Published:Updated:

ஏழு மாநில முதல்வர்களுடன் பிரதமரின் உரையாடலும்... கிளம்பும் சந்தேகங்களும்!

Narendra Modi
Narendra Modi ( Twitter / PIB_India )

ஏழு மாநிலங்களின் முதல்வர்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அம்மாநிலங்களின் நிலவரம் குறித்துக் கேட்டறிந்து, மத்திய அரசின் உதவியையும் துணையையும் உறுதிப்படுத்தியிருக்கிறார் பிரதமர் மோடி. ஆனால், ஏன் இந்த ஏழு மாநிலங்களுக்கு மட்டும் என்ற கேள்வி தற்போது கவனம் பெற்றிருக்கிறது.

2020-ம் ஆண்டு பெரும் சவால் நிறைந்ததாகவே இருக்கிறது. உலகம் கொரோனா பெருந்தொற்றோடு போராடிக் கொண்டிருக்கிறது. ஆனால், அதோடு மட்டும் நம் துயரங்கள் நின்றுவிடவில்லை. குறிப்பாக, இந்தியா பொருளாதார சரிவு தொடங்கி, அரசியல் சண்டைகள், ஆட்சி மாற்றங்கள், எல்லைப் பிரச்னைகள், வெட்டுக்கிளி தாக்குதல், இயற்கை சீற்றங்கள் எனப் பல பிரச்னைகளைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. 28 மாநிலங்கள் கொண்ட இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமும் பிரத்யேகமாக ஒரு பிரச்னையை சந்தித்துக்கொண்டிருக்கிறது. சில மாநிலங்களில் வெள்ளமும் சில மாநிலங்களில் அதிகமாகும் கொரோனாவும் புயலும் போலீஸ் வன்முறையும், மத பிரச்னைகளும், சாதி வன்முறைகளும்... என வரிசைக் கட்டிக்கொண்டு நிற்கின்றன.

Corona
Corona

ஒவ்வொரு மாநிலத் தலைமையும் இந்தச் சிக்கல்களைச் சமாளிக்க திணறிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், பிரதமர் மோடி கடந்த ஞாயிறு அன்று குறிப்பாக, ஏழு மாநிலங்களின் முதல்வர்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அம்மாநிலங்களின் நிலவரம் குறித்துக் கேட்டறிந்து, மத்திய அரசின் உதவியையும் துணையையும் உறுதிப் படுத்தியிருக்கிறார். ஆனால், இந்த ஏழு மாநிலங்களுக்கு மட்டும் ஏன் என்ற கேள்வி தற்போது கவனம் பெற்றிருக்கிறது.

சமீப காலமாக மாநில சுயாட்சி பறிபோவதாக மத்திய அரசின் மேல் தொடர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. அதேபோல எதிர்க்கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களில் கூட, உட்கட்சிப்பூசல் வழியாகவும், கூட்டணி வழியாகவும் பா.ஜ.க தன்னுடைய பிடியை இறுக்குகிறது என்ற குற்றச்சாட்டுகளும் சொல்லப்படுகிறது. பா.ஜ.க ஆளாத மாநிலங்களிடம் பாராமுகம் காட்டுவதாகப் பலமுறை மத்திய பா.ஜ.க அரசு விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது. இந்த நிலையில், குறிப்பாக, ஏழு மாநிலத் தலைமைகளுக்கு மட்டும் பிரதமர் அழைத்துப் பேசியிருப்பது பல கேள்விகளை எழுப்பியிருக்கின்றன. அந்தக் கேள்விகளைப் புரிந்துகொள்ளப் பிரதமர் தொடர்புகொண்ட ஏழு மாநிலங்கள் எது எனவும் அதன் பிரச்னைகளையும் பார்க்க வேண்டியிருக்கிறது.

நரேந்திர மோடி
நரேந்திர மோடி

அஸ்ஸாம்

அஸ்ஸாம் மாநிலத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக பிரம்மபுத்திரா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஜூலை 20-ம் தேதி நிலவரப்படி, இந்த வெள்ளத்தில் அஸ்ஸாமில் உள்ள 33 மாவட்டங்களில் 26 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 70 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். 110 பேர் உயிரிழந்துள்ளனர். அங்குள்ள காசிரங்கா தேசிய பூங்காவில் 85 சதவிகித பரப்பளவு வெள்ளநீரில் மூழ்கி உள்ளன. இதன் காரணமாகக் காண்டாமிருகம் உள்ளிட்ட அறிய விலங்குகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில்தான் அஸ்ஸாம் மாநிலத்தின் நிலை குறித்து அந்த மாநில முதல்வர் சர்பானந்த சோனாவாலிடம் விசாரித்திருக்கிறார் மோடி. இந்த உரையாடலில் கொரோனா தொற்று பரவல் குறித்தும், சமீபத்தில் அஸ்ஸாமில் நடந்த எண்ணெய் கிணறு வெடிப்புச் சம்பவம் குறித்தும் இருவரும் உரையாடியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

பீகார்

அஸ்ஸாம் போலவே பீகார் மாநிலத்திலும் கடும் மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பல லட்சக்கணக்கான மக்கள் உடைமைகளை இழந்துள்ளனர். பாலங்கள், சாலைகள் எனப் பல கட்டுமானங்கள் இடிந்து விழுந்துள்ளன. இது குறித்து பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமாரிடம் உரையாடியுள்ளார் பிரதமர்.

பீகார் வெள்ளப்பெருக்கு
பீகார் வெள்ளப்பெருக்கு

இமாசலப் பிரதேஷம்

கொரோனா தொற்றைப் பொறுத்தவரை இந்தியாவில் மிகக் குறைவாகத் தொற்று பரவியிருக்கும் மாநிலங்களில் ஒன்று இமாசல் பிரதேஷ். இங்கு ஜூலை 22-ம் தேதி நிலவரப்படி சுமார் 1,600 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், 11 பேர் பலியாகி இருக்கிறார்கள். நோய் அதிகரிக்கும் வேகமும் இந்த மாநிலத்தில் குறைவாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இமாசலப் பிரதேச முதல்வர் ஜெய் ராம் தாகூர் உடன் பிரதமர் தொலைபேசியில் பேசிய உரையாடல் விவரங்கள் முழுமையாக வெளியிடப்படவில்லை.

உத்தரகாண்ட்

உத்தரகாண்ட் மாநில முதல்வர் த்ரிவேந்திர சிங்க் ராவத்திடம் பேசியிருக்கிறார் பிரதமர் மோடி. இந்த உரையாடலில் சமீபத்தில் டூன் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பது குறித்து விசாரித்திருக்கிறார். மேலும் மாநில அரசும், ராணுவமும் இணைந்து இந்த விஷயத்தில் பணியாற்ற வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

தெலங்கானா

இந்தியாவில் கொரோனா பரவுதலில் தெலங்கானா முதல் 10 மாநிலங்களுக்குள் இருக்கிறது. இதுகுறித்து முதல்வர் சந்திரசேகர் ராவ்விடம் பேசியிருக்கிறார் பிரதமர். அதில், கொரோனா யுத்தத்தில் தெலங்கானா எடுத்திருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நோய் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து முதல்வர் மோடியிடம் விளக்கம் அளித்ததாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Jagan Mohan Reddy
Jagan Mohan Reddy
Twitter/@YSRCPDMO

ஆந்திரப் பிரதேசம்

ஆந்திராவில் கொரோனா தொற்று மிக வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட ஐந்தாவது மாநிலமாக இருக்கிறது ஆந்திரா. இந்த நிலையில், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியுடன் தொலைபேசியில் அம்மாநிலத்தின் நிலைமை குறித்துப் பேசியிருக்கிறார் பிரதமர் மோடி. மிக அதிக அளவு கொரோனா பரிசோதனை செய்ததற்கு முதல்வரைப் பிரதமர் பாராட்டியதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. கடந்த மாதம் காணொளி சந்திப்பின் மூலம் மோடி அனைத்து மாநில முதல்வர்களைச் சந்தித்தபோது ஜெகன்மோகன் ரெட்டி அதில் பங்கேற்கவில்லை, அதற்கு இரு தினங்கள் கழித்து பிரதமருக்குத் தாங்கள் முழு ஒத்துழைப்பு தருவதாக வாக்களித்தார் ஜெகன். இந்த நிலையில் இவர்களின் இந்த உரையாடல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு

நாளுக்கு நாள் மிக அதிகமாக நோய் பரவும் மாநிலங்களில் ஒன்றாக இருக்கிறது தமிழ்நாடு. இந்த நிலையில் பிரதமர் மோடியிடம் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் நடக்கும் டெஸ்டிங் முதல் ஞாயிறு ஊரடங்கு வரை முழு ரிப்போர்ட் அளித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேற்கண்ட ஏழு மாநிலங்களுக்கு மட்டும் ஏன் பிரதமர் பேசினார் என்பதே நமது கேள்வி. இவற்றில் அஸ்ஸாம், இமாசலப் பிரதேஷ், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சியில் இருக்கிறது. தமிழ்நாடு, பீகார் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க கூட்டணி ஆட்சியில் இருக்கிறது. தெலங்கானா, ஆந்திரா ஆகிய இரு மாநிலத் தலைமைகளுடனும் நல்லுறவை வளர்த்துக்கொள்ள பா.ஜ.க தொடர் முயற்சியில் இருக்கிறது. இதிலிருந்து மத்திய அரசின் அரசியல் கொள்கைகளுக்கு உகந்த மாநிலங்களில் மட்டுமே பிரதமர் பேசி உதவிக் கரம் நீட்டியிருக்கிறாரா என முதல் கேள்வி எழுப்பப்படுகிறது.
ரயில்வே தனியார்மயம்: வருகின்றன `ஸ்டெர்லைட்’, `ஜி.எம்.ஆர்' உட்பட 151 எக்ஸ்பிரஸ் ரயில்கள்!

பீகார், அஸ்ஸாம் போலவே, சமீபத்திய வெள்ளப்பெருக்கில் மேற்கு வங்க மாநிலமும் பெரிதாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதிலும், மற்ற இரு மாநிலங்களைவிட, மிக அதிகமான உயிரிழப்புகளைச் சந்தித்திருக்கிறது அந்த மாநிலம். ஏற்கெனவே அம்பன் புயலால் பாதிக்கப்பட்டிருக்கும் அந்த மாநிலத்துக்கு இது பெரிய சிக்கலாக இருக்கும். ஆனால் பிரதமர் மோடி, 'மேற்கு வங்க முதல்வரிடம் மட்டும் பேசாதது ஏன்? அம்மாநிலத்துக்கு மத்திய அரசு எவ்வளவு உதவி செய்யப்போகிறது?' என்பது இரண்டாவது கேள்வி.

இந்திய அளவில் கொரோனா பரவுதலில் முதல் ஐந்து இடத்தில் முறையே, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் இருக்கின்றன. இவற்றில், 'தமிழகம், ஆந்திரா தவிர்த்து மற்ற மூன்று மாநிலத் தலைமைகளுக்கு (பா.ஜ.க ஆளும் கர்நாடகா உட்பட) பிரதமர் பேசாதது ஏன்..?' 'மிகவும் பாதிக்கப்பட்ட இந்த மாநிலங்களுக்கு மத்திய அரசு சார்பாக உதவி கிடைக்கும் எனப் பிரதமர் ஏன் நம்பிக்கை அளிக்கவில்லை..?' என்பது மூன்றாவது கேள்வி.

குறிப்பாக, எல்லா மாநிலங்களிலும் அந்தந்த மாநில முதல்வர்களிடம் தற்போதைய நிலையைக் கேட்டறிந்தார் பிரதமர் மோடி. கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் இருக்கிறது மகாராஷ்டிரா. ஆனால் கடந்த வாரம், 'இந்த மாநிலத்தின் நிலை குறித்து அறிய முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம் பேசாமல், எதிர்க்கட்சி பா.ஜ.க தலைவரான தேவேந்திர பட்னாவிஸிடம் கேட்டறிந்தது ஏன்..?' என்பது நான்காவது கேள்வி.

BJP symbol
BJP symbol

வெள்ள நிவாரணம் ஆகட்டும், புயல் நிவாரணம் ஆகட்டும் மத்திய அரசு மாநில அரசுகளுக்கு ஒதுக்கும் நிதி தொடர்பான சர்ச்சைகள் ஒன்றும் இந்தியாவுக்குப் புதிதல்ல. ஆனால், கொரோனா ஒட்டுமொத்த உலகத்தையே பாதித்துக் கொண்டிருக்கிறது. பல மாதங்களாக இந்தியா முடங்கியிருக்கிறது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் சிக்கலில் இருக்கிறது. இந்நிலையில் நாட்டின் பிரதமர், அனைத்து மாநிலங்களையும் சமமாகப் பாவித்து அதனதன் தேவைக்கேற்ப உதவிகள் செய்ய வேண்டியது அவரது ஜனநாயக கடமை. அரசியல் பாகுபாடுகள் மறந்து செயல்பட வேண்டிய இவ்வேளையில், பாரபட்சமாக ஒருசில மாநிலங்களை மட்டும் மத்திய அரசு அதிகமாகக் கவனிப்பது கவலை அளிக்கும் விதமாக உள்ளது.

மிகவும் இக்கட்டான இந்தச் சூழலில் பிரதமரின் ஒரு தொலைபேசி அழைப்பு கூட மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த நிலையில் 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்கள் கொண்ட இந்தியாவில், குறிப்பாக ஏழு மாநிலங்களுக்கு மட்டும் பிரதமர் ஏன் பேசியிருக்கிறார் எனக் கேள்வி எழுவது நியாயமானதே. அதேபோல மத்திய அரசின் நிலைப்பாடுகளும் நியாயமாக இருக்க வேண்டும் என்பதே நம் விருப்பம்.

அடுத்த கட்டுரைக்கு