Published:Updated:

மயக்கம் என்ன?

மயக்கம் என்ன?

மயக்கம் என்ன?

மயக்கம் என்ன?

Published:Updated:
மயக்கம் என்ன?

'அதெல்லாம் முடியாது... இன்றைக்கு நான் குடித்தே ஆக வேண்டும். இன்று ஒரே ஒரு நாள் மட்டுமாவது நான் குடிக்க வேண்டும்’ என்று கெஞ்சும் குடி நோயாளி ஒருவர், குடிப்பதற்காக 10 காரணங்களை அடுக்கினால்... அன்றைய தினமே அவர் குடியை நிறுத்துவதற்காக 100 காரணங்களை என்னால் அடுக்க முடியும்!

நினைத்த நேரத்தில் டாஸ்மாக் கடைக்குச் சென்று குடிப்பதைவிட குடியை நிறுத்துவது என்பது மிகவும் எளிதானது என்று சொன்னேன். மிகவும் எளிதுதான். ஆனால், அதற்கு முதலில் குடிநோயாளி மனதுவைக்க வேண்டும். அவர் முடிவு எடுக்க வேண்டும். அதற்கு முன்பாக அவர், இதுவரை மது அருந்தியதால் உடல்ரீதியாக, பொருளாதார ரீதியாக, சமூக ரீதியாக அடைந்த நஷ்டங்களை மனக்கண்ணுக்கு முன்பாகக் கொண்டுவந்து நிறுத்தவேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஓர் எளிய வழி... பேப்பரையும் பேனாவையும் எடுத்துக் கொள்ளுங்கள். பெரிய சார்ட் பேப்பராக இருந்தால் நல்லது. மது அருந்த ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு செய்யப்பட்டது, ஒரு மாதத்துக்கு... ஒரு வருடத்துக்கு என்று நீங்கள் குடித்த மொத்த வருடங்களுக்கும் செலவான தொகையை கணக்குப் போட்டு, அதை கொட்டை எழுத்தில் எழுதுங்கள். அந்தத் தொகை உங்கள் கையில் இப்போது இருந்தால், எந்த அளவுக்கு உபயோகமாக இருக்கும் என்று எண்ணிப் பாருங்கள். அந்தப் பணத்தில் சின்னதாக ஒரு வீடு அல்லது நிலம் வாங்கி இருக்கலாம்.

மஞ்சள் கயிற்றை மட்டுமே கழுத்தில் அணிந்து இருக்கும் உங்கள் மனைவிக்கு நகை வாங்கி கொடுத்து இருக்கலாம். நிறைய மதிப்பெண்கள் எடுத்தும் பணப் பற்றாக்குறையால் உயர் கல்வி நிறுவனத்தில் சேர்க்க முடியாமல்போன உங்கள் பிள்ளையை, நல்ல கல்வி நிறுவனத்தில் சேர்த்து இருக்கலாம். இதில் எதையாவது உங்களால் செய்ய முடிந்து இருக்குமானால், அவற்றை எல்லாம் எழுதுங்கள். இன்றைக்கு உங்களுக்கு இருக்கும் கடன் எவ்வளவு என்பதையும் எழுதுங்கள். மதுப்பழக்கம் காரணமாக மனைவி விலகிப் போயிருக்கலாம். குழந்தைகள் பிரிந்து இருக்கலாம். பெற்றோர் விலகி இருப்பார்கள். சுற்றங்கள் சுணங்கி இருக்கும். சொத்துக்கள் கரைந்து இருக்கும். அவற்றையும் அந்தப் பேப்பரில் எழுதுங்கள்.

மது அருந்தியதால் பலமுறை அவமானப்பட்டு இருப்பீர்கள். நிறையப் பொய் சொல்லி இருப்பீர்கள். சிலநேரம் போதை அதிகமாகி தெருவில் விழுந்தும் இருப்பீர்கள். இவற்றை எல்லாம் அந்தப் பேப்பரில் எழுதுங்கள். மது அருந்தும் உங்களையும் மதுப்பழக்கம் அல்லாத ஆரோக்கியமான ஒருவரையும் உடல் ரீதியாக கணக்குப் போட்டுப் பாருங்கள். இயற்கையாக மரணம் நேரும் பட்சத்தில் அவரைவிட உங்களுக்கு ஆயுட்காலம் 10 முதல் 20 ஆண்டுகள் குறைவு என்பதையும் எழுதிக்கொள்ளுங்கள்.

மயக்கம் என்ன?
##~##

எழுதப் படிக்க தெரியாதவர்கள் எனில் யாரையாவது எழுதச் சொல்லி கேட்டு வாங்குங்கள். அதுவும் முடியவில்லை என்றால் உங்களுக்கு மட்டுமே புரியும்படியான உங்கள் பாஷையில் கிறுக்கி அல்லது வரைந்து வையுங்கள். இதன் நோக்கம் உங்களுக்குப் புரியவேண்டும். உங்களுக்கு மட்டும் உறைக்கவேண்டும்... அவ்வளவே. இதை உங்கள் தனி அறையில் ஒட்டிவையுங்கள். யாராவது பார்ப்பார்கள், அவமானமாக இருக்கும் என்றால், அடிக்கடி உங்கள் கண்ணுக்கு மட்டும் படும்படி எங்கேனும் ஒரு இடத்திலோ, மடித்து உங்கள் கைப்பையிலோ வையுங்கள். குடிக்கத் தோன்றும் நேரத்தில் எல்லாம் அதை எடுத்துப் பாருங்கள். மனதை அலைபாய விடாமல் உங்களுக்குப் பிடித்த புத்தகங்கள் படிப்பது, எழுதுவது, பாட்டு கேட்பது, மனைவியுடன் இருப்பது... என மனதுக்குப் பிடித்த எதையாவது செய்யுங்கள். குறிப்பாக, குடிக்கத் தூண்டும் அந்த நேரம் உங்களுக்கு மிதமாகவோ அல்லது மிகையாகவோ பசி எடுக்கும். அதனால், உடனே சாப்பிடுங்கள். அதன்பிறகு நீங்களே நினைத்தாலும் சத்தியமாகக் குடிக்கத் தோன்றாது.

ஒரு குடிநோயாளி மேற்கண்ட வழிமுறையால் குடியை நிறுத்திவிட நிறைய வாய்ப்பு உண்டு. ஆனால், பெரும்பாலான குடிநோயாளிகள் 'நான் படிப்படியாக நிறுத்தி விடுவேன். இன்று ஒரு குவார்ட்டர்... நாளைக்கு முக்கால் குவார்ட்டர்... நாளை மறுநாள் ஒரு கட்டிங் மட்டும். அப்புறம் ஒரே ஒரு ஸ்மால். அப்புறம் அதையும் மறந்து விடுவேன்’ என்றுதான் முடிவு செய்கிறார்கள். ஆனால், மனோரீதியாகவும் மருத்துவரீதியாகவும் இதற்கு வாய்ப்பு இல்லை. ஏனெனில், 'ஆல்கஹாலிக்’ என்ற வார்த்தையே, 'குடியின் மீது கட்டுப்பாடு இழந்தவர்’ என்ற அர்த்தம் கொண்டதுதான்.

ஆல்கஹாலுக்கு மட்டுமே ஒரு பிரத்யேகத் தன்மை உண்டு. அடுத்த முறை குடிக்கும்போது கொஞ்சமாவது கூடுதலாக உள்ளே தள்ளும் ஆவலைத் தூண்டக்கூடியது அது. அதனால், இன்றைக்கு முழு குவார்ட்டரையும் குடித்தவர் மறுநாள் முக்கால் குவார்ட்டருடன் நிறுத்தவே முடியாது. கூடுதலாக ஒரு லார்ஜோ... ஸ்மாலோ போட்டால்தான் அவருக்குக் குடித்த மாதிரியே இருக்கும். அதனால், கொஞ்சம் கொஞ்சமாக என்ற எண்ணத்தை ஒட்ட நறுக்குங்கள்.

'ஒன்றே செய்... நன்றே செய்... அதுவும் இன்றே செய்’ என்பதுபோல மதுப்பழக்கத்தில் மட்டும் ஒருவர் எடுக்கும் முடிவு மிகவும் தீர்க்கமானதாக இருக்க வேண்டும். உண்மையில் இந்த முடிவானது, ஒருவர் தான் படிக்கும் கல்வியை முடிவு செய்வதைப் போல, திருமணம் செய்யப்போகும் துணையை முடிவுசெய்வது போல, பார்க்கும் வேலையை மற்றும் தொழிலை முடிவுசெய்வது போல வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது என்று நினையுங்கள். உண்மையும் அதுதான்.

குடியை நிறுத்த நினைப்பவர்களை மைல்டு(Mild),மாடரேட் (Moderate),சிவியர் (Severe) என்று மூன்று வகையாகப் பிரிக்கிறார்கள் மருத்துவர்கள். மைல்டு ரகத்தினர் குடிக்க வேண்டாம் என்று நினைத்தால், எப்போதுமே குடிக்க மாட்டார்கள். குடிக்காதது குறித்து சந்தோஷமோ வருத்தமோ அவர்களிடம் இருக்காது. மாடரேட் மற்றும் சிவியர் ரகத்தினர் குடியை நிறுத்தும்போது மிகவும் சிரமப் படுவார்கள்.

குறிப்பாக சிவியர் ரகத்தினர், 'நான் குடிப்பதை நிறுத்தினால் என் உடல் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. தலை வலிக்கிறது. கை நடுங்குகிறது. வியர்வை கொட்டுகிறது. பதற்றமாக, பயமாக இருக்கிறது. எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. வயிறு வலிக்கிறது. அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. இதை எல்லாம் தாண்டி எப்படி நான் நிறுத்துவது?’ என்பார்கள். அதை எல்லாம் பார்த்துக்கொள்ள நிறைய மருத்துவர்கள் இருக்கிறார்கள். நீங்கள் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான். அது மிகவும் எளிது. உடனே... இப்போதே... இந்த நொடியிலேயே... குடிக்க மாட்டேன் என்று தீர்க்கமாக முடிவு எடுங்கள். அன்றைய தினமே அதற்கான அரசு அங்கீகாரம் பெற்ற மருத்துவரிடம் செல்லுங்கள். அங்கு சென்ற பிறகு?

சொல்கிறேன்!

தெளிவோம்

 குடியை நிறுத்திய சத்தியம்!

மதுவிலக்கை வலியுறுத்தி, நெல்லை மாவட்டம் உவரியில் செயல்பட்டு வரும் பரிசுத்த அமலோற்பவ மாதா மது விலக்கு திருச்சபையின் 100-வது ஆண்டு விழா, கடந்த 14-ம் தேதி நடந்தது. இந்தச் சபையில் உறுப்பினராக இருந்தவர்கள், ஒருமுறை விலகினால்... அதாவது மது குடித்து விட்டால், மீண்டும் உறுப்பினராகச் சேர முடியாது. அவ்வளவு கட்டுப்பாடு. ஆனால், 100-வது ஆண்டு விழா என்பதால் சபையில் விலகி, பாதை மாறிச்சென்று... மீண்டும் திருந்திய 20 பேருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு சபையில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

மயக்கம் என்ன?

பொது மன்னிப்பின் மூலம் மீண்டும் உறுப்பினராகச் சேர்ந்த சூசை ராயப்பனின் கதை இது. ''94-ம் வருஷம் இந்த திருச்சபையில் சேர்ந்தேன். குடியோட தீமைகளை அறிஞ்சு இருந்ததால், ஊர் மக்களுக்கு எல்லாம் குடியின் தீமைகளைப் பத்தி பிரசாரம் செஞ்சிட்டு இருந்தேன். பள்ளிக்கூடங்களில் போய் மாணவர்களுக்குப் பிரசாரம் செய்வேன். அந்தக் காலகட்டத்தில் குடிக்கு அடிமையான பலரையும் அந்தப் பழக்கத்தில் இருந்து மீட்டு இருக்கேன். குடிப்பழக்கத்தால் பிரிஞ்சு இருந்த தம்பதியரிடம் பேசி சேர்த்து வெச்சு இருக்கேன். ஆனா, விதி பாருங்க... 2001-ம் வருஷம் ஒரு சின்ன சபலம் காரணமா மதுவைக் குடிச்சேன். வாழ்க்கையில அதுதான் முதன் முதல்ல நான் மதுவைத் தொட்டது. அது என்ன மாயமோ தெரியலைங்க... அது என்னை அப்படியே பிடிச்சி, அடிமை ஆக்கிடுச்சு. ஒரு நாள்கூட மது குடிக்காம இருக்க முடியலை. சபையில் இருந்தும் என்னை விலக்கிட்டாங்க. குடிச்சிட்டு பல நாள் ரோட்டுல கிடந்து இருக்கேன். என் மானம், மரியாதை எல்லாம் போயிடுச்சு. ஒரு கல்யாணத்தைப் செஞ்சுவெச்சா பையன் திருந்துவான்னு கல்யாணம்செஞ்சு வெச்சாங்க. சில மாசம் கட்டுப்பாடா, ஒழுங்கா இருந்தேன். திரும்பவும் குடிக்க ஆரம்பிச்சிட்டேன். அதுக்கு அப்புறம் குடி பலமடங்கு அதிகம் ஆகிடுச்சு. குடிச்சிட்டு நான் என் மனைவிக்கு செஞ்ச கொடுமைங்க எல்லாம் கொஞ்சநஞ்சம் இல்லைங்க. அதுக்காக எல்லார்கிட்டயும் பாவமன்னிப்பு கேட்டுக்கிறேன்...'' என்றார் உருக்கமாக!

சூசை ராயப்பனின் மனைவி சுபாஷிணி, ''ஒன்றரை லட்சம் ரூபாய் கட்டி சவுதிக்குப் போனவர், வேலை கிடைக்காமத் திரும்ப வந்துட்டார். திரும்பவும் 70 ஆயிரம் ரூபாய் கட்டி பக்ரைனுக்குப் போனார். அங்கேயும் ஒழுங்கா இருக்கலை. திரும்ப வந்தவர் எந்த நேரமும் டாஸ்மாக்கே கதின்னு கிடந்தார். தினமும் வீட்ல சண்டைதான். செலவுக்குக் காசு கொடுக்க மாட்டார். குடிச்சிட்டு வந்து என்னை முழங்கால் போடச் சொல்வார். குச்சியை எடுத்து குதிங்கால்ல... முதுகுல சுளீர்... சுளீர்னு அடிப்பார். அப்புறம் போதை தெளிஞ்சு, 'நானா உன்னை அடிச்சேன்’னு உருண்டு புரண்டு அழுவார். பலமுறை மண்ணெண்ணெய் ஊத்தி தீவைச்சுத் தற்கொலைக்கு முயற்சி செஞ்சேன். அக்கம்பக்கத்துல தடுத்துக் காப்பாத்​திட்டாங்க. வாழ்க்கையே நரகம் ஆகிடுச்சு. ஒரு கட்டத்துல தாங்க முடியாம, 'இந்தாய்யா... இனிமே நீ குடிச்சிட்டு வந்தா... என்னையும் உன் ரெண்டு புள்ளைங்​களையும் பார்க்க முடியாது. இது அமலோற்பவ மாதா மேல சத்தியம்’னு மாதா படம் மேல படார்னு அடிச்சு சத்தியம் பண்ணிட்டேன். என்ன நினைச்சாரோ தெரியலை... அந்த நிமிஷம் அவரும் 'குடிக்க மாட்டேன்’னு மாதா மேல சத்தியம் செஞ்சார். இந்த ரெண்டு வருஷம் அவர் குடிக்கவே இல்லை. சம்பாதிக்கவும் ஆரம்பிச்சுட்டார். இதோ இப்ப திருச்சபையும் திரும்பவும் அவரை உறுப்பினரா ஏத்துக்கிடுச்சு. நானும் என் குழந்தைகளும் இப்போ சந்தோஷமா இருக்கோம். குடிப் பழக்கம் இருக்கிற எல்லார்கிட்டயும் உங்க தங்கச்சியாக் கேட்டுக்கிறேன்... குடிப்பழக்கத்தை விட்ருங்க... நீங்களும் உங்க குடும்பமும் ரொம்பவுமே நல்லா இருப்பீங்க...'' கண் கலங்கி வேண்டுகோள் விடுக்கிறார் சுபாஷிணி!

மயக்கம் என்ன?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism