ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

மயக்கம் என்ன?

மயக்கம் என்ன?

மயக்கம் என்ன?
##~##

குடிநோய் ஒரு குடும்ப நோய்... அதையும் தாண்டி ஒரு சமூக நோய் என்பதை இந்நேரம் புரிந்திருப் பீர்கள். பிரச்னை என்று ஒன்று இருந்தால், அதற்குத் தீர்வும் இருக்கும். குடிநோயில் இருந்து குடிநோயாளியை மட்டும் அல்ல... அவரது குடும்ப உறுப்பினர்களைக் குணப்படுத்தவும் வழிமுறைகள் இருக்கின்றன. குடிநோயாளிகளுக்கு ஆல்காலிக்ஸ் அனானிமஸ் அமைப்பு என்றால், அவர்களுடைய மனை வியருக்கு 'ஆல் - அனான்’ (Al-anon). குழந்தைகளுக்கு 'ஆல் - அட்டீன்’ (Al-ateen). இவையும் ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் அமைப்பைப் போலவே இயங்குபவை.  உலகம் முழுவதும் 182 நாடுகளில் 30 லட்சம் உறுப்பினர்களுடன் சுமார் ஒன்றரை லட்சம் குழுக் களுடன் இயங்குகிறது ஆல்கஹாலிக்ஸ் அனா னிமஸ் அமைப்பு. 

இந்த அமைப்பினர், தங்களை இன்னார் என்று அடையாளம் காட்டிக்கொள்ள மாட் டார்கள். பத்திரிகை உள்ளிட்ட ஊடகங் களில் விளம்பரப்படுத்த மாட்டார்கள். இதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, குடிநோயாளி யின் தனிப்பட்ட வாழ்க்கை ரகசியம் காக்கப்பட வேண்டும். அப்போதுதான் குடிநோயாளி நம்பிக்கையோடு, இந்த அமைப்புடன் ஒருங்கிணைந்து செயல்படுவார். இரண்டாவது காரணம், அமைப்புக்கு விளம்பரங்கள் அதி கரித்து... வெகுஜன அமைப்பைப்போல் ஆகிவிட்டால் இதை வணிகரீதியாக சிலர் பயன்படுத்திக்கொள்வார்கள் என்ற ஜாக்கிரதை உணர்வு. அதனால்தான் அமைப்பின் பெயரி லேயே 'அடையாளமற்ற’ என்ற பொருள்படும் 'அனானிமஸ்’ இருக்கிறது.

மயக்கம் என்ன?

இந்த அமைப்பு உருவானது எப்படி? சுவாரஸ் யமான வரலாறு அது.

அமெரிக்காவில் இன்று, பாரில் ஆரம்பித்து பஃப் வரை குடிநோயாளிகள் நிறைந்து இருந்தாலும் குடிப்பதற்கு வயதுவரம்பு, நேரம், காலம், ஒழுங்குமுறை என்று பல்வேறு சட்டதிட்டங்களை அரசு கண்டிப்புடன் செயல்படுத்துகிறது. அதனால், அவர்கள் என்னதான் குடித்தாலும் ஓரளவேனும் கட்டுக்கோப்புடன் நடந்துகொள்கிறார்கள். ஆனால், 1840-களில் அமெரிக்காவில் மது கட்டுப்பாடு இல்லாமல் ஆறாக ஓடியது. நேரம், காலம், இடம், பொருள் பார்க்காமல் குடித்தனர். வீட்டுக்குவீடு குடிநோயாளிகள் உருவானார்கள். தெரு எங்கும் குடிநோயாளிகள் மயங்கிக் கிடந்தனர். குறிப்பாக, வாஷிங்டன் நகரமே குடிநோயால் பீடிக்கப்பட்டு இருந்தது - இன்றைய தமிழகத்தைப்போலவே!

இன்றைக்கு, தமிழருவி மணியனைப் போல... ராமதாஸைப் போல... ஜவாஹிருல்லாவைப் போல அன்றைக்கு வாஷிங்டன் நகரிலும் மதுவிலக்கை வலியுறுத்தியவர்கள் இருந்தனர். அவர்களில் சிலர், 1842-ம் ஆண்டு 'வாஷிங்டோனியன்’ என்ற அமைப்பை உருவாக்கினர். குடிநோயாளிகளை அந்த நோயில் இருந்து மீட்பது மற்றும் மதுவை ஒழிப்பது என்பதுதான் அந்த அமைப்பின் அடிப்படை நோக்கம். அமெரிக்காவில் அப்போது, குடிநோய் முற்றிப்போயிருந்த காரணத்தால் கூட்டம் கூட்டமாக இந்த அமைப்புக்கு உறுப்பினர்கள் வந்து சேர்ந்தனர். சில மாதங்களிலேயே அமைப்பின் உறுப்பினர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தொட்டது. வாஷிங்டோனியனின் செல்வாக்கைப் பார்த்த நகரின் பெரும்வர்த்தகர்களும் வணிக நிறுவனங்களும் அமைப்பில் இணைந்தன. ஆனால், தெளிவற்ற கொள்கைகளும் விதிமுறைகளுமே இருந்தது. அதனால், வர்த்தகர்களும் வணிக நிறுவனங்களும் வாஷிங்டோனியனை தங்கள் வணிகத்துக்காகப் பயன்படுத்திக்கொண்டனர். அந்தசமயம், அமெரிக்காவில் நிலவிய கறுப்பர் - வெள்ளையர் இனப்பிரச்னையிலும் இந்த அமைப்பு தலையிட்டு ஏராளமான சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டது. விளைவு, சில காலத்தில் அந்த அமைப்பே அழிந்தே போனது!

அதன்பிறகு, நியுயார்க்கில் 'ஆக்ஸ்ஃபோர்டு’ என்ற அமைப்பு உருவானது. அந்த அமைப்பு குடிமீட்பு மட்டுமின்றி மதரீதியான கொள்கைகளைக்கொண்டு ஆன்மிகப் பணிகளிலும் ஈடுபட்டது. இந்த அமைப்பு குடிநோய் மீட்புக்காக ஆறு வழிமுறைகளை வகுத்து இருந்தது. அவை...

* குடியுடன் போராட முடியாது என்பதை ஒப்புக்கொள்ளுங்கள்.

* உங்களுக்கு மேல் ஒரு சக்தி இருக்கிறது என்பதை உணருங்கள்.

* அந்த சக்தியிடம் சரண் அடையுங்கள்.

* உங்கள் குணங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.

* இதுவரை செய்த தவறுகளுக்குப் பரிகாரம் தேடுங்கள்.

* அடுத்தவரையும் குடிநோயில் இருந்து மீள உதவுங்கள்.

மதரீதியான சேவைகளில் அந்த அமைப்பு அதிகம் ஈடுபட்டதால், காலப்போக்கில் மது மீட்பு விஷயங்களில் செயல்பாடுகளை அது குறைத்துக் கொண்டது.

நிற்க. 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்துக்கு வருவோம். 1925-ம் ஆண்டு. அமெரிக்காவைச் சேர்ந்த பில், அடிப்படையில் போர்வீரர். போருக்குப் பின் பில், நியூயார்க் பங்குச் சந்தையில் தொழில் செய்தார். நன்றாகச் சம்பாதித்து கோடீஸ்வரர் ஆனார். அதே சமயம், அவரது கேளிக்கைகளும் மது அருந்தும் பழக்கமும் அதிகரித்தது. சில ஆண்டுகளிலேயே மொடாக்குடியர் ஆனார். அவரது மனைவி எவ்வளவு அறிவுறுத்தியும் கண்டித்தும் பில்லினால் குடிநோயில் இருந்து மீள முடியவில்லை.

மயக்கம் என்ன?

விடியற்காலையில் கண் விழித்ததும் பில்லுக்கு காபிக்குப் பதில் மது வேண்டும். இல்லையெனில், அவருக்கு கையும் இயங்காது; காலும் ஓடாது. பல நேரங்களில் மனைவியே ஊற்றிக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அவரது அதீத மதுப்பழக்கம் காரணமாக தொழிலில் கவனம் செலுத்த முடியவில்லை. நடுவில் சட்டப் படிப்பும் படித்தார். ஆனால், ஒரு நாள் மட்டையாகிவிட்ட காரணமாக இறுதித் தேர்வை அவரால் எழுத முடியவில்லை. எல்லாவற்றிலும் தோல்வி. தொழிலில் பெரும்நஷ்டம். கடன் கழுத்தை நெரித்தது. ஒரு கட்டத்தில், வீடும் அடமானத்தில் போய்விட்டது. மாமியாரின் வீட்டை அண்டிப் பிழைக்க வேண்டிய நிலை. மருமகனைப் பார்த்துக் கலங்கி, குடும்ப நோயால் பீடிக்கப்பட்ட மாமியாரும் இறந்து விட்டார். மனைவியும் நோயாளியாகி விட்டார்.

குடியை நிறுத்தியே ஆக வேண்டும் என்று பலமுறை மருத்துவச் சிகிச்சை எடுத்துக்கொண்டார் பில். ஆனால், மருத்துவமனையிலேயே மது குடித்தார். பரமபத விளையாட்டைப்போல குடிநோயில் இருந்து மீளமுயற்சித்து பல முறை மேலே சென்றார். சில நாட்களில்... சில வாரங்களில்... சில மாதங்களில் என மீண்டும் மீண்டும் கீழே விழுந்தார். பல நேரங்களில் பில்லுக்கு மன உளைச்சல் அதிகமாகி தற்கொலை சிந்தனைகளும் மேலோங்கின. அவர் தங்கி இருந்த மேல் மாடியின் ஜன்னல் கண்ணாடியை உடைத்துக்கொண்டு கீழே குதித்து சாகும்படி பில்லின் காதுக்குள் கட்டளையிட்டது, ஆடிட்டோரி ஹாலுசினேஷன். பயந்துபோய் மேல் மாடியைக் காலி செய்துவிட்டு, தரைத்தளத்துக்குக் குடிபெயர்ந்தார். எந்நேரமும் மதுப்புட்டி வேண்டும் பில்லுக்கு. மனைவி கூலி வேலைக்குச் செல்ல... அவர் சம்பாதிக்கும் பணத்தைத் திருடிக் குடித்தார் பில்.  

ஒரு நாள் பில்லின் பழைய நண்பர் எபி என்பவர் பில்லுக்குப் போன் செய்தார். ஆரம்ப நாட்களில் பில்லுடன் சேர்ந்து ஒன்றாக சரக்கடித்த மதுப் பங்காளி அவர். இருவரும் சேர்ந்து போடாத ஆட்டம் இல்லை. பூமியில் குடித்தது போதாது என்று ஒருமுறை இருவரும் குட்டி விமானத்தை வாடகைக்கு எடுத்துக் கொண்டுபோய் வானத்தில் குட்டிக்கரணம் அடித்து சரக்கு அடித்து இருக்கிறார்கள். நண்பனின் குரலை போனில் கேட்ட பில்லுக்கு உற்சாகம் ஊற்று எடுத்தது. பழைய நினைவுகள் திரண்டன. அன்றைய தினம் குடிக்கலாமா... வேண்டாமா? என்று பில் நடத்திக்கொண்டு இருந்த மனப்போராட்டத்துக்கு தீர்வு கிடைத்துவிட்டது. பல ஆண்டுகள் கழித்து எபியைப் பார்க்கப்போகிறேன். அவனுடன் சேர்ந்து பழங்கதைகள் பேசிச் சிரிக்கலாம். இஷ்டத்துக்கு மது அருந்தலாம். ஆடிப் பாடலாம் என்று பலப்பல போதைக் கனவுகளில் மிதந்தார் பில்.

எபியும் வந்தார். ஆனால், எப்படி? குடிநோயின் சாயல் சுத்தமாக எபியின் முகத்தில் இல்லை. கண்கள் ஒளி வீசின. முகம் பிரகாசித்தது. அவரிடம் இருந்து அட்சரசுத்தமாக வந்து விழுந்தன தீர்க்கமான வார்த்தைகள் - 'நான் குடிப்பது இல்லை. குடியை எப்போதோ நிறுத்தி விட்டேன். நான் ஆக்ஸ்ஃபோர்டு அமைப்பின் உறுப்பினர்’ என்றார்!

 தெளிவோம்

டிக்... டிக்... டிக்

சமீபத்தில் அலுவலகத்துக்கு போன் மூலம் வாசகர் ஒருவர் பகிர்ந்துகொண்ட தகவல் இது. அவர் தனது பெண்ணுக்கு மாப்பிள்ளை தேட ஆன்லைன் மேட்ரிமோனியல் நிறுவனத்துக்குப் பணத்தை செலுத்தி, அதன் இணையதளத்துக்குள் சென்று இருக்கிறார். அதில் மாப்பிள்ளையைத் தேர்வு செய்வதற்கான விண்ணப்பத்தில் மாப்பிள்ளை படித்தவர், படிக்காதவர், அலுவலகத்தில் வேலை பார்ப்பவர், சுயதொழில் புரிபவர், ஆங்கிலம் தெரியும், ஆங்கிலம் தெரியாது என்பது போன்ற பல்வேறு விவரங்களுடன் 'குடிப்பழக்கம்’ என்று ஒரு கேள்வியையும் கேட்டு இருக்கிறார்கள். தன்னிச்சையாக மாப்பிள்ளை தேடும் இளம்பெண்கள் பலரும் சில பெற்றோரும் அந்தக் கட்டத்தில் 'பரவாயில்லை’ என்று 'டிக்’ அடித்து இருப்பதுதான் அதிர்ச்சியிலும் அதிர்ச்சி. எங்கே போகிறது நம் சமூகம்?

 தாலிக்கயிற்றில் மதுபாட்டில்!

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி தென்னிந்திய காந்தி கிராம நிர்மாண் சேவாதளம் அமைப்பு சென்னையில் கடந்த ஞாயிறு அன்று ஆர்ப்பாட்டம் நடத்தியது. பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் குமரிஅனந்தன் , தங்கபாலு, பழ.நெடுமாறன் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியினர் திரண்டு வந்து ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு அளித்தனர். பெண்கள் தாலிக் கயிற்றில் மது பாட்டிலை கட்டிக்கொண்டு வந்து மதுவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் பேசிய ராமதாஸ், ''இந்தியாவிலேயே இளம் விதவைகள் அதிகம் இருக்கும் மாநிலம் தமிழகம்தான். அதற்குக் காரணம் மது...'' என்றார். ஞானதேசிகன், ''தமிழகத்தில் மதுவிலக்கைக் கொண்டு வந்தால் அதற்கு காங்கிரஸ் கட்சி உறுதுணையாக நிற்கும். மதுவிலக்கு வேண்டி, இதுபோன்ற போராட்டங்கள் அடிக்கடி நடத்தப்பட வேண்டும்...'' என்றார்!