பிரீமியம் ஸ்டோரி
மயக்கம் என்ன?

பொதுவாக, குழந்தை களைப் பலரும், 'அவன் பச்சைப் புள்ளை... குழந்தைக்கு என்ன தெரியும்?’ என்றுதான் நினைக்கிறார்கள். இல்லை நண்பர்களே... குழந்தைகள் நம் அனைவரையும்விட புத்திசாலிகள். அவர்களின் மூளை புத்துணர்வுடன்... உடனடியாக கிரகித்துக் கொள்ளக் கூடிய கூர்மையுடன் இருக்கிறது. குழந் தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்பார்கள். அது எவ்வளவு பெரிய உண்மை தெரியுமா? கொஞ்சம் வளர்ந்த எவரிடத்தும் எதிர்மறை எண்ணங்கள் ஓரளவாவது இருக்கும். ஆனால், எவ்வித எதிர்மறை எண்ணங்களையும் மனதில் வைத்துக்கொள்ளாத... வைத்துக்கொள்ளத் தெரியாதவர்கள் குழந்தைகள். குழந்தைகளுக்கும் கோபம் வரும். சோகம் வரும். அழுகை வரும். ஆனால், எல்லாவற்றையும் அந்தந்த நிமிடங்களில் அழகாக கடந்து விடுவார்கள். நம்மைப் போல மனதில் அழுக்கைச் சேர்த்து வைத்துக்கொள்ள மாட்டார்கள். அப்படிப்பட்ட குழந்தைகளைக் குடிநோயாளிகள் எப்படி எல்லாம் பாடாய்ப்படுத்துகிறார்கள் தெரியுமா? குடிநோயாளிகளால் கடந்த அத் தியாயத்தில் படித்த மூன்று விதி முறைகளைத் தனக்குத்தானே வகுத்துக்கொண்டு, குழந்தைகள் எப்படி மாற்றம் அடைகிறார்கள் என்பதை அறிவீர்களா? இப்படி மாறும் குழந்தைகளை நான்கு வகையாகப் பிரிக்கிறார்கள் மன நல மருத்துவர்கள். 

பொறுப்புள்ள குழந்தை, அனு சரித்துப்போகும் குழந்தை, கோமாளிக் குழந்தை, முரட்டுத்தனமான குழந்தை!

'அட, பொறுப்புள்ள குழந்தை... நல்ல விஷயம்தானே’ என்கிறீர்களா? மழலையின் இயல்பை மாற்றும் எது ஒன்றுமே மட்ட ரகமானதுதான் - போன்சாய்போல. பார்க்க அழகாக, ஆச்சர்யமாக இருக்கும். ஆனால், அதற்குப் பின்னால் இருக்கும் குரூரம் - குடிநோயாளியின் வன்மம் தெரி யுமா? கை, கால்களை மடக்கிக் கட்டிக்கொண்டு அரை மணி நேரம் குட்டியூண்டு அலமாரியில் இருந்து பாருங்களேன். அந்த வேதனை புரியும். அப்படித்தான் குடிநோயாளிகளால் பொறுப்புள்ளவர்களாக முடக்கப்படு கிறார்கள் குழந்தைகள். அந்தக் குழந்தை தனது வயதுக்கு மீறிய பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு செயல்படும். பத்து வயது குழந்தைகூட அடுப்பை மூட்டி தோசை சுடும். காய்கறி நறுக்கும். ரேஷன் கடையில் வரிசையில் நின்று மண்ணெண்ணெய், சர்க்கரை வாங்கி வரும். தட்டைக் கழுவி வைத்து அப்பாவுக்குச் சோறு போடும். சமயங்களில் ஊட்டிவிடும். குடிநோயாளி வாந்தி எடுத்தால்கூட முகம் சுளிக்காமல் பொறுப்பாகப் பெருக்கி, கழுவிவிடும் - இந்தத் தொடரின் முதல் அத்தியாயத்தில் படித்த என் சேலத்து நண்பனின் குழந்தைபோல!

##~##

ஏன் இப்படி? குடிநோயாளிகள் பொறுப்பற்றவர் களாக மாறும்போது, அவர்களின் குழந்தைகள் பொறுப்புள்ளவர்களாகத் தங்களை மாற்றிக்கொள்ள நிர்பந்திக்கப்படுகிறார்கள். குழந்தைகள் நேர்மையான வர்கள். அதனால், வீட்டில் ஏற்பட்டுள்ள ஏதோ ஒரு வெற்றிடத்தை நிரப்ப முற்படுகிறார்கள். நாளடைவில் அதுவே அந்தக் குழந்தையின் இயல்பாக மாறிப்போகிறது. அந்தக் குழந்தைக்கு அதன் குழந்தைப் பருவம் பறிக்கப்படுகிறது. அந்த பருவத்துக்குரிய மழலை, விளையாட்டு, மகிழ்ச்சி எல் லாவற்றையும் குழி தோண்டிப் புதைத்து விடுகிறது குடிநோயாளியின் போதை. மனதில் அழுத்தத்துடன் இயல்பு திரிந்து வளரும் அந்தக் குழந்தையும் ஒரு மன நோயாளியே!

அனுசரித்துப்போகும் குழந்தை, குடிநோயாளியின் வீட்டில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வையும் உற்றுக் கவனிக்கிறது. அம்மாவை அப்பா அடிக்கிறார். அம்மா முதலில் எதிர்க்கிறார். நான்கு அடிகள் வாங்கிய பிறகு வலி தாங்காமல் அப்பாவுக்கு அடங்கி விடுகிறாள் அம்மா. அம்மா கேள்வி கேட்டாலோ, தாத்தா, பாட்டி கேள்வி கேட்டாலோ, வீட்டில் சண்டை வெடிக்கிறது. கைகலப்பு நடக் கிறது. அப்படியானால், கேள்வி கேட்கக்கூடாது. எதிர்த்துப் பேசக்கூடாது. அடம்பிடிக்கக் கூடாது. எல்லாவற்றுக்கும் அனுசரித்துப்போக வேண்டும். இல்லாவிட்டால் வீட்டில் பிரச்னை வருவதுடன், நமக்கும் அடி கிடைக்கும். எதற்கு வம்பு? அனுசரித்துப் போய்விடுவோம். - அந்தக் குழந்தை எந்தச் சூழ்நிலையையும் எதிர்க்கவோ, மாற்றவோ முயற்சி செய்யாது. இது ஏன் நடக்கவில்லை. இது ஏன் நடந்தது என்று காரணங்கள் கேட்காது. 'அப்பா ஃப்ளைட் ஏன் வானத்துல பறக்குது? காக்கா ஏன் கா...கா...னு கத்துது?’ என்று குழந்தைகளுக்கு இயல்பாக எழும் சந்தேகங்களைக்கூட கேட்டுத் தெரிந்துகொள்வது இல்லை. அப்புறம் எப்படி குழந்தையின் அறிவாற்றல் பெருகும்? பள்ளியில் மக்குக் குழந்தை எனப் பெயர் வாங்கும். சரியாகப் படிக்காமல் அடிவாங்கும். அந்தக் குழந்தையும் மன நோயாளிதான் இல்லையா நண்பர்களே?

மயக்கம் என்ன?

கோமாளிக் குழந்தை. பிறர் சந்தோஷத்துக்காகப் பாடுபடும் குழந்தை. குடிநோயாளிகளின் அதிகப் புத்திசாலித்தனம் கொண்ட குழந்தைகள் இதுபோல மாற்றம் அடைகிறார்கள். 'இன்னைக்கு அப்பா வந்த தோரணையே சரி இல்லையே... காலையில பார்த்த அப்பா இல்லையே இவர்... சரி, சரி சமாளிப்போம்’ என்று பிரச்னையின் அறிகுறிகள் தென்படத் தொடங்கிய உடனேயே, தான் என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்கும். தன்னைச் சுற்றி இருப்பவர்கள் நன்றாக இருக்க வேண்டும். அம்மாவோ அப்பாவோ அடி வாங்கக் கூடாது என்று நினைக்கும். ஓடிச் சென்று அப்பாவின் தோளில் ஏறிக் கொஞ்சும். அப்பாவைப் போல தட்டுத் தடுமாறி கால்கள் பின்ன நடந்து, நடித்துக் காட்டி சிரிப்பு மூட்டும். சாப்பாட்டுத் தட்டை தலையில் வைத்துக்கொண்டு நடனம் ஆடும். உண்மையில் அந்தக் குழந்தை உள்ளுக்குள் மகிழ்ச்சியாக இல்லை. தன்னையும் தனது குடும்பத்தின் புறச்சூழலையும் பாதுகாத்துக்கொள்ள, மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள அது, கோமாளி என்னும் முகமுடியை அணிந்துகொள்கிறது. அந்த முகமுடியைக் கழற்றிவிட்டுப் பாருங்கள். அன்புக்காக அழுதுகொண்டு இருக்கும் குழந்தையின் வேதனை புரியும்!

முரட்டுத்தனமான குழந்தை. பள்ளியின் ஒரு வகுப்பறையில் மூன்று குழந்தைகளாவது இப்படி இருப்பார்கள். தன்னைப் பலசாலியாகக் காட்டிக் கொள்வது, பக்கத்து இருக்கையில் இருப்பவன் லேசாக இடித்துவிட்டால்கூட காம்பஸில் குத்துவது, ஆசிரியருக்கும் அடங்க மறுத்து அடிவாங்குவது என அழிச்சாட்டியம் செய்வார்கள். வீட்டிலும் அப்படியே. உண்மையில் குடிநோயாளிகளின் செயல்களைப் பார்த்துப் பயந்தும் குழம்பியும் போய் பயத்தைத்தான் அவர்கள் கோபமாக வெளிக்காட்டுகிறார்கள். தந்தையை முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளும் அந்தக்குழந்தைகள், தந்தை செய்வதைப் பின் பற்றுகிறது. வன்முறையில் ஈடுபடுகிறது. இதுவும் ஒரு மனநோயாளிதானே?

இப்படிப் பொறுப்பான குழந்தை, அனுசரித்துப் போகும் குழந்தை, கோமாளிக் குழந்தை, முரட்டுக் குழந்தை என வளரும் குழந்தைகள் எதிர்காலத்தில் என்னவாகும்? அவர்களும் மதுவுக்கு அடிமையாக 90 சதவிகிதம் வாய்ப்பு இருப்பதாகத் திட்டவட்டமாகத் தெரிவிக்கிறார்கள் மருத்துவர்கள்.

முன்னொரு முறை இந்தத் தொடரில் குறிப்பிட்டு இருந்த 'குடிநோயும் கிட்டத்தட்ட ஒரு மரபு நோய் வகையைச் சேர்ந்ததே’ என்பதையும் இங்கு நினைவில் கொள்ளவும். இப்படியும் குடிநோய் தந்தை வழி, தாய் வழியாக அடுத்தடுத்த சந்ததிகளையும் சீரழிக்கிறது. இப்படி உருவாகும் குழந்தைகளே எதிர்காலத்தில் சமூக விரோதிகளாக, கொலைகளைச் செய்யும் கூலிப்படை ரவுடிகளாக, காமக் கொடூரன்களாக, விஷ மரங்களாக விஸ்வரூபம் எடுக்கிறார்கள்.

என்ன செய்யலாம்?

 தெளிவோம்

மதுவின் கொடுமையும் காக்கியின் கருணையும்! 

மது அரக்கன் அரங்கேற்றிவரும் கொடுமைகளை எவ்வளவு எழுதினாலும் தீரவே தீராதுபோல்

மயக்கம் என்ன?

இருக்கிறது. மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த மணிகண்டனுக்கு வயது 20. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மணிகண்டன் எடுத்த மதிப்பெண்கள் 427. தொடர்ந்து, டிப்ளமோ இன் சிவில் இன்ஜினீயரிங் படிப்பை 91 சதவிகித மதிப்பெண்ணில் வகுப்பிலேயே முதல் மாணவனாக முடித்தான். ஆனால், பத்தாவது படிக்கும்போதே அவ்வப்போது மது குடித்தான் மணிகண்டன். இது வீட்டில் யாருக்கும் தெரியாது. எப்படித் தெரியும்? மணிகண்டனின் அப்பா குடிநோயாளி. குடித்துவிட்டு வந்து வீட்டில் தினமும் ரகளைதான்.

ஒருநாள் குடிநோயாளி அப்பா வீட்டைவிட்டு ஓடிவிட்டார். அப்பாவிடம் அடி வாங்கியே சீக்காளி ஆன அம்மாவும் இறந்து போனார். வீட்டில் இருந்தது பார்வைக் குறைபாடுள்ள பாட்டி மட்டுமே. கேட்க ஆள் இல்லை. முட்ட முட்டக் குடித்து மனநோயாளி ஆனான் மணிகண்டன். சமீபத்தில் மணிகண்டனை மீட்ட காவல் ஆய்வாளர் பேசினார்.

''கோரிப்பாளையும் பள்ளிவாசல் தெருவுலதான் சுத்திக்கிட்டு திரிஞ்சான். டாஸ்மாக் வாசல்ல நின்னு போற வர்றவங்ககிட்ட ரெண்டு ரூவா கேட்பான். இப்படியே காசு தேத்தி ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை கட்டிங் போட்டுருவான். பாருக்குள்ள கிடக்கிற காலி பாட்டிலை எல்லாம் வழிச்சுக் குடிப்பான். ரோட்டுல அழகான பொண்ணுங்க போச்சுன்னா, அவங்க முன்னாடி சட்டை, பேன்ட்டைக் கழட்டிட்டு அம்மணமா நிப்பான். ஒரு பொண்ணும் பையனும் சிரிச்சுட்டுப் போனாங்கன்னா, பையனைக் கடுமையாத் தாக்கிட்டு ஓடிடுவான்.

போன செப்டம்பர் 5-ம் தேதி அன்னைக்கு ஏதோ தகராறு செய்து இருக்கான். பப்ளிக் இவனை அடிச்சு, ஆட்டோவுல கட்டிப்போட்டு ஸ்டேஷனுக்குக் கொண்டுவந்தாங்க. பையன் பின்னணியை விசாரிச்ச பிறகுதான், இவனைத் தண்டிக்கக் கூடாது; நல்வழிப்படுத்தணும்னு தோணுச்சு. நண்பர்கள் மூலமா மதுரை அரசு மருத்துவமனையில் மன நலப் பிரிவுல சேர்த்தேன். அங்கே அஞ்சு நாள் சிகிச்சைக்குப் பிறகு, இப்போ கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனைக்கு அனுப்பி இருக்காங்க. நேத்துகூட ஆஸ்பத்திரியில இருந்து பையன் போன் செய்தான். நல்லா இருக்கானாம். ஆனா, குடிக்கணும்போல தோணுதுங்கிறான். எப்படியும் அவனைச் சரிப்படுத்தி, நல்லபடியாக் கொண்டு வரணும்...'' என்கிறார் அந்த நல்ல மனிதர். இந்த அத்தியாயத்தில் படித்த குடிநோயாளிகளால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு கட்டுரையும் இந்த உண்மைக் கதையும் எவ்வளவு பொருந்திப்போகிறது பார்த்தீர்களா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு