பிரீமியம் ஸ்டோரி
மயக்கம் என்ன?
##~##

மது மூளையின் நரம்பு செல்லுக்கு நியூரான் என்று பெயர். சுமார் 100 பில்லியன் நியூரான்கள் நமது மூளையில் உள்ளன. ஒவ்வொரு நியூரானும் மற்றொரு நியூரானுடன் தொடர்பில் இருந்துகொண்டே இருக்கும். இவற்றுக்கு இடையே நடக்கும் தகவல் பரிமாற்றம்தான் மனிதனை இயக்குகிறது. ஒவ்வொரு வகையான உணர்வுக்கும் தகவல் பரிமாற்றம் செய்ய, ஒவ்வொரு வகையான வேதிப் பொருள் மூளையில் சுரக்கிறது. கடந்த அத்தியாயத்தில் மது குடிப்பதால் சுரக்கும் வேதிப் பொருளான எண்டார்பினைப் பற்றிப் படித்தீர்கள். அதைவிட இருமடங்கு பரவசம் ஊட்டி, ஒரு கட்டத்தில் ஒருவர் குடிக்கும் மதுவின் அளவை இரு மடங்காக உயர்த்தச்செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது 'டோப்பமின்’(Dopamine). 'முன்ன எல்லாம் குவார்ட்டர் குடிச்சாலே குப்புன்னு ஏறும் மாப்ளே... இப்ப ஆஃப் அடிச்சாத்தான் லேசாப் போதை ஏறுது...’ என்று மப்பு பார்ட்டிகள் சரக்கைச் சந்தேகப்படுவது இதனால்தான். 

நமது முன்புற மூளையின் கீழ்ப் பகுதியில் வலதுபுறம், இடதுபுறம் என இருபுறங்களிலும் தலா ஒரு நரம்புத் தொகுப்பு உண்டு. நியூரான்கள் இங்கு மிகவும் சிக்கலான, கன்னாபின்னா கனெக்ஷனில் இருக்கும். இந்த நரம்புத் தொகுப்புக்குப் பெயர், 'நியூக்கிளியஸ் அக்கும்பென்ஸ்’ (Nucleus accumbens). இந்த இரு நரம்புத் தொகுப்புகள் அடங்கிய பகுதியை 'ரிவார்டு சென்டர்’ (Reward centre) அல்லது 'பிளெஷர் சென்டர்’ (Pleasure centre) என்று அழைக்கிறார்கள் மருத்துவர்கள். 'சபாஷ்... சரியான குடிகாரன்டா நீ... சரக்கு சூப்பர்... செம மிக்ஸிங்’ என்று தட்டிக்கொடுத்து மீண்டும் மீண்டும் குடிக்கத் தூண்டுவதே இதன் பெயர்க் காரணம்!

மயக்கம் என்ன?

ஒருவர் மது குடிக்கத் தொடங்கியவுடன் சுமார் 10 நிமிடங்களில் இந்த நரம்புத் தொகுப்புகளில் இருக்கும் நியூரான்களில் 'டோப்பமின்’ மிக அதிக அளவில் சுரக்கும். அப்போது அதிகபட்சமான மின் வேதியியல் செயல்பாடு ஏற்பட்டு, ஒவ்வொரு நியூரானும் மின் தூண்டுதலுக்கு உள்ளாகித் துள்ளிக் குதிக்கும். நியூரானுக்கு ஆக்டோபஸ் வால் போன்ற ஒரு பகுதி உண்டு. நியூரான் இப்படித் துள்ளிக் குதிக்கும்போது ஒரு நியூரானின் வால் இன்னொரு நியூரானின் வாலைத் தொட்டு முத்தமிட்டுக்கொள்ளும். 'குடிமகன்’கள் மது அருந்தத் தொடங்கும்போது 'சியர்ஸ்’ சொல்லி டம்ளர்களை டச்சிங் டச்சிங் செய்து கொள்வார்களே... கிட்டத்தட்ட அதைப் போலத்தான் இதுவும்!

வெளியே ஒருவர் குடிக்கும் மதுவின் அளவு அதிகரிக்க அதிகரிக்க மூளைக்கு உள்ளே நியூரான்களின் ஆட்டமும் அதிகரித்துக் கொண்டேபோகும். சுமார் ஒரு குவார்ட்டரைக் கடந்த நிலையில் போதை உச்சத்துக்கு ஏறி ஆட்டம் போடுவது, பாட்டு பாடுவது, பக்கத்தில் இருப்பவரைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டு, கன்னத்தைக் கடித்துவைப்பது என சந்தோஷ சேட்டைகள் ஆரம்பிப்பது இங்குதான். மூளையின் உள்ள நியூரான்கள் திரும்பத் திரும்ப இந்த மின் தூண்டுதல் வேண்டும் என்று விரும்பும்போதுதான் ஒருவர் மீண்டும் மீண்டும் மது அருந்தி குடி நோயாளி ஆகிறார்.

இப்படி நியூரான்களுக்கு மின் தூண்டுதல் ஏற்பட்டு துள்ளிக் குதிக்கும்போது ஒட்டுமொத்த மூளையும் வெளியே இருந்து ஏதோ ஒன்று நம்மைத் தாக்கிக்கொண்டு இருக்கிறதே என்று சுதாரிக்கிறது. அப்போது, மூளை தன்னைத் தற்காத்துக்கொள்ளும்விதமாக நரம்புகளை இறுக்கிப் பிடித்துக்கொள்ளும். ஒவ்வொரு முறையும் இப்படி இறுக்கிப் பிடித்துக்கொள்ளும்போது மூளையில் ஒரு நிரந்தர மாற்றம் ஏற்பட்டுவிடும். ஒரு குடி நோயாளி மது அருந்தும் ஒவ்வொரு முறையும் மூளை தன்னைத் தற்காத்துக்கொள்ள நரம்புகளை இறுக்கிப் பிடித்து... இறுக்கிப் பிடித்து நிரந்தர மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறது. போதை பழகிப் பழகி, ஒரு கட்டத்தில் மூளையின் நரம்புகள் மரத்துப்போக, போன வருடம் குவார்ட்டர் குடித்தவருக்கு இந்த வருடம் ஆஃப் அடித்தாலும் 'சப்’பென்றுதான் இருக்கும்!

ருவர் மது அருந்தக் காரணமாக அடிப்படையில் மூன்று வகைக் கோட்பாடுகளை மருத்துவர்கள் வகுத்துள்ளார்கள். மதுவானது ஏதோ ஒரு முக்கியத் தேவையைப் பூர்த்திசெய்ய உதவுகிறது என்று குடிப்பவர் ஆணித்தரமாக நம்புகிறார். ஆனால், அது எந்தத் தேவையையும் பூர்த்தி செய்வது இல்லை என்பதுதான் உண்மை. இது 'சைக்காலாஜிக்கல் தியரி’(Psychological theory).

இன்னும் சிலர் டென்ஷனை - மன அழுத் தத்தைக் குறைக்கக் குடிக்கிறேன் என்பார்கள். மது குடிப்பதால் சமூகத் தயக்கங்களைக் குறைக்கலாம். உதாரணத்துக்கு, பத்து பேர் இருக்கும் கூட்டத்துக்குச் சென்று துணிச்சலாகப் பேசலாம். சிலர் சாதாரண நிலையில் இருக்கும்போது செய்யத் துணியாத காரியங்களை மது குடித்த பின்பு செய்யத் துணிவார்கள். இப்படிச் சில தயக்கங்களைக் குறைக்க மது அருந்துவது உதவுமே தவிர, எந்தக் காலத்திலும் மன அழுத்தத்தைக் குறைக்க மது உதவியதே இல்லை. மாறாக, மன அழுத்தம் அதிகரித்து, ஒரு கட்டத்தில் இயல்பான தூக்கம் வருவது நின்று போய்விடும். நிறையப் பேர் இரவு தூங்குவதற்காக மது அருந்துகிறேன் என்று சொல்வது இதனால்தான். டென்ஷனைக் குறைக்க... மன அழுத்தத்தைக் குறைக்க என்று காரணம் சொல்லிக் குடிப்பதை 'பிஹேவியரல் தியரி’ (Behavioural theory)  என்கிறார்கள்.

மேற்கண்ட இரு தியரிகளின் அடிப்படையில் மது அருந்துபவர்களின் எண்ணிக்கையைவிட 'ஜெனடிக் தியரி’ (Genetic theory) அடிப்படையில் மது அருந்துபவர்களின் எண்ணிக்கைதான் மிக அதிகம். இன்று மது அருந்துபவர்களில் சுமார் 60 சதவிகிதம் பேர் இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில்தான் மது அருந்துவதாக மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். சொல்லப்போனால், ஒருவர் மது அருந்துவது அவரது வாழ்க்கையை மட்டும் அல்லாமல், அடுத்தடுத்த தனது தலைமுறையையும் எப்படிச் சீரழிக்கிறது என்பதைப் பட்டவர்த்தனமாக அம்பலப்படுத்துகிறது இந்தக் கோட்பாடு.

ஒருவரின் தாத்தாவோ, பாட்டியோ, தந்தையோ, தாயோ அல்லது ரத்த உறவுகளில் யாரேனும் ஒருவரோ குடிநோயாளியாக இருந்தால், அவர்களின் வாரிசுகள் குடிநோயாளிகளாக உருவாக நிறைய வாய்ப்புகள் உண்டு. ஒரு குடிநோயாளிக்குப் பிறந்த குழந்தையை அங்கு இருந்து பிரித்து, நல்ல சூழலில் வளர்த்தாலும் மரபணு ரீதியாக அந்தக் குழந்தை எதிர்காலத்தில் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் மிக எளிதாக மதுவுக்கு அடிமையாகிவிடும் வாய்ப்பு அதிகம். ஏனெனில் சர்க்கரை, ரத்தக் கொதிப்பு, சில தோல் நோய்களைப் போல குடி நோயும் மரபியல்ரீதியாக ஏற்படலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். இதனால்தான் மது மீட்புச் சிகிச்சை மையங்களில் குடிநோயாளிகளிடம் மருத்துவர்கள் தோண்டி, தோண்டி இரண்டு தலைமுறைக் கதைகளை எல்லாம் கேட்கிறார்கள். ஆனாலும் இதில் விதிவிலக்கும் உண்டு. பெற்றோர்கள் குடிநோயாளியாக இருந்தும் கடைசி வரை குடிக்காத நல்ல வாரிசுகளும் இருக்கிறார்கள்!

சரி, இத்தனை அத்தியாயங்களில் குடி நோயாளி உருவாவது எப்படி? ஒருவர் ஏன் குடிக்கிறார்? ஒருமுறை குடித்தவர் திரும்பத் திரும்ப குடிப்பது ஏன்? குடிப்பதால் ஒருவருக்கு ஏற்படும் உடல்ரீதியான, மனரீதியான, சமூகரீதியான பாதிப்புகள் என்ன  என்பதை எல்லாம் பார்த்தோம். இனி தீர்வுகளைப் பார்ப்போம்.

குடிப் பழக்கத்தில் இருந்து விடுபடுவது எப்படி? உடல்ரீதியாக மிக அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் அந்தப் பாதிப்புகளில் இருந்து மீள்வது எப்படி? சிகிச்சை முறைகள் என்னென்ன? எல்லாவற்றையும்விட குடி நோயாளிகளை அதில் இருந்து மீட்கும் மிகப் பெரிய வரமாக இருக்கும் 'ஏ.ஏ.’ என்றால் என்ன? எல்லாவற்றையும் அடுத்தடுத்த அத்தியாயங்களில் பார்ப்போம்.

இந்த இடத்தில் ஒரு விஷயத்தை மட்டும் சொல்கிறேன்... பெரும்பாலான குடிநோயாளிகள் நினைப்பதுபோல குடிப் பழக்கத்தில் இருந்து விடுபடுவது கடினமான காரியம் கிடையாது. ஒருவர் நினைத்த நேரத்தில் டாஸ்மாக் கடைக்கு சென்று குடிப்பதைவிட... நினைத்த அந்த ஒரு நிமிடத்தில் குடிப் பழக்கத்தில் இருந்து விடுபட முடியும். எப்படி?

 தெளிவோம்

இப்படியும் நடக்கிறதா கொள்ளை?

அடுத்த மாதம் இறுதிக்குள் தனது ஊழியர்கள் சுமார் 5,000 பேரைப் பணி நீக்கம் செய்யத் திட்டமிட்டு இருக்கிறது டாஸ்மாக் நிர்வாகம் என்று ஒரு தகவல் சொல்லப்படுகிறது. கூடுதல் விலை வைத்து விற்பனை செய்வது, போலிச் சரக்கு விற்பனை செய்வது போன்ற காரணங்களால் நிர்வாகத்துக்கும் அரசுக்கும் ஏற்படும் அவப் பெயரைப் போக்க இந்த அதிரடி நடவடிக்கையை எடுக்க இருப்பதாகத் தகவல். கடந்த 2011-ம் ஆண்டும் நவம்பர் மாதம் டாஸ்மாக் நிர்வாகம் மதுக் கடைகளுக்கு ஒரு சர்க்குலர் அனுப்பியது. அதன்படி கூடுதல் விலை வைத்து விற்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் 1,000 ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. இப்படி ஐந்து ரூபாய் வரைக்கும் 5,000 அபராதம் விதிக்கப்பட்டது. அதற்கு மேல் கூடுதல் விலை வைத்து விற்பனை செய்தால், வேலை நீக்கம் செய்யப்பட்டார்கள்.

இந்த நிலையில், தற்போது ஒரு ரூபாய் கூடுதல் விலைவைத்து விற்றாலும், உடனடியாகத் தற்காலிகப் பணி நீக்கம் செய்து, விசாரணை நடத்தி நிரந்தரப் பணி நீக்கம் செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளார்கள். அதற்கு முன்னோட்டமாகவே கடந்த ஜூலை மாதம் 12-ம் தேதி முதல் இதுவரை மாநிலம் முழுவதும் சுமார் 1,500 டாஸ்மாக் பணியாளர்கள் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். ஆனால், இதைப் பயன்படுத்திக்கொண்டு ஆளும் கட்சி ஆட்கள் மற்றும் அதிகாரிகள் சிலர் புதிய ஆட்களை நியமனம் செய்ய தலைக்கு ஐந்து லட்சம் ருபாய் பணம் பேரம் பேசுவதாகக் குற்றம்சாட்டுகிறார்கள் டாஸ்மாக் ஊழியர்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு