Published:Updated:

மயக்கம் என்ன?

மயக்கம் என்ன?

மயக்கம் என்ன?

மயக்கம் என்ன?

Published:Updated:
மயக்கம் என்ன?
##~##

'எதையும் அறிந்தவன் அல்ல அடிமை. எஜமானனின் குரலைத் தவிர வேறு குரல் அவனுக்கு இல்லை. எஜமான் அழைக் கும்போது அந்தக் குரல் ஓசையில் இருந்து அடிமை ஒளிந்து கொள்ளவே முடியாது. அவன் உன்னை வாங்கி விட்டான். அதன் விலை - எஞ்சி இருக்கும் உன் வாழ்க்கை!’ 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- ஹெச்.ஏ.எல். க்ரெய்க் 'பிலால் - ஒரு கறுப்பின அடிமையின் விடுதலை வரலாறு’ புத்தகத்தில் எழுதி இருக்கும் இந்த வாசகங்கள், மது அடிமைகளுக்கும் அப்படியே பொருந்தும்.

மண்ஆசை, பெண்ஆசை, பொன்ஆசை இவை தான் மனிதனை அடிமைப்படுத்தி ஆட்டுவித்து அழிக்கும் என்பார்கள். ஆனால், இந்த மூன்று ஆசைகளை விடவும் மிகக்கொடியது மதுவின் மீதான ஆசை என்கிறார்கள் மருத்துவர்கள். மிகப்பெரிய கோடீஸ்வரனாக இருப்பான். ஆனால், மதுவுக்கு அடிமையாகி, அதில் இருந்து மீளமுடியாமல் இறந்து போவான். வீட்டில் சொக்கவைக்கும் சொரூப சுந்தரியாக மனைவி காத்துக்கிடப்பாள். ஆனால், இவனோ டாஸ்மாக் பாரின் கழிவறையில் வாந்தி எடுத்து மட்டையாகிக் கிடப்பான்.

மயக்கம் என்ன?

இனிய இசை, அற்புதமான - அறுசுவையான உணவு, பரவசப்படுத்தும் பாலுறவு... இவை எல்லாவற்றையும் தாண்டி மனிதன் மதுவுக்கு அடிமை ஆவது ஏன்? ஆஸ்தி இழந்து, அந்தஸ்து இழந்து, அவமானங்களைச் சந்தித்து, அப்போதும் மீள முடியாமல் கடைசியில் மதுவுக்காக தனது உயிரையும் கொடுக்கத் துணிவது ஏன்? 'குடி குடியைக் கெடுக்கும். மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு’ என்று பாரிலும் பாட்டிலிலும் படித்த பிறகும்கூட அசராமல் மதுவைக் குடிப்பது ஏன்? இன்றளவும் மருத்துவ உலகம் விவாதித்துவரும், கேள்விகளில் ஒன்று இது. இந்தக் கேள்விக்கான தேடலில்  கிடைத்த விடைகளில் நிரூபிக்கப்பட்ட ஒன்றுதான் 'எண்டார்பின்ஸ் தியரி’ (Endorphins theory).

மது அடிமைத்தனத்தில் இரு வகையினர் உண்டு. ஒன்று... 'சைக்கலாஜிக்கல் டிபென்டென்ஸ்’ (Psychological dependence).அலுவலக பார்ட்டி என்றோலோ, வெளியூர் போகும்போதே ஆசைக்கு மதுவைத் தொட்டுக் கொள்வார்கள் இவர்கள். மறுநாள் வழக்கம்போல் வேலையில் செட்டில் ஆகிவிடுவார்கள். அன்றைய தினம் மீண்டும் மதுவைப் பற்றி யோசனை இவர்களுக்கு வராது. மது குடிக்காத போதிலும் மனரீதியான, உடல்ரீதியான பாதிப்பு எதுவும் இவர்களுக்கு இருக்காது. ஆனாலும், இவர்களும் மது அடிமைகளே என்கிறது மருத்துவம்!

இன்னொன்று, 'பிசிக்கல் டிபென்டென்ஸ்’(Physical dependence). இவர்கள் அடிமைகள் மட்டும் அல்ல. மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருப்பவர்களும்கூட.  மனமும் உடலும் ஒருசேர மிகக்கடுமையாக அடிமை ஆக்கப்பட்டு இருக்கும். நீண்ட காலம் தொடர்ந்து மது குடித்துவிட்டு, ஒரு நாள் மதுவைக் குடிக்காமல் நிறுத்தினாலும் இவர்களால் இயல்பாகவே இருக்க முடியாது. அந்த சமயத்தில் இவர்களை நெருங்குவதே சிரமம். நாய் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும்போது அந்தத் தட்டைப் பிடுங்கினால், அது காட்டும் ஆக்ரோஷத்தைப் பார்த்து இருக்கிறீர்களா? அப்படி எரிந்து விழுவார்கள். அத்தனை நாட்களாக அவர் அருந்திய மதுவின் அளவைப் பொறுத்து, ஒரு கட்டிங்கோ, குவார்ட்டரோ போட்டால்தான் இவர்கள் சகஜ நிலைக்குத் திரும்பி, 'ம்ம்... அப்புறம் என்ன... சொல்லுப்பா’ என்று லேசாக இயல்பு நிலைக்குத் திரும்புவார்கள்.

ஆக்ஸிஜனைப் போல் ஆல்கஹாலும் இவர்களுக்கு அத்தியாவசியம் ஆகிவிடும். தினமும் காலை டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பே வாசலில் காத்திருக்கும் குடிநோயாளிகள் இவர்களே. உண்மையில் பாவம் இவர்கள்... இவர்களிடம் கேட்டால், 'குடிச்சாத்தானே நடுக்கம் நிக்கும். அப்பத்தானே வேலையைப் பார்க்க முடியும்?’ என்பார்கள். உண்மைதான், இவர்களால் குடிக்காமல் வேலைக்குப் போக முடியாது. சம்பாதிக்கவும் முடியாது. எப்படி இவர்கள் மதுவுக்கு அடிமை ஆனார்கள்? அந்த அடிமைத்தனத்தின் ஆணி வேர் எது? அதைச் சொல்வதுதான் 'எண்டார்பின்ஸ் தியரி’.

நாம் மகிழ்ச்சியில் திளைக்கும்போது மூளையில் சுரக்கும் ஒரு சுரப்பி 'எண்டார்பின்’. அதாவது, 'நல்லா இருந்தது’ என்பதைத் தாண்டி, 'சான்ஸே இல்லை’ என்று பரவசப்படும்போது அது சுரக்கும். ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தருணத்தில்... நன்றிப் பெருக்கில் நெக்குருகி வார்த்தைகள் வராமல் நண்பனை அணைக்கையில்... மனதுக்கு மிகவும் பிடித்த இணையுடன் உச்சக்கட்ட செக்ஸில் திளைக்கையில்... இப்படி அற்புதமான தருணங்களில் அமுதசுரபியாக சுரக்கும் 'எண்டார்பின்’. இது மாதிரியான தருணங்களில் உடல் காற்றில் பறப்பது போல் உணர்ந்து, அந்தச் சுகமான செய்தியை மூளைக்கு அனுப்ப, அதை மூளை தனது அழிக்க முடியாத ஹார்டு டிஸ்க்கில் நிரந்தரமாகப் பதிந்து வைக்கும். மேற்கண்ட பரவச வகையறாக்களில் ஒன்றுதான் மது அருந்துவதும். மது அருந்துபவர்களில் சுமார் 40 சதவிகிதம் பேருக்கு மது அருந்தும்போது மூளையில் இது பதிவுசெய்யப்பட்டு விடும். சுமார் 40 சதவிகிதத்தினருக்கு மட்டும் ஏன் என்று கேள்வி எழலாம். அது அவர்களின் மரபு வழிக் காரணமாகவும் இருக்கலாம். உடல் மற்றும் மனோநிலை காரணமாகவும் இருக்கலாம்!  

உடலும் மூளையும் அந்த சுகபோக உணர்வுக்குப் பழகிவிட்ட பட்சத்தில் குறிப்பிட்ட நேரம் வந்தால், அந்த சுகபோகத்தைத் தேடி மூளை அலையும். 'மணி ஏழாச்சு... சரக்கு எங்கடா... ம்ம்ம் கிளம்பு, கிளம்பு’ என்று மூளை, உடலுக்குக் கட்டளையிட்டு ஏழரையைக் கூட்டும். காலையில் எழுந்தது முதல் மாலை 5 மணி வரை குடிக்கக்கூடாது என்று வைராக்கியமாக இருப்பவர்களும்கூட அந்தக் குறிப்பிட்ட நேரம் வந்ததும் வைராக்கியம் இழந்து... தன்னைத்தானே நொந்து... ஏன்? ஒரு சிலர் குடிக்கும்போது குற்ற உணர்வுடன் மண்ணை வாரித் தூற்றாதக் குறையாக மதுவைத் திட்டிக்கொண்டே கண்ணீருடன் குடிப்பதையும் பார்த்து இருப்பீர்கள்.  உடலுக்கு எண்டார்பின் தேவையாக இருக்கிறது. மூளையும் அதற்கு அடிமையாகி விட்டது.

மூளை இப்படிக் கட்டளையிடும்போது குடிநோயாளிக்கு நல்லது கெட்டது தெரியாது. குடித்துவிட்டுப் போனால் வீட்டில் செருப்பு அடி விழுமே என்ற கவலையும் எழாது. 'எது நடந்தாலும் அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்; முதலில் நாலு பெக்கைப் போடு. ரிலாக்ஸ் ஆகு...’ என்றுதான் மூளை கட்டளையிடும். ஒரு கட்டத்தில் 'டென்ஷனா இருக்கா? குடி. சந்தோஷமா இருக்கா? குடி. உடம்பு வலிக்குதா? குடி. மதியம் என்ன வீட்டில் கறிச்சோறா? குடி. பொண்டாட்டியுடன் இருக்கப்போகிறாயா? குடி’ என்று வாழ்க்கையின் ஒவ்வோர் அன்றாட நிகழ்விலும் மதுவைத் தவிர்க்க முடியாத ஒன்றாகச் செய்துவிடும் மூளை.

க்ரெய்க் எழுதியதுபோல எஜமான் அழைக்கும் போது அந்தக்குரல் ஓசையில் இருந்து அடிமை ஒளிந்து கொள்ளவே முடியாது. அவன் உன்னை வாங்கி விட்டான்; அப்படித்தான் மூளை மது நோயாளியை வாங்கி, அடிமை ஆக்கிவிட்டது.

குரங்குப் புத்தி என்பார்களே... தப்பு என்று தெரிந்தாலும் சிலர் அதையே திரும்பத் திரும்பச் செய்வார்கள். எண்டார்பின் உற்பத்திக்காக மதுவைத் திரும்ப திரும்ப குடிக்கச் செய்கிறது மூளை. அதனால்தான், 'எண்டார்பின்ஸ் தியரி’ என்று சொன்னேன். இப்படி 'எண்டார்பின்’னுக்கே மலைத்துப்போனால் எப்படி? இன்னும் 'டோப்பமின்’ எல்லாம் இருக்கிறதே... என்ன செய்ய துஷ்டனைக் கண்டால் தூர விலகாமல் தொட்டுவிட்டால்... இப்படித்தான் எல்லாக் கஷ்டங்களையும் எதிர்கொள்ள நேரிடும்!

 - தெளிவோம் 

செங்கோட்டையைச் சேர்ந்த விவேகானந்தன், கடந்த 10 ஆண்டுகளாக குடிக்கு எதிராகப் பிரசாரம் செய்கிறார். 70 வயதையும் பாராமல் தென்னிந்திய காந்திய கிராம நிர்மாண சேவா தளம் என்ற அமைப்பை நிறுவி, கிராமங்கள்தோறும் வேன் பிரசாரம், தெருமுனைப் பிரசாரம் செய்கிறார். இளைஞர்கள் போதையின் பாதைக்குத் திரும்புவதைத் தடுக்கும் வகையில் கல்லூரிகளுக்குச் சென்றும் அவர்களிடம் மதுவின் தீமைகள் குறித்து விளக்கிச் சொல்கிறார். இதுவரை இரண்டு லட்சம் இளைஞர்கள் இவரது இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்து இருப்பதுடன், 'மதுவைத் தொடுவதே இல்லை’ என்ற உறுதிமொழியைக் கொடுத்து இருக்கிறார்கள்!

மயக்கம் என்ன?

நெல்லையில் ஜூலை 22-ம் தேதி பூரண மதுவிலக்கை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். இதில், குடிப்பழக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள், மாணவர்கள் எனப் பலரும் திரண்டு வந்திருந்தனர். மதுக் கடைகளின் முன் நின்றுகொண்டு அங்கு குடிக்க வருபவர்களிடம், 'உங்க குடும்பத்தை நினைச்சு இன்னிக்கு ஒரு நாளைக்காவது குடிக்காம வீட்டுக்கு போங்க...’ என மனதை மாற்றித் திருப்பி அனுப்புகிறார். அதை ஏற்றுத் திரும்பி செல்பவர்களுக்கு இளநீர் கொடுக்கிறார். காந்தி குல்லாவை வெறும் அடையாளமாக அல்லாமல் மனப்பூர்வமாக அணிந்து, அதற்கு ஏற்ப வாழ்வதோடு பிறருக்கும் நல்வழி காட்டும் விவேகானந்தன் பாராட்டுக்கு உரியவர்!

மயக்கம் என்ன?

 மிக, மிகக் கொடுமையான 'லிவர் சிரியோஸிஸ்’ மற்றும் கல்லீரல் புற்றுநோய்குறித்து ஏற்கெனவே இந்தத் தொடரில் எழுதி இருந்தேன். அந்த நோயின் பாதிப்பால் கவலைக்கிடமான நிலையில் சென்னையின் தனியார் மருத்துவமனையில் சேர்க் கப்பட்டுள்ளார் மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த நோயால் கடுமையாக அவதிப்பட்டு வந்தார் அவர். அமெரிக்கா மற்றும் மும்பை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் அவரைக் குணப்படுத்த முடியவில்லை. இந்தநிலையில், கடந்த 5-ம் தேதி கல்லீரல் பாதிப்பினால் சிறுநீரகங்களும் அவருக்கு செயல் இழந்ததால், சென்னைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளார் தேஷ்முக். அவருக்கு கல்லீரல் மாற்று அறுவைச்சிகிச்சை செய்யப் போகின்றனர். உலகப்புகழ் பெற்ற மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தாலும்கூட, சிறுநீரகங்கள் செயல் இழந்துவிட்ட நிலையில் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்வது மிகவும் சிக்கலான ஒன்று; மிகப் பெரிய சவாலும்கூட என்கிறார்கள் மருத்துவர்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism