Published:Updated:

`சிகிச்சையில் 2 பேர்; தனிமைப்படுத்தப்பட்ட 2,268 பேர்!’ -நெல்லையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை

அரசு மருத்துவமனை
News
அரசு மருத்துவமனை

வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் குறித்த தகவல் திரட்டப்பட்டு அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வார்டில் சிகிச்சையில் இருப்பவர்களும் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்குதலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. ரயில் மற்றும் பேருந்து சேவைகள் ரத்து செய்யப்பட்டதுடன் மக்கள் அனைவரும் வீடுகளிலேயே தங்கியிருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

காவல்துறை கண்காணிப்பு
காவல்துறை கண்காணிப்பு

அதனால் நெல்லை மாவட்ட எல்லை முழுவதும் சீல் வைக்கப்பட்டு போலீஸார் கண்காணித்து வருகிறார்கள். அத்தியாவசியப் பொருள்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள் மற்றும் அவசியத் தேவைக்காகச் செல்பவர்களைத் தவிர வெளியாட்கள் யாரையும் போலீஸார் அனுமதிக்கவில்லை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நெல்லை மாநகரத்தின் சாலைகளும் மூடப்பட்டுள்ளன. அவசியத் தேவைக்காக வருவோர் தவிர மற்றவர்களை போலீஸார் சாலையில் அனுமதிக்கவில்லை. அதையும் மீறி வெளியே வருவோரை போலீஸார் எச்சரித்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

நெல்லை அரசு மருத்துவமனையில் துபாயில் இருந்து வந்த ராதாபுரத்தைச் சேர்ந்த ஒருவர் மற்றும் 72 வயதுடைய முதியவர் என இருவர் மட்டுமே கொரோனா சிகிச்சைக்கான சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த வார்டில் அனுமதிக்கப்பட்ட மற்ற நோயாளிகள் அனைவரும் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சொந்த ஊருக்குத் திரும்பியவர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்துமாறு வருவாய்த் துறையினருக்கு நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷ் உத்தரவிட்டிருந்தார். அதன்படி மாவட்டம் முழுவதும் 2,268 பேர் வெளியிடங்களில் இருந்து வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

வெளியிடங்களில் இருந்து வந்தவர்கள் அனைவரும் தனிமையில் இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது. அவர்கள் வெளியில் வரக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதனால் மாவட்டம் முழுவதும் 2,268 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.

நெல்லை மாநகரம் மற்றும் மாவட்டப் பகுதிகளில் காவல்துறையினர் சாலைகளில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். சில இடங்களில், சாலையோரங்களில் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்கு போலீஸார் நேரடியாக உணவு வழங்குகிறார்கள். சில இடங்களில், தொண்டு அமைப்பினருடன் இணைந்து உணவுப் பொருள்களை வழங்குகிறார்கள்.

மாஸ்க் வழங்கும் இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீது
மாஸ்க் வழங்கும் இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீது

பணகுடி காவல்துறை சார்பாக காவல்கிணறு, வடக்கன்குளம், பணகுடி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளில் வசிக்கும் மக்களுக்குக் காவல்துறை இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீது தலைமையிலான போலீஸார் விழிப்புணர்வு நோட்டீஸ்களை விநியோகித்தனர். அத்துடன், பொதுமக்களுக்குத் தேவையான கிருமி நாசினி மற்றும் முகக் கவசம், கையுறை போன்றவற்றையும் வழங்கினார்கள்.

கொரோனா பதிப்பிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில் நெல்லை எம்.பி-யான ஞானதிரவியம், தனது எம்.பி நிதியில் இருந்து ரூ.86,02,480 ஒதுக்கீடு செய்துள்ளார். அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான உபகரணங்கள் உள்ளிட்டவை வாங்குவதற்காக இந்த நிதியை ஒதுக்குவதாக அறிவித்துள்ளார்.

நிதி ஒதுக்கீடு
நிதி ஒதுக்கீடு

பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினரான டி.பி.எம்.மைதீன்கான் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அரசு மருத்துவமனைக்கு ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்திருக்கிறார். காத்திருப்போர் அறை கட்டுவது, நோயாளிகளுக்கான வசதிகள் மற்றும் கொரோனா சிகிச்சைக்கான உபகரணங்கள் வாங்குவதற்கு இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.