Published:Updated:

`வேலூர் மாவட்டத்தில் 3,100 பேருக்குக் காசநோய்!’ -கலெக்டர் அதிர்ச்சித் தகவல்

வேலூர் மாவட்டத்தில் மட்டும் 3,100 பேர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சண்முகசுந்தரம் கூறினார்.

கலெக்டர் சண்முகசுந்தரம்
கலெக்டர் சண்முகசுந்தரம்

திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் தடுப்புத் திட்டத்தின் சார்பில் `சளி’ பரிசோதனை மூலம் காசநோயை விரைவில் கண்டறியும் `CBNAAT’ என்ற நடமாடும் சிகிச்சை வாகனத்தை வேலூர் பென்ட்லென்ட் அரசு மருத்துவமனையிலிருந்து மாவட்டத்தின் முக்கிய பகுதிகளுக்கு கலெக்டர் சண்முகசுந்தரம் தொடங்கிவைத்தார்.

நடமாடும் காசநோய் வாகனம்
நடமாடும் காசநோய் வாகனம்

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கலெக்டர், ``இந்தியாவில் காசநோய் வேகமாகப் பரவி வருகிறது. இருமல் மற்றும் பிற வகைகள் மூலமாக இந்த நோய் வேகமாகப் பரவுகிறது. குறிப்பாக, காசநோய் உள்ளவர்களுக்குத் தவறான பழக்கவழக்கங்கள் இல்லையென்றாலும் எய்ட்ஸ் நோய் பரவுவதற்கும் அதிகமான வாய்ப்புள்ளது.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில், கடந்த செப்டம்பர் மாதம் வரை 3,100 பேர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். வீட்டில் உள்ள ஒருவருக்குக் காசநோய் ஏற்பட்டாலும் மற்றவர்களும் பாதிக்கப்படுவார்கள். நடமாடும் பரிசோதனை வாகனம் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பொதுமக்களிடம் சளி மாதிரியை எடுத்து பரிசோதனை செய்ய உள்ளது. 

நடமாடும் காசநோய் வாகனம்
நடமாடும் காசநோய் வாகனம்

இதன் மூலம் ஆரம்ப நிலையிலேயே காசநோயைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கலாம். பாதிக்கப்பட்டவர்கள் 6 மாதம் முதல் ஓராண்டுவரை மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். மருந்து மாத்திரைகள் வழங்குவதற்காகத்தான் நடமாடும் மொபைல் வாகனத்தைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் சத்தான உணவு சாப்பிட வேண்டும். அப்போதுதான் எதிர்ப்பு சக்தி உடலுக்குக் கிடைக்கும். சத்தான உணவு வாங்கிச் சாப்பிட தமிழக அரசு மாதந்தோறும் 500 ரூபாயை உதவித்தொகையாக கொடுக்கிறது. இன்னும் 20 ஆண்டுகளில் இந்த நோயை முற்றிலும் ஒழிக்க அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது’’ என்றார்.

கலெக்டர் சண்முக சுந்தரம்
கலெக்டர் சண்முக சுந்தரம்

இந்த நிகழ்ச்சியில், சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் யாஸ்மின், காசநோய் பிரிவு துணை இயக்குநர் பிரகாஷ் ஐயப்பன், அரசு மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் டாக்டர் செந்தாமரை கண்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.