Published:Updated:

கொரோனா ஒழிப்பு: எம்.பி, எம்.எல்.ஏக்கள் நிதி ஒதுக்கீடு கண்துடைப்பா? - ஓர் அலசல்!

கொரோனா சிகிச்சை
கொரோனா சிகிச்சை

அதிரடியாக அறிவிக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் எல்லாம் பயன்பாட்டுக்கு வராமல், மாவட்ட ஆட்சியர்களின் மேஜைகளில் தேங்கிக் கிடப்பதாக அதிர்ச்சியூட்டும் செய்திகள் வெளியாகியுள்ளன...

பிரதமர் நரேந்திர மோடியின் ஊரடங்கு அறிவிப்பைத் தொடர்ந்து, கோரோனா தடுப்பு நடவடிக்கைக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் அறிவிப்புகள், தமிழக எம்.பி-க்களிடம் இருந்து வரிசையாக வரத் தொடங்கின

முதன்முதலில் தன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 3 கோடி ரூபாய் ஒதுக்கி அஸ்திவாரம் போட்டார் பா.ம.கவின் இளைஞரணித் தலைவரும் ராஜ்ய சபா எம்.பியுமான அன்புமணி. அவரைத் தொடர்ந்து, மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு உபகரணங்கள் வாங்குவதற்கு என ரூபாய் 56.17 லட்சத்தை ஒதுக்கினார் மதுரை எம்.பி சு.வெங்கடேசன். தொடர்ச்சியாக, தி.மு.க எம்.பி-க்களும் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய் ஒதுக்குவதாக அறிவித்தனர். அதிகபட்சமாக, தஞ்சாவூர் மக்களைவைத் தொகுதி உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான எஸ்.எஸ். பழனிமாணிக்கம் 5 கோடி ரூபாய் ஒதுக்கி அசத்தினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினருமான தொல்.திருமாவளவன் முதற்கட்டமாக 1.77 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தார்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

அ.தி.மு.க-வின் சார்பிலும் எம்.பி நிதியிலிருந்து ஒரு கோடியும், எம்.எல்.ஏ-க்கள் நிதியிலிருந்து 25 லட்ச ரூபாயும் ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ-க்களின் நிதியைப் பொறுத்தவரை, அரவக்குறிச்சி தி.மு.க எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி அதிகபட்சமாக 1 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார். ஆனால், இப்படி அதிரடியாக அறிவிக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் எல்லாம் பயன்பாட்டுக்கு வராமல், மாவட்ட ஆட்சியர்களின் மேஜைகளில் தேங்கிக் கிடப்பதாக அதிர்ச்சியூட்டும் செய்திகள் வெளியாகியுள்ளன. கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், மருத்துவ உபகரணங்கள் வாங்குவதில் மிகப்பெரும் தேக்கநிலை ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

அதற்குப் பிரதானமாக இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று, நிதி ஒதுக்கீடு செய்த எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் அந்தப் பணத்தை, எப்படி எதற்காகப் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து, முறையான வழிகாட்டல் செய்யாதது... இரண்டாவதாக மாவட்ட ஆட்சியர்கள் அதை எடுத்துச் செய்வதாக இருந்தாலும், குறிப்பிட்ட கம்பெனிகளில்தான் பொருள்கள் வாங்க வேண்டும் என ஆளும் தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்படுவதால் அவர்கள் தயங்குவதாகவும் சொல்லப்படுகிறது.

கொரோனா சிகிச்சை
கொரோனா சிகிச்சை
சென்னையில் முதல் கொரோனா கிருமி நாசினி சுரங்கப்பாதை - ஊரடங்கிலும் உதவும் நல் உள்ளங்கள் #Lockdown

இது குறித்து நம்மிடம் பேசிய அதிகாரி ஒருவர்,

"தமிழகத்தில் பெரும்பாலான எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் தங்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கொரோனா சிகிச்சைக்காக நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர். ஆனால், ஒதுக்கி பத்து நாள்கள் பின்பும் அது பயன்பாட்டுக்கு வராமல் இருக்கிறது. காரணம், ஒதுக்கிய நிதியை வைத்து என்ன பொருள் வாங்க வேண்டும், எதற்காகப் பயன்படுத்த வேண்டும் என பணம் ஒதுக்கியவர்களிடம் இருந்து முறையான வழிகாட்டல் எதுவும் வரவில்லை. ஒருசிலர்தான் அவர்களே களத்தில் இறங்கி வேலை பார்க்கிறார்கள்.

வேலை நடக்காத தொகுதிகளில், மாவட்ட நிர்வாகம், மாவட்ட மருத்துவ அலுவலருடன், மருத்துவமனை நிர்வாகத்துடன் இணைந்து முடிவெடுத்தாலும், ஆளும் தரப்பிலிருந்து குறிப்பிட்ட கம்பெனிகளில்தான் ஆர்டர் கொடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. எதிர்க்கட்சி எம்.பி, எம்.எல் ஏ-க்களின் நிதியும் இருக்கிறது. அதை அப்படிச் செய்தால் தாங்கள் மாட்டிக்கொள்வோம் என்பதால் மாவட்ட ஆட்சியர்களும் அதைச் செய்யத் தயங்குகிறார்கள். மெடிக்கல் எமர்ஜென்சி என்பதால் வழக்கமான டென்டர் பிராசஸ் என்பது எதுவும் இல்லை. அதனால், மாவட்ட நிர்வாகம் எந்தக் கம்பெனிக்கு ஆர்டர் கொடுக்கிறது எனக் கவனித்து அவர்களிடம் இருந்து கமிஷன் வாங்குவதற்காகவும் ஒரு கூட்டம் காத்திருக்கிறது. ஆக மொத்தத்தில் இந்த அவசர காலகட்டத்திலும்கூட ஆளும் கட்சி, எதிர்க்கட்சி எம்பி., எம்.எல்.ஏ-க்களின் கமிஷன் ஆசையால் பல தொகுதிகளில் வேலைகள் இன்னும் தொடங்கப்படாமலேயே இருக்கிறது" என்கிறார் அவர்.

சு.வெங்கடேஷன் எம்.பி
சு.வெங்கடேஷன் எம்.பி

எனில், எம்.பி, எம்.எல்.ஏ-க்களின் நிதி ஒதுக்கீடு என்பது வெறும் கண்துடைப்புதானா?.. மதுரை தொகுதி எம்.பி சு.வெங்கடேசனிடம் பேசினோம்,

" நிதி ஒதுக்கீடு செய்தது மட்டுமல்ல, மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தி என்ன தேவை என்பதைக் கேட்டுத் தெரிந்துகொண்டு ஒவ்வொரு பொருளுக்கும் இவ்வளவு எனக் குறிப்பிட்டு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறேன். நான் ஒதுக்கிய நிதியில் ஆர்டர் செய்யப்பட்ட பொருள்களில் 70 சதவிகிதம் வந்துவிட்டன. மீதமுள்ள பொருள்களை எடுத்துவர வாகனம் சென்றிருக்கிறது. அதுவும் நாளை வந்துவிடும். நான் தொடர்ச்சியாக ஃபாலோ செய்துகொண்டிருக்கிறேன். என்னுடைய தொகுதியில் எம்.பி. நிதியிலிருந்து தொடர்ச்சியாக வேலை நடந்துகொண்டிருக்கிறது. அனைத்தும் வந்ததும் பட்டியலையும் வெளியிடத் தயாராக இருக்கிறேன்" என்கிறார் சு.வெங்கடேசன்.

ஒதுக்கப்பட்ட நிதி பயன்பாடுக்கு வராதது மட்டுமல்ல, ``என்ன தேவை என்பதைக் கருத்தில் கொள்ளாமல் இஷ்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்வது வேறு சில சிக்கல்களையும் உருவாக்கும்'' என்கிறார் வி.சி.க பொதுச்செயலாளரும் விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான ரவிக்குமார்.

``கொரோனா சிகிச்சைக்காக மட்டுமே தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி என் தொகுதிக்குட்பட்ட மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை வழங்க என்னென்ன தேவைகள் இருக்கின்றன என்பதைக் கேட்டறிந்து, அதைவிட சற்றுக் கூடுதலாகவே நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறேன். அடுத்து என்ன தேவை என்பதைப் பார்த்து நிதி ஒதுக்கீடு செய்யவிருக்கிறேன். மருத்துவமனை அடிப்படை கட்டமைப்புக்கு எல்லாம் இந்த நிதியில் செலவு செய்ய முடியாது. ஆனால், அது போன்ற கோரிக்கைகளும் வருகின்றன.

ரவிக்குமார் எம்.பி
ரவிக்குமார் எம்.பி

அதைவிட, சமூகப் பரவல் நிலை இனிமேல்தான் வர இருக்கிறது. தற்போதே அனைத்து நிதியையும் செலவு செய்துவிட்டால் அப்போது என்ன செய்யமுடியும். எம்.பி-க்கள் பலர் எவ்வளவு தேவை என்பதை மாவட்ட சுகாதார இயக்குநருடன் கலந்தாலோசித்து அதற்குப் பிறகு ஒதுக்கீடு செய்திருக்கலாம். உணர்ச்சிவசப்பட்டு ஒரு கோடி, 2 கோடி என சிலர் ஒதுக்கிவிட்டனர். பத்து பெட் இருக்கும் ஒரு மருத்துவமனைக்கு ஒரு வென்டிலேட்டர் தேவை. 100 பெட் இருக்கும் மருத்துவமனைக்கே 10 வென்டிலேட்டர் போதுமானது. இதுதான் நேரம் என பல மருத்துவமனைகளில் வென்டிலேட்டர் போன்ற உபகரணங்களை வாங்கிக் குவிக்க நினைக்கிறார்கள். எம்.பி-க்களுக்கு ஓராண்டு தொகுதி மேம்பாடு நிதியே வெறும் ஐந்து கோடிதான். அதில் பெரும்பாலான நிதியை இப்போதே பயன்படுத்திவிட்டால், மற்ற வேலைகளுக்கு என்ன செய்வது. அதனால் இதுபோன்ற விஷயங்களுக்கென அரசு தனியாக நிதி ஒதுக்கீடு செய்வதே சரியாக இருக்கும்'' என்றார் அவர்.

தமிழகத்தில் அதிக நிதி ஒதுக்கீடு செய்தவரும் தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான எஸ்.எஸ். பழனி மாணிக்கத்திடம் பேசினோம்,

``மருத்துவர்களின், நோயாளிகளின் அவசர, அவசியத் தேவைகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறேன். இதுதான் வாங்க வேண்டும் என குறிப்பிட்டுச் சொல்லவில்லை. பணம் கொடுத்ததோடு என் வேலை முடிந்துவிட்டது. மாவட்ட ஆட்சியர்களும் மருத்துவ அதிகாரிகளும் இணைந்து முடிவெடுத்து வருகிறார்கள். திருவாரூர் மருத்துவமனைக்கு ஒரு கோடி ஒதுக்கினேன். ஆர்டர் போடப்பட்டு பாதிப்பொருள்கள் வந்துவிட்டன. தஞ்சாவூர் மருத்துவமனைக்கு 4 கோடி ஒதுக்கினேன். வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. வேலையில் எந்தவித தாமதமும் இருப்பதாகத் தெரியவில்லை.

பழனி மாணிக்கம் எம்.பி
பழனி மாணிக்கம் எம்.பி
`9.25-க்கு அட்மிட்; 11.45-க்கு மரணம்... இறந்தபிறகு கொரோனா உறுதி’- அரசு மருத்துவமனையில் நடந்தது என்ன?

தி.மு.க-வினர் கமிஷனுக்காக எப்போதும் எந்தச் செயலிலும் ஈடுபட்டதில்லை. எங்கள் தலைவருக்கு தெரிந்துதான் அனைவரும் நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறோம். தலைவரும் கண்காணிப்பார். தி.மு.க எம்.பி-க்கள் எல்லாம் நன்றாகப் படித்த, திறமையான, எதற்கும் ஆசைப்படாதவர்கள். அவர்கள் தொடர்ச்சியாக மக்கள் பணியில் இருக்கத்தான் ஆசைப்படுகிறார்கள். இதுபோன்ற செயல்களில் ஒருபோதும் ஈடுபடமாட்டார்கள்'' என்றார் அவர்.

சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத்திடம் பேசினோம்:-

``இந்த மாதிரியான நெருக்கடியான காலகட்டத்திலும் கமிஷன் வாங்குவது, ஊழல் செய்வது, வேண்டப்பட்டவர்களுக்கு காண்ட்ராக்ட் கொடுக்க நினைப்பது போன்ற செயல்கள் அப்பட்டமான மனித உரிமை மீறல். இந்தமாதிரியான செயல்களால்தான் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளில் தாமதம் ஏற்படுகிறது. குறிப்பாக, மருத்துவக் குழுவினருக்கு பாதுகாப்புக் கவசங்கள், முகக் கவசங்கள் வாங்குவதில் மிகப்பெரிய தாமதம் ஏற்படுகிறது. Personal Protective Equipment (PPE) வாங்குவதில் மத்திய அரசாங்கமும் அவர்களுக்கு வேண்டப்பட்ட நிறுவனங்களில் வாங்குவதற்காக கால தாமதம் செய்வதாகவும் செய்திகள் வருகின்றன.

ரவீந்திரநாத்
ரவீந்திரநாத்

சிலரிடம் ஆன் லைன் மூலமாகவும் சிலரிடம் டெண்டர் மூலமாகவும் உபகரணங்கள் வாங்குகிறார்கள். அதுவே பல்வேறு சந்தேகத்தைக் கிளப்புகிறது. அதேபோல, வென்டிலேட்டரே கிடைக்காதபோது பல எம்.பி-க்கள் வென்டிலேட்டர் வாங்க நிதி ஒதுக்கீடு செய்கிறார்கள். எவ்வளவு வென்டிலேட்டர் வேண்டும் என்பதை முதல்வரிடம் கேட்காமல் ஆளுநரிடம் கேட்கிறார் பிரதமர் மோடி. பல வெளிநாட்டு நிறுவனங்களில், உள்நாட்டு தனியார் நிறுவனங்களில் ஆர்டர் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், அது எப்போது வரும் என்று தெரியவில்லை. ஏற்கெனவே 2 மாதம் தாமதமாகியுள்ளது. இந்த நேரத்திலும் ஊழல் கமிஷன் என்று இருப்பது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது'' என்கிறார்.

முறையான வழிகாட்டல் இல்லாததால், எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் ஒதுக்கிய நிதிப் பயன்பாட்டுக்கு வருவதற்கு தாமதம் ஆகிறதா, மருத்துவ உபகரணங்கள் வாங்குவதில் ஆளும் கட்சியின் தலையீடு இருக்கிறதா, கமிஷனுக்காகத் தாமதப்படுத்தப்படுகிறதா?

அ.தி.மு.க-வின் துணை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான கே.பி.முனுசாமியிடம் பேசினோம்,

``உலகளாவிய ஒரு பிரச்னையை நாம் எதிர்கொண்டிருக்கிறோம். தமிழக அரசும் அதிகாரிகளும் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். இந்த நேரத்தில் அனைவரும் ஒத்துழைப்போடு செயல்பட வேண்டும். இது போன்ற வாய்ப்பே இல்லாத விஷயங்களைப் பேசுவதால் எந்தப் பயனும் இல்லை'' என்பதோடு முடித்துக்கொண்டார்.

கே.பி.முனுசாமி
கே.பி.முனுசாமி

இந்த நிலையில், நேற்று வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் நடத்தப்பட்ட மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்துப் பேச மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களைச் சந்தித்தார்,

அப்போது பேசிய அவர் ``நாடாளுமன்ற உறுப்பினர்களின் 30% ஊதியத்தை ஒரு வருடத்துக்குப் பிடித்தம் செய்ய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 2 வருடங்களுக்கு எம்.பி-க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ரத்து செய்யப்படும் என்றும் இதன் மூலம் கிடைக்கும் ரூ.7,900 கோடி, கொரோனா தடுப்பு பணிகளுக்குப் பயன்படுத்தப்படும்'' என்று குறிப்பிட்டார்.

ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிதி பயன்பாட்டுக்கு வரவே கால தாமதமாகிக் கொண்டிருக்கும் வேளையில், பிரகாஷ் ஜவ்டேகரின் இந்த அறிவிப்பு இன்னும் என்ன தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறதோ?

அடுத்த கட்டுரைக்கு