ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

மயக்கம் என்ன?

மயக்கம் என்ன?

மயக்கம் என்ன?

காதலித்துப் பார்

உன்னைச் சுற்றி ஒளிவட்டம் தோன்றும்

உலகம் அர்த்தப்படும்

உனக்கும் கவிதை வரும்

கையெழுத்து அழகாகும்

உன் பிம்பம் விழுந்தே கண்ணாடி உடையும்

கண்ணிரண்டும் ஒளிகொள்ளும்...

##~##

- வைரமுத்துவின் இந்தக் கவிதையில், காதலித்துப் பார் என்று இருக்கும் இடத்தில் குடியை நிறுத்திப் பார் என்று வைத்துப் படியுங்கள்... எவ்வளவு கச்சிதமாகப் பொருந்தும் இந்தக் கவிதை!

மது மீட்புச் சிகிச்சை மையத்தில் ஒரு குடிநோயாளி மனம் உவந்து சிகிச்சையை ஏற்றுக்கொண்டால், மேற்கண்ட அற்புதங்கள் அப்படியே நிகழும். ஆழ்ந்த உறக்கம் வரும். முகம், கண்கள் தெளி​வாகி அவரது தோற்றத்தை அவரே நம்ப முடியாமல் அதிசயிப்பார். அழைத்துவந்த அன்று அவரை மிரட்சியுடன் அணுகிய உறவினர்கள், மருத்துவமனை ஊழியர்கள் தோழமையுடன் தோளில் கை போட்டுப் பேசுவார்கள். சுருக்கமாகச் சொல்வது என்றால், தான் எவ்வளவு நல்லவன் என்பது அப்போதுதான் ஒரு குடிநோயாளிக்கே தெரியவரும். அதற்காக, பழையவற்றை நினைத்துக் குற்ற உணர்வுகொள்ள வேண்டாம். அந்தக் குற்ற உணர்வு ஒரு குடிநோயாளியை காலச்சக்கரத்தில் உட்காரவைத்து நேராக டாஸ்மாக் கடைக்குத்தான் அழைத்துச் செல்லும்!

மயக்கம் என்ன?

குடிநோயாளியின் அடிப்படைப் பிரச்னை என்ன தெரியுமா? நேற்றைய தினத்தை நினைத்து வருத்தப்பட்டுக்கொண்டே இருப்பார். நாளைய தினத்தை நினைத்துப் பயந்துகொண்டே இருப்பார். வாழும் அன்றையநாளை மறந்தேபோவார். அதனால், மருத்து​வமனை வரை சென்றுவிட்ட ஒரு குடிநோயாளி அங்கு இருக்கும் ஒவ்வொரு நாளும் அன்றைய நாளைக்காக கடவுளுக்​கோ, டாக்டருக்கோ, அழைத்து வந்த மனைவிக்கோ நன்றியைச் சொல்லிக் கழித்தாலே போதுமானது. உடலை முதலில் தேற்றுங்கள். பிரச்னைகளை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம். சுவர் இருந்​தால்தானே சித்திரம் வரைய முடியும்!

சரி, நல்லது நடக்கும்போது சில கெட்டதுகளும் தலைதூக்கும்தானே? ஒரு வார விஷமுறிப்பு சிகிச்சை முடிந்த உடன் பலருக்கும் இந்தப் பிரச்னை வரக்கூடும். இந்த நேரத்தில் குடியை விலக்கிய விஷயத்தை ஒரு குடிநோயாளியின் வெளி மனம் நினைத்து மகிழ்ந்தாலும், ஆழ் மனம் அவருக்கே தெரியாமல் அவரை கரித்துக் கொட்டும். 'எல்லாரும் சேர்ந்து இவனை இப்படிப் பண்ணிட்டாங்களே...’ என்று சாத்தான் ஒப்பாரி வைக்கும். இதுபோன்ற நேரங்களில் தங்களை அறியாமலேயே குடிநோயாளி அவரது மனைவி மீதோ, உறவினர்கள் மீதோ அல்லது நல்லது சொல்லும் நண்பர்கள் மீதோ சந்தேகம் கொள்வார்கள்; கோபம் அடைவார்கள். மனப் பதற்றம் அதிகரித்து உளவியல் கோளாறுகள் ஏற்படும்.

கலங்க வேண்டாம் நண்பர்களே... எல்லாவற்றுக்​கும் தீர்வு உண்டு. இந்த நேரங்களில் ஆன்ட்டி சைக்கோடிக் (Anti psychotic)  மருந்துகளை மருத்துவர்​கள் கொடுப்பார்கள். எட்டு மணி நேரம் தொடங்கி அதிகபட்சம் 48 மணி நேரத்தில் மேற்கண்ட மனவியல் பிரச்னைகள் எல்லாம் பனிபோல உருகிக் காணாமல் போய்விடும். ஒருவிதத்தில் பார்த்தால் குடிநோயாளிக்கு இது மறுபிறவி. புதிதாகப் பிறக்கிறார்.

அடுத்து, மனநல மருத்துவர்கள் மற்றும் கவுன்சிலிங் சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள் குடிநோயாளியின் மனதுக்குள் புகுந்து புறப்பட்டு, ஆழ்மன வருத்தங்களை... ரகசியங்களை... பிரச்னைகளை எல்லாம் அவரது வாயாலேயே வெளிக்கொண்டு வருவார்கள். அப்போது ஒரு குடிநோயாளி தனது மனத் துயரத்தைச் சொல்லிக் கதறி அழுவார். கோபதாபங்களை ஆத்திரத்துடன் கொட்டுவார். சந்தோஷத் தருணங்களை நினைத்து குழந்தையைப் போல வாய்விட்டுச் சிரிப்பார்.

இந்த நேரத்தில்தான் ஒரு குடிநோயாளியின் குடிக்குக் காரணமான ஆணி வேரை மருத்துவர்கள் பிடித்து விடுவார்கள். ஒவ்வொரு போதைக்கும் தீர்வு, இன்னொரு போதையே. ஒரு போதைதான் இன்னொரு போதையை மறக்கடிக்கும். சொல்​லப்​போனால் உலகின் பெரும்பாலான விஷயங்கள் அத்தனையுமே போதைதான். அத்தனை பேரும் போதைக்காரர்கள்தான். ஒவ்வொரு​வருக்கும் ஒவ்வொரு போதை. முதலாளி கழுத்தைப் பிடித்து வெளியே துரத்தினாலும் போகாமல் அலுவலகத்திலேயே விடிய, விடிய வெறிகொண்டு வேலை பார்க்கிறாரா... அவருக்கு இருப்பது 'வொர்க்காலிக்’ (Workaholic).  பாடப் புத்தகமோ பலான புத்தகமோ எப்போதும் படித்துக்கொண்டே இருக்கும் புத்தகப்புழுவா... அவருக்கு இருப்பது 'ரீட்ஹாலிக்’ (Readaholic). பக்கத்தில் உட்கார்ந்து நம்மை வேலை பார்க்கவிடாமல் பேசியே கொல்வார்கள் சிலர்... அவர்களுக்கு இருப்பது 'டாக்ஹாலிக்’ (Talkaholic).  போன மாதம் ராதா... இந்த மாதம் கீதா என்று லவ் மூடிலேயே திரிவார்கள் சிலர்... அவர்களுக்கு இருப்பது 'லவ்ஹாலிக்’ (Loveaholic). இன்னும் சிலரோ பாதி நேரம் படுக்கை அறையை விட்டு வெளியே வர மாட்டார்கள்... அவர்களுக்கு இருப்பது 'செக்ஸ்ஹாலிக்’ (Sexaholic). இப்படிக் குடிநோயாளிக்கு பிடித்த வேறு ஒரு 'ஹாலிக்’கைக்கொண்டு மருத்துவர்கள் அவரைத் திசை திருப்பி விடுவார்கள்!

மூன்றாம் வாரம் தொடர்ந்து யோகா, தியானம் சொல்லித் தருவார்கள். தினசரி காலை 5 மணிக்கு எழுவது, சரியான நேரத்தில் பழம், காய்கறிகள், கீரைகள் என ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிடுவது,  நல்ல உரைகளை -  நல்ல இசையைக் கேட்பது, கேரம், செஸ், சீட்டு விளையாடுவது, நல்ல புத்தகம் படிப்பது, சினிமா பார்ப்பது என்று குடிநோயாளியின் வாழ்க்கை முறையையே மாற்றிவிடுவார்கள். குடிநோயாளியின் ஆன்ம பலத்தைப் பெருக்க 'நான் யார்?’ என்கிற சுய பரிசோதனை, பிரச் னைகளை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள், மிகமுக்கியமாக, மன அழுத்தங்களைச் சமாளிக்கும் கலையைச் சொல்லித் தருவார்கள். இவை எல்லாம் ஒரு குழுவாக நடைபெறும். ஏனெனில், தனியாக இருக்கும்போது தடுமாறும் மனம் குழுவாக இருக்கும்போது ஒருவரைப் பார்த்து ஒருவர் ஆறுதல் அடைந்துகொள்ளும். இன்னொன்று குழுவாக இருப்பது கூடுதல் பலம்.

மூன்று வாரங்கள்... எல்லாம் முடிந்துவிட்டது. 'அடப்பாவி... எப்படி இருந்த மனுஷன் இப்படி ஜம்முன்னு மாறிட்டாரே’ என்று ஊரே அந்த குடிநோயாளியைப் பார்த்து வியக்கும் வண்ணம் ஆளே மாறி இருப்பார். விடியலில் எழுந்து பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளைக் குளிப்பாட்டுவது என்ன? மார்க்கெட்டுக்குப் போய் காய்கறிகள் வாங்கி வருவது என்ன? மனைவிக்கு மல்லிகைப் பூ வாங்கிக் கொடுத்து கோயிலுக்குக் கூட்டிச் செல்வது என்ன என்று கோலாகலமாய்ச் செல்லும் இவர்களின் வாழ்க்கை இப்படியே தொடருமா? அங்கும் 'செக்’ வைத்து, டாஸ்மாக்கை நோக்கி இழுக்கும், குடிநோயாளியின் ஆயுள் காலத்தில் என்றுமே அழிக்க முடியாத மூளையில் ஏற்பட்டு இருக்கும் சில நிரந்தரப் பதிவுகள்!

அவற்றின் பெயர் 'கியூஸ்’ (Cues)!

தெளிவோம்

தேனி மாவட்டத்தில் இருக்கிறது 'மனிதநேயம் ஆதரவற்றோர் காப்பகம்’. வீரபாண்டி, கோடாங்கிப்பட்டியிலும் கிளை இல்லங்கள் உண்டு. இங்கு ஒரு முறை சென்று திரும்பினால், கரையாத மனமும் கரைந்துவிடும். அவ்வளவு கண்ணீர்க் கதைகள் அங்கே புதைந்து கிடக் கின்றன! இந்தக் காப்பகத்தை நடத்தும் பால்பாண்டியிடம் பேசினேன். ''எங்ககிட்ட 123 குழந்தைகள் இருக்கு. இதுல சுமார் 100 குழந்தைகள் குடிநோய்ப் பெற்றோரால் பாதிக்கப்பட்டு ஆதரவு இழந்து இங்கு வந்தவங்கதான். குடிச்சிட்டு வந்து அம்மாவைக் கொலை செஞ்சுட்டு ஜெயிலுக்குப் போன குடிநோயாளியின் குழந்தை, குடிச்சிட்டு வந்து புருஷன் தலையில கல்லைப் போட்டுக் கொலை செஞ்ச குடிநோயாளி பொம்பளையின் குழந்தைன்னு இங்க இருக்கிற ஒவ்வொரு குழந்தைக்கும் பின்னாடி ஒவ்வொரு கதை இருக்குது. இது அத்தனைக்கும் காரணம் பாழாய்ப்போன இந்த மதுதான்.

மயக்கம் என்ன?

இப்படி, குடிப்பழக்கத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 20 குழந்தைகளோட கதைகளை விவரமாக அவங்க சொல்லுற மாதிரியே எழுதி, குழந்தைகளின் கையெழுத்துக்கள் போட்டு, டாஸ்மாக் கடைகளை மூடணும்னு தமிழக முதல்வருக்கும் மாவட்ட கலெக்டருக்கும் மனு கொடுத்து இருக்கோம். அனுப்பி ஒரு வருஷம் ஆச்சு. இதுவரை எந்தப் பதிலும் இல்லை. குழந்தைகளோட கண்ணீருக்குக் கூட இந்த அரசு செவிசாய்க்காதா?'' என்று கேட்கிறார் பால்பாண்டி.

பால்பாண்டியும் இந்தக் குழந்​தைகளும் செய்துவரும் சமூக சேவை முக்கியமானது. தேனி மாவட்டத்தில் இருக்கும் சேரிப் பகுதிகளுக்கு வாரந்தோறும் சென்று மது எதிர்ப்புப் பிரசாரம் செய்கின்றனர். தேனியில் இருக்கும் அழகர்சாமி காலனி, ஜவஹர் நகர், வள்ளி நகர், அல்லி நகரம் உள்ளிட்ட பகுதிகளில் இவர்களின் பிரசாரம் காரணமாகக் குடியை நிறுத்தியவர்கள் பலர். நல்ல உள்ளங்கள் வாழ்க!