Published:Updated:

`ஒரே நாளில் 48 பேர் டிஸ்சார்ஜ்!' - நம்பிக்கையளித்த கரூர் மருத்துவக் கல்லூரி

நலம்பெற்று திரும்பும் கொரோனா பாதித்த நோயாளிகள்
நலம்பெற்று திரும்பும் கொரோனா பாதித்த நோயாளிகள் ( நா.ராஜமுருகன் )

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இருவர், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 13 பேர், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 33 பேர் என மொத்தம் 48 பேர் ஒரே நாளில் நலம்பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதித்து, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது மருத்துவர்களின் தொடர் சிகிச்சையால் பூரண குணமடைந்துள்ள 48 நபர்களை, கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன் அவரவர் வீட்டுக்கு வழியனுப்பிவைத்தார்.

நலம் பெற்று திரும்பும் கொரோனா பாதித்த நோயாளிகள்
நலம் பெற்று திரும்பும் கொரோனா பாதித்த நோயாளிகள்
நா.ராஜமுருகன்

இவர்களையும் சேர்த்து மொத்தம் 101 கொரோனா தொற்று நோயாளிகள் குணமடைந்து, வீடுகளுக்குச் சென்றுள்ளது பொதுமக்கள் மத்தியில் புது நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

பூரண குணமடைந்த 9 கொரோனா நோயாளிகள்.. நேரில் வந்து வழியனுப்பி வைத்த கரூர் ஆட்சியர்!

சீனாவில் உருவான கொரோனா வைரஸ், இன்று உலகம் முழுக்க பீதியை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. 'உலகின் அண்ணன்' அமெரிக்காவையே ஒரு ஆட்டு ஆட்டிக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் அதன் தாக்கத்தை கொஞ்சம் தாமதமாக உணர்ந்தாலும், தொடர் நடவடிக்கை மற்றும் தொடர் ஊரடங்கால் ஓரளவு கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். நேரடியாக கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு செலுத்தக்கூடிய மருந்து இன்னமும் கண்டுப்பிடிக்கப்படவில்லை என்றாலும், மருத்துவர்கள் தங்களது அயராத சிகிச்சையால் பலரை குணமாக்கியது, மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

நலம் பெற்று திரும்பும் கொரோனா பாதித்த நோயாளிகள்
நலம் பெற்று திரும்பும் கொரோனா பாதித்த நோயாளிகள்
நா.ராஜமுருகன்

இந்த நிலையில், கரூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்றால் சிகிச்சைபெற்று வருபவர்களில் 48 பேர், ஒரே நாளில் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது, கரூர் மாவட்ட மக்களை நிம்மதிப் பெருமூச்சுவிட வைத்துள்ளது. நலம்பெற்று திரும்பும் அவர்களை உற்சாகமாக வழியனுப்பிவைக்கும் வகையில், கைகளைத் தட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அனுப்பிவைத்தனர்.

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கொரோனா வைரஸ் பாதித்து சிகிச்சைபெற்று வந்தவர்களில், ஏற்கனவே 53 பேர் நலம் பெற்று வீடு திரும்பினர். இந்த நிலையில், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இருவர், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 13 பேர், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 33 பேர் என மொத்தம் 48 பேர் ஒரே நாளில் நலம்பெற்று வீடு திரும்பியுள்ளனர். இவர்களையும் சேர்த்து, இதுவரை மொத்தமாக 101 நபர்கள் கொரோனா வைரஸ் அறிகுறி காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு, உரிய சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

இதன்மூலம், தமிழக அளவில் அதிக பேர் நலம்பெற்று திரும்பியுள்ள பெருமையை, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பெற்றுள்ளது. பூரண குணமடைந்து வீடு திரும்பிய 48 பேர்களுக்கும் வாழ்த்துகள் கூறி, பழங்கள் கொடுத்து, மாவட்ட ஆட்சியர் அன்பழகன் வழியனுப்பிவைத்தார். மருத்துவர்களும், செவிலியர்களும் கைத்தட்டி வாழ்த்துகள் கூறி, அவர்களை வழியனுப்பிவைத்தனர். இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் ரோஸி வெண்ணிலா உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் உடனிருந்தனர்.

நலம் பெற்று திரும்பும் கொரோனா பாதித்த நோயாளிகள்
நலம் பெற்று திரும்பும் கொரோனா பாதித்த நோயாளிகள்
நா.ராஜமுருகன்

நலம்பெற்றுத் திரும்பும் நபர் ஒருவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர்கள் முதல் மருத்துவர்கள் வரை அனைவரும் எவ்வித பாகுபாடுமின்றி, சுகாதாரமான உணவுகளை உரிய நேரத்தில் வழங்கியும், நன்கு பராமரித்ததாலும்தான் நாங்கள் நலம்பெற்றுத் திரும்புகிறோம். எங்களின் இந்த நிலைக்குக் காரணம், மருத்துவக் குழுவினர்தான். அவர்களை என் வாழ்நாளைக்கும் மறக்க மாட்டேன்" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு