ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

மயக்கம் என்ன?

மயக்கம் என்ன?

மயக்கம் என்ன?
##~##

ண்பரின் தந்தை அவர். குடி நோயாளி. எப்போதும் போதை வேண்டும் அவருக்கு. அதற்காக எப்போதும் டாஸ்மாக் உடன் 'டச்சிங்’கிலேயே இருப்பார். ஒரு நாள் இரவு மது குடித்துவிட்டு வந்து படுத்தவருக்குப் பின்னிரவில் போதை தெளிய... திரும்பவும் டாஸ்மாக் பாருக்குச் சென்று பிளாக்கில் விற்ற பெங்களூரு சரக்கை அடித்துவிட்டு வந்து திண்ணையில் மட்டை ஆனார். விடிந்து, வெயில் அடித்தும் அவர் எழுந்திரிக்கவில்லை. அவரது குடும்பத்தினரும் வழக்கம்போல் போதையில்கிடக்கிறார் என்று நினைத்து அவரை எழுப்பாமல் வேலைக்குச் சென்றுவிட்டனர். மதியத்துக்கும் மேல்தான் தெரிந்தது... அவர் இறந்துவிட்டார் என்று! 

இதைத்தான் கடந்த அத்தியாயத்தில் ஒருவர் மட்டை ஆகிவிட்டால், அவர் போதையில் இருந்து மீண்டு எழும் வரை அவரது உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று சொன்னேன். நாம் ஒவ்வொருவருக்கும் பின்னந்தலையில் 'ரெஸ்பிரேட்டரி சென்டர்’ (Respiratory centre) என்ற நரம்பு மண்டலம் உண்டு. நமது சுவாசத்தைக் கட்டுப்படுத்தும் சுவாசக் கட்டுப்பாட்டு மையம் இது.  இது சேதமானால், சுவாசம் நின்று, மயக்க நிலைக்குச் சென்று உயிர் பிரியும் அபாயம் ஏற்படும். சினிமா காட்சிகளில் உருட்டுக்கட்டையால் பொடனியில் போட்டவுடன் 'சொய்ங்’ என்று மயங்கிச் சரிவதைப் பார்த்து இருப்பீர்களே... கிட்டத்தட்ட அந்த லாஜிக்தான் இது. உருட்டுக்கட்டையால் அடித்தால் மட்டும் அல்ல... ஓவராக சரக்கு அடித்தாலும் அந்த மையம் பாதிக்கப்படும்.

மயக்கம் என்ன?

ஒருவர் மிதமிஞ்சிய போதையில் படுத்து இருக்கும்போது அவரது ரத்தத்தில் கலந்துள்ள ஆல்கஹாலின் அதீத அளவு காரணமாக சுவாசக் கட்டுப்பாட்டு மையம் சீரான சுவாசம் இல்லா மல் உச்ச நிலையிலும் மிக மந்த நிலையிலும் மாறி மாறி இயங்கும். ஒருகட்டத்தில் சுவாசக் கட்டுப் பாட்டு மையத்தின் இயக்கம் நின்று, அந்த நபர் வாயைத் திறந்து சுவாசத்துக்குத் துடியாய் துடித்து... சில நிமிடங்களில் இறந்துபோவார். இதைத்தான் நம் ஆட்கள், 'சரக்கு அடிச்சுட்டு வந்து படுத்தவர் எழுந்திரிக் கவே இல்லை... தூக்கத்திலேயே நிம்மதியா போய் சேர்ந்துட்டார்’ என்கிறார்கள். இதுவா நிம்மதியாக உயிர் பிரிவது?

அதனால்தான் ஒருவர் அதிகமாக மது குடித்து மட்டை ஆகிவிட்டால், அவரைத் தூங்கட்டும் என விட்டுச் சென்றுவிடக் கூடாது என்கிறார்கள் மருத்து வர்கள். எப்போது வேண்டுமானாலும் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறக்க நேரிடலாம் என்பதால் அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். அப்போதுதான் மூச்சுத் திணறல் ஏற்பட்டால் செயற்கைச் சுவாசம் பொருத்திக் காப்பாற்ற முடியும். 'இதெல்லாம் ஆவுற காரியமா சார்?’ என்று அதிர்ச்சி அடைபவர்களுக்கு ஒரே தீர்வு... குடிக்காமல் இருப்பதுதான். குடியை என்ன அவ்வளவு சாதாரண விஷயம் என்று நினைத்து விட்டீர்களா? ஒவ்வொரு சொட்டும் ரிஸ்க்!

சுவாசக் கட்டுப்பாட்டு மையம் பாதித்து உயிர் பிரிவது ஒருரகம் என்றால் இன்னொரு ரகமும் இருக்கிறது. ஒருவர் மட்டையாகி படுத்து இருக்கும்போது பெரும்பாலும் பக்கவாட்டில் படுக்க மாட்டார். வானம் பார்த்த பூமிபோல காலை விரித்து மல்லாக்கப்படுத்து இருப்பார். எல்லாவற்றுக்கும் ஒரு கொள்ளளவு இருப்பதுபோல இரைப்பைக்கும் ஒரு கொள்ளளவு இருக்கிறது. அதிக அளவு குடித்த மதுவை ஒருபோதும் இரைப்பை வைத்துக்கொள்ளாது. மட்டையான பின்பு மயக்கத்திலேயே வாந்தியாக வெளியேற்றும். மட்டையானவர் மயங்கிய நிலையிலேயே கொஞ்சம் கொஞ்சமாக வாந்தியை வெளியேற்றுவது இதனால்தான்.

மயக்கம் என்ன?
மயக்கம் என்ன?

மல்லாக்கப் படுத்த நிலையில் இப்​படி வாந்தி வெளி​யேறும்போது உணவுக் குழாயை ஒட்டி இருக்கும் மூச்சுக் குழாயினுள் திடமும் திரவமுமாக வாந்தி சென்றுவிட வாய்ப்பு இருக்கிறது. சாப்பிடும்போது தெரியாமல் தவறுதலாக மூச்சுக் குழாய்க்குள் ஒரு சோற்றுப் பருக்கை சென்றுவிட்டாலே நம்மால் தாங்கிக்கொள்ள முடியாது. புரை ஏறி, கண் கலங்கி, தலையைத் தட்டி தண்ணீர் குடித்து ஆசுவாசப்படுத்திக் கொள்ள வேண்டி இருக்கிறது. மட்டையான நிலையில் வாந்தி இப்படி மூச்சுக் குழாயினுள் சென்றுவிட்டால்... மூச்சுத் திணறி மேலோ கம் செல்ல வேண்டியதுதான். ஒருவேளை பக்க வாட்டில் ஒருக்களித்துப் படுத்து இருந்தால் மூச்சுக் குழாயினுள் வாந்தி செல்லாமல் இருக்க வாய்ப்பு இருக்கிறது.

மயக்கம் என்ன?

இன்னொரு பிரச்னையும் உண்டு.  குறட்டை விடும்போது லேசாகப் புரை ஏறி, ஒரு சிறு சோற்றுப் பருக்கையோ அல்லது மிகச் சிறிய உணவுத் துகளோ மூச்சுக்குழாய் வழியாக நுரையீரலுக்குச் செல்ல வாய்ப்பு உண்டு. நுரையீரல் என்பது வெளிப்பொருட்கள் தடை செய்யப்பட்ட பகுதி. அங்கே காற்றுக்கு மட்டுமே அனுமதி. அதை பலர் புகைவிட்டு புண்படுத்திக்கொண்டு இருப்பது தனி சோகம். அதைவிடுங்கள், நுரையீரலுக்குள் இப்படி ஏதாவது ஒரு சிறு பொருள் சென்று தங்கிவிட்டாலும் நான்கைந்து நாட்களில் அங்கு நோய்க் கிருமிகள் உற்பத்தியாகி இருமல், மூச்சுத்திணறலுடன் கூடிய கடுமையான நிமோனியா காய்ச்சல் உருவாகும். இதை ஆஸ்பிரேஷன் நிமோனியா (Aspiration pneumonia) என்கிறார்கள் மருத்துவர்கள்!

தெளிவோம்

மதுவிலக்கு தொடர்பாக தமிழக அரசு யோசித்துவருவது குறித்து வெளியான 'ஜூனியர் விகடன்’ செய்திக்கு டாஸ்மாக் ஊழியர்களிடம் பெரும் வரவேற்பு!

இதுகுறித்து டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் (ஏ.ஐ.டி.யூ.சி.) பொதுச் செயலாளர் தனசேகரன் நம்மைத் தொடர்புகொண்டு பேசினார். ''அரசின் இந்த யோசனையை நாங்கள் மனமார வரவேற்கிறோம். நாங்கள் யாரும் மதுக் கடைக்கு விரும்பி வேலைக்கு வரவில்லை. டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் படித்த பட்டதாரிகள். என்றாவது ஒருநாள் அரசு தங்களை நிரந்தர ஊழியர்கள் ஆக்கும் என்ற எதிர்பார்ப்புடன் வேலைக்கு வந்தவர்கள். அதனால், அரசு மதுக் கடைகளை மூடினால், டாஸ்மாக் ஊழியர்களை அவர்களின் பத்து ஆண்டு கால சர்வீஸை ரத்துசெய்யாமல் அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் பணி இடங்களில் நியமனம் செய்ய வேண்டும் என்று இந்த அரசைக் கேட்டுக்கொள்கிறோம்...'' என்றார்.

அரசு பரிசீலிக்கட்டும்! 

கேரளத்திலும்கூட அரசே மதுக் கடைகளை நடத்துகிறது. ஆனால், தமிழகத்தைப் போல் அல்ல. அங்கு அரசு நடத்தும் மதுக் கடைகளின் எண்ணிக்கை வெறும் 383 மட்டுமே. ஒவ்வொரு கடையிலும் கடைப் பொறுப்பாளர் ஒருவர், உதவிப் பொறுப்பாளர் ஒருவர், பில்லிங் மிஷின் ஆபரேட்டர்/கேஷியர் ஒருவர், நான்கு உதவியாளர்கள் என ஏழு பேர் பணிபுரிகிறார்கள். இவர்கள் அரசின் நிரந்தர ஊழியர்கள். இங்கு பார் கிடையாது. அமைதியாக வந்து வீட்டுக்கு வாங்கிச் செல்கிறார்கள். கொஞ்சம் கூட்டம் இருந்தாலும் ஒழுக்கமாக வரிசையில் நின்று வாங்கிச் செல்கிறார்கள். காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே கடை. வாங்கும் ஒவ்வொரு பாட்டிலுக்கும் தெளிவான பில் தருகிறார்கள். கூடுதல் விலை வசூலிப்பது கிடையாது. தமிழக டாஸ்மாக் கடைகளைப் போல் சச்சரவையோ, தள்ளுமுள்ளுவையோ பார்க்க முடியாது. தவிர, கேரள அரசாங்கம் ஒவ்வொரு 1-ம் தேதியும் மதுக் கடைகளுக்கு விடுமுறை அளித்துவிடுகிறது. சம்பளப் பணத்தை மதுக் கடையில் இழக்காமல் நேராக வீட்டுக்குச் சென்று சேர்க்க வேண்டும் என்ற நல்ல நோக்கம் கேரள அரசுக்கு. தமிழக அரசுக்கு?