Published:Updated:

`தனிமைப்படுத்தப்பட்ட 997 வீடுகள்!’-சர்ச்சையைக் கிளப்பிய புதுச்சேரி அரசின் `கொரோனா தொற்று’ ஸ்டிக்கர்

கொரோனா
கொரோனா

புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தொற்று என சந்தேகப்படும் வீடுகளை, `தனிமைப்படுத்தப்பட்ட வீடுகள்’ என்ற அறிவிப்புடன் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் வைத்திருக்கிறது புதுச்சேரி சுகாதாரத்துறை.

புதுச்சேரியில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார் 31-ம் தேதி வரை 144 தடையுத்தரவு மற்றும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் உள்ளிட்ட 4 பிராந்தியங்களிலும் கொரோனா தொற்று என சந்தேகிக்கப்படும் 997 பேர் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் புதுச்சேரி அரசால் கண்காணிக்கப்படுகின்றனர்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

அந்த வீடுகளின் முன்பு ``கொரோனா தொற்று, உள்ளே நுழையாதே, தனிமைப்படுத்தப்பட்ட வீடு” என்ற புதுச்சேரி அரசின் அறிவிப்புடன், அந்த வீட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்ற தகவலுடன் அட்டை ஒட்டப்பட்டிருக்கிறது.

மேலும், எந்தத் தேதியில் இருந்து எந்தத் தேதிவரை அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர் என்ற தகவலும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. வீட்டு உரிமையாளரின் பெயர், முகவரி, வீட்டில் எத்தனை பேர் என்ற விவரங்கள் தெளிவாக உள்ளன. கொரோனா தொற்று உறுதி செய்யப்படாத நிலையில், புதுச்சேரி அரசின் இந்த ஸ்டிக்கர் வாசகங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றன.

கொரோனா
கொரோனா

இதுதொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறையின் இயக்குநர் டாக்டர் மோகன் குமாரிடம் பேசியபோது,``வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்கள், அவர்களுடன் பழகியவர்கள், அண்டை மாநிலங்களுக்குச் சென்று வந்தவர்கள் என அனைவரையும் கண்டறிந்து அவர்களைத் தொடர் கண்காணிப்பில் வைத்திருக்கிறோம். இவர்கள் யாருக்கும் இதுவரை கொரோனா அறிகுறிகள் இல்லை.

`நான் யார் தெரியுமா?' -மிரட்டும் கரை வேட்டிகள்... திணறும் போலீஸ்; புதுச்சேரி கொரோனா அப்டேட்ஸ்

கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் உடனே சிகிச்சைக்காக அவர்களை மருத்துவமனையில் அனுமதித்துவிடுவோம். இன்றைய தேதி வரை புதுச்சேரியில் 392 பேரும், காரைக்காலி்ல 248 பேரும், மாஹேயில் 237 பேரும், ஏனாமில் 120 பேரும் என மொத்தம் 997 பேருடன், அவர்களது குடும்ப உறுப்பினர்களும் வீடுகளில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கண்காணிக்கப்படுகிறார்களே தவிர தனிமைப்படுத்தப்படவில்லை. அந்த வாசகங்கள் குறித்து உயரதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு செல்கிறேன்" என்றார். தனிமைப்படுத்தப்பட்ட வீடுகள் என்று அரசு வைத்திருக்கும் அறிவிப்பு அட்டைகள் புதுச்சேரி மக்களை அச்சத்தில் உறைய வைத்திருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு