Published:Updated:

கொரோனா தடுப்பூசி வீணாகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

தடுப்பூசி ஆய்வு
தடுப்பூசி ஆய்வு

தற்போது 1,49,000-க்கும் அதிகமான கோவாக்சின் தடுப்பூசி நம்மிடம் கையிருப்பு உள்ளது. விரைவில் 5 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் விரைவில் தமிழகத்துக்கு வந்து சேரும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு வழங்கிய தடுப்பூசிகள் இன்று தமிழகத்துக்கு வந்து சேர்ந்தன. சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் அமைந்துள்ள மாநில தடுப்பு மருந்து சேமிப்புக் கிடங்கை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் ஆகியோர் பார்வையிட்டனர். அதன் பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

மருந்து சேமிப்பு கிடங்கு
மருந்து சேமிப்பு கிடங்கு

அப்போது பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், ``தடுப்பூசி போடும்போது பல்வேறு வதந்திகள் கிளம்புவது பொதுவான ஒன்று. போலியோ சொட்டுமருந்து கொடுக்கும் போதும் கூட இப்படியான வதந்திகள் வந்தன. அதையெல்லாம் கடந்து தான் தான் தமிழகத்தில் போலியோவை ஒழித்திருக்கிறோம். அரசு சரியான விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் விளைவாகத் தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஒரே நாளில் 2,00,000-க்கும் அதிகமான தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி வீணாவதைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வீணடிக்கப்பட்ட 44 லட்சம் கொரோனா தடுப்பூசிகள்... முதலிடத்தில் தமிழ்நாடு!

வரும் மே மாதம் முதல் 18-வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று அறிவிப்பு வந்ததால் இனி தடுப்பூசி வீணாவதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. முதல் தவணை கோவாக்சின் போட்டுக்கொண்ட அனைவருக்குமே இரண்டாம் தவணை தடுப்பூசி கண்டிப்பாகக் கிடைக்கும். தற்போது 1,49,000-க்கும் அதிகமான கோவாக்சின் தடுப்பூசிகள் நம்மிடம் கையிருப்பு உள்ளது. விரைவில் கூடுதலாக ஐந்து லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் தமிழகத்துக்கு வந்து சேரும். இன்று ஆறு லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வந்துள்ளன.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு கிடையாது, கோவாக்சின், கோவிஷீல்டு இந்த இரண்டையும் தவிர்த்து புதிய தடுப்பூசிகளுக்கும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியிருக்கிறது. அந்த தடுப்பூசிகள் விரைவில் வந்து சேரும். பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவதையும், சமூக இடைவெளியைப் பின்பற்றுவதையும், தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வதையும் கண்டிப்பாகச் செய்யவேண்டும்.

கொரோனா: ஆக்சிஜன் வசதியுடன் படுக்கை முதல் கட்டுப்பாட்டுப் பகுதிகள் வரை..! - சென்னை நிலை என்ன?

வேலூர் மருத்துவமனைகளில் நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறக்கவில்லை என்று, முதல்வர் கூறியிருக்கிறார். அந்த மாவட்ட ஆட்சித் தலைவரும் கூறியிருக்கிறார். தமிழகத்தில் நாளொன்றுக்கு 240 டன் ஆக்சிஜன் செலவாகிறது. நாள் ஒன்றுக்கு 400 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. நம்மால் 1,200 டன் வரை ஆக்சிஜனை சேமித்து வைக்க முடியும். தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் கிடையாது. ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படாத நிலையை அரசு உறுதிசெய்யும்.

ஆக்சிஜன் கொள்கலன்
ஆக்சிஜன் கொள்கலன்

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 32,405 படுக்கை வசதிகள் உள்ளன. இதில், சென்னையில் மட்டும் 6,504 படுக்கைகள் உள்ளன. கொரோனாவுக்காக மட்டும் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் 54,342 படுக்கைகள் உள்ளன இதில் சென்னையில் மட்டும் 10,000-க்கும் மேற்பட்ட படுகைகள் உள்ளன. தேவையான அனைத்து மருந்துகளும் தமிழகத்தில் இருப்பு உள்ளது.

`கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் 2 கிலோ தக்காளி இலவசம்’ - சத்தீஸ்கரில் நூதனம்!

கும்பமேளாவிலிருந்து கலந்துகொண்டு தமிழகம் வந்தவர்கள், மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பியவர்கள் அனைவருமே கொரோனா பரிசோதனை செய்யவேண்டும். அதோடு அவர்கள் வீடுகளில் தங்களைத் தனிமைப் படுத்திக்கொள்ள வழிநடத்த வேண்டும் என்றும் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறோம்.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

தமிழகத்தில் அனைவருக்குமே கொரோனா தடுப்பூசி எந்த வித கட்டணமும் இல்லாது இலவசமா போடப்படும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி கூறியிருக்கிறார். தற்போது 18-வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. அவர்களுக்கு எந்த மாதிரியான வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என மத்திய அரசு தெரிவித்ததும் அதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும். தமிழகம் கேட்கும் தடுப்பூசிகளை மத்திய அரசு உடனடியாக வழங்கி வருகிறது. Remdesivir போன்ற தடுப்பு மருந்துகளைக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் மருத்துவமனைகளின் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று கூறினார்.

அடுத்த கட்டுரைக்கு