`சிகிச்சை மட்டுமல்ல; வாசிக்கவும் செய்யலாம்!' - அரசு கொரோனா மருத்துவமனையில் புதிய நூலகம்

நோயாளிகள் எளிதில் செல்லும் வகையில் லிஃப்ட் வசதியின் அருகிலேயே இந்த நூலகம் அமைந்துள்ளது.
கோவிட்-19 சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு உடல்நலத்துடன் அவர்கள் மனநலத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டியது அவசியம். அதன் காரணமாக, நோயாளிகளை மகிழ்விக்கும் வகையில் மருத்துவர்களே அவர்களுடன் நடனமாடிய நிகழ்வுகளை எல்லாம் பார்த்திருப்போம்.

அந்த வகையில் நோயாளிகளின் இறுக்கத்தைத் தளர்த்தும் வகையில் புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது சென்னை கிண்டியில் கிங்ஸ் இன்ஸ்டிட்யூட் வளாகத்தில் செயல்பட்டு வரும் அரசு கொரோனோ மருத்துவமனை. கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்ததையடுத்து, கிங்ஸ் இன்ஸ்டிட்யூட்டில் திறப்புக்குத் தயாராக இருந்த தேசிய முதியோர் நல மருத்துவ மையம் கொரோனா மருத்துவமனையாக மாற்றம் செய்யப்பட்டு, ஜூலை 7-ம் தேதி திறக்கப்பட்டது.
கொரோனா சிகிச்சைக்கென சுமார் 750 படுக்கை வசதிகள் இங்கு உள்ளன. இந்நிலையில் இங்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகள் தங்கள் நேரத்தைப் பயனுள்ளதாகச் செலவிட நூலகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி அம்மருத்துவமனையின் இயக்குநர் மருத்துவர் நாராயணசாமியிடம் பேசினோம்.
"மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு செல்போனைத் தவிர நேரத்தைச் செலவிட வேறு எந்த வழியும் இல்லை. செல்போனையே தொடர்ந்து பார்த்துக்கொண்டிருப்பதால் ஒரு கட்டத்தில் எரிச்சலடைகின்றனர். மருத்துவர்களிடம் சென்று, 'ரொம்ப போர் அடிக்குது. எங்களை சீக்கிரம் வீட்டுக்கு அனுப்புங்க!' என்று கோபமாகப் பேசும் நிகழ்வுகள் நடைபெற்றன.
சிகிச்சை நிறைவடையாமல் நோயாளிகளை வீட்டுக்கு அனுப்ப முடியாது. அதனால் அவர்கள் நேரத்தைப் பயனுள்ளதாகச் செலவழிக்கும் வகையில் நூலகம் ஒன்றை அமைக்கலாம் என்ற முடிவுக்கு வந்தோம். மருத்துவனை கட்டடத்தின் இரண்டாவது மாடியில் அமைந்திருந்த கூட்ட அரங்கை நூலகமாக மாற்றியிருக்கிறோம். அங்கு நோயாளிகள் அமர்ந்து படிப்பதற்காக 10 மின்விசிறிகளையும் பொருத்தியிருக்கிறோம்.

அனைவரும் எளிதில் செல்லும் வகையில் லிஃப்ட் வசதியின் அருகிலேயே இந்த நூலகம் அமைந்துள்ளது. நாவல், காமிக்ஸ், யோகா, வரலாறு, மருத்துவம், மனநலம், ஆன்மிகம் எனப் பல்வேறு தலைப்புகளில் 1,700 புத்தகங்களை வாங்கி வைத்திருக்கிறோம். தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் புத்தங்கள் உள்ளன. இதுதவிர நாள்தோறும் 10 நாளிதழ்களையும் வாங்கி வைத்திருக்கிறோம். நூலகம் திறக்கப்பட்ட பின்னர், பல நோயாளிகள் அங்கே தங்கள் நேரத்தைச் செலவிட்டு வருகின்றனர்.
இறுக்கம் தளர்ந்து, தங்கள் வீடுகளில் இருப்பது போலவே இயல்பாக இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். இதுபோன்று நோயாளிகளின் மகிழ்ச்சிக்காக நிறைய முன்னெடுப்புகளை எடுக்கவிருக்கிறோம்" என்கிறார்.