Published:Updated:

ஊரடங்கில் சிகரெட், மதுப்பழக்கம் குறைந்திருக்கிறதா?! #LongRead

போதை
போதை ( representational image )

`லாக்டௌனால் குறைந்துள்ளதா மது, சிகரெட் பழக்கம்..?' என்று வாசகர்களிடம் விகடன் ஒரு சர்வே மேற்கொண்டது. அதன் முடிவுகள், கவனிக்க வைக்கின்றன.

ம் வாழ்க்கைமுறையில் லாக்டௌன் காலம் ஏற்படுத்தியிருக்கும் பாசிட்டிவ் மாற்றங்கள் பல. அவற்றில் முக்கியமானவை, மதுபானக் கடைகள் மூடப்பட்டதால் மக்களின் மது நுகர்வு நிறுத்தப்பட்டிருக்கிறது. கடைகள் அடைக்கப்பட்டுள்ளன மற்றும் வீட்டுக்குள் அடைந்திருக்க வேண்டிய சூழலால் சிகரெட் நுகர்வு குறைந்திருக்கிறது.

`சிகரெட் குடிக்கிறியா...' என்று பெற்றோர் அதிர்ச்சியானபோதும், ``குடியை நிறுத்துங்க ப்ளீஸ்...' என்று மனைவி அழுதபோதும், `இதெல்லாம் வேணாம்ப்பா...' என்று பிள்ளைகள் கெஞ்சியபோதெல்லாம் பலர் கேட்கவில்லை, கண்டுகொள்ளவில்லை. ஆனால் இந்த லாக்டௌன், அவர்களுக்கெல்லாம் தந்திருப்பது அதிரடி சிகிச்சை. `குடியை நிறுத்துவதெல்லாம் முடியவே முடியாது' என்று நினைத்திருந்தவர்கள் எல்லோரும் இப்போது வேறுவழியின்றி குடியை நிறுத்தி இருக்கிறார்கள். `நம்மால் மது இல்லாமல் இருக்க முடிகிறது' என்பதை ஆச்சர்யத்தோடு உணர்ந்திருக்கிறார்கள்.

இந்தியாவில் புகை
இந்தியாவில் புகை

அதேபோல, சிகரெட் கிடைக்காத சூழல், வீட்டுக்குள்ளேயே அடைந்திருக்க வேண்டிய கட்டாயம் ஆகிய காரணங்களால் சிலர் சிகரெட்டை விட்டிருக்கிறார்கள். பலருக்கு, அதன் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. ஒரு நாளில் 10 சிகரெட் எனக் குடித்தவர்கள் எல்லாம் இன்று ஒன்று, இரண்டு என்ற லிமிட்டுக்கு வந்திருக்கிறார்கள். `இதையெல்லாம் விட்டுடலாம் போலயே...' என்ற மனமாற்றமும் பலரிடம் ஏற்பட்டிருக்கிறது. `லாக்டௌன் முடிஞ்சதும் அப்படியே டீஅடிக்‌ஷன் ட்ரீட்மென்ட் ஏதாச்சும் எடுத்து இதை மொத்தமா விட்டுடலாமே...' என்று அவர்களை வலியுறுத்தும் குடும்பத்தினரும் இப்போது நம்பிக்கை பெற்றிருக்கிறார்கள்.

லாக்டௌனால் குறைந்துள்ளதா மது, சிகரெட் பழக்கம்? #VikatanSurvey

இப்படி மது, சிகரெட் பழக்கங்களில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கும் இந்த லாக்டௌனில், `லாக்டௌனால் குறைந்துள்ளதா மது, சிகரெட் பழக்கம்..?' என்று வாசகர்களிடம் விகடன் ஒரு சர்வே மேற்கொண்டது. அதன் முடிவுகள், கவனிக்க வைக்கின்றன.

`இந்த லாக்டௌன் நாள்களில் போதைப்பழக்கத்தை எவ்வளவு குறைத்துள்ளீர்கள்?' என்ற கேள்விக்கு..

குறைக்கவில்லை - 4%

சற்று குறைத்திருக்கிறேன் - 14%

ரொம்பவும் குறைத்துவிட்டேன் - 82%

`போதைப்பழக்கமின்றி மனம் எப்படி உணர்கிறது?' என்ற கேள்விக்கு...

நிம்மதியாக - 74%

குழப்பமாக - 13%

வெறுப்பாக - 13%

`மது, சிகரெட்டை நிறுத்துவதற்கான பயிற்சிகள், சிகிச்சைகளை முன்னெடுக்க ஆர்வம் ஏற்பட்டிருக்கிறதா?' என்ற கேள்விக்கு...

இல்லை - 57%

ஏதோ கொஞ்சம் - 24%

ரொம்ப ஆர்வம் - 19%

`போதைப்பழக்கத்தைக் கைவிடும் எண்ணம் எந்தளவுக்கு இருக்கிறது?' என்ற கேள்விக்கு...

கொஞ்சம் கஷ்டம் - 38%

கட்டாயம் விடுவேன் - 54%

வாய்ப்பேயில்லை - 8%

போதை
போதை

முத்தாய்ப்பாக, ' 'என்னால் முடியவில்லை' என்று தோன்றுகிறதா, `நம்மால் முடியும்' என்று தோன்றுகிறதா?' என்ற கேள்விக்கு,

நம்மால் முடியும் - 86%

என்னால் முடியவில்லை - 11%

நடக்கும் காரியமா - 3%

இந்த சர்வேயில் கலந்துகொண்டவர்களில் 20 - 40 வயதினர் 63% என்பது குறிப்பிடத்தக்கது.

கிடைத்திருக்கும் பதில்கள் அனைத்தும், மது, சிகரெட் புகைப்பழக்கத்திலிருந்து விடுபடும் மனநிலையை லாக்டௌன் தூண்டியிருக்கிறது என்பதையே சொல்கின்றன. இது, ஆரோக்கியமான சூழலை நோக்கிச் செல்லும் புதுத்தெம்பை அளிக்கிறது.

`போதைகளுக்கு அடிமையானவர்கள் அவற்றிலிருந்து மீள்வதற்கு வரப்பிரசாதமாக இந்த நாள்கள் அமைந்துள்ளன' என்பதுவே மருத்துவர்களின் கருத்தாகவும் இருக்கிறது.

`மது கிடைக்காததால் தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி' - குடும்பத்தையே நெகிழவைத்த நெல்லைக்  காவல்துறை

போதையிலிருந்து மீள்வதற்கான ஆலோசனைகள் குறித்து, மனநல மருத்துவர் அசோகனிடம் பேசினோம். ``முதலில் போதைப் பழக்கத்தை படிப்படியாகக் குறைக்க வேண்டும் என நினைப்பதே கூடாது. விட வேண்டும் என நினைத்துவிட்டால் அந்த நொடியிலிருந்தே அந்தப் பழக்கத்துக்குள் மீண்டும் போய்விடாத கட்டுப்பாடு இருக்க வேண்டும். போதைப் பழக்கத்தை விடுவதற்குச் சிறந்த யோசனை... பழக்கத்தை விடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பட்டியலிட்டுப் பார்த்தாலே போதும். அதில் கிடைக்கிற உண்மைகள் பழக்கத்திலிருந்து வெளிவருவதற்கு நமக்கு நல்லதோர் ஊக்கியாக அமையும்.

சிகரெட்டோ மதுவோ இருந்தால்தான் எனக்குச் சிந்திக்கவே வரும் என்பதும், அவை இருந்தால்தான் என்னால் வாழவே முடியும் என்பதும் நாமாகக் கற்பனை செய்துகொள்பவை. சிகரெட், மது உள்ளிட்ட பலவித போதைப் பழக்கங்களைக் கைவிடும்போது வெவ்வேறு மாதிரியான `மீள் அறிகுறிகள் (Withdrawal Symptoms)' ஏற்படும். பலருக்கு ஒவ்வாமை, உடல் சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படலாம். ஆனால், அவற்றையெல்லாம் மருத்துவரிடம் சென்று சரிசெய்துகொள்ளலாம். சுயமாக நாம் செய்ய வேண்டியது ஒன்றுதான். பழக்கத்தை நிறுத்த வேண்டும் என மனதில் நினைத்துவிட்டாலே போதும்.

மனநல மருத்துவர் அசோகன்
மனநல மருத்துவர் அசோகன்

இந்த லாக்டௌன் நாள்கள் நமக்கு நிறைய கற்றுத் தந்துகொண்டு இருக்கின்றன. `இவையெல்லாம் நம்மால் செய்யவே முடியாது' என்ற எண்ணத்தைத் தகர்த்து, ஹேர்கட் முதல் கல்யாணம்வரை வீடுகளிலேயே நடக்கின்றன. அதேபோல, `இவையில்லாமல் நம்மால் இருக்கவே முடியாது' என்ற நம்பிக்கையைத் தகர்த்து, பேக்கரி உணவுப் பொருள்கள் முதல் கேளிக்கை, கொண்டாட்டங்கள்வரை அனைத்தையும் விடுத்து வீட்டுக்குள் இருக்கிறோம். `முடியாது' என்று நாம் நினைத்திருந்த மூடநம்பிக்கைகளை எல்லாம், `முடியும்' என்று நம்மைக்கொண்டே நமக்கு நிரூபித்திருக்கும் லாக்டௌன், `போதைப்பழக்கத்தை விடமுடியாதா என்ன?' என்ற கேள்விக்கும், `முடியும்' என்ற பதிலைக் கொடுத்திருப்பது ஹைலைட்.

``மது அடிமைகள், அரசு மருத்துவமனைக்கு வரலாம்!'' -  சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ்

மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி இறுதியில் மனநலக்காப்பகத்தில் அட்மிட் ஆகியிருந்தாராம், ஓர் ஆங்கிலப் பேராசிரியர். அவரிடம் பத்திரிகையாளர் ஒருவர், `படித்த பேராசிரியராக இருந்துகொண்டு குடித்து இப்படி உடம்பைக் கெடுத்திருக்கிறீர்களே? குடி உடலைக் கெடுப்பது என்பது உங்களுக்குத் தெரியாதா?' என்று கேட்டாராம். அதற்குப் பேராசிரியர், `என்னைச் சுற்றி நெருப்பு வளையங்கள் இருக்கும்போது நான் எப்படி எரியாத கற்பூரம் மாதிரி இருப்பேன்' என்றாராம். மதுப்பழக்கத்தில் எல்லோரும் மூழ்கக் காரணம், availability and affordability தான். அதாவது மலிவாக எங்கும் கிடைக்கும் பண்டங்களாக இவை நம்மிடம் வந்து சேர்ந்துவிடுகின்றன.

இந்தப் போதை உலகத்தை இனியாவது நாம் திருத்தியமைக்க வேண்டும். அதற்கு இந்த லாக்டௌன் நாள்கள் நிச்சயம் கைகொடுக்கும். ஊரடங்காக ஏறக்குறைய 40 நாள்கள் நீள்கிற இந்தக் கட்டுப்பாடு, நிச்சயமாக நல்ல மாற்றத்தை உண்டாக்கும், உண்டாக்க வேண்டும்" என்றார்.

மருத்துவர் அசோகன் சொல்லும் 'availability and affordability' காரணங்கள்தான், புதுக்கோட்டையைச் சேர்ந்த சக்திவேல் என்பவரை 20 வருடங்களாக குடிக்கு அடிமையாக வைத்திருந்தன. வாய்ப்பும் வசதியும் போதையில் தள்ளிவிடுகின்றன. கட்டுப்பாடும் சுயதெளிவும் அதிலிருந்து மீளவும், மீண்டும் விழாமல் தவிர்க்கவும் உதவும் என்பதற்கான ஆகச்சிறந்த லாக்டௌன் உதாரணம், புதுக்கோட்டை சக்திவேல்!

சக்திவேலின் குடும்பம்
சக்திவேலின் குடும்பம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி களப்பக்காட்டைச் சேர்ந்தவர் ராமையா. இவரின் மகன் சக்திவேல், அறந்தாங்கி வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு மனு எழுதித்தந்து வாழ்க்கை நடத்திவருபவர். சக்திவேலுக்கு மனைவி மற்றும் இரண்டு ஆண் குழந்தைகள். தினசரி சம்பாத்தியம் முழுவதையும் குடித்துத் தீர்ப்பதோடு குடும்பத்தினரிடம் ரகளையிலும் ஈடுபடுவது சக்திவேலின் வழக்கம். இதனால் அவரின் மனைவி தன் பிள்ளைகளோடு பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார். தங்களது கூலிவேலை சம்பாத்தியத்தில் சக்திவேலுக்குச் சாப்பாடு போட்டு வந்துள்ளனர் சக்திவேலின் பெற்றோர்.

மது கிடைக்காததால் மாற்றுப்போதை! -போதைக்காகச் சீரழிந்த 3 இளைஞர்களின் வாழ்க்கை

இந்த நிலையில் தொடர் ஊரடங்கையடுத்து வருமான இழப்பு, மதுக்கடைகள் மூடல் ஆகியவற்றால் மதுவை மெள்ள மெள்ள மறந்து குடியையே கைவிட்டிருக்கிறார், சக்திவேல். அதோடு, தந்தை தைத்துத் தரும் மாஸ்க்குகளை மக்களிடம் விற்று வருகிறார். குடித்துவிட்டு சாலையில் டான்ஸ் ஆடியபடி செல்லும் சக்திவேலையே பார்த்துவந்த பொதுமக்கள், அதே சாலையில் தற்போது மாஸ்க் விற்பனை செய்துவரும் சக்திவேலைப் பார்த்து ஆச்சர்யப்படுகின்றனர்.

சக்திவேலின் பெற்றோர், ``சக்திவேலு குடிச்சிட்டு ரோட்டுல ஆடுறதாவும், இறுதி ஊர்வலங்கள்ல எல்லாம் ஆடிட்டுப் போறதாவும் பலரும் எங்ககிட்ட வந்து சொல்லுவாங்க. இவன் இப்படிக் குடிச்சி வீணாகிட்டானேன்னு நாங்க கண்ணீர் சிந்தாத நாள் இல்ல. ஆனா, இந்த ஊரடங்கு வந்து இப்போ எங்க புள்ளையைத் திருத்திக் கொடுத்திருக்கு. கையில காசும் இல்ல, குடிக்கக் கடையும் இல்லைன்னதும், வேற வழியில்லாம அதுலயிருந்து மீண்டுட்டான். ஆனாலும், கடையைத் திறந்ததும் மறுபடி குடிக்கப் போயிடுவானோனு பயமாத்தான் இருக்கு. சாராயக் கடையை எல்லாம் மூட வழியே இல்லையா?'' என்றனர் தவிப்புடன்.

மாஸ்க் விற்கும் சக்திவேல்
மாஸ்க் விற்கும் சக்திவேல்

சக்திவேல், ``மனு எழுதினா ஒரு நாளைக்கு 500 ரூபாய் வரை கிடைக்கும். வேலை முடிஞ்சதும் மனசு டாஸ்மாக் கடைக்குத்தான் போகச்சொல்லும். எனக்கு 20 வருஷத்துக்கும் மேல குடிப்பழக்கம் இருந்துச்சு. ஒருநாளுகூட குடிக்காம இருக்க முடியாது. இப்போ, டாஸ்மாக் கடையை மூடிட்டதால, இந்த மாசம் முழுக்கக் குடிக்காம இருக்கேன். எனக்கே ஆச்சர்யமாதான் இருக்கு. மது கிடைக்காம, மொத ஒரு வாரம் பைத்தியம் புடிச்ச மாதிரி இருந்துச்சு. ஆனா இப்போ, அந்த நினைவே வரலை.

`மது கிடைக்காமல் போனதற்குக் கொரோனாதான் காரணம்!' - விபரீத முடிவெடுத்த புதுக்கோட்டை லாரி டிரைவர்

எப்பவும் குடியைச் சுத்தியே கிடக்கும் மனசு, குடிக்கு வழியில்லைனு ஆனதும், உருப்படியான விஷயங்களை யோசிக்க ஆரம்பிச்சது. சாப்பாட்டுக்கு வழிதெரியாத நேரத்துல, மாஸ்க் விற்கிற ஐடியா வந்துச்சு. அப்பா மாஸ்க் செஞ்சு கொடுப்பாரு. அதை நான் வித்துக்கிட்டு வருவேன். தினமும் 10 மாஸ்க், கைக்கு 200 ரூபாய் கிடைக்கும். காய்கறிகள் வாங்கிக்கிட்டு வந்து அப்பாகிட்ட 100 ரூபாய் கொடுப்பேன். அப்பா அதுல 50 ரூபாவை எங்கிட்ட திருப்பிக் கொடுப்பாரு. தெனமும் நான் சம்பாதிச்ச 500ஐவிட, ஊரடங்குல எல்லாரும் வேலைவெட்டி இல்லாம கிடக்கும்போது எனக்குக் கிடைக்கிற இந்த 50 ரூபா, ரொம்ப பெருசா தெரியுது. இப்பவும், நண்பர்கள் சிலர் கள்ள மார்க்கெட்ல மது வாங்கித் தர்றதா சொல்றாங்க. நான் வேண்டாம்னு சொல்லிடுவேன்.

நாளைக்கு டாஸ்மாக் கடையை மறுபடி திறந்தாலும், குடிக்கக்கூடாதுனு மனசுல ஒரு வைராக்கியம் வந்திருக்கு. மனைவியைத் திரும்பக் கூட்டி வந்து பிள்ளைகளை நல்லா பாத்துக்கணும்" என்கிறார் சக்திவேல்.

போதைக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபட்டுவரும் சுங்கத்துறை உதவி ஆணையர் வெங்கடேஷ்பாபுவிடம், சிகரெட், மதுப்பழக்கத்திலிருந்து விடுபடும் மற்றும் மீட்கும் வழிகள் குறித்துப் பேசினோம். ``சிகரெட் பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டவர்கள், கிடைக்கிறதென்றால் வாங்கிப் புகைப்பார்கள். கிடைக்காவிட்டால் மனதை வேறிடத்தில் திசை திருப்பிக்கொள்வார்கள். எனவே, புகைப்பழக்கத்திலிருந்து முற்றிலும் விடுபட மனதிடம் வேண்டும். எல்லோரும் ஒருநாளைக்கு சாகத்தான் போகிறோம் என்பதைத் தாண்டி, இந்தப் பழக்கத்தால் குடும்பத்தினரை விட்டு சீக்கிரமே செத்துப்போய்விடுவோம் என்ற உண்மையை எண்ணிக்கொள்ள வேண்டும். குடும்பத்தினரும், சம்பந்தப்பட்டவர் மேல் கவனம் செலுத்த வேண்டும்

தமிழகத்தில் புகை, இந்தியாவில் மது
தமிழகத்தில் புகை, இந்தியாவில் மது

எனக்குத் தெரிந்த பலர் சொன்னது இது. `என் மனைவி சொல்லியும்கூட சிகரெட்டை விட்டதில்லை; ஆனால் என் மகள் சொன்னதும் மனது கேட்கவில்லை. வேறு வழியின்றி விட்டுவிட்டேன்'. இப்படி நிறைய பேர் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். இந்த மாதிரி உறவுகள்தான் சிகரெட் போன்ற போதைகளிலிருந்து விடுபட உதவும் காரணிகள். சிகரெட் பழக்கத்தைப் பொறுத்தவரை உளவியல் மருத்துவம்தான் முதன்மைத் தேவை.

ஒன்று மட்டும் உண்மை. இத்தனை நாள்கள் சப்ளையை நிறுத்திவிட்டு திடீரென மீண்டும் சிகரெட் விற்பனையைத் தொடங்கினால் கண்டிப்பாக, பழக்கத்தை விட்டவர்களும் புதியவர்களும் புகைவிடத் தொடங்கும் ஆபத்தும் இருக்கிறது" என்று எச்சரித்தவர், மதுப்பழக்கத்துக்கான டீஅடிக்‌ஷன் பற்றிப் பேசினார்.

`மது கிடைக்கவில்லை; மாற்றுப் போதை!’ - விபரீதத்தில் முடிந்த புதுக்கோட்டை இளைஞர்களின் முயற்சி

மனநிலையும் சூழ்நிலையும்தான் போதைக்கு அடிமையாக்கும் முதன்மைக் காரணிகள். உடல் மதுவைத் தேடுவது, அடுத்த கட்டம்தான். எனவே தனிமையைத் தவிர்த்தலும், தன்னை பிஸியாக வைத்துக்கொள்ளுதலும் மதுபோதையிலிருந்து வெளிவர முதல் தேவை. இளம் வயதில் போதைக்குள் செல்பவர்கள் லிமிட் அறியமாட்டார்கள். ஆனால், பக்குவமடையும்போது உயிர் பயமும், உடல் பாதிப்பும் உணர்ந்து மாறுவார்கள். ஆனால், 40 வயதான பின்னர் புதிதாக மதுப்பழக்கத்தைப் பழகுபவர்கள் மிகவும் அடிமையாகிவிடுகிறார்கள்" என்றவர்,

``குடியை ஒரு பழக்கமாக வைத்திருப்பவர்கள், மனது வைத்தால் நிச்சயம் அதிலிருந்து தாங்களே தங்களை விடுவித்துக்கொள்ளலாம். அடுத்ததாக, குடிநோயாளிகளை மதுப்பழக்கத்திலிருந்து மீட்க, மறுவாழ்வு மையங்கள் தமிழகம் முழுவதும் இருக்கின்றன. போதைக்கு மாற்றான மருந்துகளை ஊசிமூலம் செலுத்தி கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை மீட்டுக் கொண்டுவருவார்கள். மது போதையில் அவர்கள் எந்த ஸ்டேஜில் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து சிகிச்சை அமையும்.

சுங்கத்துறை உதவி ஆணையர்  வெங்கடேஷ்பாபு
சுங்கத்துறை உதவி ஆணையர் வெங்கடேஷ்பாபு

லாக்டௌனுக்குப் பிறகு, `இத்தனை நாள்கள் தொடாமல் இருந்த மது, சிகரெட்டை இனியும் தொட வேண்டாம்' என்ற மனமாற்றம் சம்பந்தப்பட்டவர்களின் மனங்களில் வர வேண்டும். புற்றுநோய் முதல் மாரடைப்புவரை சிகரெட், மதுவால் ஏற்படக்கூடிய நோய்களும், மரணங்களும் நிறைய நிறைய. பெற்றோர், மனைவி, பிள்ளைகள், நண்பர்கள் என உங்கள் அன்புக்கு உரியவர்களை விட்டுச் செல்வதில் ஏன் இவ்வளவு அவசரம் உங்களுக்கு?'' என்று கேட்கிறார் வெங்கடேஷ்பாபு.

அடுத்த கட்டுரைக்கு