Published:Updated:

``தியேட்டர்களில் 100 சதவிகிதம் அனுமதி `டைம் பாம்' மாதிரிதான்!" - மருத்துவர் சொல்வது என்ன?

தியேட்டர்
தியேட்டர்

அரசின் இந்த முடிவை ஆதரிப்பவர்களும் எதிர்ப்பவர்களும் பல்வேறு கருத்துகளை முன்வைத்து பரபரப்பு ஏற்படுத்தி வரும் சூழலில், இந்த விவகாரத்தில் மருத்துவர்களின் பார்வை என்ன?

ஏற்கெனவே உள்ள கொரோனாவுக்கே இன்னும் ஒரு முடிவு தெரியவில்லை. அதற்குள்ளாக பிரிட்டனில் உருமாறிய கொரோனா தமிழகத்திலும் ஊடுருவி பதற்றத்தை அதிகப்படுத்தியிருக்கிறது. இந்தச் சூழலில், தியேட்டர்களில் 100 சதவிகித பார்வையாளர்களுக்கு தமிழக அரசு அனுமதியளித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தியேட்டர் உரிமையாளர்கள், திரைப்பட விநியோகஸ்தர்கள், விஜய் மற்றும் சிம்பு ரசிகர்கள் எனப் பலர் அரசின் இந்த அறிவிப்பை வரவேற்றாலும் இன்னொருபுறம் பலத்த எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது. நடிகை கஸ்தூரி, நடிகர் அரவிந்த்சாமி எனத் திரைத்துறையிலிருந்துகூட சிலர், அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மாஸ்டர் | ஈஸ்வரன்
மாஸ்டர் | ஈஸ்வரன்

`தேர்தல் நேரத்தில், விஜய் ரசிகர்களின் வாக்குகளை கவர்வதற்காகவே மக்களின் நலனை கருத்தில்கொள்ளாமல் தமிழக அரசு இந்த அனுமதியை வழங்கியுள்ளது' என்று ஒரு தரப்பு சொல்ல... `தேர்தல் பிரசாரங்களிலெல்லாம் கூட்டம் கூட்டவில்லையா... அங்கெல்லாம் கொரோனா பரவாதா?' என்று இன்னொரு பக்கம் கம்பு சுற்றுகின்றனர் ரசிகர்கள் சிலர். ஆதரிப்பவர்களும் எதிர்ப்பவர்களும் இப்படிப் பல்வேறு கருத்துகளை முன்வைத்து பரபரப்பு ஏற்படுத்தி வரும் சூழலில், மருத்துவர்களின் பார்வைதான் முக்கியமானது.

அன்லாக் நடைமுறைகளின் ஒவ்வொரு படிநிலையின்போதும் மருத்துவக் குழுவிடம் ஆலோசனை நடத்திய பிறகே, இதுவரை முடிவுகளை அறிவித்து வந்த தமிழக அரசு, தியேட்டர் விவகாரத்தில் அப்படிச் செய்ததாகத் தெரியவில்லை. இந்த அறிவிப்பு வெளியானதும், தேசிய தொற்றுநோய் தடுப்பு மையத்தின் துணை இயக்குநர் பிரதீப் கவுர் இது ஆபத்தான முடிவு என்று எச்சரித்திருப்பதன் மூலம் நாம் அதை அறிந்துகொள்ள முடியும். உள்ளரங்கு, காற்றோட்டமின்மை, அதிக நேரம் அங்கு இருப்பது, கூட்டமாக இருப்பது, கூச்சலிடுவது, முகக்கவசம் இல்லாமல் இருப்பது போன்றவை, கொரோனா தொற்றுப் பரவலை மிகவும் ஆபத்தான நிலைக்கு இட்டுச் செல்லும்" என்று அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாகத் தொற்றுநோயியல் மருத்துவர் சுரேஷ்குமாரிடம் பேசினோம், ``பொருளாதார நிலையைக் கருத்தில்கொண்டு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் அரசு அறிவித்துள்ள `அன்லாக்' நடைமுறைகள் பலவற்றை நாம் தவிர்க்க முடியாது. ஆனால், தியேட்டர்களில் 100 சதவிகித பார்வையாளர்கள் அனுமதி என்பது ஆபத்தானது. இதைச் சொன்னால், `அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் நடத்தப்படுகிறதே... அங்கெல்லாம் கூட்டம் கூடவில்லையா... அப்போது பரவாத கொரோனா தியேட்டர்களில் பரவிவிடுமா?' எனச் சிலர் எதிர்வாதம் வைக்கின்றனர். அவர்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும்.

மக்கள் அதிகமாகக் கூடும் எந்த நடவடிக்கையையும் இதுவரை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. குறிப்பாக, ஜிம், தியேட்டர் போன்ற மூடிய நிலையில் உள்ள உள் அரங்குகளில் கூடுவது பாதுகாப்பானது அல்ல என்று திரும்பத் திரும்ப அறிவுறுத்துகிறோம்.

ஏனெனில், திறந்தவெளியில் ஏற்படும் பாதிப்பைவிட, மூடிய நிலையில் காற்றோட்டம் இல்லாத இடத்தில் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். மாறாக, திறந்தவெளியில் பாதிப்பு இல்லை என்று நாங்கள் எந்த இடத்திலும் சொல்லவில்லை. `தடுப்பூசி வந்து நம்முடைய எதிர்ப்பு சக்தி கூடும்வரை சமூக ஒன்று கூடலைத் தவிர்க்க வேண்டும். தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும், முகக் கவசம் அணிந்துகொள்ள வேண்டும், கைகள் சுத்தத்தைப் பேண வேண்டும்' என்று உலக சுகாதார நிறுவனமும் மருத்துவர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

மருத்துவர் சுரேஷ்குமார்
மருத்துவர் சுரேஷ்குமார்

அது அரசியல் கட்சியின் கூட்டமாக இருந்தாலும் சரி வேறு எந்தக் கூட்டமாக இருந்தாலும் சரி... மக்கள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள வேண்டும். இங்கு மட்டுமல்ல, உலகளவில் உள்ள மருத்துவர்களும் இதைத்தான் வலியுறுத்துகின்றனர். அமெரிக்காவில் தேர்தல் பரப்புரைக்கு அதிகமான கூட்டம் கூட்டப்பட்டபோது அதற்கு அங்குள்ள மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை நாம் மறந்துவிடக் கூடாது. எனவே, ஒன்றை ஆதரித்து இன்னொன்றை எதிர்க்கிறோம் என்ற தவறான புரிந்துணர்வில் அப்படியான கருத்துகளை முன்வைத்து பிரச்னையைத் திசைத்திருப்ப வேண்டாம்.

`தியேட்டர்களில் எத்தனை நபர்கள் அனுமதிக்கப்பட்டாலும் ஆபத்துதான் எனும்போது 50 சதவிகித பார்வையார்களுக்கு அனுமதியளிக்கும்போது கிளம்பாத எதிர்ப்பு 100 சதவித பார்வையாளர்கள் அனுமதிக்கப்படும்போது ஏன் கிளம்புகிறது?' என்றும் சிலர் கேட்கின்றனர். இதற்கு முன்பு 50 சதவிகிதம் அனுமதிக்கப்பட்டிருந்தாலும் 50 சதவிகித இருக்கைகள் நிரம்பவில்லை என்பதை மறந்துவிட வேண்டாம். பெரிய நடிகர்களின் திரைப்படம் வெளியாகும் சூழலில் 100 சதவிகித பார்வையாளர்கள் அனுமதிக்கப்படும்போது அதன் அபாயம் தெரியவரும். ஓர் அரங்கில் `10 பேர் அமர்ந்திருந்ததுக்கும் 100 பேர் அமர்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது. இதுபோன்ற சூழலில், திறந்தவெளி தியேட்டர்களை ஊக்கப்படுத்துவது சிறந்த முடிவாக இருக்க முடியும். அதைவிடுத்து தியேட்டர்களில் 100 சதவிகித பார்வையாளர்களை அனுமதித்தால் எந்த நேரத்திலும் ஐ.ஐ.டி மாதிரியான க்ளஸ்டர் உருவாகலாம். ஸ்டார் ஹோட்டல்களில் நடப்பது போல நாளை தியேட்டர்களிலும் நடக்கலாம். இது `டைம் பாம்' மாதிரிதான். இது எப்போது வெடிக்கும் என்று தெரியாது. சமயங்களில் வெடிக்காமலேயே கூட போகலாம். ஆனால், வெடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.

கொரோனா
கொரோனா
திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்குத் தமிழக அரசு அனுமதி - மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

பிரச்னையின் வீரியம் தெரியாத சினிமா ரசிகர்கள் சிலர், `அதிகமாக மக்கள் கூடும்போது அதிகமானோருக்கு நோய் பரவி எதிர்ப்பாற்றல் (Herd immunity) உருவாகும்' என்றும் சொல்கின்றனர். அப்படி நடப்பதற்கு வாய்ப்புள்ளதுதான். ஆனால், அதற்காக நாம் அதிக இழப்புகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். ஐரோப்பிய நாடுகளெல்லாம் லாக்டெளன் அறிவிக்கும்போது ஸ்வீடன் மட்டும் நாங்கள் லாக்டெளன் செய்யவில்லை. `நிறையபேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு கணிசமானவர்களிடம் நோய் எதிர்ப்பாற்றல் பெருக வேண்டும். அது சமூகத் தடுப்பாற்றலாக மாறும்" என்றது ஸ்வீடன். விளைவு மற்ற ஐரோப்பிய நாடுகளைவிட ஸ்வீடனில் கொரோனா இறப்பு விகிதம் மிகவும் மோசமாக இருந்தது. இதையடுத்து இரண்டாவது அலை ஏற்படும்போது, எங்களுடைய திட்டம் தோல்வியடைந்து விட்டது என்று ஒப்புக்கொண்டு ஸ்வீடனும் லாக்டெளன் அறிவித்தது என்பதை நினைவில்கொள்ள வேண்டும்" என்றார்.

இந்த எதிர்ப்புகள் தொடர்பாக தியேட்டர் உரிமையாளர்கள் சங்கப் பொதுச்செயலாளரும் ரோகிணி தியேட்டர் உரிமையாளருமான பன்னீர் செல்வத்திடம் கேட்டபோது, ``இது தேவையில்லாத எதிர்ப்பு... ஏனென்றால் விமானத்தில் 100 சதவிகிதம்... ரயிலில் ஏசி கோச் உட்பட அனைத்திலும் 100 சதவிகிதம் அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது. தியேட்டர்களில் ஒரு இருக்கைக்கும் இன்னொரு இருக்கைக்கும் 24 இஞ்ச் இடைவெளி உள்ளது. ஆனால், விமானத்தில் அப்படியில்லை 18 இஞ்ச் இடைவெளிதான். டாஸ்மாக் பார்களில் எவ்வளவு பேர் வரிசைகட்டி நிற்கிறார்களென்று பாருங்கள். அங்கெல்லாம் கொரோனா பரவாதா? எல்லாவற்றையும் பரிசீலனை செய்துதான் அரசு அனுமதி வழங்கியுள்ளது. உள்ளே நுழையும்போது, இடைவேளையின் போது, வெளியேறும்போது என ஒவ்வொரு முறையும் சானிடைஸர் வழங்க உள்ளோம். போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துதான் பார்வையாளர்களை உள்ளே அனுமதிக்கவிருக்கிறோம். தவிர எங்களுக்கு இது வாழ்வாதாரப் பிரச்னைதான். ஆனால், வரும் பார்வையாளர்களுக்கு உயிர் சம்பந்தப்பட்ட பிரச்னை. எனவே அவர்களும் தகுந்த பாதுகாப்புடன்தான் வருவார்கள். தனிமனித இடைவெளியை கடைபிடிப்பார்கள்." என்றார்.

அடுத்த கட்டுரைக்கு