Published:Updated:

காணாமல் போன 277 கொரோனா நோயாளிகள்... தேடுதல் வேட்டையில் சென்னை காவல்துறை!

ஆய்வில் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்
ஆய்வில் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்

தவறான முகவரி கொடுத்துவிட்டு எஸ்கேப் ஆன 277 கொரோனா நோயாளிகளைக் கண்டுபிடிக்க சென்னை மாநகர காவல்துறை தனி டீமுடன் களமிறங்கியுள்ளது.

கொரோனா தொற்றைக் கண்டறிய சென்னையில் மட்டும் 18 தனியார் ஆய்வகங்களில் பரிசோதனை எடுத்துக்கொள்ள முடியும். இங்கு சோதனை செய்துகொள்பவர்கள் தங்களது முகவரி, மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை அளிக்க வேண்டும். சோதனையில் கொரோனா பாசிட்டிவ் என ரிசல்ட் வந்தால், உடனடியாக அந்தத் தகவலை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அந்தந்த தனியார் ஆய்வகங்கள் தெரிவிக்க வேண்டும். சோதனை செய்துகொள்பவர்கள் அனைவரின் லிஸ்ட்டும் தினமும் மாநகராட்சிக்கு அனுப்பப்படுகிறது.

சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி

இப்படி அளிக்கப்பட்ட முகவரிகளில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தபோது பலர் போலியான முகவரி கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது. கடந்த மே 23-ம் தேதி முதல் ஜூன் 10-ம் தேதி வரையில், கொரோனா பாசிட்டிவ் ரிசல்ட் பெற்ற 277 பேர் போலியான முகவரி, மொபைல் எண் கொடுத்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் யார்? எங்கே இருக்கிறார்கள்? என்பது தெரியாமல் மாநகராட்சி அதிகாரிகள் திண்டாடுகின்றனர்.

`தலைமைச் செயலக ஊழியர்; முதல்வர் நிகழ்ச்சிகளை கவர் செய்தவர்!’- அரசு புகைப்படக் கலைஞருக்குக் கொரோனா

இதுகுறித்து நம்மிடம் பேசிய மாநகராட்சியின் சுகாதாரத்துறை உயரதிகாரி ஒருவர், “பரிசோதனைக்கு வருபவர்களின் அடையாள அட்டையை சரிபார்த்து, ஒரு நகலை பெற்றுக்கொண்ட பின்னரே தனியார் ஆய்வகங்கள் அனுமதிக்க வேண்டும். இது எதையும் செய்யாமல், ஒரு நோட் புத்தகத்தில் பெயர், முகவரி, மொபைல் எண்களை எழுதிக்கொண்டு சோதனை செய்து அனுப்புகின்றனர். அந்த முகவரிகளுக்குச் சென்று பார்த்தால் அப்படி ஒரு நபரே இருப்பதில்லை. சில முகவரிகள் மாநகராட்சி அலுவலகங்கள் பெயரிலேயே இருப்பதுதான் வேடிக்கை. பரிசோதனை மேற்கொள்பவர்கள் எதற்கும் அச்சப்படத் தேவையில்லை. வெளிப்படையாக முகவரி, மொபைல் எண் விவரங்களை அளித்தால்தான் அவர்களுக்கு எங்களால் உதவ முடியும். மேலும், சம்பந்தப்பட்டவர்களால் தொற்று மேலும் பரவாமலும் தடுக்க முடியும். பொதுமக்கள் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும்” என்றார்.

ஆய்வில் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன்
ஆய்வில் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன்

சென்னை பெருநகர காவலர்களிடையே நம்பிக்கையை உருவாக்கும் விதத்தில், கொரோனா தொற்று பாதிப்படைந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள நுங்கம்பாக்கம், சூளைமேடு, ஐஸ் ஹவுஸ், கோட்டூர்புரம் பகுதிகளில் நேற்று ஜூன் 14-ம் தேதி சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் திடீர் விசிட் அடித்தார். தொலைவில் நின்றுகொண்டே, தனிமைப்படுத்தப்பட்ட பகுதி மக்களிடம் குறைகள் ஏதும் இருக்கிறதா எனவும் கேட்டறிந்தார். கொரோனா நோயாளிகள் 277 பேர் காணாமல் போயுள்ள விவகாரத்தைத் தற்போது கையில் எடுத்துள்ள கமிஷனர், இவர்களைக் கண்டுபிடிப்பதற்கு தனி டீமை களமிறக்கியுள்ளார்.

ஜெ.அன்பழகன் பொறுப்பு யாருக்கு? வலுக்கும்போட்டி... குழப்பத்தில் ஸ்டாலின்!

சென்னை பெருநகர காவல்துறை உயரதிகாரி ஒருவரிடம் பேசினோம். புதிய அப்டேட் ஒன்றை அளித்தார். ''நாங்கள் தேடிய பலர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருக்கிறார்கள். வேறு சிலர் அவரவர் வீட்டில் தனிமைப்படுத்தலில் இருக்கிறார்கள். இன்னும் சிலர் முழுவதுமாகக் குணமாகி வேறு மாநிலங்களுக்குச் சென்றுவிட்டனர். இந்த மூன்று ரகத்தினர் சரியான முகவரி, போன் எண்ணைக் கொடுத்திருக்கிறார்கள். அதனால், எங்களுக்கு அவர்களைத் தொடர்புகொள்வதில் சிரமம் ஏற்படவில்லை.

இவர்களைத் தவிர கணிசமானவர்கள் போலியான அட்ரஸ், தவறான போன் எண்களை ஆய்வகங்களில் கொடுத்துவிட்டுப் போயிருக்கின்றனர். அவை, கிராஸ் செக் செய்யாமல் கோட்டை விட்டது சுகாதாரத்துறை, கணக்கில் குளறுபடி செய்தது மாநகராட்சி. கடைசியில், எங்கள் தலையில் பொறுப்பு வந்துவிட்டது.

ஆய்வில் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன்
ஆய்வில் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன்

277 பேரில் பாதிப்பேர் எங்கும் ஓடிவிடவில்லை, கண்காணிப்பில்தான் இருக்கிறார்கள். மீதியுள்ளவர்களைத்தான் தேடுகிறோம். போலியான முகவரி கொடுத்துவிட்டுச் சென்றவர்கள் அவர்களாகவே தங்களை வெளிப்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்கிறோம். சென்னை மாநகராட்சியின் கொரோனா தடுப்பு இலவச உதவி எண்ணை தொடர்புகொண்டு விவரங்களை அவர்கள் கூறலாம். நாங்களாகப் பிடித்தால், தொற்று நோய் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரித்தார்.

போலி முகவரி அளித்தவர்களின் பொறுப்புணர்வற்ற செயல்பாட்டால், ஏகப்பட்ட சிக்கல்கள் எழுந்துள்ளன. இனி எந்தப் பரிசோதனை மேற்கொள்வதாக இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்களின் ஆதார் எண்ணைப் பெற்றுக்கொண்ட பின்னரே சோதனைக்கு அனுமதிக்கும்படி அனைத்து ஆய்வகங்களுக்கும் சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு