Published:Updated:

இரண்டு தடுப்பூசிகள் போட்டும் கொரோனா தொற்று வந்தது... ஆனால்?!

கொரோனா பாதிப்பு ( Representational Image Only )

ஆறு வாரங்களுக்குப் பிறகு ஏப்ரல் 22-ம் தேதி அதே தடுப்பூசி நிலையத்திற்கு நான் இரண்டாவது ஊசிக்காகப் போனபோது சூழல் மாறியிருந்தது. கவனிப்பிலும் தூய்மையிலும் குறைவில்லை. ஆனால், கூட்டம் அதிகமாக இருந்தது.

இரண்டு தடுப்பூசிகள் போட்டும் கொரோனா தொற்று வந்தது... ஆனால்?!

ஆறு வாரங்களுக்குப் பிறகு ஏப்ரல் 22-ம் தேதி அதே தடுப்பூசி நிலையத்திற்கு நான் இரண்டாவது ஊசிக்காகப் போனபோது சூழல் மாறியிருந்தது. கவனிப்பிலும் தூய்மையிலும் குறைவில்லை. ஆனால், கூட்டம் அதிகமாக இருந்தது.

Published:Updated:
கொரோனா பாதிப்பு ( Representational Image Only )

மே 12, 2021, சென்னை... நாளிதழின் முதல் பக்கத்தில் எப்போதும் போல் கொரோனா நிலவரம் வெளியாகியிருந்தது. முந்தைய நாள் இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோர் 3,66,161. அதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,33,40,948. அடுத்த பக்கத்தில் தமிழக நிலவரம் இருந்தது. 29,272 புதிய தொற்றுகள். இது மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை 14,38,509 ஆக உயர்த்தியிருந்தது. முந்தைய தினம் எனக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்படாமல் இருந்திருந்தால், இந்த எண்ணிக்கையில் ஒன்று குறைவாக இருந்திருக்கும்.

நாளிதழில் இன்னும் கொஞ்சம் உள்ளே போனால் தடுப்பூசிச் செய்திகள் இருந்தன. மே ஒன்றாம் தேதி முதல் வயது வந்தவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். அரசின் அனுமதி இருந்தது. ஆனால், தடுப்பூசிகளின் கையிருப்பும், அதனால் செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தது.

தடுப்பூசி
தடுப்பூசி

மே 11 வரை, எல்லா மாநிலங்களுக்குமாக ஒன்றிய அரசு 18 கோடித் தடுப்பூசிகளை வழங்கியிருந்தது. அதன் வழியாக மாநிலங்களால் முந்தின நாள்வரை வயது வந்தவர்களில் 19 % பேருக்கு ஒரு ஊசியும், 3.82% பேருக்கு இரண்டு ஊசியும் மட்டுமே செலுத்த முடிந்திருந்தது. இந்த 3.82 % அதிர்ஷ்டசாலிகளில் நானும் ஒருவன். தவிர, இந்த வைரசை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டவர்களிலும் நான் ஒருவன். எனினும் இந்த வைரஸ் என்னிடத்தில் கனிவாக நடந்து கொள்ளவில்லை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

2002-ல் கிழக்காசிய நாடுகளை சார்ஸ் எனும் தொற்று நோய் தாக்கியது. அப்போது நானும் என் குடும்பத்தினரும் ஹாங்காங்கில் வசித்தோம். கோவிட்19-ம், சார்ஸும் ஒரே கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சார்ந்தவை. சார்ஸ் காலத்தில் முகக்கவசம், தனிமனித இடைவெளி, கை கழுவுதல் ஆகியவற்றின் முக்கியத்துவம் ஹாங்காங் பள்ளிகளில் பயிற்றுவிக்கப்பட்டது. ஊடகங்கள் வாயிலாகவும், மெட்ரோ ரயில்களிலும், பேரங்காடிகளிலும் பரப்புரை செய்யப்பட்டது. சார்ஸ் தேய்ந்து அடங்கிய பின்னரும் ஹாங்காங் மக்கள் முகக்கவசத்தை விட்டுவிடவில்லை. உடல் நலக்குறைவால் விடுப்பு எடுத்தவர்கள் அலுவலகத்திற்கு மீள வரும்போது முகக்கவசம் அணிந்திருப்பார்கள். காய்ச்சலோ, சளியோ உள்ளவர்கள் பொது இடங்களில் புழங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் முகக் கவசம் அணிவார்கள்.

2020-ம் ஆண்டின் தொடக்கத்தில் கோவிட்-19 தலை காட்டத் தொடங்கியது. அப்போது உலக சுகாதார அமைப்பின் வல்லுநர்களும் மேற்கு நாடுகள், இந்தியா உட்பட்ட வளரும் நாடுகளின் வல்லுநர்களும் முகக்கவசம் முக்கியமானது என்று கருதவில்லை. ஆனால், என் ஹாங்காங் அனுபவம் முகக்கவசத்தின் அவசியத்தை எனக்குப் போதித்திருந்தது. இப்போது சொன்னால் நம்ப முடியாமல் இருக்கலாம். ஓராண்டிற்கு முன்பு ஆனந்தவிகடன் இதழில் நான் எழுதிய ஒரு கட்டுரையின் தலைப்பு 'முகக்கவசம் முக்கியமா, இல்லையா?'

முகக்கவசம்
முகக்கவசம்

முகக்கவசம் அவசியமில்லையென்று பேசிக் கொண்டிருந்தவர்களுக்குப் பதிலளிக்கும் கட்டுரை அது. அப்போது கொரோனா கொள்ளை நோய் இல்லையென்று சிலர் சாதித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்காக எழுதப்பட்ட கட்டுரை.

கடந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே எப்போது வீட்டைவிட்டு வெளியேறினாலும், நாசி, வாய், தாடை ஆகியவற்றை முழுதும் மூடக்கூடிய துணிக்கவசத்தை அணிந்தேன். கைகழுவும்போது கடைப்பிடிக்க வேண்டியவை ஐந்து கட்டங்கள் என்பதை நான் ஹாங்காங்கில் கற்றிருந்தேன். அதை முறையாக அனுசரித்தேன். முதலில் கைகளை நன்றாக நனைத்துக் கொள்ளவேண்டும். பிறகு நுரை வரும்வரை சோப்பாலும், அடுத்த 20 நொடிகளுக்குக் கைகளைச் சுரண்டியும் தேய்க்க வேண்டும். நான்காவதாக அலசிக் கழுவ வேண்டும். கடைசியாகக் கைகளை உலர்த்திக்கொள்ள வேண்டும்.

சானிடைஸர்
சானிடைஸர்
Pixabay

கோவிட்டிற்கு முன்பும் பெருந்தொற்றுகள் மனித குலத்தை ஆட்டிப் படைத்திருக்கின்றன. 2002-ல் வந்த சார்ஸ், 2012-ல் வந்த மெர்ஸ், இரண்டுக்கும் மருத்துவ உலகால் முறிவைக் கண்டறிய முடியவில்லை. 1980-களில் படம் எடுத்தது எய்ட்ஸ். அந்த நோயை வாராது தடுத்துவிட முடியும்; வந்துவிட்டால் கடைசி நாளை ஒத்திப்போட முடியும்; ஆனால், நோய்க்கான முறிமருந்து இன்னும் உருவாகவில்லை. 2012-ல் வந்த எபோலாத் தொற்றுக்குத் தடுப்பூசி கண்டறியப்பட்டது. அதற்கு மூன்றாண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. 2009-ல் வந்த பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பூசி ஓராண்டுக்குள் வந்தது. ஆனால், ஒரேயொரு மருந்துதான் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த அனுபவங்களுக்கு எதிராக, சில மாதங்களுக்குள்ளாகவே கோவிட்டிற்குப் பல தடுப்பூசிகளைக் கண்டறிந்தனர் அறிவியாலாளர்கள். ரஷ்யாவின் ஸ்புட்னிக் ஆகஸ்டிலேயே வெளி வந்தது. அமெரிக்கா, ஐரோப்பா, சீனா ஆகியவற்றின் தடுப்பூசிகள் நவம்பர், டிசம்பர் மாதங்களில் வெளியாயின. இந்தியாவும் இதில் சேர்ந்துகொண்டது.

ஆனால், இன்னும் தடுப்பூசிகள் பரந்துபட்ட மக்களைச் சென்றடையவில்லை. மருந்து வணிகர்களும் அவர்களுக்கு அனுசரணையான அரசாங்கங்களுமே இதற்குக் காரணம். அமெரிக்க மக்கள்தொகையில் இரண்டில் ஒருவருக்கு தடுப்பூசி எனும் இலக்கு விரைவில் எட்டப்படவிருக்கிறது. அதே வேளையில் பல ஆப்பிரிக்கா நாடுகளால் ஆயிரத்தில் ஒருவருக்குக்கூட இன்னும் தடுப்பூசி செலுத்த முடியவில்லை.

தடுப்பூசி
தடுப்பூசி

மார்ச் 8-ம் தேதி ஓர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் எனது முதல் தடுப்பூசியைச் (கோவிஷீல்ட்) செலுத்திக்கொண்டேன். அது மத்தியதர வர்க்கத்தினரும் மேல்-மத்தியதர வர்க்கத்தினரும் செறிவாக வாழும் பகுதி. எல்லோரும் படித்தவர்கள். தமிழகத்தில் மருத்துவர்களின் எண்ணிக்கை நார்வே, சுவீடன் போன்ற நாடுகளுடன் ஒப்பிடத்தகுந்தது என்பதையும், தமிழகத்தில் 12 கிராமங்களுக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது (இந்திய சராசரி: 25) என்பதையும் அவர்கள் ஒரு செய்தியாகவேனும் கடந்திருப்பார்கள்.

எனினும் பலரும் முதல் முறையாக அரசின் சுகாதார நிலையத்திற்கு வந்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. அவர்கள் முகத்தில் வியப்பு அப்பியிருந்தது.

மாநகராட்சிப் பணியாளர்கள் எல்லோரையும் மலர்ந்த முகத்துடன் வரவேற்று அமரச் செய்து வரிசை எண் வழங்கினர். சுகாதாரப் பணியாளர்கள் அடையாள அட்டையைப் பரிசோதித்து பதிவேட்டில் விவரங்களைக் குறித்துக் கொண்டனர். செவிலியர்கள் தடுப்பூசியைச் செலுத்தினர்.

ஒவ்வாமை இருக்கிறதா என்று பரிசோதிக்க அரை மணி நேரம் உள்ளேயே இருக்கச் செய்தனர். பாராசிட்டமால் மாத்திரை வழங்கினர். அடுத்த அறையில் கணினியில் பதிவேற்றிக் கொண்டனர். எல்லாம் முறையாக நடந்தது. நிலையம் தூய்மையாக இருந்தது. வந்தவர்களில் பலரும் வெளியேறும்போது ஊழியர்கள் ஒவ்வொருவரையும் பார்த்து விடைபெற்றுக் கொண்டார்கள். எங்கும் அன்பும் கவனிப்பும் ததும்பி வழிந்தது. ஆனால், அப்போது கூட்டம் குறைவாக இருந்தது. தடுப்பூசி குறித்த தயக்கம் காற்றில் கலந்திருந்தது. போலியான தன்னிறைவு பரவிக் கிடந்தது. அதைக் களைவதற்கான முயற்சிகள் அப்போது போதுமான அளவிற்கு மேற்கொள்ளப்படவில்லை.

கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை
Representation Image Only

ஆறு வாரங்களுக்குப் பிறகு ஏப்ரல் 22-ம் தேதி அதே நிலையத்திற்கு நான் இரண்டாவது ஊசிக்காகப் போனபோது சூழல் மாறியிருந்தது. கவனிப்பிலும் தூய்மையிலும் குறைவில்லை. ஆனால், கூட்டம் அதிகமாக இருந்தது. காத்திருக்க வேண்டிய நேரம் அதிகமாக இருந்தது. அப்போது இரண்டாவது அலை தொடங்கிவிட்டது. B.1.617 எனும் கொரோனாவின் மாற்றுரு மக்களை அலைக்கழிக்க ஆரம்பித்துவிட்டது.

வைரசின் முந்தைய உருவான B1-ஐ நேரிடத் தயாரிக்கப்பட்ட கோவாக்சினும் கோவிஷீல்டும் புதிய மாற்றுருவை நேரிடுவதில் அதே வேகத்தோடு செயல்படுமா என்கிற விவாதம். அந்த விவாதத்தில், வைரஸ் மாற்றுரு அடைந்திருப்பதால் தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் தொற்று வரும் என்றனர் சில வல்லுநர்கள். இன்னும் சில வல்லுநர்கள் அப்படியே தொற்று வந்தாலும் தடுப்பூசி உண்டாக்கியிருக்கும் எதிர்ப்பு சக்தி நோயுடன் போராடும், வெல்லவும் செய்யும் என்று நம்பிக்கை தெரிவித்தார்கள். இரண்டுக்கும் நானே எடுத்துக்காட்டாக அமையப்போகிறேன் என்பதை இரண்டாவது தடுப்பூசி செலுத்திக் கொண்டபோது நான் அறிந்திருக்கவில்லை.

நான் முதல் ஊசி செலுத்திக் கொண்டபோது நான்கு வாரம் கழித்து இரண்டாவது ஊசியைச் செலுத்திக் கொள்ளலாம் என்றார்கள். அந்த நான்கு வாரம் முடியும் முன்பே இடைவெளியை ஆறு வாரமாக்கினார்கள். நானும் அவ்வாறே ஆறு வாரங்களுக்குப் பிறகு இரண்டாவது தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டேன். அதற்குப் பிறகு இந்த இடைவெளி பின்னும் நீண்டு, 12 முதல் 16 வாரங்களாகிவிட்டது. இந்த அறிவுரைகள் மாறிக்கொண்டே இருந்தாலும், பாதுகாப்பு நடவடிக்கைகளை நான் கிஞ்சித்தும் தளர்த்திக் கொள்ளவில்லை. ஆனால், புதிய மாற்றுரு வெகு தந்திரமானதாகவும் வஞ்சகம் நிறைந்ததாகவும் இருந்தது.

மே 10-ம் தேதி எனக்கு வறட்டு இருமல் வந்தது. உடல் வலித்தது. லேசான காய்ச்சலும் இருந்தது. மருத்துவரைத் தொலைபேசியில் அழைத்தேன். அவர் உடனடியாக RTPCR சோதனை செய்யச் சொன்னார். வீட்டிற்கு அருகில் இருக்கும் மருத்துவமனையை அழைத்தேன். மறுநாள் காலையில் வரச் சொன்னார்கள்.

அடுத்த நாள். மே 11-ம் தேதி.. புலர்காலைப் பொழுது. நானும் மனைவியும் மருத்துவமனைக்குப் போனோம். வரவேற்பில் இருந்தவர் படிவங்களை வழங்கினார். மருத்துவமனைக்குத் தனியாக, சென்னை மாநகராட்சிக்குத் தனியாக என இரண்டு படிவங்கள் இருந்தன. எனது மருத்துவரின் பெயர், விவரங்களையும் கேட்டிருந்தார்கள். எல்லாவற்றையும் நிரப்பினோம்.

கொரோனா சிகிச்சை (கோப்புப் படம்)
கொரோனா சிகிச்சை (கோப்புப் படம்)

எங்கள் நாசியிலிருந்தும் தொண்டையிலிருந்தும் மாதிரிகளைப் பஞ்சுருட்டு மூலம் கைபடாமல் சேகரித்துக் கொண்டார் செவிலியர். மாலையில் முடிவுகள் வந்தன. ஒரே நேரத்தில் எனக்கும், மாநகராட்சிக்கும், எனது மருத்துவருக்கும் சோதனை முடிவுகள் தெரிவிக்கப்பட்டன. என்னைக் கொரோனா தொற்றியிருந்தது.

மருத்துவர் என்னைத் தனிமைப்படுத்திக் கொள்ளச் சொன்னார். சில மணி நேரத்தில் ஒரு மாநகராட்சி ஊழியர் அழைத்தார். நான் தனிமைப்படுத்திக் கொண்டேனா, வீட்டில் எனக்குத் தனியாகப் படுக்கை அறையும் கழிவறையும் உள்ளனவா என்று கேட்டுக் கொண்டார். தொடர்ந்து அந்த ஊழியர் என்னை வீட்டில் கவனித்துக் கொள்ள யாரேனும் இருக்கிறார்களா என்றும் கேட்டார். ஆனால், அடுத்த சில தினங்களுக்கு 3 வேளை உணவும், 2 நேரம் காபியும், 1 கோப்பை சூப்பும் அறை வாசலில் கொண்டு வந்து எனது மனைவி வைப்பார் என்பதைப் பற்றி நான் அப்போது யோசித்திருக்கவில்லை.

அடுத்த நாள் வீட்டு வாசலில் மாநகராட்சி ஊழியர்கள், இந்த வீட்டில் ஒரு தொற்றாளர் இருக்கிறார் என்கிற அறிவிப்பை ஒட்டினார்கள். தொற்று உறுதியானதும் மருத்துவர் அவரது மருந்துச்சீட்டை வாட்ஸ் அப்பில் அனுப்பினார். அதில் காய்ச்சல் மாத்திரைகள், ஆண்டிபயாடிக் முதலானவை ஐந்து தினங்களுக்கும் வைட்டமின் மாத்திரைகள் இரண்டு வாரத்திற்கும் எழுதப்பட்டிருந்தது.

அலோபதி மருத்துவர்கள் பல்லாண்டு காலமாகப் பரிந்துரைக்கும் மாத்திரைகள்தான். மேலும் ஆக்ஸிஜன் செறிவையும் (SpO2), நாடித் துடிப்பையும் , உடல் வெப்பநிலையையும் ஆறு மணி நேரத்திற்கு ஒரு முறை பரிசோதித்து அவருக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பச் சொன்னார் மருத்துவர். முதல் இரண்டு அளவைகளை பல்ஸ் ஆக்ஸிமீட்டரிலும், மூன்றாவதை பராம்பரியமான வெப்பமானியிலும் அளக்கவேண்டும். மருத்துவர் ஒவ்வொரு நாளும் என்னோடு இரண்டு முறை பேசினார். இந்த சிகிச்சைக் காலத்தில் நான் மருத்துவரை ஒரு முறைகூட நேரில் சந்திக்கவில்லை. ஆனால், என்னை அவர் நெருக்கமாக அவதானித்துக் கொண்டிருந்தார்.

Finger Pulse Oximeter
Finger Pulse Oximeter

வருங்காலங்களில் இது புதிய மருத்துவ முறை ஆகலாம். எனது ஆக்ஸிஜன் செறிவு 97% முதல் 99% வரை இருந்தது. இது 95%க்கு மேல் இருக்க வேண்டும். ஆகவே சுவாசப் பிரச்சனை இல்லை. ஆனால், மே 13, 14 தேதிகளில் உடல் வலி கூடியது. காய்ச்சலும் கூடியது. இரண்டு நாட்களிலும் வெப்பமானி அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகமாகக் காட்டிக்கொண்டே இருந்தது. நான் மருத்துவரை அழைத்தேன். மருந்து மாத்திரைகளை அதிகப்படுத்த வேண்டுமென்று அவருக்கு ஆலோசனை வழங்கினேன். ஆனால், அவர் ஒரு ஞானியைப் போல நடந்து கொண்டார். குரலில் எந்த உணர்ச்சியும் இல்லை. அதே மருந்தைத் தொடரவும் என்பதே அவருடைய சுருக்கமான பதிலாக இருந்தது. மே 15-ம் தேதி வெப்பமானி 98.6°F என்று காட்டியது. எனக்கு சாந்தியும் சமாதானமும் உண்டாகியது.

அடுத்த நாள் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து ஒரு மருத்துவர் அழைத்தார். ஆக்ஸிஜன் செறிவு, உடல் வெப்பநிலை, உட்கொள்ளும் மருந்து மாத்திரை முதலானவற்றைக் கேட்டுக்கொண்டார். நகராட்சியின் களப்பணியாளர்கள் வீட்டிற்கு வருகிறார்களா என்றும் கேட்டுக் கொண்டார்.

என் மனைவிக்குக் கொரோனாத் தொற்று இல்லை என்பதும், கூடுதலாகக் கொரோனாவுக்கு எதிரான சக்தி (antibody) அவர் உடலில் இருக்கிறது என்பதும் தெரிந்தது. அவர் முதல் தடுப்பூசி போட்டுக் கொண்டிருந்தார். எதிர்ப்பு சக்தியை அவர் அதிலிருந்துதான் பெற்றிருக்க வேண்டும். ஆனால் இரண்டு ஊசிகள் போட்டுக் கொண்ட எனக்கு அப்போதும் குறிப்பிடத்தக்க எதிர்ப்பு சக்தி உருவாகவில்லை. உடற்கூறியலும் மருத்துவமும் நேரான சூத்திரங்களுக்குக் கட்டுப்படுவதில்லை போலும்.

மே 25 அன்று எனது தனிமையை மாநகராட்சி அலுவல் ரீதியாக முடிவுக்குக் கொண்டுவந்தது. வீட்டு வாசலில் இருந்த அறிவிப்பை நகராட்சி ஊழியர் சுரண்டி அகற்றினார். அவரது பேரட்டில் அன்றையத் தேதியில் எனது பெயருக்கு நேரே குணமடைந்துவிட்டதாகக் குறித்துக்கொண்டார். இன்னொரு ஊழியர் வீட்டின் எல்லா அறைகளிலும் கிருமி நாசினி தெளித்துச் சுத்திகரித்தார்.

Oxygen Level
Oxygen Level
AP Photo / Rafiq Maqbool

மே 26, 2021... தமிழகத்தில் முந்தைய நாள் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 28,475 என்று நாளிதழில் கண்டிருந்தது. இதில் சென்னைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் மட்டும் 8,033. இந்த எண்ணிக்கையில் ஒன்று கூடுவதற்கு நான் காரணமாக இருந்திருக்கிறேன்.

என்னுடைய கொரோனா கதை தலைகீழாக எழுதப்பட்டது. அது பாதுகாப்பு ஏற்பாடுகளில் தொடங்கியது. தடுப்பூசி, பிறகு தொற்று, காய்ச்சல், தனிமை, சிகிச்சை என்று தொடர்ந்து இப்போது மீண்டும் பாதுகாப்பிற்கு வந்திருக்கிறது. தடுப்பூசி எனக்கு உதவியிருக்கிறது. இந்தத் தடுப்பூசிகள், புதிய மாற்றுரு காற்றில் கலப்பதற்கு முன்னால் கண்டறியப்பட்டவை. என்னைப் போன்ற சிலருக்குத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும் தொற்று வந்திருக்கலாம். ஆனால், தடுப்பூசி ஒரு காப்பரணாக நின்று நோயை எதிர்கொள்வதில் பயன்பட்டிருக்கிறது. தடுப்பூசி, முகக்கவசம், தனிமனித இடைவெளி, கை சுத்தம் ஆகிய அனைத்தும் நம்மைக் கோவிட்டிலிருந்து காப்பாற்றும். வாழ்க்கை உன்னதமானது. மதிப்புமிக்கது. போனால் வராது. ஆதலால், நாம் பாதுகாப்பு நெறிமுறைகளைச் சமரசமின்றிக் மேற்கொள்வோம். அறிவியலைக் கைக்கொள்வோம். அது மட்டுமே நம்மைக் காக்க வல்லது.