Published:Updated:

``ப்ளாஸ்மா தானமும் ரத்த தானம் மாதிரிதான்... தயங்காதீங்க!'' - ஒரு எம்.எல்.ஏ-வின் அனுபவம்

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி அதிலிருந்து குணமடைந்த அனுபவம் குறித்தும், பிளாஸ்மா தானம் செய்தது குறித்தும் எம்.எல்.ஏ சதன் பிரபாகரிடம் பேசினோம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கொரோனா வைரஸுக்கு என்று குறிப்பிட்ட மருந்து, சிகிச்சை என இதுவரை எதுவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், பல்வேறு வகையான பிரத்யேக சிகிச்சைகளும் மருந்துகளும் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

அதில் ஒன்றுதான் பிளாஸ்மா தெரபி. நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தவரின் உடலிலிருக்கும் ரத்தத்திலிருந்து பிளாஸ்மாவைப் பிரித்தெடுத்து, அதே நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் மற்றொருவரின் உடலில் செலுத்தும் முறைதான் பிளாஸ்மா தெரபி. கொரோனாவால் பாதிக்கப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பவர்களுக்கு இந்தச் சிகிச்சை முறை பரிந்துரைக்கப்பட்டு வருகிறது.

Plasma treatment
Plasma treatment

பிளாஸ்மா தெரபியின் அவசியத்தைக் கருத்தில்கொண்டு தமிழக அரசின் சார்பில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கி 2.34 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் விஜயபாஸ்கர் இதை நேற்று முன்தினம் (22.7.2020) திறந்து வைத்தார். இதில் முதல் நபராக பிளாஸ்மா தானம் செய்தவர் கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்த பரமக்குடி தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ சதன் பிரபாகர். இவர் பிளாஸ்மா தானம் அளித்த பிறகு கலந்துகொண்ட செய்தியாளர் சந்திப்பில், "கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களில் தகுதியானவர்கள் தாங்களே முன்வந்து பிளாஸ்மா தானம் அளிக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

தஞ்சாவூர்: `ரூ.5 கோடி வேணும்!’ - நகைக்கடை அதிபர் கடத்தலில் சிக்கிய 6 பேர்

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி அதிலிருந்து குணமடைந்த அனுபவம் குறித்தும், பிளாஸ்மா தானம் செய்தது குறித்தும் சதன் பிரபாகரிடம் பேசினோம்.

"தமிழ்நாட்டுல கொரோனா வைரஸ் தீவிரமா பரவத் தொடங்கி, நாடு முழுவதும் லாக்டௌன் அறிவிக்கப்பட்டிருந்த நேரம் அது. இந்த நேரத்துல என் தொகுதியைச் சேர்ந்த நிறைய மக்கள் அத்தியாவசிய பொருள்கள் இல்லாம கஷ்டப்பட்டாங்க. அதனால, பரமக்குடி தொகுதியில உள்ள 1,20,000 வீடுகளுக்கும் நேரடியா சென்று காய்கறிகள், மாஸ்க், கபசுர குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை வழங்கினோம். இந்த மாதிரி களப்பணி செய்யுறதால கொரோனா தொற்று ஏற்படலாம்னு நிறைய பேர் சொன்னதால, எனக்கு அறிகுறிகள் இல்லைன்னாலும் மாசத்துக்கு ஒருமுறை கொரோனா டெஸ்ட் எடுத்துக்கிட்டுதான் இருந்தேன். நெகட்டிவ்னுதான் வந்துது.

எம்.எல்.ஏ சதன் பிரபாகர்
எம்.எல்.ஏ சதன் பிரபாகர்

ஒருமுறை, மாணவர் அணியைச் சேர்ந்த ஒருவர் களப்பணிக்காக ரெண்டு நாள் என்கூட கார்ல வந்தாரு. அவர் டெஸ்ட் கொடுத்தப்போ கொரோனா பாசிட்டிவ்னு வந்துருக்கு. அதனால நானும் ஜூன் 30-ம் தேதி டெஸ்ட் எடுத்தேன். ஜூலை 2-ம் தேதி 'கொரோனா பாசிட்டிவ்'னு ரிசல்ட் வந்துது. என்கூட சேர்ந்து என் பையன் வசந்துக்கும் என் பி.ஏ முருகேஷுக்கும் கொரோனா பாசிட்டிவ்!

சாத்தான்குளம்: `பென்னி இறந்தபிறகு சாப்டுறதே இல்லை!’ - வீட்டையே சுற்றிவரும் `டாமி’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனால மூணு பேரும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில உள்ள கொரோனா வார்டுல சேர்ந்தோம். சரியாய் எட்டு நாள்கள் அங்கே தங்கி சிகிச்சை எடுத்துக்கிட்டோம். மருத்துவமனையில நல்லா பாத்துக்கிட்டாங்க. வேளாவேளைக்கு சாப்பாடு, அவித்த முட்டை, சுண்டல், பால், பழங்கள், கபசுர குடிநீர் எல்லாம் கொடுத்தாங்க. எனக்கு அறிகுறிகள்னு எதுவும் பெருசா இல்ல. ஏசிம்ப்டமடிக் நிலையிலதான் இருந்தேன். மருத்துவமனையில சேர்ந்து சிகிச்சை எடுத்துக்கொண்ட பிறகு, எடுத்த டெஸ்ட்ல எங்க மூணு பேருக்குமே கொரோனா நெகட்டிவ்னு வந்தது. அதனால வீட்டுக்குப் போகச் சொல்லிட்டாங்க. மருத்துவமனையில இருந்தப்போ பெருசா எந்த உடல்நல பிரச்னையும் ஏற்படலை. வீட்டுக்கு வந்த பிறகு, கொஞ்சம் உடல் சோர்வு இருந்தது. எதையும் சாப்பிட முடியல. வாய் கசப்பா இருந்தது. டிஸ்சார்ஜ் ஆன பிறகு வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கிட்டுதான் இருந்தேன்.

எம்.எல்.ஏ சதன் பிரபாகர்
எம்.எல்.ஏ சதன் பிரபாகர்

பிளாஸ்மா தானம் தொடர்பா ஏற்கெனவே நான் நிறைய கேள்விப்பட்டிருக்கேன். என் மனைவி கிட்ட பிளாஸ்மா தானம் பண்ணலாம்னு ஐடியா இருக்குன்னு சொல்லிட்டு இருந்தேன். சில நாள்களுக்கு முன்பு சென்னைக்கு வந்து சிஎம் வீட்டுல அமைச்சர்கள் எல்லாரும் பேசிக்கிட்டு இருந்தோம். அப்போ மறுநாள் திறக்கப்போற பிளாஸ்மா வங்கி குறித்து பேச்சு வந்தப்போ அமைச்சர் விஜயபாஸ்கர் 'உங்களுக்கு பிளாஸ்மா தானம் செய்யுறதுக்கு ஐடியா இருக்கா'ன்னு கேட்டாரு. நானும் என் ஆர்வத்தைச் சொன்னேன்.

சென்னை: நள்ளிரவுவரை காவல் நிலையத்தில் காத்திருந்த நடிகை வனிதா - அதிகாலையில் சூர்யாதேவி கைது

உடனே ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையோட டீன்கிட்ட பேசச் சொன்னாரு. கொரோனா குணமாகி 14 நாள்கள் முடிஞ்சதையும், இப்போ அறிகுறிகள் எதுவும் இல்லைன்னும் சொன்னேன். பிளாஸ்மா தானத்துக்கு என்னோட ரத்தம் ஏற்றதான்னு டெஸ்ட் செய்ய சாம்பிள் ரத்தம் கேட்டாங்க. ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு நேரடியா போய் டெஸ்ட்டுக்கு சாம்பிள் கொடுத்தேன். டெஸ்ட் பண்ணி பார்த்துட்டு, நான் பிளாஸ்மா தானம் செய்யலாம்னு சொல்லிட்டாங்க.

எம்.எல்.ஏ சதன் பிரபாகர்
எம்.எல்.ஏ சதன் பிரபாகர்

அமைச்சர் விஜயபாஸ்கர் பிளாஸ்மா வங்கியைத் திறந்தவுடன் நான் முதல் நபரா பிளாஸ்மா தானம் பண்ணினேன். உடம்புல இருந்து குறிப்பிட்ட அளவு ரத்தத்தை வலி இல்லாம எடுத்தாங்க. நம்மகிட்டேயிருந்து எடுக்கப்பட்ட ரத்தம் ஒரு மெஷின்ல பொருத்தப்பட்டது. அந்த மெஷின் ரத்த அணுக்களைத் தனியாவும், பிளாஸ்மாவை தனியாவும் பிரிச்சது. பிளாஸ்மாவை மட்டும் சிகிச்சைக்காக எடுத்துக்கிட்டு, மீதமுள்ள ரத்த அணுக்களைத் திரும்பவும் என் உடம்புலேயே செலுத்திட்டாங்க. இதுல பெருசா வலி எதுவும் ஏற்படல. ரத்தம் திரும்பவும் உடம்புக்குள்ள போறப்போ சின்ன அதிர்வை மட்டும் உணர முடிஞ்சது. அவ்வளவுதான்.

பிளாஸ்மா தானம் என்பது ரத்த தானம் மாதிரிதான். இதனால வலியோ, சோர்வோ எதுவும் ஏற்படல. எல்லாத்தையும் தாண்டி இது ஓர் உயிரைக் காப்பாற்ற உதவுது. அதனால தகுதியானவங்க எந்த பயமும் இல்லாம பிளாஸ்மா தானம் அளிக்க முன்வரணும்" என்றார் சதன் பிரபாகர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு