ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

மயக்கம் என்ன?

மயக்கம் என்ன?

மயக்கம் என்ன?
##~##

'ஹோலிஸ்டிக் ஹெல்த்’ சிகிச்சையில் குடி​நோ​யாளி​​களுக்கு அளிக்கப்படும் இன்னொரு சிகிச்சை, 'கிரியேட்டிவ் ஆர்ட்ஸ் தெரபி’. கையில் பேப்பர், பென்சில் அல்லது க்ரேயான்ஸ் கொடுப்பார்கள். சும்மா இருக்கும்நேரங்​களில் மனதில் தோன்றியதை எல்லாம் வரையச் சொல்வார்கள். ஒருவர் அழகான பெண்ணின் உருவத்தை வரைவார். ஒருவர் அழுகின்ற பெண்ணை வரைவார். ஒருவர் பாலை​வனத்தை வரைவார். ஒருவர் பசும் வனத்தை வரைவார். வரைய வராதவர்கள் வட்ட, வட்டமாக... கட்டம், கட்டங்களாகக் கிறுக்கிவைப்பார்கள். சிலர் கோடுகளாக... சிலர் கசாமுசா என பேப்பர் கிழியும் வகையில் அழுந்த கிறுக்கி இருப்பார்கள். ஆனால், மருத்துவர்களைப் பொறுத்த அளவில் இவை எல்லாமே குடிநோயாளிகளின் ஆழ்மன ஓவியங்கள்!

 அழகான பெண்ணின் ஓவியமும் பசும் வனமும் ஒருவர் சுதந்திரமான, தெளிவான மனநிலையில் இருக்கிறார் என்பதை உணர்த்தும் குறியீடுகள் என்றால், பாலை​​வனமும் கசாமுசா கிறுக்கல்​களும் ஒருவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதை வெளிக்காட்டும் குறியீடுகள். கட்டங்களாக... வட்டங்களாக... சுருள் சுருளாக ஒருவர் வரைந்தி​ருக்​கிறார் என்று வைத்துக்​கொள்ளுங்கள். அவர் ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறார் என்று அர்த்தம். அநேகமாக அந்தச் சிந்தனை தான் குடிப்பது சரியா;  இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் என்ன என்பதைப் பற்றியதாக இருக்கலாம்.

எதற்​காக இப்படி வரையச் சொல்​கிறார்கள்?

ஓவியம் வரைவது இரண்டு வகையில் பலன் தருகிறது. ஒருவர் மிகுந்த துயரத்தில், மன வேதனையில் இருக்கும்போது பகிர்ந்து​கொள்ள பழக்கமான ஆள் கிடைத்தால்... சாய்ந்து அழ சௌகர்யமான தோள் கிடைத்தால்... வாய்விட்டுக் கதறி அழுது​விடுவார்கள். அடை மழையாக அழுது ஓய்ந்த பின்பு துயரத்தின் சுவடுகள் பாதியாகத் துடைக்கப்பட்டு இருக்கும். அப்படித்தான் ஓவியங்கள் வரைவதும்... கிறுக்குவதும். இப்படித் தொடர்ந்து வரைய, வரைய வேதனைகள் கரையத் தொடங்கும். ஏனெனில் கோபம், பகை உணர்வு, சோகம் போன்ற எதிர்மறை எண்ணங்களைச் சுமந்தபடி மதுவை விலக்க நினைப்பது பாறைகளை முதுகில் கட்டிக்கொண்டு மலை ஏறுவதுபோலத்தான்.

மயக்கம் என்ன?

இன்னொரு நன்மை, குடிநோயாளி வரைந்த ஓவியங்கள் அவருக்கு அளிக்க வேண்டிய சிகிச்சை முறையையும் மருத்துவருக்கு உணர்த்துகிறது.

'ஹோலிஸ்டிக் ஹெல்த்’ சிகிச்சையின் முக்கியமான இன்னொரு சிகிச்சை முறை, 'மசாஜ் தெரபி’. ஒருவரின் உடலை, மனதை வெகுவாக ரிலாக்ஸ் செய்ய உதவும் தொன்மையான கலை மசாஜ். கேரளத்தில் இந்தக் கலை மிகவும் பிரபலம். அங்கு பாரம்பரியமாக, தரமாக, ஆன்மிக மற்றும் மருத்துவ ரீதியாக மசாஜ் சேவையை அளிக்கும் நிலையங்கள் நிறைய இருக்கின்றன. மூலிகை, வாசனை எண்ணெய்களை உடல் முழுவதும் தடவி, உடலில் ஆங்காங்கே இருக்கின்ற உணர்வு புள்ளிகளைத் தூண்டி, குறிப்பிட்ட புள்ளிகளை அடக்கி மேற்கொள்ளும் இந்த மசாஜ் குடிநோயாளி​களுக்கு சொர்க்கம் என்றால் என்ன என்பதைக் காட்டும். 'உலகின் இவ்வளவு சுகங்கள் இருக்கும்போது போயும் போயும் ஒரு குவார்ட்டருக்கா தவம் கிடந்தோம்?’ என்று தலை குனியவைக்கும்.

கேரளத்தில் 'சிரக்களி’ என்று அழைக்கப்படும் ஒரு மசாஜ் முறை உண்டு. குடிநோயாளியின் தலைக்கு மேல் மண் பாத்திரத்தைக் கட்டி, அதில் இருந்து சொட்டுச் சொட்டாக உச்சந்தலையில் எண்ணையை விடுவார்கள். மயிலிறகால் தலையைச் சுற்றி, நெற்றியை வருடுவார்கள். இதனால், மதுவால் ஊனப்பட்டு இருக்கும் மூளையின் செல்கள் மீண்டும் புத்துணர்வு பெறும் என்கிறார்கள் மசாஜ் வல்லுநர்கள். இந்த மசாஜ் செய்த பிறகு மனதில், உடலில் இருக்கும் இறுக்கங்கள் எல்லாம் பளிச் என விலகி, காற்றுபோல ஆகிவிடுவீர்கள். படுக்கையில் படுத்துப்பாருங்கள். தூக்கம் உங்களை எங்கோ தூக்கிக்கொண்டு போய்விடும். இப்படிக் குடியைத் துறக்க உதவுவதில் பெரும் பங்கு மசாஜ் கலைக்கு இருக்கிறது!

மசாஜ் செய்துகொள்ள வசதி இல்லை என்கிறீர்களா? சிம்பிள் சிகிச்சை ஒன்று இருக்கிறது. நயா பைசா செலவு கிடையாது. அதிகாலை எழுந்து நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். ஆனால், இது உடற்பயிற்சிகான நடைப்பயிற்சி அல்ல... குடி மறப்பு நடைப்பயிற்சி. எடையைக் குறைக்கவோ... தொப்பையை இளைக்கவோ நீங்கள் நடைப் பயிலவில்லை. குடியை மறக்க... மனதை ரிலாக்ஸ் செய்ய நடைப்பயிற்சி செய்கிறீர்கள். வேகவேகமாக நடக்கக் கூடாது. குரோம்பேட்டை குறுக்கு சந்து, பல்லாவரம் பஸ் ஸ்டாண்டில் எல்லாம் நடக்கக் கூடாது. கூட்டமாகவோ, ஊர்க் கதை பேசிக்கொண்டோ நடக்கக் கூடாது. தனியாகச் செல்வதே சாலச் சிறந்தது. கொஞ்சமேனும் இயற்கை இறக்காமல் இருக்கும் தோட்டங்களிலோ, கடற்கரையிலோ, பூங்காவிலோ நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். அதிகாலை 4.30 மணி தொடங்கி 6 மணி என்பது நடைப்பயிற்சிக்கு மிகச் சிறந்த நேரம். அதிகாலை அமைதியும் பறவைகள் எழுப்பும் இன்னிசையும் மனதினில் இனம் புரியாத மகிழ்ச்சியை ஏற்படுத்தி, மனதைச் சாந்தப்படுத்தும். விறுவிறுக்காத, அதே சமயம் சோம்பல் இல்லாத சீரான நடை, உடல் உறுப்புகள் அனைத்தையும் சீராக இயங்கவைத்து, ரிலாக்ஸ் செய்யவைக்கும். காலையும் மாலையும் அரை மணி நேரம் இப்படி நடைப்பயிற்சி மேற்கொள்வது குடியில் இருந்து விலக மிகவும் உதவும்.

இன்னொரு சிகிச்சை, 'பெட் தெரபி’(Pet therapy). செல்லப் பிராணிகள் மூலம் மன அழுத்தத்தைக் குறைத்து, குடியில் இருந்து விடுபடச் செய்வார்கள். நாய், பூனை, பறவைகள், மீன்கள், குதிரைகள் இவற்றுக்கும் மனிதர்களுக்கு நெருக்கமான புரிதல்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். 1970-களின் இறுதியில் இதற்கான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு, செல்லப் பிராணிகளால் மனிதனின் மனநிலையையும் உடல்நிலையையும் மேம்படுத்த முடியும் என்று மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டது. இதய நோய், ரத்த அழுத்தம், மன அழுத்தத்தைக் குறைக்கவும், ஆட்டிசம் பாதிப்புகொண்ட குழந்தைகளுக்கும் 'பெட் தெரபி’ உதவுகிறது.

அப்படித்தான் குடிநோயாளிகளையும் பயிற்சி அளிக்கப்பட்ட செல்லப் பிராணிகளுடன் பழகவிடுவார்கள். நாய், பூனையுடன் விளையாடுவது, கொஞ்சுவது, மீனுக்கு உணவு கொடுப்பது, குதிரை ஏற்றம் எனப் பயிற்சி கொடுப்பார்கள். குதிரை மீது சவாரி செய்வது மனிதனின் தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் அதிகப்படுத்துகிறது. 'நான் ஆளுமை மிக்கவன்’ என்ற நம்பிக்கையைக் குடிநோயாளிக்கு ஏற்படுத்தி குடியில் இருந்து மீள உதவுகிறது என்கிறார்கள் உளவியலாளர்கள்.

இத்தனை அத்தியாயங்களாகக் குடிநோய் பற்றியும் குடிநோயாளிபற்றியும் மட்டுமே படித்தீர்கள். ஆனால், குடிநோய் என்பது ஒரு குடும்ப நோய் என்னும் கசப்பான உண்மையை அறிவீர்களா? குடும்பத்தில் குடித்த ஒரு நபர் மட்டும் நோயாளி அல்ல... குடும்பத்தினர் அத்தனை பேருமே நோயாளிகளே.

சொல்கிறேன்...

 தெளிவோம்

தொழிலாளர்களுக்காக...

மயக்கம் என்ன?

கடந்த வாரம் 'ராம்கோ ரெடிமிக்ஸ் கான்கிரீட் நிறுவனம்’ தனது ஒப்பந்ததாரர்களிடம் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு மதுப் பழக்கத்தின் தீமைகள்குறித்து விழிப்பு உணர்வுக் கருத்தரங்கை நடத்தியது. நிகழ்ச்சியில் பேசிய ராம்கோ நிறுவனத்தின் சீனியர் மேலாளர் ராமச்சந்திரன், ''எங்கள் நிறுவனத்தின் சேர்மன் உட்பட பலரும் ஜூ.வி-யின் 'மயக்கம் என்ன? - குடி குடியைக் கெடுக்கும்’ தொடரைத் தொடர்ந்து படிக்கிறோம். இந்தச் சமூகத்தில் குடி எந்த அளவுக்கு மோசமாகப் புரையோடிப்போயிருக்கிறது என்பதை அந்தத் தொடரில் கண்கூடாகப் பார்க்க முடிந்தது. இப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்த அந்தத் தொடரே காரணம். எங்கள் நிறுவனத்தின் ஒப்பந்ததாரர்களிடம் பணிபுரியும் தொழிலாளர்கள், டிரைவர்கள் ஆகியோர் குடியால் பாதிக்கப்பட்டு இருப்பதை அறிந்தோம். அவர்களை ஒருங்கிணைத்து இந்த நிகழ்ச்சியை நடத்தினோம். நிகழ்ச்சியில் பலரும் மது குடிப்பதை விட்டுவிடுவதாக விருப்பம் தெரிவித்து இருக்கிறார்கள். தொடர்ந்து எங்கள் தொழிற்சாலையின் அனைத்துக் கிளைகளிலும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்'' என்றார். நல்லவை தொடரட்டும்!

படம்: ஜெ.வேங்கடராஜ்

 ''10 வயசுலேயே குடிக்க ஆரம்பிச்சிட்டேன்!''

மயக்கம் என்ன?

சினிமா துறையில் ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகரிடம் உதவி ஒளிப்பதிவாளராக இருக்கும் வைஷாலி, ஒரு சிறுவனை அழைத்துக்கொண்டு வந்து என்னைச் சந்தித்தார். அந்த சிறுவனின் கைகளில் கத்தி கிழித்த, தீ சுட்ட வடுக்கள் நிறைய இருந்தன. 15 வயதான அந்தச் சிறுவன் பேசப் பேச எனக்குத் தாங்க முடியாத அதிர்ச்சி... ''என் வீடு ராமாவரத்துல இருக்கு. நான் 10 வயசுலயே குடிக்கக் கத்துக்கிட்டேன். ஏழாவது படிக்கிறப்பயே தினமும் சாயங்காலம் ஆனா குடிக்கலைன்னா கை நடுங்க ஆரம்பிச்சிடுச்சு. வீட்டுல பணத்தைத் திருடிக் குடிச்சேன். தினமும் ஏதாவது ஒரு பாருக்குப் போய் சப்ளையர் வேலை பார்த்து அங்கேயே குடிப்பேன். ஒன்பதாவது படிக்கிறப்ப பகல்லயே குடிச்சேன். இதனால ஸ்கூல்ல இருந்து துரத்திட்டாங்க.  பைத்தியம் மாதிரி திரிஞ்சேன். வீட்டுல இருந்த அண்டா, தங்கச்சி கொலுசு எல்லாம் திருடிட்டு போய் வித்துக் குடிச்சேன். ஒரு கட்டத்துல அம்மாக்கிட்ட காசு கேட்டு மிரட்டி கையை கத்தியால கிழிச்சிக்கிட்டேன். தீயில சுட்டுக்கிட்டேன். இந்த அக்காதான் என்னை ஒரு டாக்டர்கிட்ட அழைச்சுட்டுப் போய் வைத்தியம் பார்த்தாங்க. இப்ப நான் குடியை மறந்து ஒரு வருஷம் ஆகப்போகுது. திரும்பவும் ஸ்கூல்ல ஒன்பதாவது சேர்ந்துட்டேன். நல்லாப் படிக்கிறேன். எனக்குத் தெரிஞ்சே ஸ்கூல் பசங்க நிறையப் பேர் குடிக்கிறாங்க. தயவுசெஞ்சு இதை யாராச்சும் தடுத்து நிறுத்தணும்'' என்றான். யார் நிறுத்துவது? அரசுக்குக் கேட்கிறதா?