Published:Updated:

`தனியார் மருத்துவமனைகளில் தேங்கியிருக்கும் கொரோனா தடுப்பூசிகள்!’ - கொள்கையை மாற்றுமா ஒன்றிய அரசு?

A health worker administers the vaccine
A health worker administers the vaccine ( AP Photo/Mahesh Kumar A )

அரசு மருத்துவமனைகளில் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் சூழலில், தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ள தடுப்பூசிகள் அதிக அளவில் பயன்படுத்தப்படாமல் இருக்க என்ன காரணம்?

தமிழ்நாட்டைப் பொறுத்தளவில் தனியார் மருத்துவமனைகளுக்கு மே, ஜூன் மாதங்களில் 13.9 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வந்திருக்கின்றன. அதில் 5.9 லட்சம் தடுப்பூசிகளைப் பயன்படுத்தியிருக்கின்றனர். மீதமுள்ள தடுப்பூசிகள் பயன்படுத்தப்படாமலே இருக்கின்றன என்று தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, மும்பையிலும் இதே நிலைதான். அங்கு தனியாருக்கு ஒதுக்கப்பட்ட 1.8 கோடி தடுப்பூசிகளில் 1.2 கோடி தடுப்பூசிகள் பயன்படுத்தப்படாமல் இருப்பதாகவும் இதேபோல நாட்டில் பல இடங்களில் தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்ட தடுப்பூசிகள் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

அரசு மருத்துவமனைகளில் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் சூழலில், தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ள தடுப்பூசிகள் அதிக அளவில் பயன்படுத்தப்படாமல் இருக்க என்ன காரணம்? நிலைமை இப்படி இருக்க 25 சதவிகித தடுப்பூசிகளைத் தனியார் மருத்துவமனைகளே நேரடியாகக் கொள்முதல் செய்துகொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்ததன் பின்னணி என்ன என்று பெரிய விவாதம் கிளம்பியிருக்கிறது.

டி.சுந்தரராமன்
டி.சுந்தரராமன்

இதுகுறித்துப் பேசிய ஜிப்மர் மருத்துவமனையின் முன்னாள் பேராசிரியரும் மக்கள் நல்வாழ்வு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான டி.சுந்தரராமன், ``தடுப்பூசியைப் பொறுத்தவரை 90 சதவிகித மக்கள் அரசு மருத்துவமனைகளையே தேர்வு செய்கின்றனர். மருத்துவத்துறையைப் பொறுத்தளவில் சில சேவைகளை அரசு மருத்துவமனையில் பெறவே மக்கள் விரும்புகின்றனர். அதில் முக்கியமானது தடுப்பூசி. இலவசமாகக் கிடைப்பதும், குழந்தைகளுக்கு அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி போட்டுப் பழகியிருப்பதால் உருவாகியுள்ள நம்பிக்கையும்தான் தடுப்பூசிக்காக மக்கள் அரசு மருத்துவமனையை நாடுவதற்குப் பிரதான காரணங்களாக இருக்கின்றன.

அதுமட்டுமல்ல, நடுத்தர மக்கள் அடிக்கடி செல்லும் சின்னச் சின்ன சாதாரண தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி கிடைக்கவில்லை. பெரிய பெரிய கார்ப்பரேட் மருத்துவமனைகளில்தான் கிடைக்கிறது. இதற்கு முன்பு அப்படியான மருத்துவமனைகளில் நுழைந்தே பழக்கப்படாத மக்கள் எப்படி அங்கே செல்வார்கள்? மிகவும் வசதியான மேல்தட்டு மக்கள்தான் அப்படியான மருத்துவமனைகளுக்குச் செல்கின்றனர். அதிக அளவிலான கட்டணமும், சாதாரண மக்களிடமிருந்து வெகுதூரம் விலகியிருப்பதும்தான் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி தேங்கியிருப்பதற்கான காரணம்.

COVID-19 vaccination center in Dharmsala
COVID-19 vaccination center in Dharmsala
பழங்குடிகளுக்கு 100% தடுப்பூசி; நீலகிரி மாவட்ட ஆட்சியரைப் பாராட்டிய முதல்வர்!

இந்தச் சூழலில், ஏன் தனியார் மருத்துவமனைகள் 25 சதவிகிதம் தடுப்பூசிகளை நேரடியாகக் கொள்முதல் செய்துகொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவிக்கிறது என்றால் தனியார் மயத்தை ஆதரிக்கும் அவர்கள் கொள்கைதான். எல்லாவற்றையும் தனியார் மயமாக்கிக்கொண்டிருக்கும் நேரத்தில், தடுப்பூசி விவகாரத்தில் தனியார் துறை தோல்வியுற்று எல்லோரும் பொதுத்துறையை நோக்கி வருவதைத் தடுத்து நிறுத்துவதற்காக மத்திய அரசு முயல்கிறது. வேகமாக எல்லோருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்ற சூழலில், அரசு மருத்துவமனைகளுக்கு போதுமான அளவில் தடுப்பூசிகளை வழங்காமல் எப்படியாவது தனியார் மருத்துவமனைகளைக் காப்பாற்றும் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்வது வேதனையளிக்கிறது. எல்லோருக்கும் இலவசமாகத் தடுப்பூசி கிடைக்கச் செய்வதே சரியான முடிவாக இருக்கும்" என்றார்.

சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளரான மருத்துவர் சாந்தி பேசும்போது, ``ஆறு மாதத்துக்குள் 30 கோடி பேருக்கான தடுப்பூசியைக் கொடுத்துவிடுவோம் என்றது மத்திய அரசு. கிட்டத்தட்ட ஆறுமாதம் முடியப்போகிறது. அரசு சொன்னபடி பார்த்தால், 30 கோடி பேருக்கு இரண்டு டோஸ்களும் சேர்த்து 60 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இப்போது வரை போடப்பட்டுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கை 35 கோடிகளைக் கூட தாண்டவில்லை. இன்னும் வேகமாகத் தடுப்பூசி போட வேண்டிய தேவை உருவாக்கியிருக்கிறது. மக்களும் ஆர்வமாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வரும் இந்தச் சூழலில் அரசு மருத்துவமனைகளில் தட்டுப்பாட்டு நிலவுகிறது. ஆனால், தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்ட தடுப்பூசிகளில் பாதிக்கும் மேல் பயன்படுத்தப்படாமல் வைக்கப்பட்டிருக்கின்றன.

மருத்துவர் சாந்தி
மருத்துவர் சாந்தி

இந்தச் சூழலில், தனியார் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் தடுப்பூசிகளை அரசு மருத்துவமனைகளுக்கு மாற்றி வேகமாகத் தடுப்பூசி போடும் பணியைத் தொய்வில்லாமல் செய்திருக்க வேண்டுமல்லவா? ஆனால், இவர்கள் அப்படிச் செய்யவில்லை. உடனே வேண்டுமென்றால் தனியார் மருத்துவமனையில் போய் பணம் கொடுத்துப் போட்டுக்கொள்ள வேண்டும்' என்று மக்கள் மத்தியில் ஓர் எண்ணத்தை உருவாக்குகின்றனர். அதுமட்டுமல்ல, 25 சதவிகித தடுப்பூசிகளைத் தனியார் மருத்துவமனைகளே நேரடியாகக் கொள்முதல் செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கின்றனர். 25 சதவிகிதம் என்பதை யார் முடிவு செய்தது? 25 சதவிகிதம் என்றால் என்ன அளவு, அதை யார் கண்காணிப்பது இப்படி எந்தத் தெளிவும் இல்லை.

இந்தியாவில் சுதந்திரம் அடைந்ததிலிருந்து தடுப்பூசி போடும் பணியை அரசுதான் முன்னெடுத்து வருகிறது. அதில், தனியாரின் பங்களிப்பு 7 முதல் 8 சதவிகிதம்தான் என்று சொல்லப்படுகிறது. அப்படியிருக்கும்போதும், 25 சதவிகிதம் ஏன்? உடனே போட்டாக வேண்டும்... எல்லோருக்கும் போட்டாக வேண்டும் என்ற இக்கட்டான சூழலில், குறிப்பிட்ட சதவிகிதம் தடுப்பூசியை ஓரமாக எடுத்து வைத்து அதை யாருக்குமே இல்லாத வகையில் செய்கின்றார்கள். அல்லது மக்களை விலை அதிகமாகக் கொடுத்து வாங்க வைக்கின்றனர்.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி
`இலவச பீர், குலுக்கல் பரிசு, மாஸ்க் தேவையில்லை!’ - அமெரிக்காவில் தடுப்பூசி நிலவரம் பகிரும் தமிழர்கள்

அரசு மருத்துவமனைகளில் மணிக்கணக்காக ஒருவன் காத்திருக்கிறான் சண்டையிடுகிறான் என்றால், அவனிடம் தடுப்பூசிக்காக 1,500 ரூபாய் இல்லையா... போய் தனியார் மருத்துவமனையில் போட்டுக்கொள்ள வேண்டியதுதானே எனச் சொல்ல முடியாது. அப்படிச் சொல்வது அபத்தம். பலர் அந்தப் பணம் இல்லாததால்தான் நிற்கிறார்கள் என்றாலும் இருப்பவர்கள் தனியாரிடம் போய் போட்டுக்கொள்ள வேண்டும் என்பதிலும் நியாயம் இல்லை. எல்லோருக்கும் இலவசமாகத் தடுப்பூசிகளை வழங்க வேண்டியது அரசின் பொறுப்பு, கடமை.

`90 சதவிகித தடுப்பூசிகளை அரசிடம் கொடுக்க வேண்டும். வேண்டுமானால் 10 சதவிகிதத்தைத் தனியாருக்குக் கொடுங்கள்' என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார். ஒடிசா அரசு, 5 சதவிகிதம் தனியாருக்குக் கொடுத்தால் போதும்' என்கிறது. நாங்கள் மொத்தமாக 100 சதவிகிதத்தையும் அரசே கொள்முதல் செய்து இலவசமாக மக்களுக்குக் கொடுக்க வேண்டும் என்கிறோம். வேண்டுமானால் தனியார் மருத்துவமனைகளின் கட்டமைப்பைத் தடுப்பூசி போடுவதற்குப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி இலவசம் என்று அறிவியுங்கள் என்கிறோம். தனியார் மருத்துவமனைகள் தடுப்பூசி செலுத்துவதற்குச் சேவைக் கட்டணமாக ஒரு தடுப்பூசிக்கு இவ்வளவு என்று ஒரு தொகையை நிர்ணயித்துக்கொடுங்கள்.

அதுமட்டுமல்ல, பொதுத்துறை நிறுவனங்கள் மூலமாகத் தடுப்பூசி உற்பத்தி செய்யத் தொடங்க வேண்டும். அப்போதுதான், தனியார் நிறுவனங்கள் தருவார்களா, தரமாட்டார்களா என்று காத்திருக்காமல் நமக்குத் தேவையான தடுப்பூசிகளை நாமே தயாரித்துக்கொள்ள முடியும். செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி தயாரிக்கும் மையத்தை மூடி வைத்துவிட்டு தனியாருக்கு மக்கள் பணத்தை அள்ளி இரைப்பது என்பது மக்களுக்குச் செய்யும் மிகப்பெரிய துரோகம்" என்றார்.

சுமந்த் சி ராமன்
சுமந்த் சி ராமன்

தனியார் துறையை ஊக்கப்படுத்துவதற்காகவே 25 சதவிகித தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகள் நேரடியாகக் கொள்முதல் செய்துகொள்ளலாம் என்ற அறிவித்துள்ளது என்ற குற்றச்சாட்டு குறித்து மருத்துவர் சுமந்த் சி ராமனிடம் பேசினோம், ``மற்ற துறைகளில் தனியாரை ஊக்கப்படுத்துவதில் தவறு கிடையாது. ஆனால், இந்த விஷயத்தைப் பொறுத்தவரை மக்கள் எங்கு அதிக அளவில் தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனரோ அங்குதான் அதிக அளவில் வழங்க வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் அதிகளவு தடுப்பூசி போடப்பட்டால் அங்கு வழங்குவதில் தவறில்லை. அங்கு வழங்கப்பட்ட தடுப்பூசிகளே தேங்கியிருக்கும் நிலையில், தனியார் மருத்துவமனைகளுக்கு 25 சதவிகிதம் தடுப்பூசி என்பது ஏற்புடையது அல்ல. தனியாருக்கு 10 சதவிகிதம் வழங்கினாலே போதுமானது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு