Published:Updated:

இந்தியா: மூன்று நாளில் 3.8 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி! - 580 பேருக்கு எதிர்மறை விளைவுகள்!

கோவிட்ஷீல்டு கொரோனா தடுப்பூசி
கோவிட்ஷீல்டு கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட 447 நபர்களுக்கு எதிர்மறை விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல்களை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ், உலகின் பல்வேறு நாடுகளிலும் பேய் ஆட்டம் ஆடிச் சென்றது. உலகின் வல்லரசு நாடுகளையும் விட்டுவைக்கவில்லை இந்த வைரஸ். உலக மக்கள் அனைவருமே எதிர்பார்த்துக் காத்திருந்தது இந்த வைரஸை ஒழிப்பதற்கான மருத்தைத்தான். ஏற்கனவே பல்வேறு நாடுகள் கொரோனா தடுப்பு மருந்தைப் பயன்படுத்த ஆரம்பித்திருந்த நிலையில், உலகின் மிகப்பெரிய கொரோன தடுப்பூசி போடும் பணி இந்தியாவில் கடந்த சனிக்கிழமை தொடங்கியது. இதைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் கோவிட்-19 தடுப்பூசி
தமிழகத்தில் கோவிட்-19 தடுப்பூசி

ஏற்கனவே 5.36 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 20 ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசிகளைத் தமிழகம் வந்தடைந்து. அவை அனைத்து மாவட்டங்களுக்குப் பத்திரமாகப் பிரித்து அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. இந்திய அளவில் 3,000 தடுப்பூசி போடும் மையங்களும், தமிழகத்தில் 166 மையங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை தடுப்பூசி முகாமில் முதல்வர் பழனிசாமி கொரோனா தடுப்பூசி போடும் பணியைத் துவங்கி வைத்தார்.

தடுப்பூசி போடும் பணி தொடங்கிய முதல்நாளே இந்தியா முழுவதும் 1.91 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இரண்டாவது நாள் ஞாயிறு என்பதால் தமிழகம், கேரளா, கர்நாடகா, மணிப்பூர் மற்றும் அருணாசலப் பிரதேசம் ஆகிய ஆறு மாநிலங்களில் மட்டுமே தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. இங்கு மொத்தம் 17,072 நபர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். மூன்றாவது நாளின் முடிவில் 3.8 லட்சத்துக்கும் அதிகமான முன்களப் பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்கின்றனர்.

தமிழகத்தில் முதல்நாளில் 3,126 நபர்களும், இரண்டாவது நாளில் 3,030 நபர்களும் , மூன்றாவது நாளில் 10,256 நபர்களும் என மொத்தம் 16,462 நபர்கள் இதுவரை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்கிறார்கள்
தமிழக சுகாதாரத்துறை

3.8 லட்சத்திற்கும் அதிகமான நபர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில், 580 நபர்களுக்கு எதிர்மறை விளைவுகள் ஏற்பட்டுள்ளதாகவும், அதில் ஏழு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் சுகாதாரத்துறை தகவல்களை வெளியிட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொண்ட டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை ஊழியர் ஒருவருக்கு இதயத்துடிப்பு அதிகரித்ததுடன் உடலில் தடிப்புகள் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பிலிருந்த அவர் தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை: கொரோனா தடுப்பூசி முகாம்! - ஒரு ஸ்பாட் விசிட்

கொரோனா தடுப்பூசி குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், ``கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளுமே, அனைத்து சோதனைகளும், ஆய்வுகளுக்கும் உட்படுத்தப்பட்டு அதற்குப் பிறகு தான் அவசரகாலப் பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசிகள் குறித்து அச்சம் கொள்ள வேண்டாம்" என்றார்.

ஹர்ஷ் வர்தன்
ஹர்ஷ் வர்தன்

மேலும் தொடர்ந்து பேசிய அவர், ``உங்கள் அனைவருக்குமான வாய்ப்பு வரும்போது தவறாது தடுப்பூசி எடுத்துக்கொள்ளுங்கள். தடுப்பூசி போடும் பணிகளில் இதுவரை எந்த பிரச்னையின் ஏற்படவில்லை. தவறான தகவல்களையும், வதந்திகளையும் நம்பாதீர்கள்" என்று கூறினார்.

தடுப்பூசி போடத் தொடங்கிய இரண்டாவது நாளில் திருச்சி தலைமை அரசு மருத்துவமனையில் தடுப்பூசி நடவடிக்கைகளைப் பார்வையிடச் சென்ற தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், தானும் கோவேக்சின் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டார். நேற்று மட்டும் திருச்சி மாவட்டத்தில் 70 நபர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார்.

தடுப்பூசிப் போட்டுக்கொள்ளும் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்
தடுப்பூசிப் போட்டுக்கொள்ளும் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்

மற்ற தடுப்பூசிகளை போல இந்த கொரோனா தடுப்பூசி போடும்போதும் சிலருக்கு சிலருக்குக் காய்ச்சல், வலி போன்ற எதிர்மறை நிகழ்வுகள் நடப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. அனைத்துவகை பரிசோதனைகளையும் முடித்த பிறகுதான் தடுப்பூசி அவசரகால பயன்பாட்டுக்கு வந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தடுப்பூசியின் பாதுகாப்பு, செயல்திறன்... கொரோனா அச்சம் குறைந்த சூழலில் மக்களிடையே ஆர்வம் இருக்குமா?

உத்திர பிரதேசத்தில் உள்ள மொராதாபாத் மாவட்ட மருத்துவமனையில் மஹிபால்சிங் வார்ட்பாயாக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 16-ம் தேதி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். தடுப்பூசி போட்டுக்கொண்ட அடுத்த 24 மணிநேரத்திற்குள் உயிரிழந்துள்ளார். மஹிபால்சிங் இறப்புக்குத் தடுப்பூசியைக் காரணம் என்று அவரின் உறவினர்கள் தெரிவிக்கிறார்கள். பிரேதப்பரிசோதனையில், மாரடைப்பால் மஹிபால்சிங் இறந்ததாகவும், அவரின் இறப்புக்கும் தடுப்பூசிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அந்த மாவட்ட மருத்துவமனை தெரிவித்துள்ளது.

மேலும் கர்நாடக மாநிலம் பெல்லாரியை சேர்ந்த சுகாதாரப் பணியாளர் நாகராஜு (43) கடந்த ஜனவரி 16-ம் தேதி கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டார். அவர் ஜனவரி 18-ம் தேதி உயிரிழந்தார். இவரின் இறப்புக்கு இருதய மற்றும் நுரையீரல் செயலிழப்பேக் கரணம் என்றும் சுகாதாரத்துறை கூறிவருகிறது. எனினும் இவரின் உடல் இன்னும் பிரேதப்பரிசோதனை செய்யப்படவில்லை. விரைவில் பெல்லாரியில் உள்ள விஜயநகர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிகல் சயின்ஸ் மருத்துவமனையில் பிரேதப்பரிசோதனை நடைபெற உள்ளது. பிரேதப்பரிசோதனை முடிவுகள் வந்ததுமே முழுமையான காரணங்கள் தெரியவரும்.

மருத்துவர் ப்ரின்சி
மருத்துவர் ப்ரின்சி

கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட எழும்பூர் அரசு தாய் சேய் நல மருத்துவமனை மருத்துவர் ப்ரின்சியிடம் பேசிய போது, ``நான் முதல் நாள் தடுப்பூசி எடுத்துக்கொண்டேன், தவிர எனக்கு இதுவரை எந்த உடல் பிரச்னையும் இல்லை. கண்டிப்பாக அடுத்த தடுப்பூசியும் எடுத்துக்கொள்வேன். மற்றவர்களுக்கும் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளப் பரிந்துரை செய்வேன்"என்று கூறினார்.

அடுத்த கட்டுரைக்கு