் கேரக்டர்... குடித்துவிட்டு அழுது, காலில் விழுந்து புலம்பும் கேரக்டர், போதை ஏறினால் மட்டுமே புரட்சி பேசும் கேரக்டர் என்று மது குடிப்பவர்​களின் அத்தனை குணாதிசயங்களையும் பதிவு செய்து இருக்கிறார் கமலக்கண்ணன்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு