Published:Updated:

சுகாதாரத் துறை மானியக் கோரிக்கையில் வெளியிடப்பட்ட 18 முக்கிய அறிவிப்புகள்

ஜெ.நிவேதா
லட்சுமணன்.ஜி
சி.வெற்றிவேல்
ஜெனி ஃப்ரீடா

வளரிளம் பெண்களுக்கு நெல்லிக்காய், கறிவேப்பிலைப் பொடிகள்... சுகாதாரத்துறை மானியக்கோரிக்கை அறிவிப்புகள்!

தமிழக சுகாதாரத்துறையில் 2019 - 20 நிதியாண்டுக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. விவாதத்தைத் தொடர்ந்து சுகாதாரத்துறை தொடர்பான 108 புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அறிவிப்புகளில் வெளியான முக்கியமான அம்சங்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

1
ஆரோக்கியமான உணவு ( Pixabay )

`ஆரோக்கியமான உணவு முறை' விழிப்புணர்வு

அனைத்துக் கல்வி நிறுவனங்களையும் ஆரோக்கியமான உணவு வளாகங்களாக மாற்றும்பொருட்டு கல்லூரிகள், ள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் ஆரோக்கியமான உணவு முறைகள் குறித்து Eat Right திட்டத்தின் கீழ் 90 லட்சம் ரூபாய் செலவில் விழிப்புணர்வு மற்றும் பயிற்சி வழங்கப்படும்.

2
புற்றுநோய் சேவை ( விகடன் )

புற்றுநோயாளிகளுக்கு வீட்டுக்கே சென்று மருத்துவ சேவை!

புற்றுநோய் மற்றும் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வர இயலாத நோயாளிகளுக்கு அவர்களின் இருப்பிடத்துக்கே சென்று மருத்துவ சேவை அளிக்கும் திட்டம் 287 வட்டாரங்களில் ரூ.86 லட்சம் மதிப்பீட்டில் விரிவுபடுத்தப்படும்.

3
மூன்றாம் பாலினம் ( Pixabay )

மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சிறப்பு பிரிவு!

மூன்றாம் பாலினத்தவர்களுக்கான பன்னோக்கு சிகிச்சை சிறப்புப் பிரிவு மூன்று அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ரூ.60 லட்சம் செலவில் ஏற்படுத்தப்படும்.

4
இயற்கை பெட்டகம் ( Pixabay )

'அம்மா இயற்கை நலப் பெட்டகம்'

வளரிளம் பெண்களிடையே ரத்தசோகையைத் தடுப்பதற்காக நெல்லிக்காய்ப் பொடி, கருவேப்பிலைப் பொடி, முருங்கைக்கீரைப் பொடி மற்றும் தேன் அடங்கிய 'அம்மாஇயற்கை நலப் பெட்டகம்' ரூ.1.75 கோடி செலவில் வழங்கப்படும்.

5
மனநோயாளி ( Pixabay )

மனநோயாளிகளுக்கு 'மீண்டும் இனிய இல்லம்'

குணமடைந்த மனநோயாளிகளுக்கு வீட்டுச் சூழலில் புனர்வாழ்வு வசதிகளை வழங்கும்பொருட்டு தொண்டு நிறுவனங்கள் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் 'மீண்டும் இனிய இல்லம்' என்ற திட்டம் ரூ.1.38 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

6
பச்சிளம் குழந்தை ( Pixabay )

பச்சிளங்குழந்தை வளர்ப்புக்கு ஆலோசனை

தமிழகத்தில் புதிய முயற்சியாகப் பச்சிளங்குழந்தை வளர்ப்பு பற்றி ஆலோசனை வழங்க, தாய்மார்களுக்குக் கட்டணமில்லா ஒருங்கிணைந்த ஆலோசனை மையம் ரூ.1.31 கோடி செலவில் நிறுவப்படும்.

7
காசநோய் ( Pixabay )

காசநோய்க்கு நுண்ணோக்கி மையங்கள்!

காசநோயைக் கண்டறிய ரூ.17.5 கோடி மதிப்பீட்டில் 385 வரையறுக்கப்பட்ட நுண்ணோக்கி மையங்கள் ஏற்படுத்தப்படும்.

8
பிசியோதெரபி ( Pixabay )

முதியோர்களுக்கு இயன்முறை சேவை!

385 வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் முதியோர்களுக்கான இயன்முறை சேவை, மருத்துவக் கருவிகள் அளிக்கப்படும்.

9
மருந்து ( Pixabay )

`மருந்து ஆய்வு கூடம்'

ஆண்டுக்கு 5,000 மருந்து மாதிரிகளைப் பகுப்பாய்வு செய்யும் வகையில் மருந்துகள் ஆய்வுக்கூடம் ரூ.20 கோடி செலவில் மதுரையில் அமைக்கப்படும்.

10
ஆம்புலன்ஸ் ( Pixabay )

பச்சிளம் குழந்தைகளுக்கான `ஆம்புலன்ஸ்'

108 ஆம்புலன்ஸ் திட்டத்தில் பச்சிளம் குழந்தைகளுக்கான 14 அவசர சிகிச்சை ஊர்திகள் ரூ.4.2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்படும்.

11
மருத்துவமனை ( Pixabay )

மருத்துவமனை மேம்பாட்டுக் குழு!

அரசுப் பள்ளிகளில் செயல்படும் பெற்றோர் ஆசிரியர் சங்கம்போல அரசு மருத்துவமனைகளிலும் 'மருத்துவமனை மேம்பாட்டுக் குழு' (Hosipital Development Commitee) என்ற பெயரில் புதிய குழு அமைக்கப்படும். இந்தக் குழு, சுகாதாரத்துறையின் திட்டங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், நோயாளிகளின் குறைகளைக் கேட்டறிந்து தீர்வுகாணுதல் போன்ற பணிகளைச் செய்யும்.

12
தொலைபேசி ( Pixabay )

பிரத்யேக தொலைபேசி இணைப்பு!

மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் காவல்துறையின் உதவியை உடனடியாகப் பெறுவதற்கான பிரத்யேக தொலைபேசி இணைப்பு (Hot Line) அமைக்கப்படும்.

13
புகார் ( Pixabay )

குறுஞ்செய்தியிலேயே புகார் தெரிவிக்கலாம்!

அனைத்து அரசு மருத்துவமனை பொறுப்பு அலுவலர்களிடம் நோயாளிகள் தங்கள் குறைகளை நாள்தோறும் மாலை 3 முதல் 4 மணி வரை தெரிவிக்கலாம். அதோடு அனைத்து மருத்துவமனைகளிலும் குறைதீர்ப்பு ஆலோசனை பெட்டிகள் இடம்பெறும். நோயாளிகள், மருத்துவமனைகள் தொடர்பான தங்கள் புகார்களை 24 மணி நேரமும்104 உதவி மையத்துக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் உடனுக்குடன் தெரிவிக்கவும் வழிவகை செய்யப்படும்.

14
வலி நிவாரணி ( Pixabay )

வலி மற்றும் நிவாரண மையங்கள்!

16 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் வலி மற்றும் நிவாரண மையங்கள் ரூ.255 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்.

15
நாட்டு மருத்துவம் ( Pixabay )

நடமாடும் சித்த மருத்துவக் குழு

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, கன்னியாகுமரி மாவட்டம் தடிக்காரன்கோணம் ஆகிய வட்டாரங்களில் உள்ள மலைவாழ் பகுதி மக்களின் நலனுக்காக ரூ.34 லட்சம் செலவில் நடமாடும் சித்த மருத்துவக் குழு அமைக்கப்படும்.

16
மனநல மருத்துவமனை ( விகடன் )

தொழில் சார்ந்த மனநல புறநோயாளிகள் பிரிவு!

மீனவ சமுதாய மக்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்துக்கு சிகிச்சை அளிக்க, சென்னை மனநல காப்பகத்தில் தொழில் சார்ந்த மனநல புறநோயாளிகள் பிரிவு ஏற்படுத்தப்படும்.

17
சீருடை ( Pixabay )

சீருடை மாற்றியமைப்பு

செவிலியர்களுக்கான சீருடை மாற்றியமைக்கப்பட்டதுபோல செவிலிய மாணவிகளின் சீருடையும் மாற்றியமைக்கப்படும்.

18
மருத்துவர் நலன் ( Pixabay )

மருத்துவ பணி மனஅழுத்தமின்றி இருக்க!

இரவும் பகலும் பணிபுரிவதால் ஏற்படும் மனஅழுத்தத்தைக் குறைக்கும் நோக்கத்தில் மருத்துவப் பணியாளர்களுக்கு மனஅழுத்தம் குறைக்கும் பயிற்சித் திட்டம் செயல்படுத்தப்படும்.