Election bannerElection banner
Published:Updated:

மகாராஷ்டிரா: தீவிரமடையும் கொரோனா பரவல் - அமீர் கான், முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மனைவிக்குத் தொற்று

அமீர் கான்
அமீர் கான்

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரேவைத் தொடர்ந்து உத்தவ் தாக்கரேவின் மனைவி ரேஷ்மி தாக்கரேவுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதோடு பாலிவுட் நடிகர் அமீர் கானும் பாதிக்கப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிராவில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அச்சுறுத்தும் வகையில் உயர்ந்துவருகிறது. தினமும் 20,000-க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுவருகிறது. இதனால் நாக்பூர் உட்பட மாநிலத்தின் முக்கியமான இடங்களில், பகுதி பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் நடைபெறவிருக்கும் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்துக்கும் மாநில அரசு தடை விதித்துள்ளது.

இந்தநிலையில் பாலிவுட் நடிகர் அமீர் கானுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டிருக்கிறார். மேலும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளும்படி அமீர் கான் தரப்பில் அவருடைய செய்தி தொடர்பாளர் கேட்டுக்கொண்டார். மேலும், அமைச்சர் தனஞ்சே முண்டேவுக்கு இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ரேஷ்மி தாக்கரே
ரேஷ்மி தாக்கரே

மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகனும், அமைச்சருமான ஆதித்ய தாக்கரேவுக்கு இரண்டு நாள்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது. இப்போது உத்தவ் தாக்கரேவின் மனைவி ரேஷ்மி தாக்கரேவுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் உத்தவ் தாக்கரேவும் தனது வீட்டிலிருந்தே பணியைச் செய்துவருகிறார்.

சர்வதேச தண்ணீர் தினமான மார்ச் 22-ம் தேதி அமீர் கான், முதல்வர் உத்தவ் தாக்கரேவை சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சந்திப்பைத் தொடர்ந்துதான் அமீர் கானுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் 3,512 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு இரண்டாம்கட்ட தடுப்பூசி, அடுத்த இரண்டு நாள்களில் போடப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதோடு வரும் 1-ம் தேதியிலிருந்து 45 வயதைக் கடந்தவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் முழுவேகத்தில் நடந்துவருகிறது. தினமும் ஒன்பது லட்சம் தடுப்பூசிகள் செலுத்த மாநில அரசு இலக்கு நிர்ணயித்து செயல்பட்டுவருகிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு