Published:Updated:

ஆக்ஸிஜன் சப்ளையில் பிரச்னை; 4 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு! - மகாராஷ்டிராவில் தொடரும் சோகம்

வெப்பநிலை சோதிக்கப்படுகிறது
வெப்பநிலை சோதிக்கப்படுகிறது

ஆக்ஸிஜன் சப்ளையில் பிரச்னை ஏற்பட்டு மும்பை அருகிலுள்ள தானேயில் நான்கு கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.

மும்பை அருகேயுள்ள விராரில், இரண்டு நாள்களுக்கு முன்பு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டு 13 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர். இதே போன்று நாசிக் மாநகராட்சி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் கசிவு ஏற்பட்டு 24 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தநிலையில், மும்பை அருகிலுள்ள தானே வர்த்தக் நகரில் இருக்கும் வேதாந்த் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சப்ளையில் பிரச்னை ஏற்பட்டு நான்கு கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் இது குறித்து விசாரிக்க கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

ஆக்ஸிஜன் ரயில்
ஆக்ஸிஜன் ரயில்

இது குறித்த செய்தி கேள்விப்பட்டதும், அரசியல் தலைவர்கள் இந்த மருத்துவமனைக்குச் சென்று பார்வையிட்டனர். அதோடு நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவமனைக்கு வெளியில் போராட்டம் நடத்தினர். இதற்கிடையே ஆறு பேர் இறந்திருப்பதாக பாஜக தலைவர்களில் ஒருவரான கிரீத் சோமையா குற்றம்சாட்டியுள்ளார். ``தாக்கரே ஆட்சியில் தீ விபத்துகளாலும், ஆக்ஸிஜன் பற்றாக்குறையாலும் கொரோனா நோயாளிகள் உயிரிழந்துகொண்டிருக்கின்றனர். அப்படியிருந்தும் ஏன் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபேயை பதவிநீக்கம் செய்யவில்லை?” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கிடையே மும்பையில் கொரோனாவைக் கட்டுப்படுத்த கொரோனா நோயாளிகள் இருக்கும் கட்டடத்துக்கு வெளியில் போலீஸார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஐந்து கொரோனா நோயாளிகள் ஒரு கட்டடத்தில் இருந்தால் அந்தக் கட்டடம் சீல் வைக்கப்படும். அது போன்ற கட்டடங்களில் சிறப்பு போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்புக்குப் போடப்பட்டுள்ளனர். கொரோனா விதிகளை யாரும் மீறிவிடக் கூடாது என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று மும்பை போலீஸ் செய்தித் தொடர்பாளர் சைதன்யா தெரிவித்தார்.

ஆக்ஸிஜன் சிலிண்டர்கள்
ஆக்ஸிஜன் சிலிண்டர்கள்
Matias Delacroix/ap

1,100 சிறப்பு போலீஸ் அதிகாரிகள் இது போன்று சீல் வைக்கப்பட்ட கட்டடங்களுக்கு வெளியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். கடுமையான கட்டுப்பாடு காரணமாகவே மும்பையில் கடந்த சில நாள்களாக கொரோனாவின் தாக்கம் சற்று குறையத்தொடங்கியிருக்கிறது. அதே சமயம் இது போன்ற பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மேலும் மூன்று போலீஸார் மும்பையில் உயிரிழந்துள்ளனர். கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க குஜராத்திலிருந்து ரயில் மூலம் மூன்று டேங்கர்களில் ஆக்ஸிஜன் மும்பைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஒவ்வொரு டேங்கரும் தலா 15 டன் அளவு கொண்டது. இது குஜராத்திலுள்ள ஹாபா என்ற இடத்திலிருந்து ரயில் மூலம் கொண்டு வரப்பட்டது. டேங்கர் லாரி ரயிலில் ஏற்றப்பட்டு ரயிலில் கொண்டு வரப்பட்டது. இதை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் வழங்கியுள்ளது. ஏற்கெனவே விசாகப்பட்டினத்திலிருந்து ரயில் மூலம் ஆக்ஸிஜன் மகாராஷ்டிராவுக்குக் கொண்டு வரப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு